மருத்துவக் கட்டுரை சொறி சிரங்கு ( Scabies )

This entry is part 16 of 18 in the series 18 அக்டோபர் 2015

 

சிறு பிள்ளைகளுக்கு கைகளிலும் கால்களிலும் சிரங்குகள் தோன்றி அதிகம் சொரிந்துகொண்டிருப்பார்கள். முன்பெல்லாம் கிராமப்புறங்களில் இது அதிகமாகக் காணப்பட்டது. சுகாதரமற்றச் சூழல் முக்கிய காரணமாகவும் கருதப்பட்டது. குறிப்பாக பள்ளி விடுதிகளில் தங்கிப் படிக்கும் பிள்ளைகளிடையே இதை அதிகம் காணலாம். அவர்கள் விடுமுறையில் வீடு திரும்பியதும் வீட்டிலுள்ளவர்களுக்கும் இது பரவுவது வழக்கம்.

          இதை Scabies என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். தமிழில் சொறி சிரங்கு என்றாலே போதுமானது. இது சார்காப்டீஸ் ஸ்கேபி ( Sarcoptes Scabiei ) என்ற நுண்ணிய உண்ணி வகையால் உண்டாகிறது. இந்த நோய் உலகில் மிகப் பழைமையான நோயாகும். இன்றும் இது உலகின் எல்லா நாடுகளிலும் காணப்படுகிறது.  வருடந்தோறும் சுமார் 300 மில்லியன் பேர்களுக்கு இது உண்டாகிறது.          இது தோல் மூலம் பரவும். இது அதிகமான அரிப்பை உண்டுபண்ணும். இது சிறுவர் முதல் பெரியவர் வரை எந்த வயதினரையும் தாக்கலாம். குறிப்பாக பள்ளி விடுதிகள், மருத்துவமனை படுக்கைகள், சிறைச்சாலைகள், போன்ற இடங்களில் இது அதிகம் காணப்படும். உடல் உறவு மூலமும் இது பரவலாம்.

இந்த உண்ணி மனிதர்களின் தொலில்தான் வாழ்ந்து பெருகும். இவை புணர்தலுக்குப்பின் ஆண் உண்ணி இறந்துவிடும். கருவுற்ற பெண் உண்ணி தோலில் 2 முதல் 3 மில்லிமீட்டர் வரை தோலுக்கு அடியில் புகுந்து விடும். பகலில் முட்டைகள் இடும். ஒரு பெண் உண்ணி நாள் ஒன்றுக்கு 2 அல்லது 3 முட்டைகள் வீதம் சுமார் 2 மாதங்கள் வரை முட்டையிடும். அதன்பின் அது இறந்துவிடும். முட்டைகள் 72 முதல் 96 மணி நேரத்தில் போரித்துவிடும்.முதலில் புழுவாகத் தோன்றி பின் உண்ணியாக மாறிவிடும்.

                                                                                    பரவும் விதம்
           இது தொடுவதின் மூலம் பரவும். சில உதாரணங்கள் வருமாறு:
           * இதனால் பாதிக்கப்பட்டவரைப் பராமரித்தல்.- நீண்ட நாட்கள் படுக்கையில் கிடக்கும் நோயாளிக்கு இது இருந்தால் அவரைத் தொட்டுப்  பராமரிக்கும் உறவினர்களுக்கு இது தொற்றும்.
          * பாதிக்கப்பட்ட குழந்தையுடன் விளையாடுதல் – குழந்தைகள் ஒன்றாக சேர்ந்து விளையாடும்போது இது பரவும்.
          * ஒன்றாக படுத்து உறங்குதல் – நெருக்கமாக படுத்து உறங்குபவரிடையே இது எளிதில் தோற்றும்.
          * விடுதிகளில் பலர் தங்கி நெருக்கமாக பழகுதல்.துணிமணிகள், படுக்கை விரிப்புகள், தலையணைகள், போர்வைகள் போன்றவற்றைப்  பகிர்ந்துகொள்ளுதல் மூலமாகவும் இது பரவும்.
          * உடலுறவு  மூலம் பரவுதல்

                                                                                                        அறிகுறிகள்

            * அரிப்புதான் மிக முக்கிய அறிகுறி. இது இரவில் கடுமையாக இருக்கும். பகல் நேரத்தில் இந்த அரிப்பு சுமாராக இருக்கும்.
            * சிறு கொப்புளங்கள் – இவை பெரும்பாலும் கை விரல்களின் இடுக்குகளில், மணிக்கட்டு, முழங்கை, இடுப்பு, தொப்புள். அக்குள் ,மார்புகள் , பாலுறுப்புகள் போன்ற பகுதிகளில் தோன்றி உடைந்து அதிலிருந்து நீர் அல்லது சீழ் வெளியேறலாம்.
            * ஒரே குடும்பத்தில் பலருக்கு உண்டாவது.
           மருத்துவர்கள இதைப் பார்த்ததுமே கூறிவிடுவார்கள்.

                                                                                                             சிகிச்சை

            சொறி சிரங்குக்கு சிகிச்சை மிகவும் எளிது. ஆனால் அதை தொடர்ந்து முறையாக பின்பற்றவேண்டும்.அரிப்பைக் குறைக்க மாத்திரைகள் உள்ளன.
          உண்ணியைக் கொல்லும் பென்சில் பென்சோயேட் , ஸ்கேபோமா போன்ற மருந்துகளை உடல் முழுதும் தடவி மறுநாள் குளிக்கவேண்டும்.இதுபோன்று தொடர்ந்து செய்யவேண்டும்.

                                                                                              பின்விளைவுகள்

         சொறி சிரங்கு சாதாரண நோயாக இருந்தாலும் அது தோலில் புண் உண்டுபண்ணுவதால்,அங்கு கிருமிகள் உள்ளே புக ஏதுவாகிறது.குறிப்பாக தோலின் மேலுள்ள ஸ்டே பைலோகாக்கஸ் பேக்டீரியா கிருமிகள் இரத்தம்மூலம் சிறுநீரகம் சென்று அதைத் தாக்கும் ஆபத்து உள்ளது. ஆதலால் சொறி சிரங்கை உடன் சிகிச்சை மூலமாக குணப்படுத்துவது நல்லது.

          ( முடிந்தது )
Series Navigationதிருமால் பெருமைஇரண்டு நாள் ஒளிப்பதிவு பயிற்சிப் பட்டறை நவம்பர் 7 (சனி) நவம்பர் 8 (ஞாயிறு)

1 Comment

  1. பள்ளிப்பருவத்தில் இது வரும் என்பது உண்மைதான். பலர் இருக்கும் இடத்தில் ஏற்படும். இதற்கு பாட்டி வைத்தியம் ,கை கண்ட வைத்தியம், ஒரு முறை வந்தால் மறுமுறை வராதிருக்க பயன்படுத்துங்கள், குப்பைமேனி இலைகளின் சாற்றையும், உப்பையும். உப்பையும் குப்பைமேனி இலையையும் சேர்த்து கைகளில் நசுக்கினால் சாற் கிடைக்கும். இதனை சிலங்கின் மேல் தடவினால் தாங்க முடியாத எரிச்சல் ஏற்படும், ஆனால் ஓரிரு தினங்களிலே புண்கள் ஆறிவிடும் ,மற்றவர்களுக்கும் பராவாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *