படித்தோம் சொல்கின்றோம் – குழந்தைப்போராளி நவீனம்

author
0 minutes, 10 seconds Read
This entry is part 3 of 17 in the series 6 டிசம்பர் 2015

ChildsoldierChina keitetsiமுருகபூபதி – அவுஸ்திரேலியா

சாவின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த குழந்தைப் போராளிகளின் மௌனத்தை உடைக்கும் புதினம்
வழி தவறிச்சென்ற ஒரு ஆட்டுக்குட்டியின் கதை
அம்மாவை இழந்து துப்பாக்கியை ஏந்திய சைனா கெய்ரெற்சியின் குழந்தைப்போராளி நவீனம்

” ஏகே 47 துப்பாக்கியுடன் ஒவ்வொரு குழந்தையும் மூன்று ரவைக் கூடுகளை அணிந்துகொள்கிறார்கள். சிலர் ஆறு ரவைக் கூடுகளைக்கூட கட்டியிருப்பார்கள். இந்தச் சுமையைப்பற்றி எங்களுக்கும் கவலையில்லை. எங்கள் தலைவர்களுக்கும் கவலையில்லை. எந்தப்பாரத்தைச் சுமந்தாவது, என்ன வித்தை காட்டியாவது தலைமையின் கவனத்தைப் பெற்றுவிடுவதில் குழந்தைகள் கண்ணும் கருத்துமாயிருந்தார்கள். கனமான இந்தத்துப்பாக்கிகள் எங்களுக்குத்தாயின் அரவணைப்பைப்போன்றன. நாங்கள் உயிரைவிட்டாலும் விடுவோமே தவிர ஒரு கணமும் துப்பாக்கியை விட்டுப்பிரியமாட்டோம். துப்பாக்கி இல்லாத நாங்கள் முழுமையற்ற பிறவிகள். உங்களின் இந்த அவலநிலை குறித்து உங்கள் தளபதிகள் கொஞ்சமேனும் கவலை கொள்ளவில்லையா… ? என நீங்கள் கேட்கக்கூடும். அவர்கள் முசேவெனியின் விருப்பங்களைப் பிழைபடாமல் நிறைவேற்றும் கலைகளில் மூழ்கிக்கிடந்தார்கள். ”
இந்த வாக்குமூலம், ஆபிரிக்க நாடான உகண்டாவில் 1976 ஆம் ஆண்டு பிறந்த ஒரு குழந்தையின் போர்க்கால வாழ்க்கையின் சரிதையில் பதிவாகியிருக்கிறது.
அவள் பெயர் கெய்ரெற்சி. (Keitetsi)

Book Cover01
அந்தக்குழந்தைக்கு ஒன்பது வயதாகும்பொழுது இராணுவப்பயிற்சிக்கு தள்ளப்படுகிறாள். கட்டளைத்தளபதிக்கு அவளுடைய குழந்தைப்பருவம் ஒரு பொருட்டல்ல. ஆனால், அவளுக்கு ஒரு அடைமொழிப்பெயர் சூட்டவேண்டும். அவளுக்கு இடுங்கிய கண்கள்.
” ஏய் உன்னைத்தான். சீனர்களைப்போல இடுங்கிய கண் உள்ளவளே…. என்னை நிமிர்ந்துபார்.” அந்த உறுமலுடன் அவளுக்கு பெயரும் மாறிவிடுகிறது. அன்றுமுதல் அவள் சைனா கெய்ரெற்சி. (China Keitetsi)
தாயன்பு, நல்ல பராமரிப்பு, நேசம் தேவைப்பட்ட குடும்பச்சூழல், கல்வி யாவற்றையும் தொலைத்துவிட்ட பால்ய காலம், களவாடப்பட்ட குழந்தைப் பருவம், ஆரோக்கியமற்ற அரசு, அதிகாரம் யாரிடமுண்டோ அவர்களே மற்றவர்களின் வாழ்வைத் தீர்மானிக்கும் சக்திகள். இவ்வளவு கொடுந்துயர்களின் பின்னணியில் சபிக்கப்பட்ட ஒரு பெண் குழந்தையின் வாழ்வு அந்த உகண்டா மண்ணில் எவ்வாறு பந்தாடப்பட்டது…? அவளது அபிலாசைகள் எங்கனம் புதைக்கப்பட்டது…? என்பதை சயசரிதைப்பாங்கில் சொல்லும் புதினம்தான் குழந்தைப்போராளி.
மரணித்த குழந்தைப் போராளிகளுக்கும் இன்னமும் யுத்த முனைகளில் போரிட்டுக்கொண்டிருக்கும் குழந்தைகளுக்கும் இந்தப்புதினத்தை சமர்ப்பணம் செய்துள்ள சைனா கெய்ரெற்சியின் இச்சுயசரிதையின் ஒவ்வொரு பக்கங்களையும் பதட்டதுடன்தான் படித்தேன். வாசிப்பு அனுபவத்தில் பெரும் அதிர்வினைத்தந்துள்ள இப்புதினம் – ஈழப்போராட்டத்தில் தமது வாழ்வைத்தொலைத்த குழந்தைகளையும் நினைக்கத்தூண்டுகிறது.
அவ்வாறு தூண்டவேண்டும் என்ற எண்ணப்பாங்கிலேயே இதனை தமிழ் நாடு கருப்புப்பிரதிகள் பதிப்பகம் வெளியிட்டிருக்கவேண்டும் என்றும் திடமாக நம்புகின்றேன்.
பிறமொழிகளிலிருந்து ஒரு சிறந்த படைப்பை தமிழுக்கு மொழிபெயர்க்கும்பொழுது, மிகுந்த அவதானமும் பொறுப்புணர்வும் மொழிபெயர்ப்பாளர்களுக்கு இயல்பாகவே வந்துவிடும். சில சமயங்களில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள், மூலமொழியில் உன்னதமாக இருந்தாலும் தமிழில் வாசிக்கும் வாசகருக்கு அயர்ச்சியையும் தந்துவிடும். வாசகரை ஊடுறுவும் மொழியாளுமையை குறிப்பிட்ட படைப்பு இழந்துவிட்டால், அடுத்த பக்கங்களை நகர்த்தத் தோன்றாது.
ஆனால், ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் வந்துள்ள இந்நூலை சிறந்த மொழியாளுமையுடன் தமிழுக்குத்தந்துள்ளார் சுவிற்சர்லாந்தில் வசிக்கும் தேவா. புகலிட இதழ்களில் மொழிபெயர்ப்புப் படைப்புகளை வரவாக்கும் தேவா, இந்தப்புதினத்தை நேரடியாக டொச் மொழியிலிருந்து தமிழுக்குப் பெயர்த்துள்ளார்.
இதனைப்படித்தபொழுது ஒரு மொழிபெயர்ப்பு நாவல் என்ற உணர்வே வரவில்லை. பொதுவான இன்றைய படைப்பு மொழிப்பிரயோகம் நாவல் முழுவதும் விரிவிக்கிடக்கிறது.
சாவின் நிழல், நக்குண்டார் நாவிழந்தார், முட்டையிட்ட கோழிக்குத்தான் வலி தெரியும் முதலான வார்த்தைப் பிரயோகங்கள் வாசகரின் படிக்கும் ஆர்வத்தையும் தூண்டவைக்கிறது.
தனது போராட்ட வாழ்வை எழுதிய கெய்ரெற்சி, உகண்டாவில் துற்சி இனத்தில் பிறந்தவர். பல இனக்குழுக்கள் கொண்ட உகண்டாவில் அன்றைய உகண்டா ஆட்சி அதிகாரத்தை எதிர்த்துப்போராடிய யோவேரி முசேவெனியின் என்.ஆர்.ஏ. (National Resistance Army) படையில் தனது ஒன்பது வயதில் பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்பட்டவர்.
இந்த நாவலை ஒரு வசனத்தில் குறிப்பிடுவதாயின் -வழிதவறிச்சென்ற ஒரு ஆட்டுக்குட்டியின் கதை எனலாம்.
தொடக்கம் முதல் இறுதி வரையில் கெய்ரெற்சி கதைசொல்லியாகவே நகர்ந்துகொண்டிருக்கிறார்.
இறுதியில், ” மேதகு முசேவெனி, நீ உருவாக்கிவிட்ட ஆயிரம் ஆயிரம் குழந்தைப் போராளிகளில் ஒருத்தியான சைனா கெய்ரெற்சி பேசுகிறேன் என ஆரம்பித்து, ஒன்றரைப்பக்கத்தில் நீண்ட – ஆனால் நெஞ்சை உறையவைக்கும் பகிரங்க மடலை வரைந்து, இறுதியில் சிங்கத்துடன் சண்டையிடும்போது யார் சிங்கத்தை வெற்றிகொள்கிறானோ அவனுக்குச் சிங்கத்தின் துணிவும் பலமும் வந்துசேரும். யார் சிங்கத்திடம் தோற்கிறானோ அவன் சிங்கத்திற்கு இரையாவான். காலத்தின் தடங்களில் காணாமல் போய்விடுவான். ஐயா முசேவெனி, நான் இன்னமும் சிங்கத்தால் விழுங்கப்படவில்லை ” என்று ஓங்காரமாக குரல் கொடுத்து தனது ஆளுமையை வெளிப்படுத்துகிறார்.
அவளு(ரு)டைய துணிவு மெய்சிலிர்க்கச்செய்கிறது.
1976 ஆம் ஆண்டு பிறந்து தற்பொழுது 39 வயது நிரம்பியுள்ள கெய்ரெற்சி தனது ஒன்பது வயது முதல் வாழ்க்கையின் விளிம்புவரையில் ஓடியவள். போர்க்கள வாழ்வில் பெற்ற தாயையும் தொலைத்து, பாசத்தை இழந்து, தந்தையின் கொடுமைக்கும் சித்திரவதைகளுக்கும் ஆளாகி – பாலியல் வக்கிரம் பிடித்த ஓநாய்களிடமெல்லாம் சிக்கிச் சீரழிந்து உணவுக்கும் உடைக்கும் உறையுளுக்கும் பரிதவித்து, வேறு வழியின்றி திருட்டிலும் ஈடுபட்டு, பொய்களும் சொல்லி, நாடுவிட்டு நாடு தப்பியோடி, இறுதிவரையில் அவள் போராடியது தனது இன்னுயிருக்காகவும் தாயைத்தேடுவதற்காகவுமே. தாயின் அரவணைப்புக்காக அலைந்துழல்கின்றாள் அந்தக் குழந்தை.
அதனால்தான் தனக்கு நேர்ந்த அவலம் ஏனைய குழந்தைகளுக்கும் வந்துவிடக்கூடாது என்ற சமூக அக்கறையில் களத்தைவிட்டுப் பறந்து வந்து முன்னாள் குழந்தைப்போராளிகளின் புனர்வாழ்வுக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்துகொண்டிருக்கிறார். தன்னைப்போன்று தாயன்பை இழந்த குழந்தைகளுக்கு ஒரு தாயாக புனர்ஜன்மம் எடுக்கின்றார். தனது குழந்தையையும் வழிதவறிய பாதையில் இழந்துவிடும் அவரிடம் அக்குழந்தை எங்கோ வாழ்கிறது என்ற நம்பிக்கை மாத்திரமே எஞ்சியிருக்கிறது.
இலங்கை உட்பட உலகெங்கும் வாழும் அனைத்து வயதையும் சேர்ந்த முன்னாள் போராளிகளுக்கும் உலகெங்கும் ஆயுத வர்த்தகத்தில் ஈடுபடும் கொலைகாரக்கும்பல்களுக்காக இன்றும் தீணிபோட்டுக்கொண்டிருக்கும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகள் உட்பட சர்வதேச பயங்கரவாத சக்திகளின் பிடியில் சிக்கியிருப்பவர்களுக்கும் இந்த குழந்தைப்போராளி நாவல் ஒரு பாடநூலாக இருக்கவேண்டும்.
பயங்காரவாத இயக்கங்களும் ஆயுதத்தரகர்களும் தங்களை சுயவிமர்சனம் செய்துகொள்வதற்கு இதுபோன்ற நூல்கள் அவசியமானது.
இவ்வாறு எழுதினால், அல்லது இதுபோன்ற படைப்புகளை விமர்சித்தால், வாசிப்பு அனுபவத்தை வெளியிட்டால், எதற்காக பழையவற்றை கிளறுகிறார்கள்…? என்று கள்ளமௌனம் அனுட்டிப்பவர்கள், தண்ணீருக்குள் இருந்து வாயு உபாதையை போக்கிக்கொள்வார்கள்.
அவர்களின் வாதம் சரியாயின், இன்றும் எதற்காக மகாபாரதம், இராமாயணம் பேசப்படுகிறது. இன்றும் ஏன் உலக சரித்திரம் பாட நூல்களில் இடம்பெறுகிறது. இவற்றையும் பழைய குப்பைகள் என்று புறம் ஒதுக்கலாம்தானே….? கிளறத்தேவையில்லையே…?
நேற்றைய செய்தி நாளைய வரலாறு. அதனைத்தான் சைனா கெய்ரெட்சி தமது சுயசரிதை வாயிலாக உலகத்திற்கு வழங்கியிருக்கிறார்.
உளவியல் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு பலதரப்பட்ட சிகிச்சை செய்வார்கள். ஊசி மருந்து, மாத்திரை, யோகாசனம், உடற்பயிற்சி, சுற்றுலா, உரையாடல், கண்காட்சி, இசை, நடனம், திரைப்படம் என்றெல்லாம் அந்த சிகிச்சைகள் வகைப்படுத்தப்பட்டிருக்கும். அதற்கும் அப்பால் மற்றுமொரு சிறந்த சிகிச்சையும் இருக்கிறது.
தனக்கு நடந்தவற்றை தானே எழுதுவது. அல்லது மற்றவர்களுக்குச்சொல்லி எழுதவைப்பது. எழுதியதை மீண்டும் படித்துப்பார்ப்பது. அதன் ஊடாக தன்னைத்தானே சுயவிமர்சனம் செய்வது. பலருடைய சிறைக்குறிப்புகளும் அத்தகையதே.
குழந்தைப்போராளி புதினம் பிறந்த கதையையும் சைனா கெய்ரெற்சி இவ்வாறு சொல்கிறார்:
” நான் டென்மார்க்கிற்கு வந்தபின்பும் நீண்ட காலமாக ” No” என்ற வார்த்தையை உபயோகிப்பதில்லை. ” இல்லை” – ” முடியாது” என்று சொன்னால், தண்டிக்கப்படுவேன் என்ற அச்சத்தினால் நான், ‘ Yes Sir ‘ என்றே எப்போதும் சொல்லிவந்தேன். எனது கொடிய இந்தக்காலங்களிலிருந்து என்னால் மீண்டு வரமுடியவில்லை. கண்களை மூடினால் கொலைகளும் உயிர்ப்பிச்சை கேட்கும் கண்களும் என்னை வதைத்துக்கொண்டேயிருந்தன. பயங்கரக் கனவுகளிலிருந்து விழித்தெழுந்தவளாகப் பதற்றத்திலும் அச்சத்திலும் அழுந்திக்கொண்டிருந்தேன். எனது மனநல மருத்துவரான பிரிஜிட் குன்ட்சென், சிகிச்சையின் ஒரு பகுதியாக ” உனது காயங்கள், உனது அச்சங்கள், உனது வலிகளை ஒளிவுமறைவில்லாமல் எழுது ” என்று சொல்லவும் நான் சிகிச்சைக்காக – எழுதத்தொடங்கினேன். ஒவ்வொரு முறை எழுதும்போதும் என் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தோடும். என் கண்ணீர்த்துளிகள் பட்டுத்தெறிக்காத சொற்களேயில்லை. 150 பக்கங்கள் எழுதிய நிலையில் என் மருத்துவரிடம் எழுதியவற்றைக்காட்டினேன். அவர் ” நீ Auto Biography எழுதிக்கொண்டிருக்கிறாய் ” என்றார்.
ஆமாம், இன்று சைனா கெய்ரெற்சியின் சரிதையை தமிழ் வாசகர்கள் மாத்திரமன்றி ஆங்கில, பிரெஞ், டொச், சீன, ஜப்பான் வாசகர்களும் வாசித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தப்பத்தியின் தொடக்கத்தில் இந்தப்புதினத்தை வாசிக்கும்பொழுது ஏற்பட்ட பதட்டம் பற்றியும் குறிப்பிட்டேன். அதற்கு சிறிய உதாரணம்:-
சாவதற்கென்றே வளர்க்கப்பட்ட இந்தக்குழந்தைப் போராளிகள், எவ்வாறு மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளார்கள் என்பதைப்பாருங்கள்,
ஆபிரிக்க கிளர்ச்சித் தலைவர்களிலிலேயே முசேவெனிதான் குழந்தைகள் மத்தியில் நன்றாகப் பேசக்கூடியவர். முதல் முதலாக குழந்தைகளை போராட்டக்களத்தில் இறக்கியவர். விரைவிலேயே மற்றவர்களும் இந்த ‘ முற்போக்கான (?) ‘ சிந்தனையை பின்பற்றத்தொடங்கினார்கள். அதனால் இந்த முசேவெனிதான் குழந்தைப்போராளி முறைமையின் தந்தை எனப்பெயரெடுத்தவர்.
அவர் குழந்தைகளிடம் துப்பாக்கிகளைக் கொடுத்து ஞானஸ்தானம் செய்கையில், உதிர்க்கும் மந்திரம் ” உங்களின் தாய் தந்தையர்களில் சிலர் சிறையில் இன்னும் உயிருடன் இருக்கலாம். நீங்கள் போய்ச்சிறை மீட்பதற்காக அவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் ” இதுதான் அந்த அப்பாவிக் குழந்தைகளின் மண்டையை கழுவுவதற்கு எய்த அஸ்திரம்.
அதனைக்கேட்கும் குழந்தைகளுக்கு, போர்க்களத்தில் தாம்தான் வயதுவந்த தளபதிகளுக்கு அரணாக முன்னணியில் நிறுத்தப்படப்போகிறோம் என்பது தெரிகிறதா….?
இத்தனைக்கும் குழந்தை கெய்ரெற்சியின் தாயும் தந்தையும் தந்தையின் வைப்பாட்டியான சிற்றன்னையும் சிறையில் இல்லை. அவர்கள் வீடுகளில்தான் இருக்கிறார்கள்.
ஆனால், அவளுக்கோ எதிரிப்படையை முற்றுகையிடுவதிலும் பார்க்க தனது இன்றைய நிலைக்குக்காரணமான தனது கொடுமைக்கார தந்தையையும் தொடர்ச்சியாக தனக்கு துயரங்களைத்தந்த சிற்றன்னையையும் கொல்லவேண்டும் என்ற மூர்க்கம்தான் அதிகம்.
பாசறையில் அவள் சந்திக்கும் மற்றும் பெண்போராளிகள் முக்கோம்போஸி – நரோன்கோ என்ற உயிர்த்தோழிகள் பற்றியும் கெய்ரெற்சி சொல்கிறார். அவர்களின் பின்னாலும் துயரம் தோய்ந்த நெஞ்சை உருக்கும் கதைகள் இருக்கின்றன.
அவர்களுடன் தனது சீரழிந்துபோன வாழ்வையும் ஒப்பிட்டுப்பார்க்கிறார்.
நரோன்கோ, உகண்டா பழங்குடியைச் சேர்ந்தவள். N.R.A கிளர்ச்சிப்படையினரை அரச இராணுவம் வேட்டையாடத் தேடியபொழுது, அவளுடைய கணவன் சித்திரவதை செய்யப்பட்டு கைகள் பின்னே கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்படுகிறான். அவள் கண்முன்னாலே அவளுடைய இரட்டைக்குழந்தைகளும் சுட்டுக்கொல்லப்படுகின்றனர். அந்தக்களத்திலிருந்து எப்படியோ தப்பிவந்து. தனது குடும்பத்தை அழித்தவர்களை பழிதீர்க்கவே நரோன்கோவும் N.R.A. இல் இணைந்துகொள்கிறாள். அவளுடைய தற்போதைய புதிய கணவன் ஏ.கே. 47 என்று பதிவுசெய்கிறார் கெய்ரெற்சி.
கெய்ரெற்சியின் தாய்மொழி கினியான்கோலே. ஆனால், சிகண்டா, சுவாஹிலி முதலான இதரமொழிகளும் தெரிந்திருக்கிறார். கொடுமைகள் நிரம்பிய அந்த வாழ்விலிருந்து விடுதலைபெறுவதற்காக எத்தனையோ வழிகளை தேடும் கெய்ரெற்சி, தனது வாக்கு வசீகரத்தால் பொய்களும் உரைக்கிறார். பசித்தவேளைகளில் திருடுகிறார். அயல் நாட்டுக்குத் தப்பிச்செல்ல விசா பெறுவதற்காக பலரிடம் கையேந்துகிறார். சிறு வர்த்தக முயற்சிகளில் ஈடுபட்டு ஏமாற்றத்தையும் தோல்வியையும் சுமக்கிறார். இட்ட முதலுக்கே மோசம் வருகிறது.
விரக்தியும் சோர்வும் அவருடன் இணைந்து வருகின்றன. நிம்மதியான உறக்கத்துக்காக வேண்டுகிறார். அவ்வப்போது தனது பெண்மையையும் பறிகொடுக்கிறார். ஓ.. என்ன கொடுமை….!!!??? இந்த வாழ்க்கை அவரை ஓட ஓட விரட்டி வஞ்சித்துக்கொண்டே இருக்கிறது.
அவற்றிலிருந்தெல்லாம் அவர் எவ்வாறு மீண்டார்…? என்பதையும் இந்நாவல் பதிவுசெய்கிறது.
அதனால் ஒரு சுயவரலாறு என்ற எல்லையையும் கடந்து முழுமையான நாவலாக விரிகிறது. நாங்கள் கற்பூரத்தால் வளர்க்கப்பட்ட பறவைகள் என்று தன்னை அடையாளப்படுத்தும் கெய்ரெற்சி எவ்வாறு விடுதலைப் பறவையானார்…?
உகண்டாவின் உளவுப்படையினால் தொடர்ச்சியாகத் தேடப்பட்டு அதன் கழுகுப்பார்வையிலிருந்து எவ்வாறு தப்பினார்…?
தனது வாழ்வை தானே சுயவிமர்சனம் செய்துகொண்டு எதிர்காலத்தில் எந்தக் குழந்தையும் தன்னைப்போன்று மாறிவிடக்கூடாது என்ற எண்ணத்தில், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மறுவாழ்வுக்காக தன்னை எவ்வாறு அர்ப்பணித்துக்கொண்டு ஒரு ஃபிணிக்ஸ் பறவையைப்போன்று உயிர்த்தெழுந்தார் என்பதை எந்தப்போலித்தனமும் பம்மாத்தும் இன்றி பதிவுசெய்துள்ளார் சைனா கெய்ரெற்சி.
தமிழில் இந்த நாவலின் வெற்றி அதன் தமிழ் மொழிபெயர்ப்பு என்றும் சொல்லலாம்.
அதற்காக இதனை மிகுந்த பொறுப்புணர்வுடனும் நிதானமாகவும் மொழிபெயர்த்த தேவா அவர்களை மனம்திறந்து பாராட்டலாம்.
இதனை வெளியிட்டுள்ள கருப்புப்பிரதிகள் பதிப்பகம் தொடர்ந்தும் சிறந்த நூல்களை வெளியிட்டுவருகிறது. காலத்தின் தேவை உணர்ந்து குழந்தைப் போராளியை பதிப்பித்திருக்கும் கருப்புப்பிரதிகள் பதிப்பகத்திற்கும் வாழ்த்துக்கள்.
பதிப்பாளர் குறிப்பில் தரப்பட்டுள்ள தகவலையும் இங்கு தெரிவிக்கின்றேன்.
” இன்று உலகம் முழுவதும் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைப் போராளிகள் யுத்த முனைகளில் தள்ளப்பட்டும், பாலியல் வதைகளுக்கு உள்ளாக்கப்பட்டும், இயல்பான குழந்தைத்தனங்கள் சிதைக்கப்பட்டும் ஏன்? எதற்கு? யாருக்கு? என்று தெரியாமலேயே சாவின் வாசலில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். குழந்தைப்போராளிகளின் வரலாற்று மௌனத்தை இந்தத்தன் வரலாற்று நூல் மூலம் சைனா கெய்ரெற்சி உடைத்திருக்கிறார். 2002 இல் டொச் மொழியில் வெளியாகி தொடர்ந்து ஆங்கிலம், டெனிஷ், ஸ்பானிஷ், செக், பிரஞ்ச் மொழிகளிலும் வெளியிடப்பட்டது.
Miramax Pictures இந்நூலைத் திரைப்படமாகவும் தயாரித்துவருகிறது.
—-0—–

Series Navigationமாமழையும் மாந்தர் பிழையும்!பிரபஞ்சம் தொடர்ந்து விரிவதை நோக்கிய வானியல் விஞ்ஞானி எட்வின் ஹப்பிள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *