அவன், அவள். அது…! 10

This entry is part 12 of 18 in the series 15 நவம்பர் 2015

( 10 )

      என்னம்மா சொல்றே நீ? ஒருத்தனுடைய பேச்சும் எழுத்தும் அவனுடைய காரெக்டருக்கு அளவுகோல்னு சொன்னா எப்படி? அதை என்னால ஏத்துக்க முடியலைம்மா…

நிச்சயம் அப்படித்தாம்ப்பா…மனசிலே நாம எப்படி சிந்திக்கிறோமோ அதுதான் பேச்சிலும், செய்கையிலும் வெளிப்படுது…அதுதான் உண்மை…

அப்படிச் சொல்ல முடியாதும்மா…மனம் ஆயிரம் நினைக்கும் ஆனால் அதில் தேவையில்லாததையெல்லாம் வடிகட்டி நல்லதைச் செய்யறாம்பாரு…அவன்தான் மனுஷன்…அதனாலே செய்கைதான் முக்கியம்.

எழுத்தும் பேச்சும் அவரோட செயல்தானேப்பா…அது சுத்தமா இருக்கணுமில்லியா?

எழுத்து அவருடைய உறாபி…நாட் ய ப்ரொஃபெஷன். பேச்சு அவர் உன்னோட விவாதிக்கிறது. அதாவது ரெசல்யூஷன் மாதிரி. தீர்மானம் போட்டுட்டா நடைமுறைக்கு வந்திடுத்துன்னு அர்த்தம் இல்லே…அதை பேஸ்பண்ணி ஆர்டர் போடணும்…அப்பத்தான் இம்ப்ளிமென்ட் பண்ண முடியும்…ஆகையினால பேசறதும், டிஸ்கஸ் பண்றதும், முடிவு எடுக்கிறதுக்காக…வாயால எடுத்த முடிவை, அதாவது விவாதிச்சு எடுக்கப்பட்ட முடிவை செயல்வடிவம் ஆக்கணும்னா அதை எழுத்து வடிவத்துல ஆணையா மாத்தணும்…நீ அறிவு பூர்வமா எதையும் அணுகுவேங்கிற முறைல உன்னோட டிஸ்கஸ் பண்ணியிருக்கலாம் எல்லாத்தையும். அதுக்காக அவரே அந்தக் காரெக்டர்ன்னு நீ முடிவு பண்ணிடுவியா? இதென்ன அபத்தமா இருக்கு? நீ ஏன் அவரை அப்படி வித்தியாசமா, அதாவது முரணா நினைக்கிறே?

எழுத்துங்கிறது கற்பனை கலந்ததுதான். ஆனாலும் நம்முடைய சிந்தனை அது. அதை யாரும் மறுக்க முடியாது. மனசிலே நல்ல விஷயங்கள் தேங்கிக் கிடந்தா நல்ல சிந்தனை வரும். அது நல்ல எழுத்தை உருவாக்கும். அங்கே சாக்கடையான எண்ணங்கள் இருந்தா அதுதான் வெளிப்படும்…நாறத்தான் செய்யும்..

ஒட்டு மொத்தமா அப்படிச் சொல்லிட முடியாதும்மா…ஒரு நல்ல விஷயத்தை மனசிலே பதியும்படி சொல்லணும்னா அதுக்கு எதிரா ஒரு கெட்ட விஷயத்தையும் எடுத்து வச்சுத்தாம்மா ஆகணும். அப்பதான் அந்த நல்லதுக்கு உரிய ஸ்தானம் கிடைக்கும். எளிய உதாரணம்…நம்ம சினிமாவ எடுத்துக்கோ…எல்லா வன்முறைகளையும், தவறுகளையும் காண்பிச்சுட்டு, கடைசியிலே நியாயம் ஜெயிக்கிறமாதிரி காண்பிக்கிறாங்களே அது எதுக்காக? அந்த நியாயத்துக்கு அப்பதான் வெயிட். மனசு அப்பதான் திருப்தியாகும். நிறைவடையும். நம்ம மக்கள் மனசுல படிஞ்சிருக்கிறது நல்லவைகள்தான். ஆகையினால அவுங்க அதைத்தான் ஏத்துப்பாங்கன்னு சினிமா எடுக்கிறவங்களுக்கு நல்லாத் தெரிஞ்சிருக்கு…எடுத்து. எடுத்து வெற்றியைக் குவிக்கிறாங்க…நான் சொல்றது உண்மைதானே?

அதை நான் ஒத்துக்க மாட்டேம்ப்பா…ஏன்னா ஒண்ணு நல்லதுங்கிறதை உணர அறிவு ஒன்றே உதவியா இருந்தா போதும்…தெரிஞ்சிக்கலாம்…

எல்லாப் பயல்களுக்கும் அறிவு வேலை செய்யணுமே…? எத்தனை பேருக்கு அது இயங்குது…பல பேருக்குத் தூங்கிட்டுத்தானே இருக்குது…நீ படிச்சவ…அறிவு பூர்வமா சிந்திக்கக் கத்துண்டிருக்கே…எல்லாராலேயும் அப்படி முடியுமா? ஒரே விஷயத்தை கட்டுரையா சொன்னாலே புரிஞ்சிக்கிற திறமை பலபேர்ட்ட இருக்கு…கதையாச் சொன்னாத்தான் சில பேருக்குப் புரியும். அதையும் எளிமையாக்கி காட்சியா, நாடகமா, காட்டினாத்தான் இன்னும் சிலருக்குப் புரியும். மனசுல பதியும். அதுபோல இதெல்லாம் அவுங்கவுங்க டேஸ்டைப் பொறுத்த விஷயம். இதுதான் சரின்னு வரையறுத்துச் சொல்ல முடியாது. மாப்பிள்ளையோ எழுத்தாளர். எப்பவுமே ஒரே மாதிரிச் சிந்திக்க முடியாது. வாசகர்கள் ஓடிப் போயிடுவான். அவனுக்கு வித்தியாசமாக் கொடுத்திட்டே இருக்கணும். அப்பதான் அவனைத் தன் பக்கமாவே தக்க வச்சிக்க முடியும். பல கோணங்களிலே தன்னுடைய சிந்தனையை ஓட விட்டாதான் வெற்றி வாய்ப்பைக் கை நழுவ விடாம இருக்க முடியும். இல்லன்னா நூல் அறுந்த பட்டமாயிடும்….அப்புறம் எங்க போய் எந்த மரத்துல சிக்குமோ தெரியாது. இன்னொரு எழுத்தாளனைத் தேடிப் போயிட்டா அப்புறம் இவர் பாடு அதோகதிதான். அவர் எழுத்துக்கு மவுசு கூடிடும். இந்த உலகமே போட்டிலதாம்மா இயங்குது…ஒவ்வொருத்தனும் லகானை இழுத்துப் பிடிச்சிக்கிட்டு, குதிரையை ஓட்டி எதையோ விரட்டிக்கிட்டேயிருக்கான். கடைசிவரைக்கும், ஆயுள் முழுக்க இந்த விரட்டல் தொடருது. இல்லன்னா இந்த வாழ்க்கை சலிச்சுப் போயிடும். அடிக்கடி சலிச்சுப் போற இந்த வாழ்க்கையை எப்படிப் புதுப்பிச்சிக்கிறது? ஒவ்வொருத்தனும் அவனவனுக்குன்னு ஒரு திறமை வச்சிருக்கான். செயல்பாடு வச்சிருக்கான். அதைக் கைல பிடிச்சிட்டுப் போயிட்டிருக்கான்…புரியுதா நான் சொல்றது? வெற்றி இலக்கை அடையுறமட்டும் அப்படிப்பட்டவன் ஓய மாட்டான்…இதுதான் தத்துவம்னு வச்சிக்கியேன்…

 

Series Navigationபாரதியைத் துய்த்துணரும் சொ.சேதுபதிபூவைப்பூவண்ணா
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    உஷாதீபனின் ” அவன், அவள். அது ” தொடர்கதை மிகவும் அருமையாக செல்கின்றது. பாத்திரப்படைப்புகள் ஒவ்வொன்றும் ஒரு விதமாக இயல்பாக அமைந்துள்ளன.இந்த பகுதியில் அப்பாவுக்கும் மகளுக்கும் நடைபெறும் உரையாடல் நன்று….வாழ்த்துகள்….டாக்டர் ஜி. ஜான்சன் .

    1. Avatar
      ushadeepan says:

      டாக்டர் சார், ரொம்ப நன்றி. தொடர்ந்து படிச்சிட்டு வர்றீங்கங்கிறதே மனசுக்கு சந்தோஷமா இருக்கு….இயல்பா எழுதறது என்னோட எழுத்து முறை…அது ரசிக்கத்தக்கதா இருந்தா மகிழ்ச்சிதான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *