பத்திரிகைல வரும்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 14 of 17 in the series 6 டிசம்பர் 2015

நேதாஜிதாசன்
இரவு ஒரு பதினோரு மணி,கதையில் பதினைந்தாம் பத்தியை தட்டச்சு செய்து கொண்டிருந்தான் கணினியில்.

அவன் ஒரு பொறியியல் மாணவன்.ஆனால் அதில் விருப்பம் இல்லை.பாடப்புத்தகத்தை தவிர அனைத்தையும் படிப்பதில் கொள்ளை பிரியம் அவனுக்கு.விளைவு அனைவரும் இயந்திரங்களை கற்றுக்கொண்டிருக்க இவன் ஜெயகாந்தனை கற்றுக்கொண்டிருந்தான்.

கையில் ஒரு செல் போன் அதில் எப்போதுமே இணையதள வசதி இருக்க வேண்டும் என்ற ஆசையே அதிகம்.அதேபோல அவன் செல் போனில் எப்போதுமே இணையதள வசதி வீட்டின் எதிர்ப்பை மீறி.

அவனுக்கு எழுதுவது பிடித்து போனது.ஏதோவும் ஏதாவதுமாக எழுதி தள்ளி ஒரு சில படைப்புக்கள் அவன் நண்பர்கள் மற்றும் இணையதள வாசகர்களின் பாராட்டை பெற்றது.அவனுக்கு ஒரு கனவு இருந்தது.இந்த இலக்கியத்திற்கான நோபல் பரிசை ஒரு தடவையாவது தொட்டு பார்த்துவிட வேண்டும் என.

அவன் எழுதுவதை வாசகர்கள் விமர்சிக்கிறார்களோ இல்லையோ அவன் வீட்டில் கடுமையாக விமர்சிப்பார்கள்.”சும்மா மென்டல் மாதிரி எழுதாதே” “நீ என்ன பைத்தியமா” “உனக்கு என்ன அவார்டா கொடுக்க போறாங்க” மற்றும் சில வருந்த வைக்கும் எள்ளல் சிரிப்புக்கள்.ஆனாலும் கவலைபட்டதில்லை அவன்.அவன் வலைப்பூவில் எழுதி தள்ளினான்.பல அரசியல் கட்டுரைகள்,பல கவிதைகள் என படைப்புகள் பரந்துவிரிந்தன.வாசகர்கள் வருகை அவன் வலைப்பூவில் எழுதுவதை விட வில்லை.

பல பத்திரிகைகளின் இணையதளங்களுக்கு சென்று செய்திகளை படிப்பதை தவிர்த்து அந்த பத்திரிகையின் மின்னஞ்சல் முகவரியை தேட ஆரம்பித்தான்.

அவனது போன்புக்கில் நண்பர்களின் தொலைபேசி எண்களை விட பத்திரிகைகளின் மின்னஞ்சல் முகவரி அதிகமானது.

எழுதியதை சகட்டு மேனிக்கு பத்திரிகைகளுக்கு அனுப்பிவிட்டு  ஒரு நாளுக்கு 40 தடவைக்கும் அதிகமாக மெயில் செக் செய்து பார்த்தான்.ஒரு மாதம் இது தொடர்ந்து.அவனுக்கு எந்த பதிலும் இல்லை.சில நாட்களுக்கு படைப்புக்களை அனுப்புவதை நிறுத்தி விட்டான் காரணம் பயங்கர சலிப்பு அவனுள்.போதாக்குறைக்கு வீட்டில் அவனை கடுமையாக ஏளனம் செய்தனர்.அது அவனுள் வடுவாகவே மாறிவிட்டது.

ஒரு நாள் சாதாரணமாக மெயில் பாக்ஸ்ஸை திறந்து பார்க்கையில் ஒரு சிற்றிதழில் இருந்து மெயில்.அவனது கட்டுரை பிரசுரமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த கணம் அவன் தன்னை ஒரு எழுத்தாளனாக நினைக்க தொடங்கினான்.அந்த முதல் பிரசுரத்தை தன் வீட்டில் தன்னை எள்ளி நகையாடியவர்களிடம் காட்டினான்.அவர்களுக்கு அது சாட்டையடி போல இருந்தது.அவன் கட்டுரை வந்தது சிறிய சிற்றிதழ் என்றாலும் அது அவன் சாதனையாக இருந்தது.மேன்மேலும் எழுத்துவேலைபாட்டை தொடர்ந்தான்.பெரிய பத்திரிகைகளுக்கு படைப்புகளை அனுப்ப ஆரம்பித்தான்.

அத்தோடு அவன் வசம் ஒரு 60 சிறுகதைகள் இருந்தது.நாம் ஏன் அவற்றை புத்தகமாக்கி வெளியிட கூடாது என்ற கேள்வி அவனுக்குள் தோன்றியது.என்றாவது தன் படைப்புக்கள் பெரிய பத்திரிகையில் பிரசுரமாகும் என்ற கனவு மறையவில்லை.தானும் ஒரு படைப்பாளியே என்ற போதை புத்தகம் எழுது என அவனை உந்திதள்ளியது ஜெயகாந்தன் எழுத்துக்களை நோக்கி  புதிய எழுத்தாளனான அவனை.சென்னை மாநகரில் பதிப்பகத்துக்கா பஞ்சம் என பதிப்பக வாசற்படிகளை ஏறி பயிற்சி எடுக்க ஆரம்பித்துவிட்டான்.

ஒரு பதிப்பகத்தாரை சந்தித்து விட்டு வீட்டிற்கு போகும் வழியில் புத்தக கண்காட்சி என பெரிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.அதை பார்த்த உடன் அவன் மனதில் நினைத்து கொண்டா ன்”அடுத்த வருஷம் புத்தக கண்காட்சியில நம்ம புக் தான் டாப்”.சாலையில் கடும் டிராபிக் ஜாம் அவனுக்கோ “எழுத்தாளர் வரார்.வழி விடுங்கடா” என கத்த தோன்றியது.

ஒரு நாள் அவன் நண்பர்கள் அவனிடம் கேட்டார்கள் “எப்படிடா இப்படி எழுதுற? பத்திரிகைல வரும்னு எப்படிடா இப்படி நம்பிக்கையா இருக்க? அவன் சிரித்து கொண்டே சொன்னான் “நம்பிக்கை அதானே எல்லாம்”.

Series Navigationமுனைவர் க. பஞ்சு வின் தலித் இலக்கிய பார்வையை முன்வைத்துபத்திரம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *