நாளைய பங்களா தேஷ் யாருக்கானது?

author
0 minutes, 0 seconds Read
This entry is part 12 of 15 in the series 29 நவம்பர் 2015

தஸ்லிமா நஸரீன்

 
tasleemaஎன்னுடைய தாய்நாட்டைப்  போற்றிப்  பாராட்டும் தேசபக்தி பாடல்களை நான் ஒரு காலத்தில் பாடுவதில் விருப்பத்துடன் இருந்திருக்கிறேன். இப்போதெல்லாம் அந்த விருப்பம் இல்லை. ஏனெனில், அந்தப்  பாடல்களை நான் நம்புவதில்லை. மக்களுக்கு தேவையான அடிப்படைத்  தேவைகளை  தருவதில் என்னுடைய நாடு மிகவும் பின் தங்கி இருக்கிறது என்பது மறுக்கமுடியாதது. அதன் குறைகளை எல்லாம் தாண்டி, ஒரு நாட்டை உலகத்திலேயே மிகச்சிறந்த நாடு என்று, சொந்த நாடு என்ற காரணத்திற்காக ,உணர்ச்சியுடன் சொல்ல முடியாது. என்னுடைய நாடு, ஏழ்மையிலும், பாரபட்ச நடைமுறையிலும், சகிப்புத்தன்மையில்லாததிலும், அடக்குமுறையிலும் மூச்சு த்  திணறிகொண்டிருக்கிறது. ஆகவே, தன்னுடைய நாட்டு மக்களிடமே மதிப்பை இழந்துகொண்டிருக்கிறது.
 
பங்களாதேசத்தின் உள்ளே இருக்கும் இந்திய நிலங்களும், இந்தியாவின் உள்ளே இருக்கும் பங்களாதேசின் நிலங்களும் சித் மஹல் என்று அழைக்கப்படுகின்றன. இந்த சித் மஹல்களின் உள்ளே இருக்கும் மக்களை பார்த்தாலேயே ஒரு விஷயம் பளிச்சிடுகிறது. பங்களாதேஷின் உள்ளே இருக்கும் 111 இந்திய சித் மஹல்களின் 979 பேர்கள் இந்தியாவுக்கு சென்றுவிட விரும்புகிறார்கள். ஆனால், இந்தியாவின் உள்ளே இருக்கும் சித் மஹல்களில் இருக்கும் ஒரு பங்களாதேச குடிமக்களும் தாய்நாடான பங்களாதேசுக்கு செல்ல விரும்பவில்லை. இது தங்கள் நாட்டை பற்றி எந்த அளவுக்கு பங்களாதேசிகள் நம்பிக்கையற்று இருக்கிறார்கள் என்று விளக்குகிறது. தங்கள் நாட்டின் மீதே நம்பிக்கையற்று இருப்பதைவிட எதுதான் மிகவும் சோகமானது?
 
பாதுகாப்பான எதிர்காலத்துக்காக, பங்களாதேஷிகள் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறிகொண்டே இருக்கிறார்கள். பங்களாதேஷின் உள்ளே இருக்கும் இந்துக்களின் எண்ணிக்கை அதிர்ச்சி தரும் அளவுக்கு குறைந்துவிட்டது. வகுப்புவாதம், சகிப்புத்தன்மையின்மை, மதவெறி ஆகியவை பங்களாதேஷின் குடிமக்களை தங்கள் நாட்டை விட்டே துரத்திகொண்டிருக்கின்றன. இந்தியாவுக்கும் பங்களாதேசுக்கும் இடையே எல்லை இல்லாமலோ, அல்லது விசா தேவைப்படாமலோ இருந்தால், பங்களாதேஷின் மக்கள் எப்போதோ தங்கள் நாட்டை விட்டு வெளியேறியிருப்பார்கள். இந்த நிலமே ஆளற்ற பாலைவனமாக ஆகியிருக்கும்.

பிரிவினையின்போது (1947) இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்ற முஸ்லீம்களின் எண்ணிக்கை, பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு சென்ற இந்துக்களின் எண்ணிக்கையை விட வெகுவாக குறைவு. சந்தேகத்துக்கிடமின்றி, ஏராளமான முஸ்லீம்கள் இந்தியாவிலேயே தங்கிவிட்டனர்.
 
முகம்மது அலி ஜின்னா இந்துக்களும் முஸ்லீம்களும் சேர்ந்து இருக்கவேண்டும் என்று விரும்பினார். ஆனால், அது மதக்  கலவரங்களில் அப்பாவி மக்கள் கொலை செய்யப்படுவதை தடுக்கவில்லை. நாட்டை விட்டு மீண்டும் மீண்டும் இந்துக்கள் வெளியேற உந்தப்பட்டுகொண்டே இருந்தனர். ஆனால், இந்துக்கள் பங்காளாதேஷை விட்டு வெளியேறியதால், (அன்று கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட) பங்களாதேஷில், திறமையான மக்கள் தொகை வெகுவாகக்  குறைந்தது. ஏராளமான பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் ஆசிரியர்களும் மாணவர்களும் இல்லாததால் பள்ளிகள் மூடப்பட்டன.  உயிர்வாழவே போராடிகொண்டிருக்கும் போது, கல்வி என்பது  ஆடம்பரமானதாக ஆகியது. இது கிழக்கு பாகிஸ்தான் மக்களிடையே அறியாமையை அதிகரித்தது.
 
1971இல் கிழக்கு பாகிஸ்தான் மதசார்பின்மையின் முன்பு தோற்றதினால் , பங்களாதேஷ் பிறந்தது.  அதன் குடிமக்கள் புதிய கனவுகளையும், ஆசைகளையும் வளர்த்துக் கொண்டார்கள் . ஆனால், அது சில வருடங்களுக்குள்ளேயே கனவு குப்பைக்கு போனது. நிலைமை இன்னும் மோசமாகி, இந்துக்கள் மட்டுமில்லாது, பங்களாதேச முஸ்லீம்களும் இந்தியாவுக்கு ஓட ஆரம்பித்தார்கள். இன்று பங்களாதேச முஸ்லீம்களின் எண்ணிக்கை மேற்கு வங்காளத்திலும் அஸ்ஸாமிலும் கணிசமாக இருக்கிறது. இந்த வந்தேறிகள் தங்களை சொந்த நாட்டிலிருந்து வெளியேறி, பாதுகாப்புக்காகவும், அமைதிக்காகவும், குடியிருக்கும்  இடத்துக்காகவும், ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பிடுவதற்காகவும் இந்தியாவுக்கு ஓடி வந்திருக்கிறார்கள். இது இந்தியாவுக்கு மட்டுமல்ல. உலகம் முழுவதும் உள்ள நாடுகளுக்கு தங்கள் உயிரைப்  பணயம் வைத்தும், ஒரு பாஸ்போர்ட்டுக்கும் விசாவுக்கு லஞ்சம் கொடுத்தும் ஓட தயாராக இருக்கிறார்கள்.
 
ஒவ்வொரு நாடும் மிகவும் தாழ்மையான நிலையில் சில காலம் இருக்கும் என்பதும், பிறகு அவை சீரடையும் என்பது உண்மைதான். ஆனால், அது பங்களாதேஷில் உண்மையில்லை.
 
பங்களாதேஷின் முற்போக்கு வலைப்பதிவர்களுடன் தொடர்பில் இருக்கிறேன். அவர்களில் ஒவ்வொருவரும் நாட்டை விட்டு வெளியேறவே விரும்புகிறார்கள். 1990இல் முழு நாடுமே எனக்கும்,  என் எழுத்துக்கு எதிராகவும் நின்ற இருண்ட காலத்தை நினைவுகூர்கிறேன். என்னுடைய புத்தகங்கள் தடை செய்யப்பட்டிருந்தன. மதவெறியர்கள் என்னைத்  தூக்கிலிட விரும்பினார்கள்.  என்னைக்  கொல்ல தற்கொலைப் படைகள் உருவாகிகொண்டிருந்தன. லட்சக்கணக்கான மக்கள் ஊர்வலங்களில் பங்கேற்றார்கள்.  அரசாங்கம் எனக்கு எதிராக ஏராளமான வழக்குகளை தொடுத்தது. என்னை கைது செய்ய அரஸ்ட் வாரண்டுகள் உருவாக்கப்பட்டன.  சட்டத்துக்கு தப்பி ஓடி, இருண்ட மூலையில் ஒளிந்தேன். அப்போதும் நான் நாட்டை விட்டு ஓட விரும்பவில்லை. ஆனால், தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள மதசார்பற்ற வலைப்பதிவர்கள் ஐரோப்பாவுக்கோ அமெரிக்காவுக்கோ ஓடிவிட  விரும்பும் அளவுக்கு, சகிப்புத்தன்மையின்மை இன்று அவ்வளவு உச்சத்துக்கு சென்றிருக்கிறது. அதே நேரத்தில், கற்றறிந்த குடிமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே போகிறது.
 
திறமையான குடிமக்கள் தங்கள் நாட்டின் மீது நம்பிக்கை இழப்பது மிகவும் அதிர்ச்சி தரவைக்கும் நிலைமை.

இந்த சீரழிவை தடுக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்திருக்கவேண்டும். ஆனால், அரசில் இருப்பவர்களோ தங்கள் தங்கள் சுயநலத்துக்கான வேலைகளையே செய்துகொண்டிருக்கிறார்கள்.  அதனை சாதிக்க, அறியாமைகொண்ட மக்களிடம் அறியாமையையே பரப்புவதும், சகிப்புத்தன்மை அற்றவர்களிடம் சகிப்புத்தன்மையின்மையை பரப்புவதும், நேர்மையற்றவர்களிடம் நேர்மையின்மையை பரப்புவதையும் செய்துகொண்டிருக்கிறார்கள்.

கொடூரமான செய்கைகள் நாட்டில் நடப்பதற்கு எதிரான அரசாங்கத்தின் செய்கைகள் போதுமானவை அல்ல. மதத்துக்கும் அரசியலுக்கும் மிகுந்த ஒற்றுமை உள்ளது.  குருட்டு நம்பிக்கையின் மூலமாகவே மதம் செழிக்கிறது. அதே போல, அரசியல் கட்சிகளும் அதன் குருட்டு நம்பிக்கையாளர்களாலேயே வளம் பெறுகிறது.  எதிர்த்துக்  கேள்வியே கேட்காதவர்கள். மதச்  சார்பு அரசியலை நம்பத்தகுந்ததாக ஆக்குகிறது. அரசியல் அந்த மதத்துக்கு ஆதரவை தருகிறது. இந்த கூட்டுவாழ்வு ஒரு காலகட்டத்துக்கு பிறகு பிரித்தறிய முடியாததாக ஆகிவிடுகிறது.

ஆகவே பொதுமக்கள் துயரத்தில்  உழல்கிறார்கள்.
 
நான் அடிக்கடி பங்களாதேஷின் எதிர்காலத்தை பற்றி யோசிக்கிறேன். யார் இந்த தாய்நாட்டை  அடையப்  பெறப்போகிறார்கள்? பணக்காரர்கள் அமெரிக்காவுக்கு ஓடுகிறார்கள். மத்திய வர்க்கத்தினர் ஐரோப்பாவுக்கும் இதர ஆசிய நாடுகளுக்கும் ஓடுகிறார்கள். ஏழைகள் இந்தியாவுக்கு ஓடுகிறார்கள். மீதம் தங்குபவர்கள், அடக்குமுறையை ஏவும்  செல்வந்தர்கள், இன்னும் கனவு காணும் மத்தியதர வர்க்கம், எந்த குறிக்கோளும் இல்லாத ஏழைகள்.  தன் நாட்டின் மீது அன்புடன் நாட்டில் இருக்கும் குடிமக்கள் மிகவும் குறைவே. ஒரு காலத்தில் இங்கே ஒருவரும் இல்லாமல் போனால் ஆச்சரியப்படமாட்டேன்.

Series Navigationமருத்துவக் கட்டுரை- மார்பக தசைநார்க் கட்டி ( பைப்ரோஅடினோமா ) ( Fibroadenoma )செர்ன் விரைவாக்கி யந்திரத்தில் பேரளவு உஷ்ணத்தில் பெருவெடிப்பின் போது தோற்ற காலக் குவார்க் குளுவான்கள் பிறப்பு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *