வெ.சா. – எப்போதும் மேன்மைகளை விரும்பிய ஆளுமை

This entry is part 23 of 24 in the series 1 நவம்பர் 2015

venkatswamithan_abc21.10.2015 அன்று வெங்கட் சாமிநாதன் இயற்கையெய்தினார். அவருடைய விழிகள் தானமாக வழங்கப்பட்டன. அவருடைய உடல் அன்றைய நண்பகலிலேயே பெங்களூரு ஹெப்பாள் மின்தகன மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்பட்டது. அவருடைய உடலை தகனமையத்தின் வண்டியில் ஏற்றும்போது ஆறேழு நண்பர்கள் மட்டுமே இருந்தோம். தகன மையத்தில் மேலும் ஆறேழு நண்பர்கள் காத்திருந்தார்கள். அஞ்சலி செலுத்தும் விதமாக நின்றுகொண்டோ அல்லது உட்கார்ந்துகொண்டோ பேசுவதற்கு அந்த இடம் சிறிதும் பொருத்தமாக இல்லை. வேறொரு நாளில் அந்த நிகழ்ச்சியை விரிவாகவே நடத்தவேண்டும் என நண்பர்களும் நானும் பேசிக்கொண்டோம்.

நிகழ்ச்சிக்கான இடத்தை முடிவு செய்வதற்குள் 25.10.2015 ஞாயிறும் வந்துபோய்விட்டது. அதிகமும் தள்ளிப் போடவேண்டாம் என நினைத்து 01.11.2015 ஞாயிறு நடத்திவிடலாம் என எங்களுக்குள் பேசிக்கொண்டோம். ஆயினும் நிகழ்ச்சிக்காக நாங்கள் பார்த்த இடம் எதுவுமே பொருத்தமாக இல்லை. இடத்தை முடிவு செய்யமுடியாமல் ஒவ்வொரு நாளும் நகரநகர சற்றே பதற்றம் பெருகியபடி இருந்தது. தற்செயலாக எங்கள் பிரச்சினையைக் கேட்ட நண்பர் கணபதி சி.வி.ராமன் நகரில் தன்னுடைய அடுக்கக வளாகத்தில் அமைந்திருக்கும் சமூகக்கூடத்திலேயே நிகழ்ச்சியை நடத்திக்கொள்ளத் தேவையான அனுமதியைப் பெற்றுக் கொடுத்தார். அதற்குப் பிறகுதான் பதற்றம் குறைந்தது.

01.11.2015 அன்று காலையில் 10 மணிக்குத் தொடங்கி நண்பகல் ஒரு மணி வரைக்கும் நடத்தி முடித்துக்கொள்ளலாம் என்கிற எண்ணத்தில் நிகழ்ச்சி நிரலை முடிவு செய்தோம். அதற்கிடையில் தற்செயலாக சென்னைக்குச் செல்ல நேர்ந்த நண்பர் மகாலிங்கம் இயக்குநர் அருண்மொழியைச் சந்தித்தபோது, வெங்கட் சாமிநாதன் பற்றி அவர் எடுத்துவைத்திருக்கும் ஆவணப்படத்தை பெங்களூரில் திரையிடும் வாய்ப்பு பற்றியும் பேசிவிட்டு வந்தார். அதற்கு முன்தினம்தான் விருட்சம் சார்பில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் பதினைந்து நிமிட நேரம் ஓடக்கூடிய படமாக அது திரையிடப்பட்டிருந்தது. உண்மையில் அவரிடம் மூன்று மணி நேரத்துக்கும் மேல் ஓடக்கூடிய அளவுக்கு படக்காட்சிகள் தொகுக்கப்படாமல் இருந்தன. விருட்சம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டதைக் காட்டிலும் மேலும் இருபது இருபத்தைந்து நிமிடம் கூடுதலாக காட்சிகளைத் தொகுத்து இணைத்து எடுத்துக்கொண்டு வருவதாக இயக்குநர் அருண்மொழி உறுதியளித்தார். நிகழ்ச்சியின் முதல் பகுதியில் நண்பர்களின் உரைகளையும் இரண்டாவது பகுதியில் ஆவணப்படத்தையும் அமைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்துகொண்டோம்.

01.11.2015 அன்று காலையில் சென்னையிலிருந்து இயக்குநர் அருண்மொழி குறித்த நேரத்தில் வந்து சேர்ந்தார். நண்பர் மகாலிங்கம் பேருந்து நிலையத்தில் காத்திருந்து, நிகழ்ச்சி நடைபெற உள்ள அரங்கத்துக்கு நேராக அழைத்து வந்துவிட்டார். அது புதிய இடம் என்பதால், அந்த இடத்தைக் கண்டுபிடிப்பதில் நண்பர்களுக்கு சிரமமாக இருந்தது. அதனால் பத்து மணிக்கு தொடங்கவிருந்த நிகழ்ச்சியை 11 மணிக்குத்தான் தொடங்கமுடிந்தது.

வெங்கட் சாமிநாதன் என்னும் ஆளுமையை நினைவுகூரும் விதமாக ஓரிரு நிமிடங்கள் அறிமுக உரை நிகழ்த்தினார் திருஞானசம்பந்தம். அதைத் தொடர்ந்து கூடத்தில் வைக்கப்பட்டிருந்த வெ.சா. நிழற்படத்தை ஜி.எஸ்.ஆர்.கிருஷ்ணனும் படிகள் ராமசாமியும் திறந்துவைத்து மலரஞ்சலி செலுத்தினர். பிற நண்பர்களும் மலரஞ்சலி செலுத்தி முடித்ததும் அனைவரும் ஒரு நிமிடம் வெ.சா.வுக்காக மெளன அஞ்சலி செலுத்தினர்.

வெ.சா.வுடன் நீண்ட காலம் தொடர்புடைய நண்பர் எழுத்தாளர் விட்டல்ராவ். அவருடைய உரையே முதலில் அமையவேண்டும் என நாங்கள் விரும்பியிருந்தோம். அவரும் உரை நிகழ்த்துவதாகச் சொல்லியிருந்தார். ஒரு நெருக்கடியான காரணத்துக்காக அவர் திடீரென வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால் அவர் கலந்துகொள்ளவில்லை. ஆனால் அவர் உரை கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்னும் எண்ணத்தில் முதல்நாள் மாலையிலேயே அவசரம் அவசரமாக வீடியோ கேமிராவுடன் அவர் வீட்டுக்குச் சென்ற திருஞானசம்பந்தம் அவருடன் உரையாடி, ஒரு நேருரை போலவே பதினைந்து நிமிட நேர அளவு அவரைப் பேசச் செய்து, பதிவு செய்துகொண்டு வந்துவிட்டார். அந்தப் பதிவு தொலைக்காட்சி வழியாக ஒளிபரப்பப்பட்டது.

முப்பது முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து பேசினார் விட்டல்ராவ். அவர் எழுதிய நதிமூலம் நாவல் க.நா.சு.வுக்குப் பிடித்திருந்தது. சென்னைக்கு வந்த சமயத்தில் அதைப் படித்துவிட்டு பாராட்டியிருக்கிறார். தில்லிக்குத் திரும்பிச் சென்றதும் அப்புத்தகத்தை வெ.சா.விடம் கொடுத்து படித்துப் பார்க்கும்படி செல்லியிருக்கிறார். வெ.சா.வுக்கு அந்த நாவல் பிடித்துவிட்டது. உடனே அவருடைய வேறு இரு நாவல்களையும் வரவழைத்துப் படித்துவிட்டார். தன்னிச்சியாகப் பொங்கியெழும் உத்வேகத்தை உள்ளடக்கிய படைப்புகளைப் போற்றி உயர்த்திப் பிடிப்பதில் வெ.சா. எப்போதும் முதன்மையானவராக இருந்தார். அந்த மூன்று நாவல்களைப்பற்றியும் ஒரு பெரிய கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதி புக் ரிவ்யு இதழில் இடம்பெறும்படி செய்தார். அதைத் தொடர்ந்து சென்னைக்கு வரும்போது விட்டல்ராவ் பணிபுரிகிற தொலைபேசி நிலையத்துக்கே நேரிடையாகச் சென்று சந்தித்துப் பாராட்டியுமிருக்கிறார். அன்று தொடங்கிய நட்பும் அன்பும் அவர் மறைவு வரைக்கும் தொடர்ந்தன என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் விட்டல்ராவ்.

ஜி.கே.ராமசாமி தன்னுடைய படிகள் கால நினைவுகளோடு உரையாடத் தொடங்கினார். வணிக இலக்கியத்தை ஒட்டிய எதிர்ப்புக்குரல் சமூகத்தில் எழவேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் விதமாக எழுபதுகளின் இறுதியில் இலக்கு என்னும் அமைப்பு உருவான பின்னணியையும் அந்த அமைப்பு ஆற்றிய செயல்பாடுகளையும் பற்றி சுருக்கமாகப் பகிர்ந்துகொண்டார். ஒரு பண்பாட்டுக்குள் வாழ்பவன் மனிதன். மனிதன் படைக்கும் இலக்கியத்தை அறிவுத்துறையால் மட்டும் மதிப்பிட்டுவிட முடியாது. ஒரு பண்பாட்டில் அறிவுத்துறைகளைக் கடந்து பல அம்சங்கள் உண்டு. குறிப்பாக அரசியல். அத்தகு அம்சங்கள் அனைத்தும் ஒன்றிணைந்துதான் இலக்கிய ஆக்கத்தைத் தீர்மானிக்கின்றன. இலக்கு அந்த நோக்கத்தை முன்வைத்து தன்னை கட்டமைத்து இயங்கி வந்தது. படிகள் இதழின் செயல்பாடுகள் கிட்டத்தட்ட அதையொட்டி இருந்தன. படிகள் இதழின் மதிப்பீடுகளை விமர்சனம் செய்து வெ.சா. படிகள் இதழுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தின் வழியாகவே படிகள் குழுவினருக்கும் அவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. மோதல் வழியாக வளர்ந்த உறவு அது. அந்தக் கடிதத்துக்கான பதில் ஒரு கட்டுரையாகவே இதழில் வெளிவந்தது. அவருடன் நிகழ்த்திய விவாதங்கள் தன் தேடல் முயற்சிகளுக்கு உத்வேகமூட்டுவதாக இருந்தன என்று குறிப்பிட்டு தன் உரையை முடித்தார் ஜி.கே.ராமசாமி.

அவரைத் தொடர்ந்து உரையாடிய ஜி.எஸ்.ஆர்.கிருஷ்ணன் தன்னுடைய தில்லிப் பயணத்தில் சாரு நிவேதிதாவைச் சந்தித்ததையும் அவர் வழியாக வெ.சா.வின் ஆர்வங்கள் பற்றி முதன்முதலாக அதிகமாகத் தெரிந்துகொண்டதையும் நினைவுகூர்ந்தார். பாலையும் வாழையும் புத்தகத்தில் அவர் கையாண்டிருந்த மொழியின் கவர்ச்சியை ஒருபோதும் மறக்கமுடியாது என்றார். ஒரு புதிய வாசகனை உடனடியாக தனக்குள் இழுத்துக்கொள்ளும் தன்மையை உடையது அந்த நடை என்று குறிப்பிட்டார். உள்வட்டம், வெளிவட்டம் என்னும் கருத்தாக்கத்தின் மீது தனக்கு நம்பிக்கை பிறக்கவில்லை என்றார். ’ஒரு காலத்தில் சமூகத்தின் மையமாக இயங்கி வந்த கலாச்சாரம் உயர்ந்த மரபுகளையும் நம்பிக்கைகளையும் பேணி வந்தது. அப்போது அனைத்தும் சரியாகவே இருந்தன,. அந்தக் கலாச்சாரத்துக்கு சமூகத்தில் இடமின்றி அழிந்தபோது அதை மையமாகக் கொண்டியங்கி வந்த அனைத்தும் சீர்குலைந்தன’ என்பது போன்ற நம்பிக்கை அந்தக் காலத்தில் வெ.சா.வுக்கு இருந்தது. அப்போது அது எப்படி இருக்கமுடியும் என்ற கேள்வி எழுந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது அதைப்பற்றி நினைக்கும்போது, பொருட்படுத்தி விவாதிக்கத் தக்க ஒரு விஷயமாகவே அந்தப் பார்வையை நினைக்கத் தோன்றுகிறது. மொத்த தமிழ்ச்சமூகமும் திருக்குறளை விதந்தோதிக்கொண்டிருந்த காலத்தில் திருக்குறளை இலக்கியப்படைப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அதை ஒரு நடத்தைவிதிகளின் தொகுப்பாகவே ஏற்றுக்கொள்ள முடியும் என்னும் பார்வையை முன்வைக்கக்கூடிய துணிச்சல் வெ.சா.வுக்கு இருந்தது. அந்த எதிர்ப்புச்சக்தியே அவருடைய அடையாளம். சமூகத்தில் அவருடைய இடமும் அதுதான் என்று தோன்றுவதாகக் குறிப்பிட்டார் ஜி.எஸ்.ஆர்.கிருஷ்ணன்.

வெ.சா.வுடன் தனக்கிருந்த முப்பத்தெட்டு ஆண்டு காலப் பழக்கத்தையும் சந்திப்புகளையும் பற்றிய நினைவலைகளுடன் உரையைத் தொடங்கினார் ப.கிருஷ்ணசாமி. பழகி நெருங்கிச் சென்றபின் அவரளவுக்கு நெருக்கம் பாராட்டுகிறவர்கள் வேறு யாரும் இல்லை என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இலக்கியப்படைப்புகள், ஓவியம், நாடகம், இசை, சிற்பம், நாட்டார் கலைகள் போன்றவற்றைப்பற்றியெல்லாம் தனித்த பார்வைகளை உருவாக்கி ஒரு பொதுவெளியிலிருந்து அவர் கொடுத்த பயிற்சி கல்லூரி வளாகத்துக்குள் பணியாற்றிய தன்னைப் போன்றவர்களுக்கு தனக்கான ஒரு பார்வையை வடிவமைத்துக்கொள்ள பேருதவி புரிந்ததாகச் சொன்னார். அவருடைய விமர்சனப்பங்களிப்பை இரு கட்டங்களாகப் பிரித்துப் பார்க்கலாம். அறுபதுகளில் தொடங்கி தொண்ணூறுகள் வரையிலான ஒரு கட்டம். அதற்குப் பிறகு நேற்றுவரையிலான இன்னொரு கட்டம். முதல் கட்டத்தில் பார்வையை உருவாக்கும் தேவையைப்பற்றியும் பார்வை உருவாகும் விதங்கள் பற்றியும் மொத்த சூழலையும் கணக்கிலெடுத்துக்கொண்டு ஓர் ஆராய்ச்சியாளன்போல ஆழ்ந்த தரவுகளின் அடிப்படையில் முடிவுகளை அவர் அறிவித்தார். இரண்டாவது கட்டத்தில் தன் பார்வையையே உரைகல்லாக்கி, மூத்த படைப்பாளிகளின் படைப்புகள் முதல் புத்தம்புது படைப்பாளிகள் ஆக்கங்கள் வரையில் அனைத்தையும் உரசிப் பார்த்து முடிவுகளை அறிவிக்கும் கட்டுரைகளை தொடர்ச்சியாக எழுதினார்.

திண்ணை, சிஃபி போன்ற இணைய இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள் வழியாகவே வெ.சா.வின் எழுத்துகள் தனக்கு முதன்முதலாக அறிமுகமாகின என்ற குறிப்போடு தன் உரையைத் தொடங்கினார் ஜடாயு. வெ.சா. பெங்களூரில் குடியேறிய பிறகுதான் அவரை முதன்முதலாகச் சந்தித்ததாகவும் கடந்த எட்டு ஆண்டுகளில் இருபது முறைக்கும் மேல் சந்தித்து உரையாடியிருப்பதாகவும் குறிப்பிட்டார். சலிப்பில்லாமல் உரையாடுவதிலும் விவாதிப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் வெ.சா. தமிழ் ஹிந்து தளத்துக்காக ஏராளமான கட்டுரைகளை அவர் இடைவிடாது எழுதிக் கொடுத்தார். ஏற்கனவே இல்லஸ்ட்ரேட் வீக்லியில் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளை மொழிபெயர்த்து மறுபிரசுரம் செய்துகொள்ளவும் அனுமதித்தார். மரணத்துக்கு மூன்று நாள் முன்பு ‘இன்றைய நாடகச்சூழலில் செ.ராமானுஜம்’ என்னும் கட்டுரையை எழுதிக் கொடுத்தார். அந்தக் கட்டுரையை தளத்தில் பிரசுரித்தபோது, அக்கட்டுரையின் தொனிக்கு சற்றும் பொருத்தமில்லாமல் இடம்பெற்றுவிட்ட படங்களை அகற்றும்படி கேட்டுக்கொண்டதையும், பயன்படுத்தப்பட வேண்டிய படங்களை தன் தொகுப்பிலிருந்து எடுத்து ஸ்கேன் செய்து அனுப்பியதையும் நினைவுகூர்ந்தார். வாழ்நாள் முழுதும் கலைமகளின் அருளுடன் செயலாற்றிய ஒருவர் கலைமகள் தினத்தில் மரணமடைவது என்பது தன் பார்வையின் அடிப்படையிலும் நம்பிக்கையின் அடிப்படையிலும் ஒரு பெரும்பேறாகவே நினைப்பதாகக் குறிப்பிட்டார். முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை அவர் விட்டுச் சென்றிருக்கிறார். அதுமட்டுமன்றி, புத்தக ஆக்கம் பெறவேண்டிய நூற்றுக்கணக்கான பக்கங்கள் இன்னும் இருக்கின்றன. வெ.சா.வின் விமர்சனப் பார்வைகள் இன்றும் செல்லுபடியாகக்கூடிய சூழலிலேயே நாம் வாழ்கிறோம். அவை காலாவதியாகிவிட்டன என்று சொல்லப்படும் வாதத்தில் உண்மையில்லை. அசோகமித்திரன் போன்ற பெரும்படைப்பாளியை அவர் பொருட்படுத்தி வாசிக்கவில்லை என்பது உண்மையாக இருக்கலாம். அப்படி ஒரு கருத்தை முன்வைக்க அவருக்கு முழு உரிமை உள்ளது. ஒரு படைப்பில் அவர் எப்போதும் வலியுறுத்தி வந்த ஆழ்மனப்பிரக்ஞையின் பங்கையும் பித்துநிலையையும் அசோகமித்திரன் படைப்புகளில் தன்னால் காணமுடியாத நிலையில் ஏமாற்றம் கொண்டிருப்பதற்கான வாய்ப்புண்டு. அவர் ஒன்றை மறுத்தபோதும் அதற்கான காரணங்களை முன்வைத்துவிட்டு மறுக்கும் பழக்கம் அவரிடம் இருந்தது. அத்தகு பித்துநிலையும் ஆழ்மனப்பிரக்ஞையின் பங்கையும் ஜாகிர் ராஜா என்னும் எழுத்தாளர் எழுதிய ‘செம்பருத்தி பூத்த வீடு’ என்னும் சிறுகதைத் தொகுப்பைப் படித்தபோது, உடனே அதைப்பற்றி அவர் எழுதி வெளியிட்டார். பெரிய படைப்பாளி, சின்ன படைப்பாளி என்று வேறுபடுத்திப் பார்க்கும் பார்வை வெ.சா.விடம் எப்போதும் இல்லை. படைப்புக்கு ஆதாரமாக எவை இருக்கவேண்டும் எனக் கருதுகிறாரோ, அவை இருக்கிறதா என்று பார்ப்பதொன்றே அவர் ஆர்வமாக இருந்தது. ரஷிய இலக்கிய மேதையான தல்ஸ்தோய்க்கு ஷேக்ஸ்பியரின் படைப்புகள் எவ்விதமான ஈர்ப்பையும் தரவில்லை. அவருடைய ஆக்கங்கள் மதிப்பற்றவை என்று வெளிப்படையாகவே தெரிவித்தார். வெ.சா. பல துறைகள் சார்ந்து எண்ணற்ற கட்டுரைகள எழுதியுள்ளார். அவருடைய பன்முக ஆளுமையை அடையாளப்படுத்தும் விதமாக ஆங்கிலத்தில் வெளிவரும் ‘ரீடர்’ போல ஒரு தொகைநூலைக் கொண்டு வருவது காலத்தின் அவசியம். சிறுகதைகள் பற்றி, நாவல்கள் பற்றி, ஓவியங்கள் பற்றி, நாடகங்கள் பற்றி, நாட்டார் கலைகள் பற்றி என அவர் எழுதிய கட்டுரைகளில் வகைக்குச் சிலவாகத் தேர்ந்தெடுத்து நல்லதொரு தொகுப்பைத் தயாரிக்கவேண்டும் என்று சொல்லி தன் உரையை முடித்தார் ஜடாயு.

’ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ நாவலில் இடம்பெற்றிருக்கும் ஓர் உரையாடலை நினைவுகூர்ந்தபடி தன் உரையைத் தொடங்கினார் பாவண்ணன். கல்யாணிக்கும் அவள் கணவனுக்கும் இடையில் நிகழும் உரையாடல் அது. கல்யாணி வளர்க்கும் ரோஜாச் செடிகளைப்பற்றி அந்த உரையாடல் தொடங்கி பல திசைகளில் விரிந்துவிரிந்து செல்லும். இறுதியில் கல்யாணி ‘அழகு விரையம் என்று சொன்னால் வாழ்க்கையே விரயம்தான்’ என்று சொல்லும் வாக்கியம் இன்றும் செல்லுபடியாகக்கூடிய வாக்கியம். அழகு என்பது ஒரு செடியின் அழகையோ, பூவின் அழகையோ, தோட்டத்தின் அழகையோ மட்டும் குறிப்பிடும் ஒற்றைப் பரிமாணம் கொண்ட சொல்லல்ல. உண்மையின் அழகு. உள்ளத்தின் அழகு. உலகத்தின் அழகு என விரிவடையக்கூடியது. மேலும் புற அழகு என்பது அக அழகின் பிம்பம். அகம் அழகாக இருக்கும்போது புறம் அழகாக இருக்கிறது. அகத்தை அழகற்றதாக வைத்துக்கொண்டு புறத்தை மட்டும் அழகாக வைத்துக்கொள்ள முடியாது. ஒரு படைப்பின் ஆக்கத்துக்கும் சூழலின் முக்கியத்துவத்துக்கும் வெ.சா. கட்டமைக்கும் உறவு கிட்டத்தட்ட இத்தகைய ஒன்று. விமர்சிப்பதன் மூலம் ஓர் அழகை மேம்படுத்துவது என்பது, இன்னும் அது அழகுடையதாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான். வெ.சா.வின் விமர்சனம் ஒருவகையில் எல்லாவற்றையும் மேம்படுத்தத் தூண்டும் விமர்சனம். அவர் எழுதத் தொடங்கிய ஐம்பதுகளின் காலம் என்பது இன்று இருப்பதுபோன்ற காலமல்ல. ஒருபுறம் தமிழ்ப்பண்டிதர்களும் இன்னொருபுறம் அரசியல் தத்துவவாதிகளும் தமிழ்ச்சூழலின் படைப்பூக்க ஊற்று தூர்ந்துபோய்விடும் அளவுக்கு தடையாக இருந்தார்கள். படைப்பூக்கத்தைக் காப்பாற்றுவதற்காக அவர் அவர்களை எதிர்க்கவேண்டியிருந்தது. இலக்கியத்தைக் கடந்து, அதுவரை யாரும் கவனத்தில் எடுத்துக்கொள்ளாத நாட்டாரியல், சிற்பம், இசை, ஓவியம் போன்ற பிற துறைகளின்மீதும் கவனம் விழும்படி செய்தார். இதுவரையிலும் எவரும் அப்படி இல்லை எனச் சொல்லும் அளவுக்கு அவர் பன்முக ஆற்றல் உடையவராக இருந்தார். அவருக்கு அஞ்சலி என்று சொல்லி தன் உரையை முடித்தார் பாவண்ணன்.

இயக்குநர் அருண்மொழி வெ.சா.வைப்பற்றிய ஆவணப்படம் எடுக்கும் ஆசை தனக்குள் பிறந்த விதத்தைப்பற்றி சுருக்கமாக சில நிமிடங்கள் சொன்னார். அதைத் தொடர்ந்து வெ.சா.பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது. ஏறத்தாழ 45 நிமிடங்கள் நீண்ட திரைப்படம் பார்வையாளர்கள் அனைவரும் ஆர்வத்தோடும் கவனத்தோடும் பார்த்து மகிழ்ந்தார்கள். படம் முடிந்ததும் வெ.சா.வின் இழப்பு ஏற்படுத்தும் வெறுமையை ஒவ்வொருவராலும் உணரமுடிந்தது. இறுதியாக இன்னும் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக தன்வசம் இருக்கும் காட்சித் தொகுப்புகளப் பயன்படுத்தி ஒன்றரை மணிநேரப் படமாக கச்சிதமாகத் தொகுத்து வெ.,சா. ஆவணப்படத்தை வெளியிடப்போவதாக உரைத்தார் அருண்மொழி. அத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

Series Navigationவெங்கட் சாமிநாதனின் நினைவாக…ஒரு நல்ல எழுத்துதான் அவருக்கு முக்கியம்அணுப்பிணைவு மின்சக்தி நிலையத்தை கதிரியக்கக் கழிவின்றி நிதிச் சிக்கனத்தில் இயக்கலாம்.
author

பாவண்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *