என்னடா ஆள் டல்லா இருக்கே…? – கேட்டான் மதிவாணன். இருக்கையில் அமர்ந்து தன் வேலைகளை எப்போதும் மும்முரமாகச் செய்து கொண்டிருக்கும் கண்ணனுக்கு இன்று என்னவோ வேலையே ஓடவில்லைதான்.
இது நாள்வரை தான் கதை எழுதி எந்தப் புண்ணியமுமில்லையோ என்று தோன்றியது. சுமதி தன் கதைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தது அவனை வெகுவாக உறுத்தியது. வெறும் செய்தித்தாள் படிப்பவள் அவள். தினசரி காலையில் அந்த செய்தித்தாளை அவள் கையில் கொடுத்தால் போதும். சோறு தண்ணி வேண்டாம் அவளுக்கு. சமையலைக் கூட மறந்து விடுவாள். தொலையுது என்று பல நாட்கள் அவள் சொல்லச் சொல்ல இவன் சமைத்திருக்கிறான். எதுக்கு இத்தனை சலிப்பு? ஒரு நாளைக்கு சமைச்சாத்தான் என்ன? என்பாள். ஒரு நாளைக்கு இல்ல, ஒம்பது நாளைக்கு சமைக்கிறேன்…ஆனா ஒண்ணு…இத்தனை ஆர்வமா ஒரு இண்டு இடுக்கு செய்தி விடாமப் படிக்கிறியே, அப்டியே என் கதைப் புத்தகத்தையும்தான் படியேன்….என்பான் இவன். இப்படி வலிந்து கேட்கிறானே என்று மனதில் கொஞ்சமும் இரக்கம் தோன்றாது அவளுக்கு. தொட்டுக் கூடப் பார்க்க மாட்டாள். கதை படிப்பதிலெல்லாம் அவளுக்கு ஆர்வம் இல்லை. உலக நடப்பு தெரிந்து கொள்ள வேண்டும். மாநில அரசியல், சர்வதேச அரசியல், எல்லாம் பேச வேண்டும். ஆனால் இலக்கியம் பற்றிப் பேச்சு எடுத்துவிடக் கூடாது.
பெரிஸ்ஸ்ஸா இலக்கியம், இலக்கியம்ங்கிறீங்களே…இன்றைக்கு உங்களமாதிரி எழுதறவங்களோட படைப்பெல்லாம் இலக்கியம்னு பேரு வச்சிருக்கீங்களா? என்றாள் ஒரு நாள். கிண்டலாய்க் கேட்பதுபோல்தான் இருந்தது.
இது நவீன இலக்கியம்டீ…நவீனத் தமிழ் இலக்கியம்னு இதுக்குப் பேரு…அந்தக் காலத்தைச் சேர்ந்த இலக்கியங்கள் சங்க இலக்கியம். இராமாயணம், மகாபாரதம் இவைகள் இதிகாசங்கள். இன்றைய புதுக்கவிதைகள், நவீன கவிதைகள், கட்டுரைகள், நவீனக் கதைகள், நாவல்கள் ஆகியவை நவீனத் தமிழ் இலக்கியங்கள். அப்படித்தான் இங்கே இவைகள் சுட்டப்படுது.
அசிங்கத்தை எழுதறதுக்குப் பேரு நவீன இலக்கியமா? நல்லாயிருக்கு….என்றாள்.
எழுதறது எல்லாமுமேவா அசிங்கம்ங்கிறே…அப்படிப்பார்த்தா அந்தக் காலத்துலே சங்க இலக்கியத்துலே இல்லாததா? அவைகளை வர்ணனைன்னு சொன்னாங்க…தமிழ் என்னமாக் கொஞ்சுது என்று பாராட்டினாங்க…மனசார ரசிச்சாங்க…இப்போ எழுதறதை அசிங்கம்ங்கிறிங்க…..
பின்னே…அன்றைக்கு எழுதப்பட்டதுல மனித மேம்பாடு, மேன்மையான குணங்கள், உயர்ந்த சிந்தனைகள் இவைகளோட அவ்வப்போது ஆழ்ந்த ரசனைல, அருமையான வர்ணனைகளும் கலந்து இருந்தது. ஆனா இப்போ அப்டியா இருக்கு? இதை எப்படி இலக்கியம்னு சொல்ல முடியும்?
சரி, இலக்கியம்னு சொல்ல வேண்டாம். வெறும் கதைகள்னே வச்சிக்கோ…நான் எழுதறேங்கிறதுக்காகவாவது கொஞ்சம் எடுத்துப் படிக்கலாமில்ல? நீ சொல்ற கதைகள்ங்கிறது வெறும் பொழுதுபோக்குக்குப் படிக்கிறது. நான் சொல்ற இலக்கியம்ங்கிறது வாழ்க்கையை அறிஞ்சிக்கிறதுக்காகப் படிக்கிறது. இந்த வாழ்க்கைல நமக்கு எல்லாவிதமான அனுபவங்களும் கிட்டிடறுதில்லை. ஆகையினால வாழ்ந்து அனுபவிச்சு முதிர்ச்சியடைஞ்ச எழுத்தாளர்கள் எழுதி வச்ச படைப்புக்களைப் படிச்சா, நமக்கு அந்த அனுபவங்கள் கிட்டும், பொறுமையும், நிதானமும் வரும். விவேகம் வளரும். இதையெல்லாம் தர்றது இலக்கியம்…அதைப் புரிஞ்சிக்கோ…
எனக்குப் பிடிச்சாத்தானே…? கதைகள், நாவல்கள் படிக்கிறது எனக்கு டைம் வேஸ்ட் மாதிரித் தெரியுது….நீங்க மனசுல தோணினதெல்லாம் திரிச்சுத் திரிச்சு எழுதிட்டே போவீங்க….நீங்க கயிறு விடுறதையெல்லாம் நான் ரசிச்சிப் படிச்சிட்டிருக்கணுமா? அதுல வர்ற கேரக்டர்களை நினைச்சு நான் உணர்ச்சி வசப்படணுமா? அழவும், சிரிக்கவும் செய்யணுமா? எனக்கு உடம்பு நல்லாயிருக்கிறது உங்களுக்குப் பிடிக்கலையாக்கும்? எனக்குப் பேப்பர் படிக்கிறதுதான் பிடிக்கும். சின்ன வயசுலேர்ந்து என் பழக்கம் அது. எங்கப்பா மடில உட்கார்ந்துட்டே அவரு படிக்கிறபோது, நானும் படிப்பேன். அப்டியே படிச்சுப் படிச்சு வழக்கமாகிப் போச்சு….
அதுல மட்டும் எந்த உணர்ச்சிகளுக்கும் ஆளாக மாட்டியாக்கும்? அப்டி எதுக்கும் ஆளாகலேன்னா நீ வெறும் ஜடம்னு பேரு. உலகத்துல நடக்கிற எல்லா அயோக்கியத்தனங்களையும்தான் போடுறான் அவன். அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் செய்ற தப்பு தவறுகளையெல்லாம் சுட்டிக் காட்டுறான். அத்தனை பேர் பேசும் பொய் புரட்டுக்களையெல்லாம் அள்ளி அள்ளித் தர்றான்…அவை மட்டும் உன்னை ஒண்ணும் செய்யலியாக்கும்….உனக்கு மனசுக்குள்ள அலட்சியம். இவனென்ன எழுதறது, நானென்ன படிக்கிறதுன்னு கர்வம். ஈகோ போட்டு ஆட்டுது உன்னை…அதான் படிக்க மாட்டேங்கிறே…
அதெல்லாம் ஒண்ணுமில்லே. எதுக்கு அநாவசியமாப் பேசறீங்க? நான் கதை படிக்கிற வழக்கமில்லே. யாரு எழுதறதையும் படிக்கிறதில்லே. அது நீங்க எழுதறதுங்கிறதுக்காகப் படிக்க முடியுமா? எனக்குப் பிடிச்சிருந்தாத்தானே படிக்க முடியும்…எதைப் படிச்சாலும் திரும்பத் திரும்பச் சொன்னதையே சொல்றமாதிரிதான் இருக்கு…புதுசா ஒண்ணையும் காணோம்…டி.வி.சீர்யல் எடுத்துக்குங்க…அங்கென்ன வாழுது…அங்கயும் அதே கண்றாவிதான். பொம்பளைங்க ஒருத்தரை ஒருத்தர் குடுமியப் பிடிச்சிட்டு எப்பப் பார்த்தாலும் சண்டை போட்டுக்கிறாங்க…அதுனால வீட்டு ஆம்பளைங்க நிம்மதியில்லாம அலையுறாங்க…வீட்டுப் பொம்பளைகளை எதிர்க்க முடியாம, அல்லது அவகிட்ட காம வசப்பட்டு, அல்லது அவளுக்கு அடங்கிப் போயி, அவ பேச்சைக் கேட்டுக்கிட்டு, இவங்களும் தப்புத் தப்பாப் பண்றாங்க….இப்டியே முடிவில்லாமப் போயிட்டிருக்கு…வேறென்ன இருக்கு…? இப்டியெல்லாம் அச்சுப் பிச்சுன்னு என்னால டி.வி. தொடர்களும் பார்க்க முடியாது…நீங்க எழுதற கதைகளையெல்லாம் படிக்கவும் முடியாது…என்னை ஆள விடுங்க…..
ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும், அவனோட வெற்றிக்கு ஒரு பெண் துணையா இருப்பான்னு சொல்வாங்க…எனக்கு நீ இப்டி அமைஞ்சிருக்கே…உன்னை நினைச்சு நான் சோர்ந்து போக முடியுமா? நீ என்னை வந்து அடையறதுக்கு முன்னாடியிருந்தே எழுதவும், படிக்கவும் பழகியவன் நான். என்னுடைய பழக்கத்துல நான் எழுதறேன். எழுத எழுத ஆசை வருது…தொடர்ந்து எழுதறேன்…அதுதான் என் அன்றாட வாழ்க்கையையே இயக்கிட்டிருக்கு….நீ என்னடான்னா என்னைச் சோர்வடைய வைக்கிறமாதிரி துடைச்சுப் பேசுறே…நீ பேசுறதைக் கேட்டுட்டு நான் சோர்ந்துடுவேன்னு நினைச்சியா? அதுக்கு வேறே ஆளைப் பாரு…என்னைப் பாராட்ட நாலு பேர் இல்லாமலா போயிடுவான்…என் எழுத்தையும் படிக்கிறவன் நிறைய இருக்கான்…பாராட்டுறவனும் இருக்கான்….தொடர்ந்து எழுதுங்கன்னு சொல்றவங்களும் இருக்காங்க…நிறுத்திடாதிங்கன்னு உற்சாகப்படுத்திறாங்க….அவுங்களுக்காக நான் எழுதித்தான் ஆகணும்…அவுங்க என்னோட வாசகர்கள்…என்னோட ரசிகர்கள்…அவுங்களை நான் உதறிட முடியாது…..
உங்க அனுபவத்தை நீங்க சொல்றீங்க…என் பழக்கத்தை நான் சொன்னேன். அவ்வளவுதான். இதுக்கு எதுக்கு சண்டை? உங்களுக்குப் பிடிச்சதை நீங்க செய்யுங்க…எனக்குப் பிடிச்சதை நான் செய்றேன்…இப்போ நீங்க பேப்பரை ஒரு புரட்டு புரட்டிட்டு வீசிப் போட்டுடறீங்க…நான் ஏதாவது சொல்றேனா? எல்லாச் செய்திகளையும் முழுக்கப் படிச்சுத் தெரிஞ்சிக்குங்கன்னு நான் வற்புறுத்தறேனா? அப்படிப் பார்த்தா ஒரு எழுத்தாளனுக்கு இது ரொம்ப ரொம்ப முக்கியமாக்கும்…உலக அன்றாட நடப்பு, நிகழ்வு அத்தனையும் தெரிஞ்சிருக்கணுமாக்கும்…அப்பத்தான் அவனுக்கு ஒண்ணோட ஒண்ணு சம்பவங்களைக் கோர்த்து, விடுபடாம எழுத முடியும்…நீங்க அப்டியா செய்றீங்க…? கதைகளுக்கும் செய்திகளுக்கும் சம்பந்தமேயில்லைங்கிற மாதிரி இருக்கீங்க…நான் ஏதாச்சும் சொல்றேனா…நிறையப் புத்தகங்கள் படிக்கிறீங்க…இல்லைன்னு சொல்லலை…அந்த அனுபவங்கள் உங்களை எழுதத் தூண்டலாம். அதை நான் மறுக்க முடியுமா? எனக்குக் கதைகள் படிக்கிறது அறவே பிடிக்காது…அவ்வளவுதான். என்னை வற்புறுத்தாதிங்க…
விட்டுச் சொன்னவளைத்தான் மேலும் வலியுறுத்தி, வற்புறுத்தி இரண்டொன்றைப் படிக்க வைத்திருந்தான் இவன். ஏதோவொரு வகையில் தன் எழுத்தில் ஈர்க்கப்பட்டு அவளும் கொஞ்சம் கொஞ்சம் அவ்வப்போது தொடர்ந்து படித்து வருவதாகத்தான் தோன்றியது. நாளடைவில் இந்தப் பழக்கம் வந்திருந்தது அவளிடம். அதுவே பெரிய ஆச்சரியம். ஒவ்வொரு கதையையும் படித்து விட்டு அதன் மையக் கருத்தை அவள் எடுத்துச் சொல்லும் விதம் இவனுக்குள் வியப்பை ஏற்படுத்தும். தான் கூட இந்த வகையில் சிந்திக்கவில்லையே என்று தோன்றும். இப்படியெல்லாம் சிந்தித்துவிட்டு என்றும் கதை எழுதினதில்லையே என்று நினைப்பான். தொடர்ந்த எழுத்துப் பயிற்சியில் எழுதித் தள்ளிவிட்டு, தானே ஒரு குறிப்பிட்ட மையத்தில் அதன் இறுதியை அடைவதுபோல் செய்து விடுவான். தன்னாலும் நன்றாய் எழுத முடிகிறதே என்று அவனுக்குள்ளேயே ஒரு பூரிப்பு ஏற்படும். தான் இல்லாத நேரங்களில் தன் கையெழுத்துப் பிரதிகளைக் கூட எடுத்துப் படிக்கிறாள் போலிருக்கிறதே என்று ஒரு நாள் கண்டு பிடித்தான். மிகவும் சந்தோஷமாகத்தான் இருந்தது. ஆனாலும் அவளிடம் இதுபற்றிக் கேட்கவில்லை. அவள் தன் படைப்புக்களைப் படிப்பதில் அவனுக்கு ஒரு சந்தோஷம் இருந்தது. திருப்தி இருந்தது. அதனால் தொடர்ந்து எழுதுவதில் வெறி வந்தது. தன் எழுத்துத் திறமையை நிரூபிக்கத் தன்னால் எப்படியும் எழுத முடியும் என்று அவளுக்குக் காண்பிக்க வேண்டும் என்று நினைத்தான். ஒரே மாதிரித்தான் போயிட்டிருக்கு…கொஞ்சம் மாத்துங்க…என்று பொதுவாக ஒருநாள் அவள் கூறியபோது, தான் பலதிசைகளிலும் பயணிக்கும் எழுத்துத் திறமை கொண்டவன் என்று அவளுக்குக் காண்பிக்க வேண்டும் என்று ஆசை கொண்டான்.
எழுதி, எழுதி, தொடர்ந்த முயற்சிகளில்தான் அவன் கதைகள் பத்திரிகைகளில் வர ஆரம்பித்தன. ஆரம்பத்தில் பந்தடித்ததுபோல் திரும்பி வரும் கதைகளைக் கண்டு அவன் சோர்வடைந்ததேயில்லை. திரும்பி வந்த கதைகளைப் பற்றி அவளிடம் சொல்ல மாட்டான். அவள் அவனை அடைந்த காலத்திலும், கதைகள் திரும்பி வந்திருக்கின்றன. இப்பொழுதும் கூட அது நிகழ்கிறதுதான். அந்தந்தப் பத்திரிகைகளுக்கு என்று ஒரு குணம் இருக்கிறது. அதற்கு முரணாக அவர்கள் போடுவதில்லை என்று சொன்னான். அது நிஜம்தான் என்பதை அவளும் உணர்ந்தாள். திரும்பி வந்த கதைகளைப்பற்றி அவளும் கேட்க மாட்டாள். அந்தக் கதைகளைத் தூக்கி மூலையில் கிடாசி விடுவான். அப்படியான பல கதைகள் இன்று அவனிடம் இல்லை. ஆனால் ஒன்று. கொஞ்சம் பிரபலமான போது, திரும்பி வந்த அந்தப் பழைய கதைகளை எடுத்து, மீண்டும் அவைகளைத் திருத்தி, கொஞ்சம் செழிப்பூட்டி எந்தப் பத்திரிகை திருப்பி அனுப்பியதோ அதற்கே மீளவும் வேறு தலைப்பில் அனுப்பி வெற்றி கண்டிருக்கிறான் அவன். இந்த எழுத்துப் பணியில் அவனின் முயற்சிக்கு அளவே இல்லை. அசுர முயற்சி என்றுதான் சொல்ல வேண்டும். அதுதான் இன்று அவனுக்கு இந்த வெற்றியைக் கொடுத்திருக்கிறது. ஆனால் இப்போது அவன் எழுதுவதை அவள் அசிங்கம் என்கிறாள். ஆபாசம் என்று திட்டுகிறாள். சரஸ்வதி கொடுத்த கலையை மதிக்காமக் கேவலப்படுத்தறீங்க என்கிறாள். உங்கள் வாசகர்களை ஏமாற்றுகிறீர்கள் என்று குற்றம் சாட்டுகிறாள். இன்று என்ன சொல்லியும் மசியவில்லையே? ஆபாசமாய் எழுதினால் அவன் படைப்பாளியே இல்லை என்று ஒரேயடியாய் மறுதலிக்கிறாளே…எல்லாமும் ஒரு படைப்பில் கலந்துதான் இருக்கும் என்றால் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறாளே…
உங்க மனசு அசிங்கமாப் போச்சு…ஒருத்தனோட நடத்தை மேலேயே இது சந்தேகத்தை ஏற்படுத்துது…அதுலயே கோளாறு இருந்தாத்தான் இப்படியாப்பட்ட எழுத்து வரும்….என்று சாதிக்கிறாளே….
கண்ணனுக்கு அன்று அலுவலகத்தில் வேலை ஓடவில்லை. ஆபீஸ் வேறு. தனிப்பட்ட எழுத்துப் பணி என்பது வேறு. இதற்காக சம்பளம் தரும் வேலையைச் செய்யாமல் இருப்பதா?
மனசாட்சி உறுத்த, ஒரு மாதிரி பாதகமில்லாமல் சில வேலைகளைச் செய்து விட்டு வந்தான். மனதில் சுமதியின் சிந்தனையே ஓடியது. அவளிடம் இன்னும் பேச வேண்டும் என்றுதான் தோன்றியது. தன் எழுத்துபற்றிப் பேசி எந்தவகையிலும் அவளிடம் தோற்றுவிடக் கூடாது என்ற முனைப்பு அவனிடம் எழுந்தது. அப்படித் தோற்றுவிட்டால் அதுவே தன் எழுத்தின் பலவீனம் என்பதாய் ஏற்றுக்கொள்ளப்பட்டதாய் ஆகிவிடும் என்று அவன் உள் மனம் ஓலமிட்டது.
- மனோரமா ஆச்சி
- மிதிலாவிலாஸ்-17
- கவிதாவின் கவிதைகள் —- ‘ என் ஏதேன் தோட்டம் ‘ தொகுப்பை முன் வைத்து ……
- பொன்னியின் செல்வன் படக்கதை – 8
- தொடுவானம் 89. பெண்மை என்றும் மென்மை
- தொழிற்சங்க அவசியம் பற்றிய நாவல் “ பனியன் ” – தி.வெ.ரா
- தி மார்ஷியன் – திரைப்படம் விமர்சனம்
- அவன், அவள். அது…! -5
- மிதிலாவிலாஸ்-18
- மிதிலாவிலாஸ்-19
- ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்-2015
- கொலஸ்ட்ரால் கொழுப்புகள் பலவிதம்
- அந்தரங்கங்கள்
- உதிர்ந்த செல்வங்கள்
- குட்டிக் கவிதைகள்
- மிஷ்கினின் ‘நந்தலாலா’ ஒரு பார்வை
- அ. வெண்ணிலா கவிதைகள் ‘ நீரில் அலையும் முகம் ‘ தொகுப்பை முன் வைத்து….
- ஒத்தப்பனை
- தன்னிகரில்லாக் கிருமி
- நியூடிரினோ ஆராய்ச்சியில் 2015 ஆண்டு நோபெல் பரிசு பெற்ற கனடா விஞ்ஞானி ஆர்தர் மெக்டானல்டு
- வலி
- செங்கண் விழியாவோ
- மனோரமா- தமிழ் சினிமாவின் அடையாள பெண்ணிய வடிவம்