அவன், அவள். அது…! -7

This entry is part 13 of 24 in the series 25 அக்டோபர் 2015

தலையைக் குனிந்தவாறே இருந்த கண்ணனை சேதுராமனின் வார்த்தைகள் ஆட வைத்தன.
உன் அப்பா அம்மா கஷ்டத்திலே இருக்காங்கன்னா அதுவும் அது மனக்கஷ்டம்னு தெரிஞ்சா அது முதல்லே எனக்குமுண்டு…அதை என்னன்னு அறிஞ்சு தீர்த்து வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு. கடமை. அதான் உடனடியாப் புறப்பட்டு வந்தேன். உங்கப்பாவும் நானும் சகோதரர்கள். அவனுக்கு ஒரு துன்பம்னா அது எனக்கும்தான். அந்தக் குடும்பத்துல இருக்கிற சந்தோஷம் எல்லாமும் அவங்களுக்குன்னா, அங்கே கவிழ்ற துன்பத்தை நான் கையிலெடுத்து அதை சந்தோஷமா மாத்திக் கொடுக்கிறதை என் பணியாக் கருதுறேன். அதுலதான் எனக்கு நிம்மதி இருக்கு…அவனும் நானும் சின்ன வயசு முதலே ஒண்ணாச் சேர்ந்து எங்கெல்லாம் சுத்தியிருக்கோம் தெரியுமா? கோயில் கோயிலாப் போவோம்….தென்னாட்டுல நாங்க போகாத கோயிலே கிடையாதுங்கலாம்…அவனுக்கு உதவியாளனா நான் போயிண்டிருந்தேன். அவன் மூலமா நிறையப் புண்ணியம் எனக்குக் கிடைச்சது. பூவோட சேர்ந்த நாரும் மணக்கிறமாதிரி, உங்கப்பாவோட சேர்த்து என்னையும் எல்லாரும் மதிச்சா…மரியாதையா நடத்தினா…அந்த மதிப்பும் கௌரவமும் அவனாலதான் எனக்குக் கிடைச்சது…அதை நான் சாகுற வரைக்கும் இழக்க விரும்பலை…
உங்கப்போவோட ஒழுக்கத்துக்காகவும், நாணயத்துக்காகவும்தான் அவருக்கு இரண்டாந்தாரமா தன்னோட பெண்ணைக் கொடுத்தார் சங்கரன்தாத்தா. உங்கப்பா அப்படிப்பட்ட குணசாலி. ராமநாதன்னா எல்லாருக்கும் அப்படி ஒரு பிரியம் உண்டு. யாரையும் பகைச்சுக்க மாட்டார் உங்கப்பா. எல்லார்ட்டையும் அன்பா, பண்பா நடந்துப்பார். முடிஞ்ச அளவுக்கு எல்லாருக்கும் உதவி செய்வார். உதவின்னு தேடி வந்து வெறுமே திரும்பிப் போனவா யாருமில்லே. அப்படி ஒரு மனசு. பதினாலு வயசுலே பாலக்காட்டுலேர்ந்து கிளம்பி வந்த உங்கம்மா, உங்க அப்பாவைப் பெத்த தாத்தாகிட்டஎன்னவெல்லாம் கொடுமை அனுபவிச்சிருக்கா தெரியுமா? மாமியார் கொடுமை அறிஞ்சிருப்பே? எங்கேயாவது மாமனார் கொடுமை பார்த்திருப்பியா? சொல்லி மாளாதாக்கும். அதெல்லாம் நீ நேர்ல கண்டிருக்க முடியாது. உங்கம்மா சொல்லியும் இருக்க மாட்டா. மன்னிக்கு கொடுமைகள் பழகிப் போச்சு…அவ மனசும் மரத்துப் போச்சு…அவளை மாதிரி ஒரு குணவதியை நீ உலகத்துல எங்க தேடினாலும் பார்க்க முடியாது.
மண்ணுல செய்த கையகல ஆலஞ்சட்டியிலே கார்த்திகை தீபம் ஏத்துறபோது கீழே விழுந்து உடைஞ்சு போச்சுன்னு ஒரு நாள் முழுக்க உங்கம்மாவை அகத்து வாசல்ல நிக்கவச்சு பட்டினி போட்ட கொடுமைக்காரன் அந்த மனுஷன். அதாவது எங்கப்பா. சொன்னா நம்புவாங்களா யாராச்சும்? அப்டி யாரும் செய்வாங்களான்னு கேட்பாங்க…மஉறா கொடுமைக்கார மனுஷனாக்கும். என்னைக்கு சின்னாளப்பட்டியிலே ஜவுளிக்கடை வைக்கறேன்னு உங்கப்பா கிளம்பி வந்தாரோ அன்னைக்குத்தான் உங்கம்மாவுக்கு விடிஞ்சது. என்னையும் அழைச்சிண்டு போங்கோன்னு ஒத்தக்கால்ல நின்னுட்டா…இல்லேன்னா அவ அனுபவிச்ச கொடுமைக்கு இன்னொரு பொம்பளைன்னா உங்க தாத்தா தூங்கிறபோது தலைல கல்லைப் போட்டு கொன்னுருப்பா…கொடுமையின் மொத்த உருவமாக்கும் அவர். இதெல்லாம் ஏன் சொல்ல வர்றேன்….சும்மா பொழுது போறதுக்கா? இல்லை…அப்படியாப்பட்ட உத்தமமான தாய் தகப்பனாருக்குப் பொறந்தவன் நீங்கிற உண்மை உனக்கு உறைக்கணும்ங்கிறதுக்காகத்தான்…அப்படிப்பட்ட நீ இப்படி ஒரு தப்பைச் செய்யலாமா?
மிகச் சரியான இடத்தில் கொண்ட வந்து நிறுத்தினார் சேதுராமன். மூக்குக் கண்ணாடியைச் சற்று உயர்த்தி விட்டுக் கொண்டு இவனையே குறுகுறுவென்று பார்த்தார். துளைத்து எடுக்கும் பார்வை. உண்மை தானே வெளியே வந்து விழுந்து விடும் உஷ்ணப்பார்வை.
திரும்பவும் என்னையே குறை சொல்றீங்களே சித்தப்பா…சுமதி அவளாகத்தான் கோபப்பட்டுக்கிட்டுப் போயிட்டா…அதுக்கு நான் என்ன பண்ணுவேன்…?
அதுக்கு நீ என்ன பண்ணனும்னு நான் சொல்றேன். அதுக்காகத்தானே நான் வந்திருக்கேன். சும்மா செய்தியைக் கேட்டுட்டு அப்டியா?ன்னு தலையாட்டிட்டுப் போகுறதுக்கா இம்புட்டு தூரம் புறப்பட்டு வந்தேன்…என்ன காரணம்னு சொல்லிப்புடு….உங்கிட்டதானே கேட்க முடியும்…உன் சம்சாரத்துக்கிட்டப் போயி நான் நிற்க முடியுமா? அவகிட்ட அவங்க அப்பா கேட்பார்…இது நம்ம வேலை….நீதான் சொல்லியாகணும்…நீ சொல்றவரைக்கும் நானும் போகப்போறதில்லை….சரிதானா? – தீர்மானமாய்க் குறிப்பிட்ட இடத்தில் கல்லை ஊன்றி விட்டார். இனித் திருவிழா முடிந்துதான் கல் பெயர்க்கப்படும்….இனி இவரிடம் எதுவும் தேறாது. இல்லை இல்லை என்று சொல்லிக் கொண்டேயிருந்தால் அடிச்சுத் தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு போய்விடுவார். அப்படியாப்பட்ட மனுஷன். பாசத்துக்குப் பாசம். வேஷத்துக்கு வேஷம். வேகத்துக்கு வேகம். எல்லாமும் உண்டு சித்தப்பாவிடம்.
காரணம்னு எதைச் சொல்றது சித்தப்பா? நல்லாத்தான் இருந்திட்டிருந்தா…என் எழுத்துக்களையெல்லாம் படிக்கவும், பாராட்டவும், என்னை ஊக்கப்படுத்தவும் செய்திட்டிருந்தா. என்னோட முதல் ரசிகை அவதான்னு பெருமைப்பட்டுட்டிருந்தேன் நான்…என்னை ஆழமாப் புரிஞ்சிக்கிட்டவங்கிற முறைலதான் சகலவிதமான விஷயங்களையும் வெளிப்படையா அவள் கூடப் பகிர்ந்துக்கிட்டேன்…விவாதிச்சேன்…அலசினேன்…எழுதிக் காண்பிச்சேன்…படிச்சுக் காண்பிச்சேன்…அவளோட யோசனைகளையெல்லாம் பெருந்தன்மையா ஏத்துக்கிட்டேன்…அதுல அவளுக்கும் நிறைய சந்தோஷமிருந்தது. ஆனா என்ன நினைச்சு திடீர்னு இப்டி செய்துட்டுப் போயிட்டான்னுதான் தெரில…நானென்ன பண்றது? கோபம் தணிஞ்சு அவளாகவே வருவான்னு நினைச்சுக் காத்திட்டிருக்கேன்….
சொல்லிவிட்டு சற்று நேரம் அமைதியாக இருந்தான். சித்தப்பா அடுத்து என்ன சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்ப இருந்தது. அவராகக் கேட்பதற்கு முன் தான் அதிகம் கொட்டி விட்டோமோ என்றும் தோன்றியது.
சரி, நீ இரு, நான் கொஞ்சம் வெளியிலே போயிட்டு வந்துடறேன்…வந்து நாம ரெண்டு பேரும் சாப்பிடப் போறோம்…தயாரா இரு… – ரொம்பவும் யோசனையோடு இப்படிப் பதில் வந்தது அவரிடமிருந்து. எதற்கு இப்படி? என்று புரியாமல் சரி என்றான் கண்ணன். வேறு எந்த பதிலைச் சொல்வது? நீங்க கிளம்பலையா? என்றா கேட்க முடியும். அவர் ஒரு முடிவு எடுத்து விட்டார் என்றால் அவ்வளவுதான். பிறகு அவரை யாரும் அசைக்க முடியாது.
என்ன, சித்தப்பா குளிக்கலையா…? என்றான்.
வந்து குளிச்சிக்கிறேன்… – நடந்தவாக்கிலேயே கூறிவிட்டு அவர் வெளியேறுவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். வேறு ஏதேனும் வேலை வைத்திருப்பார எவரிடமாவது. அவருக்கு எல்லா ஊரிலும் தெரிந்தவர்கள் உண்டு. பழகியவர்களைப் பார்க்காமல் போவது அவர் பழக்கமில்லை. குளிக்காமல் கிளம்புகிறார் என்றால், எதிர் பார்ட்டி வெளியேறி விடுவதற்கு முன் சென்று பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணமாய் இருக்கும். மனதில் பல திட்டங்களோடே அலைபவர் அவர். டைம் டேபிளும் மனதிலேயே உருவானமேனிக்கே இருக்கும். சரி, போய்விட்டு வரட்டும். நாம் அதற்குள் தயாராவோம்…என்று நினைத்துக் கொண்டான். கொஞ்ச நேரத்திற்கு எதுவுமே ஓடவில்லை. இப்படி ஒருவர் வந்து விசாரிக்கும் நிலைக்கு ஆகிவிட்டதே என்று இருந்தது. என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என்று பயமாகவும் இருந்தது. வலையில் சிக்கிய மீனைப்போல் தவிக்கிறது மனது. சங்கடத்தோடு குளிக்கப் போனான். பல்வேறுவிதமான சிந்தனைகள் ஓட, குளித்து முடித்து தலை சீவி, புதிய உடைக்குப் புகுந்தான். ஒரு தெளிவு பிறந்திருப்பதாகத் தோன்றியது. சித்தப்பா வந்தபிறகு நடந்த விஷயம் அனைத்தையும் ஒன்று விடாமல் விலாவாரியாகச்சொல்லி விட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்.
ஒன்று விடாமல் என்றால் எப்படி? என்ற கேள்வி உடனே பிறந்தது. சுமதியுடன் சந்தோஷித்த நாட்களையெல்லாம், நிமிடங்களையெல்லாம் சொல்ல முடியுமா?
பெண்ணையும், பெண்மையையும்பற்றியதான எத்தனை விஷயங்களை அவளுடன் அலசியிருக்கிறேன்? சளைக்காமல், சலிக்காமல் என்னுடன் ஒற்றைக்கு ஒற்றை நிற்பாளே? என் கற்பனைக்கும் என் நுணுக்கமான பார்வைக்கும் ஒரு தூண்டுகோலாக இருந்தாளே? சமயங்களில் விஷயங்கள் கொச்சையானபோது கூடக் கோபித்துக் கொண்டதில்லையே? குசும்பு, குசும்பு என்று சிரித்துக் கொள்வாளே…? இப்பொழுது ஏன் இப்படிப் போய்விட்டாள்? அப்படியானால் அப்படி என்னைச் செல்லமாகத் திட்டி மகிழ்ந்ததெல்லாம் பொய்யா? அவையெல்லாம் வெறும் நடிப்பா? விமர்சன நோக்கில் எதையும் ஆராயும் குணமுடையவள் அதை ஏன் மாற்றிக் கொண்டாள்? கடைசியாக அன்று ஒரு நாள் அவளிடம் எப்படியெல்லாம் அளவளாவினோம்? – கண்ணனின் சிந்தனை சுமதியுடன் கழித்த அந்த முக்கியமான நாளை அசை போட ஆரம்பித்தது.

Series Navigationஅகதிகள் ஆண்டாக கொண்டாடுவோம்தொடுவானம் 91. தேவை ஒரு பாவை
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *