சிற்பி வடித்த சங்க ஓவியங்கள்

This entry is part 11 of 17 in the series 6 டிசம்பர் 2015

 

 

தமிழ்த்துறைத் தலைவர்

அரசு கலைமற்றும் அறிவியல் கல்லூரி

திருவாடானை

9442913985

புதுக்கவிதை உலகில் குறிக்கத்தக்க மூத்த கவிஞர்களுள் ஒருவர் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம். இவர் வானம்பாடி இயக்கக் கவிஞர். பாரதிதாசன் பரம்பரையில் வந்த பாவலர். தேர்ந்த கட்டுரையாளர், மேடைக்கவிஞர், மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர், இலக்கிய வரலாற்று ஆசிரியர், பேராசிரியர் என்று பன்முக ஆளுமை கொண்டு தமிழகத்தின் தற்கால இலக்கியப் போக்கிற்குத் தடம் வகுத்துத் தருபவராக விளங்கி வருகிறார். புதுக்கவிதையின் குறியீட்டுப்பாங்கிற்கு இவரின் சர்ப்ப யாகம் அசைக்கமுடியாத சான்று. கவிதை நாடகத்திற்குப் பாரதி கைதி எண் 253 என்பது அழிக்க முடியாத சான்று. இவரின் கிராமத்து நதி கிராமத்துப் பண்பாடுகளின் பதிவேடு. இப்படிப் பற்பல படைப்புகளைத் தந்த படைப்புக்கலை வித்தகர் சிற்பி ஆவார். இவரின் கவிதைகளில் சங்க இலக்கியத்தின் தாக்கங்கள் விரவிக்கிடக்கின்றன. தமிழை ரசித்து, ருசித்துப் படித்த பாவலர் சிற்பி என்பதால் அவரின் கவிதைகளில் சங்க இலக்கியம் முதல் சிற்றிலக்கியங்கள் வரை தாக்கம் பெற்றுத் திகழ்கின்றன. இத்தாக்கம் இவர் கவிதைகளுக்கு மேலும் உரமூட்டுவனவாக அமைவனவாகும். இவரின் கவிதைகளில் காணலாகும் சங்க இலக்கியச் சாயல்களை இக்கட்டுரை முன்வைக்கின்றது.

தமிழில் வளம் கூட வேண்டும் என்பது கவிஞர் சிற்பியின் ஆசை. அது நிறைவேறும் காலத்தை அவர் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். தன்னுடைய மனையாள் குழந்தையுடன் இவர் அருகில் அமர்ந்திருக்க அவ்வினியாளிடம் தமிழ் வளர்ச்சி பற்றிப் பேசுகின்றார்.

~~விண்மீன்கள் துள்ளுகின்ற

விரிவானம் போலே

எண்ணமில்லாப் பெருநூல்கள்

இளந்தமிழில் வேண்டும்.

உறவாடும் இருளோடே

ஒளியோட்டம் போலே

திறமான பழமையுடன்

செழிக்கட்டும் புதுமை (சிற்பி கவிதைகள், தொகுதி.1.ப.72

என்ற சிற்பியின் கவியடிகளில் பழமையும், புதுமையும் தமிழுக்கு வேண்டும் என்ற அவரின் ஆசை வெளிப்படுவதைக் காணமுடிகின்றது. சங்ககாலத் தமிழ் முதலான பழமையும், தற்கால இலக்கியம் போன்ற புதுமையும் சிறக்கத் தமிழ் தழைக்கவேண்டும் என்பது சிற்பியின் ஆசையாகும்.

சங்கத் தமிழ் இனிமை பற்றிச் சிற்பி

~~மூண்டுவரும் கவிதை வெறிக் குணவாய் எங்கள்

முத்தமிழே நீயுள்ளாய் முன்னம் ஓர்நாள்

பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தாய்

பாரிமுதல் வள்ளல்களை ஈன்று தந்தாய்

மீண்டுமந்த பழமைநலம் புதுக்குதற்கு

மெய்ச்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே கூவி வா வா

கூண்டதனை உடைத்தெழுந்த சிங்கம்போல்

குளிர்ப் பொதிகைத் தென்தமிழே சீறி வா வா.

(கவிஞர் சிற்பி கவிதைகள் தொகுதி.1. .ப75)

என்ற இந்தப் பாடலில் சங்கத் தமிழைப் புதுக்கவேண்டும் என்பது தன் எண்ணம் எனச் சிற்பி வெளிப்படுத்துகின்றார். இதன் காரணமாகச் சங்க இலக்கியப் பழமையைப் பண்பாட்டைப் புதுக்கும் சிந்தனையும், செயல்பாட்டையும், கவியாற்றலையும் உடையவர் சிற்பி என்பது தெரியவருகிறது.

 

முதற்பொருள்

சங்கப் பாடல்களில் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியன நிலத்தின் சூழலுக்கு ஏற்பப் பயின்றுவரும். இவ்வடிப்படையில் சங்க இலக்கியச் சாயலில் முதற்பொருளுள் ஒன்றான நில வடிவங்களைத் தம் கவிதைகளில் புனைந்துரைக்கிறார் சிற்பி.

மலைச்சாரல் என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதை குறிஞ்சி சில இயல்பைச் சங்க மரபில் நின்று காண்கின்றது.

~~மாங்கனியை அணிலெறிய

மதயானை வேடர்

ஓங்குகவண் கல் என்றே

ஓடிடும், ஓர் புதரில்

மூங்கிலிடை             மூண்ட புகை

முகிலென்றே எண்ணித்

தீங்குரலிற் பாடுகுயில்

திடுக் கென்றே நிறுத்தும்

~~வானிருள மலை வேடன்

வழி தவாறதிருக்க

தானொலிக்கும் குரலுணர்ந்து

தடலேற்றி நின்றே

கான் குறத்தி எதிரொலிப்பாள்

காட்டினிடை எங்கோ

ஊன் கிழித்த சிறுவேங்கை

உண்ணாதே நீங்கும் (சிற்பி கவிதைகள். முதல்தொகுதி, ப.120,121)

என்ற பகுதியில் குறிஞ்சி நிலத்தின் அழகைப் பாடுகிறார் சிற்பி.

அகநானூற்றில் இடம்பெறும் ஒரு பாடலில் குறத்தியின் ஒலிகேட்டு குறவர்கள் ஓடிவரும் காட்சியின் சாயலில் மேற்பாடல் அமைந்துள்ளது.

~~வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல்

கிளர்ந்த வேங்கைச் சேண் நெடும் பொங்கர்ப்

பொன்நேர் புதுமலர் வேண்டிய குறமகள்

இன்னா இசைய பூசல் பயிற்றலின்

ஏகல் அடுக்கத்து இரள் அளைச் சிலம்பின்

ஆகொள் வயப்புலி ஆகும் அஃது எனத்தம்

மலைகெழு சீரூர் புலம்பக் கல்லெனச்

சிலையுடை இடத்தர் போதரும் நாடன் (அகநானூறு, 52)

குறவர் மகளிர் வேங்கை மரத்தில் பூப்பறிக்க வந்தபோது அம்மரத்தின் நிலையைப் பார்த்துப் புலி புலி என கத்துகின்றனர். அவ்வொலி காடுகள் முழுவதும் எதிரொலிக்க அதனைக் கேட்ட குறவர்கள் பசுக் கூட்டத்தைக் கொல்லப் புலி வந்தது என்று விரைந்து வந்தனர்; இந்நிகழ்வின் வழியாக குறத்தியர் கத்துவதும் அதனைக் கேட்டுக் குறவர் வருவதும் இயல்பு என்பதை உணரமுடிகினறது. சிற்பியின் பாடலில் வழிதவறாது இருக்கக் குறவனுக்குத் துணையாக குறத்தி ஒலி எழுப்புகிறாள் என்றுக் குறிஞ்சிக் காட்சிவந்துள்ளது.

நெய்தல் நிலக் காட்சியொன்றும் சிற்பியின் எண்ணத்தில் சங்க இலக்கியங் சாயலுடன் திகழ்கின்றது.

~~ஓலமிடும் ஆழ்கடலின் மேலே- பரந்

தோங்கி வரும் தேனலைகளாலே – வரிக்

கோலமிடும் நண்டு விரைந்

தோடி மணற் பூந்துகளில்

ஒளிக்கும் உடல்

நெளிக்கும்

நாட்டியப் பெண் ஆடிவரும் மேடை- எழில்

நங்கையவள் மேல் பறக்கும் ஆடை –தனைக்

காட்டுதல்போல் வெள்ளியலை

கண்கவரவே பரதம்

பயிலும் சங்கு

துயிலும் (சிற்பி கவிதைகள்,தொகுதி.1. ப.122)

என்ற இப்பாடலில் நெய்தல் நில அழகைப் பாடுகின்றார் சிற்பி.

சிற்பி கண்ட நண்டுகளின் காட்சி கலித்தொகையில் நெய்தல் திணைப் பாடல் ஒன்றினோடு இயைபுடையதாக அமைகின்றது.

~~இவர் திமில் எறிதிரை ஈண்டி வந்து அலைத்தக்கால்

உவறுநீர் உயர் எக்கர் அலவன் ஆடு அளைவரித்

தவல்இல் தண் கழகத்துத் தவிராது வட்டிப்பக்

கவறுற்ற வடு ஏய்க்கும் காமர் பூங்கடற் சேர்ப்ப(கலித்தொகை 136)

என்ற பாடலில் படகுகள் கட்டப்பெற்றிருக்கும் கடற்கரைப் பகுதியில் அலைகள் வீசுவதால் தண்ணீர் பாய்கின்றது. இதன் காரணமாக வளையில் இருக்கும் நண்டுகள் உடனே வெளிவருகிறது. மணற்பரப்பில் ஈரமில்லாத இடத்திற்கு அவை விரைந்தோடுகின்றன. இவ்வாறு ஓடும் நண்டின் காலடித்தடங்கள் சூதாடும் காய்கள் உருட்டுவதால் ஏற்பட்ட வடுவைப் போன்று இருந்தன என்கிறார் நெய்தல் பாடிய நல்லந்துவனார்.

உரிப்பொருள்

சங்க இலக்கியங்களில் காணப்படும் ஒழுக்கும் உரிப்பொருள் எனப்படுகின்றது. மருதநிலத்தின் உரிப்பொருளை மையமாக வைத்து அந்நிலம் சார்ந்த கவிதை ஒன்றைப் படைத்துள்ளார் சிற்பி. இது தலைவன், தலைவி ஆகியோர் கூற்றாகவும் விளங்குகின்றது. எனவே இக்கவிதை சங்க இலக்கிய கூற்று முறையில் அமைந்தது என்பதும் கவனிக்கத்தக்கது.

தலைவியைக் குறியிடத்திற்கு வரச்சொல்லிவிட்டுத் தலைவன் சற்று நேரங்கழித்துக் குறியிடத்திற்கு வந்து சேருகிறான். அப்போது தலைவி அவனுடன் ஊடுகிறாள்.

~~தலைவி:  முத்துநிலாவினில் முத்தம் குலாவிட

முந்துக என்று சொல்லி – என்

சித்தம் அதிர்ந்திடத் தாமதம் செய்தனை

செய்யத் தகும் செயலோ? – இது

செந்தமிழர் மரபோ?

தலைவன்: ஓவியக் காதலி உன்னழகார்ந்திட

உள்ளம் துடித்துவந்தேன்- விண்ணில்

தூவிய செக்கரில் மாதுளைக் கன்னத்தில்

செவ்வொளி கண்டதனால் – விழி

கவ்வ மயங்கி நின்றேன.

தலைவி: உள்ளத்தில் வேறெந்த ஒள்ளிழைக்கும் இடம்

ஓர் துளி இல்லை என்றாய் – இன்று

கள்ளத்தில் யாரையோ கண்டு களித்தனை

காதல் மகள் எவளே? – உன்றன்

சூதில் மகிழ்பவளோ?

தலைவன்: அன்புக்கோர் தையலே அழகின் புதையலே

அள்ளி அணைக்க வந்தேன் -அடி

உன்னுடைச் செவ்விதழை ஓர்மலர் காட்டிட

உள்ளம் விடுத்து நின்றேன் -அதைக்

கள்ளத்தில் காதலித்தேன் | (சிற்பி கவிதைகள்முதற்தொகுதி, ப. 99)

என்ற பாடலில் ஊடலும் ஊடல் நிமித்தமுமாகிய மருத நில உரிப்பொருள் கூற்று அடிப்படையில் விளக்கம்பெற்றுள்ளது.

~தீம்பெரும் பொய்கை ஆமைஇனம் பார்ப்புத்

தாய்முகம் நோக்கி வளர்ந்திசினாஅங்கு

அதுவே ஐய நின் மார்பே

அறிந்தனை ஒழுகுமதி அறனுமார்அதுவே (ஐங்குநூறு, 44)

என்ற இப்பாடலில் தாய்முகம் பார்க்கும் அமைக்குட்டிகளைப் போல தலைவன் முகம் நோக்கி வாழ்கிறாள் தலைவி. அவளை விலகாமல் அணுகுவது தலைவனின் கடனாகின்றது. இந்தப் பாடலின் கருத்தைச் சிற்பிப் பாடலின் மேற்கருத்துடன் இயைத்தால் சங்க இலக்கியத் தன்மைகளைச் சிற்பி பயன்படுத்தியுள்ளார் என்பது தெரியவரும்.

 

நீலி

சங்க இலக்கியங்களில் பழையனூர் நீலி பற்றிய பல குறிப்புகள் காணப்படுகின்றன. தன்னை ஏமாற்றிக் கொலை செய்த கணவனை மறுபிறப்பில் கொன்ற பேயாக நீலி கருதப்பெறுகிறாள். இவள் முற்பிறப்பில் நவஞ்ஞாய் என்னும் பார்ப்பனப் பெண்ணாகப் பிறந்தாள். இவளின் தந்தை ஒருநாள் காஞ்சியிலிருந்து வந்திருந்த புவனபதி என்ற அந்தணனை உணவு உண்ண இல்லத்திற்கு அழைத்து வந்தார். உணவு உண்ண வந்தவர் நவஞ்ஞாய் மீது காதல் கொண்டு அவளை மணம்புரிந்துகொள்ள எண்ணினார். அவரின் எண்ணமும் நிறைவேறியது. குழந்தை ஒன்றும் பிறந்தது. சில நாட்களில் காஞ்சிக்குக் கிளம்பவேண்டிய நிலையில் புவனபதி தயாரானார். நவஞ்ஞாயும் உடன் வருவேன் என்று சொல்ல அவளையும் அவள் குழந்தையையும், தன் மைத்துணனையும் அழைத்துக்கொண்டு அவர் கிளம்பினார். காஞ்சிபுரத்தில் முன்பே இவ்வந்தணருக்கு மணம் முடிந்து ஒரு குடும்பம் இருந்தது. இதன் காரணமாக நவஞ்ஞாயைக் கொன்று விட எண்ணி அவளையும் அவள் குழந்தையையும் தண்ணீர் எடுத்துவர மைத்துணனை அனுப்பி விட்டு கொலை செய்துவிடுகிறான். தண்ணீர் எடுத்து வந்த மைத்துணன் இதனைக் கண்டு அங்கிருந்த மரத்தில் தூக்கு போட்டுத் தற்கொலை புரிந்து கொண்டான்.

மறுபிறவியில் திருவாலங்காட்டுக்கு அருகில் உள்ள பழையனூரில் நீலன், நீலி என்று இவர்கள் பிறந்தனர். இவர்கள் பகலில் நல்லவர்களாகவும், இரவில் ஆடு, மாடுகளை அழிக்கும் பேய்வடிவங்களாகவும் விளங்கினர். தரிசனச் செட்டியின் மகனாகத் தன் கணவன் பிறந்துள்ளான் என்பதை அறிந்து அவனைக் கொன்றுவிட நீரி அலைகிறாள். தரிசனச் செட்டியின் மகன் தன்னை ஒரு பேய் கொல்லப்போகிறது என்பதைச் சோதிடர்கள் வாயிலாக அறிந்து மந்திரவாள் ஒன்றை வைத்திருந்தான். மேலும் பழையனூர் வேளாளர்களிடம் அவன் அடைக்கலம் புகுந்திருந்தான். இவ்வேளாளர் எழுபது பேரையும், மந்திரவாள் வைத்திருந்த தன் கணவனிடம் அது போகும் படிச் செய்து அவனையும் கொன்றழிக்கிறாள் நீலி. இதுவே நீலி கதை. இக்கதையைச் சிற்பி எடுத்தாளுகின்றார்.

மறுபிறவியில் தரிசனச் செட்டியின் புதல்வனாகப் பிறந்தவன் பேய் கண்டு அலறும் நிலையில் இக்கவிதைப் படைப்பினைத் தொடங்குகிறார் சிற்பி. இதன் பிறகு அவன் சோதிடரிடம் சென்று கேட்க அவர் ஒரு கிணற்றைக் காட்டுகிறார். அங்குதான் அந்தப்பெண்ணை மூழ்கச் செய்து அவன் கொன்றான். அந்த பயத்துடன் இருந்த அவனுக்கு மணம் ஆகின்றது. வந்தவள் நீலி. ஆனால் இதனை ஊரார் அறியாமல் அவனுக்கு மணம் முடிக்கக் காலையில் பிணமானான் தரிசனச் செட்டியின் மகன். இதன் காரணமாக தன்னிடம் அடைக்கலமான பொருளைக் காக்க இயலாமல் கைவி;ட்டதால் நெருப்பில் விழுகின்றனர்.

~இறந்த நல்லவர்க்கு என்னுடைய அனுதாபம்

கதைசாரம் அதுவல்ல.

பெண்ணுக்குத் துரோகம் செய்தவரை

எத்தனை ஜன்மம்

எடுத்தாலும் விடமாட்டாள் பெண்

புரிந்ததா? (சிற்பி கவிதைகள் இரண்டாம் தொகுதி, ப. 1422)

என்ற நிலையில் நீலி கதையை எழுதுகிறார் சிற்பி. இக்கதையில் நீலி சிற்சில மாற்றங்களைச் செய்து கொண்டுள்ளார். தரிசனச் செட்டியின் மகன் முற்பிறவியில் பரத்தையின் தொடர்பு காரணமாக நீலியைக் கொன்றதாகக் காட்டுகிறார். மேலும் சிற்பியின் இக்கதையில் நீலியின் அண்ணன் பற்றிய குறிப்புகள் இல்லை. குளத்தில் தள்ளிவிடப்படும் காட்சி அவலம் மிக்கதாக வடிக்கப்பெற்றுள்ளது.

சிற்பி பார்வையில் பூம்புகார் நகரம்

சிற்பி பட்டினப்பாலையில் காட்டப்படும் பூம்புகார்க் காட்சிகளை நவீனப்படுத்திக் கவிதையாக்கியுள்ளார். புகாரில் ஒரு நாள் என்ற கவிதை சங்க காலத்திற்குத் தற்கால மக்களை அழைத்துச் செல்கின்றது.

இருபதாம் நூற்றாண்டுத் தமிழனை மாதரசி ஒருத்தி சங்க காலச் சமுதாயத்திற்கு அழைத்துச் சென்று காட்டுகின்றாள்.

~தோய்ந்தோடும் ஆறுபோல் தோன்றும் நடுத்தெருவில்

பாய்ந்தோடும் முத்துத் தேர்! பல்லக்கு! பொற்சிவிகை!

வெள்ளிக் கடிவளா வெண்புரவி அத்திரிகள்

…. வானுயர்ந்த மாடங்கள்

மான்விழியின் சாளரத்து மாளிகைகள் வீதிகளில்

தேனலர்;ந்த பூவின் சிறுமாவைக் கட்டுபவர்

பூம்பருத்தி யாடை புனைகின்ற வித்தகர்கள்

தேம்பாகு பண்ணியங்கள் செய்தளிக்கும் வல்லவர்கள்

தானியங்கள் கூலம் தரம்பார்க்கும் வணிகர்கள்

ஏனை நவமனிகள் ஈடறிந்த மேலாளர்

விண்ணமுத மெல்லிசையால் மண்மயக்கம் பாணர் குழாம்

கண்ணில் கலை நிறுத்தக் கற்ற தொழிலாளர்

தாழ்வின்றிப் பூம்புகார் தாங்கம் பெருமக்கள்

வாழ்வெல்லாம் கண்டு வழிநடந்தேன்…

இந்த மருவூர்ப்பாக்கம் இப்போது நீங்கிவிட்டால்

முந்தும் சீர்ப் பட்டினத்துப் பாக்கம் அடுத்திருக்கும்

ஆர்புனைந்த சோழன் அரசிருக்கும் ஓங்குமனை

பாரளக்கம் வாணிகர்தம் சீரளக்கும் பேரில்லம்

போர்நடத்தும் ஏரோர் கலைநடத்தும் கூத்தியர்கள்

வாழும் தெருக்கள் வளத்தினையும் காணாயோ?

வச்சிரத்து வேந்தன் வழங்கும் கொற்றப் பந்தர்

நச்சி அவந்தியர் கோன் நல்கும் மணிவாசல்

மாமகத நாட்டான் மகிழ்ந்தளித்த பட்டிமன்றம்

நீ பாராய் என்றாள். நெடும்பட்டி மண்டபத்துள்

அன்று சமயங்கள் ஆயும் சமணர்களும்

மன்றில் பவுத்தர்களும், வைணவரும், சைவர்களும்

ஞானத் தவிசேறி நாநலத்தால் இப்புவியின்

மானிடரின் பேரிடர்க்கு மாமருந்தை ஆய்ந்திருந்தார்

சற்றே வழிநடந்தோம்… நாயகியாள் சுட்டுவிரல்

உற்றொருபால் ஐந்தாய் உயர்மன்றம் காட்டிற்று

கட்டபொருளேற்றிக் கள்வர் கழுத்தொடிய

வெட்ட வெளியரங்கில் வேடிக்கை காட்டுமிடம்

ஈதே என்றாள். மற்றொரு பால் எப்பிணிக்கும் எந்நோய்க்கும்

தீதகற்றும் தேன் இலஞ்சி மன்றத்தைக் காட்டினாள்

வஞ்சனைக்கும் நஞ்சுக்கும் மாற்றளிக்கும் ஓர்மன்றம்

கொஞ்சம் அறம்பிழைத்தால் கொட்டுகின்ற கண்ணீரை

வார்க்கும் ஒருபாவை வாய்ந்த பெருமன்றம்

கார்குழலி காட்ட நான் கண்டேன் வியப்புற்றேன்.

(சிற்பி கவிதைகள், முதல்தொகுதி 179-181)

என்ற இந் நெடுங்கவிதையில் பத்துப்பாட்டின் தாக்கத்தை உணரமுடிகின்றது.

பட்டினப் பாலையில் காட்டப்பெறும் தெருவின் அழகு பின்வருமாறு.

~~குறுந்தொடை, நெடும்படிக்கால்

கொடுந்திண்ணைப் பல்தகைப்பின்

புழைவாயில் போகுஇடைக்கழி

மழைதோயும் உயர்மாடத்துச்

சேவடிச் செறிகுறங்கின்

பாசிழைப் பகட்டு அல்குல்

தூசுடைத் துகிர்மேனி

மயிலியல் மான்நோக்கின்

கிளிமழலை மென்சாயலோர்

வளிநுழையும் வாய்பொருந்தி

ஓங்குவரை மருங்கின் நுண்தாது உறைக்கும்

காந்தள் அம் துடுப்பின் கவிகுலை அன்ன

செறிதொடி முன்கை கூப்பி (பட்டினப்பாலை- 142- 154)

என்ற இப்பகுதியில் புகார்நகரத்தின் தெரு அழகாகக் காட்டப்பெறுகின்றது. இப்பெரிய அடிகள் மான்விழி சாளரத்து மாளிகை வீதி என்று சிற்பியால் குறிக்கப்படுகிறது.

புகாரில் வி;ற்ற பொருள்களை

~~நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்

காலின் வந்த கருங்கறி மூடையும்

வடமலைப் பிறந்த மணியும் கொன்றும்

குடமலைப் பிறந்த ஆரமும்அகிலும்

தென்கடல் முத்தும், குணகடல் துகிரும்

கங்கை வாரியும், காவிரிப்பயனும்

ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும்

அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி

வளம் தலை மயங்கிய நனந்தலை மறுகின்

(பட்டினப்பாலை, 183- 192)

என்ற பகுதியில் விற்ற பொருள்களின் பட்டியல் தரப்பெறுகிறது. இதையே சிற்பி தன் கவியடிகளில் முன்பு காட்டியுள்ளார். இதுபோன்று பல்வகை மன்றங்கள் இருந்த செய்தியைப் பட்டினப்பாலை எடுத்துரைக்கின்றது. (அடிகள் 160- 180)

இவ்வகையில் பழந்தமிழகத்தைக் காட்டிய பெருமாட்டியை நினைவிற்கு வந்த பிறகு காணாது தவிக்கின்றார் கவிஞர். பூம்புகார் சென்றபோது அந்தக்காலப் பூம்புகாரும் இந்தக்காலத்தில் கட்டைக் கனலாய்க் கிடக்கும் பூம்புகாரும் அவர் மனதில் ஒட்டி வைத்து எண்ணப்படுகின்றன.

பழமையின் சிறப்பையும், புதுமையின் வெறுமையையும் ஒன்றாக்கிக் காட்டும் கற்பனை ஒட்டிணைவுக் கவிஞர்களுக்கு மட்டுமே உரிய தனித்தன்மை. அதனைச்சிற்பி இங்குக் காட்டியுள்ளார்.

இவ்வகையி;ல் சிற்பி வடித்த சங்க ஓவியங்கள் பழம்பெருமையைப் புதிய தலைமுறைக்கு அறிமுகம் செய்வனவாக உள்ளன.

Series Navigationகாற்று வாங்கப் போகிறார்கள்முதுமொழிக்காஞ்சி உணர்த்தும் வாழ்வியல் சிந்தனைகள்
author

முனைவர் மு. பழனியப்பன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *