பத்திரம்

This entry is part 15 of 17 in the series 6 டிசம்பர் 2015

 

செல்லம்மாளுக்கு இரை கிடைத்து விட்ட மாதிரித்தான் தோன்றியது. முகத்தில் ஒரு வார தாடியுடன் தலையைக் குனிந்த படியே அவன் வாசலில் நுழைய முற்பட்டான். கையில் ஒரு பிரபலத் துணிக்டையின் இலவசப் பை இருந்தது. அதில் துருத்திக் கொண்டு சட்டையொன்று தெரிந்தது.

“ என்ன பாசஞ்சரா.. டிக்கெட்டைகாம்பிச்சுட்டு இங்க பதிவு பண்ணிக்குங்க “

அவன் முகத்து தாடியை வறக் வறக்கென்று சொறிந்தபடி செல்லம்மாளைப் பார்த்தான். ஒருவகையில் அவளின் இரண்டாம் மகன் பக்தவச்சலம் சாயல் அவனிடம் இருந்தது. குடிகாரப் பயல். குடித்து விட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்கிறவன். அவன் அப்பாவைப் போல. அவன் அப்பா அற்பாயுளில் போனவர். இவனையும் அப்படித்தான் பறி கொடுக்க வேண்டியிருக்குமோ என்னமோ.

“ என்ன பேச்சைக் காணம். பேசஞ்சர்தானே..” மேசையின் மீது கிடந்த பதிவேட்டைக் காட்டினாள் செல்லம்மாள். பதிவேட்டில் வகை வகையான கிறுக்கல்களில் பெயர்கள் வரிசையாய் பல்லிளித்தன. ஒழுங்கற்று குழந்தையொன்று கிறுக்கி விட்டது போல் பல பெயர்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தன. பெயர்கள், நேரம், வந்த தொடர்வண்டி , போகும் தொடர்வண்டி , கையெழுத்து என்று கட்டம் கட்டின அவை.

அவன் மேசையின் அருகில் வந்து பத்து ரூபாய் ஒன்றை பதிவேட்டின் கீழ் வைத்தான். அதை மெல்ல உள்ளே தள்ளினான். “ செரி.. செரி .. நானே பேர், ரயில் நெம்பர்ன்னு ஏதாச்சும் எழுதிக்கறேன். ஆனா ஒரு மணி நேரத்துக்கு மேல இருக்கக் கூடாது.. ஆமா..” அவன் எதுவும் சொல்ல விரும்பாதவன் போல் தலையை நிமிர்த்திக் கொண்டு கதவருகில் சென்றான்.ஒரு கணம் அவன் தலை திரும்பி செல்லம்மாவைப் பார்த்து விட்டு இயல்பாகிக் கொண்டது.

பதிவேட்டைத் திருப்பி தன் மார்புப்பகுதிக்குக் கொண்டு வந்தாள். நூலால் கட்டப்பட்தாய் ஒரு பேனா இருந்த்து. அந்த நூல் அதனது வெள்ளை நிறத்தை இழந்து அழுக்கில் அவலட்சணமாகியிருந்தது. அவள் ஏகதேசம் அவளின் கையெழுத்தைத்தான் சரியாகப் போடுவாள். மற்றபடி எதுவும் எழுதவராது. குமரேசன் அவளது துறையில் எழுத்தராகப் பணிபுரிகிறான். இப்போதெல்லாம் இந்தியில் கையெழுத்துப் போட வேண்டும் என்று கட்டாயம் வந்த பின் எப்படியோ கற்றுக் கொண்டு விட்ட்தாகச் சொன்னான்.

“ இந்தி பரிட்ச்சை ஒண்ணு பாஸ் பண்ணனும் . சம்பளம் எச்சாக்குடுப்பாங்க “ என்று ஒருதரம் காதுகுத்து விசேசமொன்றில் பார்த்தபோது சொல்லியிருந்தான். பதிவேட்டில் பல பெயர்கள்,விலாசங்கள், கையெழுத்தெல்லாம் இந்தியில் தென்பட்டன.

” இதென்ன சாமன்ய ஊரா.. கோடிக்கணக்கிலெ பணம் பொழங்கற எடம். நாலு மனுசங்க வந்துதா போவாங்க “

பெரிதாய் சப்தம் போட்டபடி ஆட்டோ ஒன்று அரசு உயர்நிலைப்பள்ளி சாலையில் சென்றது. அவளின் பார்வைக்கு ஆட்டோவின் பின்புறம் தெரிந்து மறைந்தது. ஏதோ பாட்டுசப்தத்தை அது கிளப்பி மறைந்தது. பாட்டுச்சப்தம் இல்லாவிட்டால் அது விரைந்து போனது தெரியாது. வடக்குப்புறம் இருக்கும் மசூதியிலிருந்து தொழுகை நேரத்துச் சப்தம் கேட்கும். அப்படி சப்தம் போட்டுத்தான் சிவராமன் தன்னைக் காட்டிக் கொள்வான். சிவராமன் வீட்டில் தான் அவள் தங்கியிருக்கிறாள்.பக்தவச்சலம் வீட்டில் அய்ந்து வருடங்கள் தங்கி விட்டாள். போது வேறு எடம் பார்க்கலாம் என்ற முடிவு வந்தபோது இரண்டாம் மகன் சிவராமனிடம் வந்து ஒட்டிக் கொண்டாள்.

“ அத்தை இன்னிக்கு ஒரு இரநூறு ரூபாயாச்சும் தெரட்டித் தாங்க. கையில் சுத்தமா காசு இல்லே..” வேலைக்குக் கிளம்புகிறபோதே சைலஜா சொல்லியிருந்தாள்.

இப்போதைக்கு எண்பது ரூபாய்தான் தேறியிருக்கிறது. இருநூறு ரூபாய் என்பது சிரமமாகத்தான் தோன்றியது.. பயணிகள் தங்கும் அறையைக் கவனித்துக் கொள்வது அவள் வேலை. இன்றைக்கு காலை சிப்ட். அவள் உதவியாளர்தான். பதிவு செய்வதை கிறிஸ்டோபர் பார்த்துக் கொள்வான். பார்வையற்றவன் என்பதால் ஏதோ கோட்டாவில் அவனுக்கு இந்த வேலை கிடைத்திருக்கிறது. அவன் நடந்து வருகிறவர்களை அடையாளம் கண்டு கொள்பவன் போல் காதுகளைக் கூர்மையாக்கிக் கொள்வான். வாங்க.. டிக்கெட்டை எடுத்துப்பாத்துப் பதிவு பண்ணிக்கோங்க என்பான். பதிலில்லாமல் போகிற போது கையிலிருக்கும் குச்சியால் தட்டுவான். அதட்டி என்ன சொல்றது காதுலெ கேட்குலியா என்பான். அவனின் குரல் உச்சத்திற்குப் போகிற போது யாராக இருந்தாலும் ஏதாவது பதில் சொல்லியாக வேண்டும். அவனின் அதட்டலை மீறி யாரும் நகர்ந்து விடமுடியாது.இன்றைக்கு அவன் வர கொஞ்சம் தாமதமாகும் என்று சொல்லியிருந்தான்.அதுவரைக்கும் அவளின் ராஜ்ஜியம்தான்..

கிறிஸ்டோபருக்கு அவளின் காசு புடுங்கும் வேலையெல்லாம் பிடிக்காது. அவனுக்குத் தெரியாமல்தான் அவள் செய்வாள். பயணி என்றில்லாமல் யாராவது வந்தால் அதட்டி காசு பிடுங்கிக்கொள்வாள். வடநாட்டுக்காரர்கள் என்றால் சாப்.. சாப் என்று குழைந்தால் காசு கொடுத்து விட்டுப் போவார்கள்.இப்போதெல்லாம் வடநாட்டுக்காரர்கள் அதிகம் வந்து போகும் ஊராகப் போய் விட்டது..எட்டு மணி தொடர்வண்டி வருவதற்கான அறிவிப்புச்சபதம் கேட்டது, கிறிஸ்டோபர் வந்து விடுவான் எனப்தை நினைக்கும் போது சற்றே பரபரப்பு வந்து விட்டமாதிரி இருந்தது.

சூப்பர்வைசர் வைத்தியநாதன் வருகிற போதுதான் திண்டாடிப்போய் விடுவாள் அவள். பதிவேட்டில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள். உள்ளே எவ்வளவு பேர் தென்படுகிறார்கள் என்று சரிபார்ப்பான். யாராவது அதிகமாகத் தென்பட்டால் “ உங்காளுகளெ வெளியே போகச் சொல்லு .. சொல்றியா. இல்லே .. நான் வெளியேத்தறதா.. “ என்று கடுமையாகச் சொல்வான். சிலசமயங்களில் கோபமாய் ஒரு பார்வை பார்த்து விட்டு கிளம்பி விடுவான். “ உன்னையெல்லா இங்க வெச்சுருக்க்க் கூடாது ” என்பான். இதை விட்டால் வேறு எங்கு மாற்றி விடப்போகிறான். பயணச்சீட்டு கொடுக்கும் அறையில் உதவியாள் உண்டு அங்கு வேண்டுமானாலும் மாற்றலாம்.

தூரத்து பேருந்துகளின் தொடர்ச்சியான இரைச்சல் ஏகமாய் வியாபித்தது. காலடியில் ஆட்டோ ஒன்று ஓடுவது போல் பெருத்த சப்தம் கேட்டது. உடம்பை நகர்த்திக் கொண்டு போய் அறையைப் பார்த்தாள்.

நின்ற இடத்திலிருந்து உள் அறையின் 16 x 16 விஸ்தாரம் தென்படவில்லை. முன் அறையின் 30 x 20ல் இருபது பேராவது இருப்பர் என்பது தெரிந்தது. மெழுகிப் பேசினது போல் ஒரு மர பெஞ்ச் அகலமாய் விரிந்து கிடந்தது. அதில் படுத்துக் கிடந்த தமயந்தியின் ஆழ்ந்த தூக்கத்திலான முகம் உப்பிக்கிடந்தது. இரண்டு வீதி தள்ளி அவள் இருக்கிறாள். ஏதோ வீட்டில் பிரச்சினை . கணவன் அடித்து விட்டான். “ கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போறேனெ..” என்று உள்ளே வந்தவள்.செல்லம்மாள் முறைத்தாள். ‘காசுதானே கொடுக்கறனம்மா.. என்ன முறைப்பு பெரிசா இருக்குது . இந்தா காசு வாங்கிக்க என்று இருபது ரூபாய் நேட்டை அவள் கையில் திணித்து விட்டு உள்ளே வந்தாள். உள் அறை மூலையில் தான் போய் படுத்துக் கிடப்பாள் என்று நினைத்தாள். பெஞ்சு கிடைத்ததென்று முன்னறையில் உடம்பைக்கிடத்திக் கொண்டாள் போலிருக்கிறது. நல்ல தூக்கத்திலிருக்கிறாள். எழுப்பி உள்ளே போகச் சொல்ல முடியாது. உள் அறையில் இப்படி ஆசுவாசமாய் தூங்க பெஞ்சு எதுவும் இல்லை.

நேற்றைக்கு இப்படித்தான் அவள் மதியம் டூட்டியில் சற்றே கண் அயர்ந்து விட்டாள். யாரோ எழுப்பி விட்டமாதிரி இருந்தது . “ இது என்ன வெயிட்டிங் ஹாலா… ஒரு மாதிரிப் பொம்பளைக தங்கற எடமா ‘ என்று சப்தமிட்டபடி அவன் நின்றிருந்தான். ஆஜானுபாகு உடம்பு. குரலில் ஒரு அதட்டல். சற்றே பயந்து போனவள் போல்தான் பார்த்தாள். அவன் விறுவிறுவென்று உள்ளே போனான். அவனுக்குப் பின்னால் போன செல்லம்மாள் வலது பக்க மூலையைப் பார்த்தாள். உடம்பையும்,முகத்தையும் சுவர் ஓரம் திருப்பிக் கொண்டிருந்தவள் உரக்கச் சப்தமிட்டபடி ஏதோ கைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள்.

“ ஏம்மா.. உனக்கு இங்க வேலை. என்ன பண்ணிட்டிருக்கே.. “ அவள் உடம்பை செல்லம்மாள் பக்கம் திருப்பியவள் கை பேசியை அணைத்தாள். கைப்பையில் அதைத் திணித்தாள். “ கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போறேனே..” “ யாரைக்கேட்டுட்டு உள்ள வந்தே.. “

“ யாரைக் கேட்கணும். சகஜமான எடம் தானே.”

“ இதெல்லா வெச்சுக்காதே. “

‘ போய்யறம்மா..கவனிக்கறன் “ செல்லம்மாள் முன் அறை வாசலுக்கு வந்து விட்டாள். புகார் தந்தவன் மறுபடியும் வந்து தொல்லை தருவானா என்ற பயம் சற்றே இருந்தது செல்லம்மாளுக்கு.

தங்கிப் போகிறவர்களின் நடவடிக்கை விசித்திரமாக இருக்கும். வீட்டில் இருப்பதாய் நினைத்துக் கொண்டு உடம்பைப் பரப்பிக் கிடப்பர். குளியல் றையிலிருந்து சளசளவென்று ஓயாது சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்..குளிக்கப் போகிறவர்களில் யார் முன்னே என்பதில் வாக்குவாதங்கள் அவளை எங்கு நின்றிருந்தாலும் ஓடி வரச் செய்யும்.ஆணோ, பெண்ணோ அடிதடியில் இறங்கி விடுகிற வேகம் வந்து விடுகிறது. ” பொறுமையுன்னு ஒண்ணு இல்லாமெப் போச்சு.” என்பதைச் சொல்ல்லிக் கொள்வாள். யூசூப் டுட்டி ஒன்றில் அடிதடி நடந்து இருவர் காயம் பட்டுக் கொண்டார்கள். யூசுப்பிற்கு மெமோ கிடைத்தது.இரநூறு ரூபாய் சிரம்த்திற்கு கொண்டு வந்து விடும் என்பதாய் மனபட்சி சொல்லிக் கொண்டது.

வாசலில் நின்று பார்த்தாள். இரு சக்கர வாகன நிறுத்தத்திற்கு அந்தப்புறம் வந்து கொண்டிருந்த உருவம் கிறிஸ்டோபரா,வைத்தியநாதனா என்பது விளங்கவில்லை. மங்கலாகத் தெரிந்தது. கலங்கலாகவும் இருந்தது. சாளேஸ்வரத்திற்கு கண்ணாடி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற திட்டம் ஆறு மாதமாய் மனதில் இருந்தது. அதற்கு பணம் சேர்த்து வைக்க வேண்டும்.அது பெரிய தொகை இல்லைதான். ஆனால் இன்றைக்கு சைலஜா கேட்டப் பணம் பெரிய தொகையாய் அவள் முன் நின்று மிரட்டுவது போலிருந்தது. வருவது கிறிஸ்டோபரா,வைத்தியநாதனா…. யாராக இருந்தாலும் சிரமம்தான்.கைவசம் இருந்த எண்பது ரூபாயை பத்திரமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற நினைப்பு வந்தது.

கலங்கலாக உருவம் நெருங்கிக் கொண்டிருந்தது.

Series Navigationபத்திரிகைல வரும்விதிகள் செய்வது

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *