வாய்ப் புண்கள்

வாய்ப் புண்கள்
This entry is part 6 of 23 in the series 20 டிசம்பர் 2015

டாக்டர் ஜி. ஜான்சன்

Ulcer1 வாய்ப் புண்கள் வாய்க்குள் உள் கன்னங்களிலும், பற்கள் ஈறுகளிலும் , உதடுகளின் உள்புறமும் சிறு வட்டவடிவில் தோன்றுபவை. இவை அதிகம் வலி தரும்.இவை மஞ்சள், சாம்பல், வெள்ளை அல்லது சிவப்பு நிறங்களிலும் தோற்றம் தரலாம். அதைச் சுற்றிலும் சிவந்து வீங்கி அழற்சி உண்டாவதால் வலி ஏற்படுகிறது.இதனால் சாப்பிடும்போதும், நீர் பருகும்போதும் வலி உண்டானாலும், அது தற்காலிகமானதே .சிறிது நாட்களில் (சுமார் இரண்டு வாரங்களில் ) அது தானாகவே ஆறிவிடுவதுண்டு. ஆனால் அதற்கு மேலும் புண்கள் நீடித்தால், அல்லது அடிக்கடி உண்டானாலோ மருத்துவரை அல்லது பல் மருத்துவரை சென்று பார்ப்பது நல்லது.
வாய்ப் புண்கள் அதிகமாக பெண்களிடமும் சிறு பிள்ளைகளிடமும் அதிகம் காணலாம். வாய்ப் புண்கள் பல காரணங்களால் உண்டாகலாம்.பெரும்பாலும் நாம் உணவை மென்று உண்ணும்போது தவறுதலாக கன்னத்தின் உள் பகுதியைக் கடித்துக்கொள்வதுண்டு. அது புண்ணாக சில நாட்கள் நீடிக்கும். கூர்மையான பற்கள் உரசுவதாலும் குத்துவதாலும் புண் உண்டாகும்.
Ulcer2 வாய்ப் புண்கள் உடலில் வேறு கோளாறுகள் காரணமாகவும் உண்டாகலாம். குறிப்பாக இரும்பு சத்து குறைபாட்டினால் உண்டாகும். இரத்தச் சோகை, வைட்டமின்கள் குறைவு, குரோனர்ஸ் நோய் போன்ற காரணங்களாலும் ஏற்படலாம்.
திரும்ப திரும்ப தொடர்ந்து வாய்ப் புண்கள் உண்டாவதற்கு வேறு தூண்டும் காரணங்கள் இருக்கலாம். அவை வருமாறு:
* மரபணு – சில குடும்பங்களில் வாய்ப்புண் அதிகம் காணப்படும். சுமார் 40 சதவிகிதத்தினர் தங்கள் குடும்பங்களில் வழிவழியாக வாய்ப் புண்கள் உள்ளதாகக் கூறுகின்றனர். இதனால் இது மரபணு காரணமாக உண்டாவதாகவும் கருதலாம்.
* மன உளைச்சலும் பரபரப்பான மனநிலையும் ( Stress and Anxiety )
* ஹார்மோனில் மாற்றங்கள் – சில பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் வாய்ப் புண்கள் உண்டாகின்றன.
* சில உணவுவகைகளை உட்கொள்ளுதல் – உதாரணமாக காப்பி, சாக்லட் , வேர்க்கடலை, ஸ்ட்ராபெர்ரி , ஆல்மண்ட் , வெண்ணை, தக்காளி, கோதுமை.
* பற்பசையில் உள்ள இரசாயணம்.
* புகைத்தலை நிறுத்தியதும் – புகைப்பதை நிறுத்தியதும் உடலில் உண்டாகும் மாற்றங்கள் காரணமாக வாய்ப் புண்கள் உண்டாகலாம். அனால் இதற்காக மீண்டும் புகைக்க வேண்டாம். இந்த புண்கள் தானாக ஆறிவிடும்.
சில வேளைகளில் வாய்ப் புண்கள் உடலில் வேறு நோய்த் தொற்று காரணமாகவும் இருக்கலாம். அம்மை, ஹெர்ப்பீஸ் வைரஸ் தொற்று, கை கால் வாய் நோய், வைரஸ் தொற்று , எச்.ஐ.வி., லூப்பஸ் , காசநோய், சிபிலிஸ் பாலியல் நோய், காளான் தொற்று , லுக்கீமியா போன்றவை சில உதாரணங்கள்.
சில மருந்துகளைப் பயன்படுத்தும்போதும் வாய்ப் புண்கள் தோன்றலாம். அவை வருமாறு:
* NSAID என்ற வலி குறைக்கும் மருந்து வகைகள். ஆஸ்பிரின், இபூபுருபன் போன்றவை.
* Beta Blockers என்னும் இருதய , இரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு பயன்படுத்தும் மருந்து வகைகள்.
* புற்று நோய்க்கு பயன்படுத்தும் கீமொதெராப்பி, கதிர்வீச்சு சிகிச்சைகள்.
சில சமயங்களில் இதே வாய்ப் புண்கள் வாய்ப் புற்று நோயாகவும் இருக்கலாம். அது பெரும்பாலும் நாக்கின் அடியில் உண்டாகும். அதிகம் புகைத்தல்,, அதிகம் மது அருந்துதல் போன்ற பழக்கமுள்ளவர்களுக்கு இதுபோன்ற வாயில் புற்று நோய் உண்டாகி புண் ஆகலாம்.இது ஆபத்தானது. இதற்கு உடனடி சிகிச்சை தேவை!

சிகிச்சை முறைகள்
Ulcer3
வாய்ப் புண்கள் பெரும்பாலும் ஓரிரண்டு வாரங்களில் தானாக ஆறும் தன்மை கொண்டவை. ஆனால் தொடர்ந்து நீடித்தால் மருத்துவரிடம் அல்லது பல் மருத்துவரிடம் சென்று பார்த்து சிகிச்சை பெறலாம். சில மருந்து வகைகள நிவாரணம் தரும்.
* வலி குறைக்கும் மருந்துகள் பயன் தரும்.
* கார்ட்டிக்கோஸ்டீராய்ட் மருந்துகள் வீக்கத்தைக் குறைப்பதோடு வலியையும் குறைக்கும்.
* கிருமிகளைக் கொல்லும் வாய் கொப்பளிக்கும் மருந்து வகைகள் அல்லது சப்பும் மருந்து வகைகள்.

தடுக்கும் முறைகள்
எதனால் தொடர்ந்து வாய்ப் புண்கள் உண்டாகிறது என்பது தெரியாத காரணத்தினால் சரியான தடுப்பு முறைகளைக் கூறுவது கடினம். ஆனால் பொதவாக சில சுகாதார முறைகளைக் கடைப்பிடிப்பதின் மூலமாக வாய்ப் புண்கள் உண்டாவதை ஓரளவு தடுக்கலாம். அவை வருமாறு:

* வாய்க்குள் உரசி காயத்தை உண்டுபண்ணக்கூடிய பல் தேய்க்கும் பிரஸ்களைத் தவிர்த்து மேன்மையானவற்றைப் பயன்படுத்தவேண்டும்.
* புண்களை உண்டுபண்ணக்கூடிய காரமான உணவுவகைகளைத் தவிர்த்தல்.
* மன அழுத்தம், மன உளைச்சல், பரபரப்பான மனநிலை போன்றவற்றைக் குறைத்தல்.
* அவ்வப்போது பல் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வது.
* தொடர்ந்து வாய்ப் புண்கள் நீடித்தால், காரணத்தைக் கண்டறிய மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வது.

( முடிந்தது )

Series Navigationவாழையடி வாழை!வந்தவாசி கவிஞர் மு.முருகேஷூக்கு ‘செம்பணிச் சிகரம் விருது’ வழங்கப்பட்டது

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *