வாரிசு

This entry is part 17 of 23 in the series 20 டிசம்பர் 2015

வளவ. துரையன்

அந்த வனாந்தரமே மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தது. கருங்காலி மரங்களும், தேவதாரு மரங்களும் வீசிய மெல்லிய காற்றில் கிளைகளை ஆட்டி ஆனந்தத்தில் ஆழ்ந்திருந்தன. செடிகளும், கொடிகளும் தத்தம் பூக்களைச் சொரிந்து மண்ணை மறைத்து மலர்ப்படுக்கை அமைக்க முயன்று கொண்டிருந்தன. நீர்நிலைகளில் இருந்த முதலைகள் கரையேறி யாருக்காகவோ காத்திருப்பதுபோல் காட்சியளித்தன. தடாகத்தின் மீன்கள் தங்களைப்போன்று முதல் அவதாரம் எடுத்தவன் வரும்போது பார்க்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் துள்ளிக் குதித்தன.
காய்ந்த தேக்குமர இலைகள் மெதுவாகச் சத்தமிடும் வண்ணம் அவற்றின் மீது கால் வைத்து அவன் வந்து கொண்டிருந்தான். வயதின் தளர்ச்சி தெரிந்தாலும் உடலின் கம்பீரம் குறையவில்லை. துவாரகையைவிட்டுக் கிளம்பியதிலிருந்தே மனம் சரியாக இல்லை என்பது அவன் முகத்தைப் பார்த்தாலே தெளிவாகத் தெரிந்தது. “முடிந்தது; எல்லாம் முடிந்துபோய் விட்டது” என்று அவன் வாய் அவன் அறியாமலே முணுமுணுத்தது. ஆனாலும் அவன் மனம் கேட்டது.
“கண்ணா! எல்லாவற்றையும் முடித்துவிட்டு முடிந்தது என்று இப்போது முணுமுணுக்கிறாயே? ஏன் வருத்தம்? தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பார்களே! அது இதுதானா? உன் குலம் அழிந்தால்மட்டும் உனக்குத் துரம் வருகிறதா?”
மனச்சாட்சியின் வினாவுக்குக் கண்ணனால் விடையிறுக்க முடியவில்லை. தனக்கே தெரியாமல் யதுகுலம் அழிய யாரோ திட்டமிட்டிருக்கிறார்களே என்பதைத்தான் அவனால் தாங்க முடியவில்லை.
கொன்றைப்பூ ஒன்று தலைமீது விழுந்தது. நிமிர்ந்து பார்த்தான். மரத்தில் இருந்த குயிலும் நாகணவாய்ப்புள்ளும் அவனை வரவேற்பதுபோல் கீதம் இசைத்தன. அவற்றை ரசிக்கும் மனநிலையில் அவன் இல்லையே!
”இந்த யதுகுமாரர் விளையாட்டுக்கும் அளவே இல்லாமல் போய்விட்டது. இல்லை; விதி விளையாடிவிட்டது. சாம்பனுக்குப் பெண் வேஷமிட்டு, ”என்ன குழந்தை அவனுக்குப் பிறக்கும்” என்று மகரிஷிகளிடம் கேட்டார்கள். அவர்களோ சினவயப்பட்டு, “இவனுக்கு உலக்கைதான் பிறக்கும்; அதனால் உன் குலம் அழியும்” என்று சாபமிட்டார்கள். நான் கூட அச்சாபத்தைச் சாதாரணமாகத்தான் நினைத்தேன். அந்த உலக்கையைப் பொடி செய்துவிட்டாலும் அதன் தூள்கள் மக்கிக் கோரைப் புல்லாய் வளர்ந்தனவே! ‘மைரேயம்’ எனும் மதுவால் மதி இழந்த யாதவர்களுக்குள் சண்டை மூள அக்கோரைப் புற்களைப் பறித்துத் தாக்கியே அனைவரும் மாண்டனர். நானும் அண்ணன் பலராமனும் எவ்வளவு முயன்றும் அதைத் தடுக்க முடியவில்லையே! என் வாரிசும் அழிந்த்தே! என் குலமும் அழிந்ததே!” என்றெல்லாம் எண்ணிய அவனுக்குச் சலிப்பு வந்தது.
கால்கள் லேசாக வலிப்பதுபோல் தோன்றியது. “எனக்கு மூப்பு வந்து விட்ட்தா? ஆமாம்; நானும் மானிடன்தானே? மேலும் சிறையில் தேவகியின் வயிற்றிலிருந்து பிறந்து நூற்று இருபது ஆண்டுகள் ஆகியிருக்குமே” என எண்ணிய கண்ணன் எங்காவது சற்று அமர்ந்து கொள்ளலாம் என எண்ணினான்.
அருகில் இருந்த அச்வந்த மரத்தைப் பார்த்தான். அதன் ஒரு கிளை சற்று சாய்வாகப் படுப்பதற்கேற்றவாறு வளைந்திருந்தது. அதன் மீது ஏறி வலது தொடை மேல் இடது பாதத்தைத் தூக்கிவைத்து அமர்ந்தான். இடுப்பின் பீதாம்பரத்தில் புல்லாங்குழலும், தலைமுடியில் மயிற்பீலியும், மார்பில் இரத்தின ஆரங்களும், மேலே உத்தரீயமும் வலுவான அழகிய தோள்களும், உறுதியான கால்களும், பறவைபோன்ற பாதங்களும் அழகுக்கு அழகு செய்தன.
சிந்தனை மீண்டும் ஓடியது. குலஅழிவே மீண்டும் மீண்டும் கண் முன் தோன்றியது. ”முனிவர்கள் சாபமிட்டார்கள்; சரி; பெண் வேஷம் போடச் சொன்னது யார்? அதற்கு அடிப்படை என்ன? அவர்கள் மதி மயங்கியது ஏன்? எங்கோ ஒரு தவறு நேர்ந்திருக்கிறது” என்றுதான் அவனால் நினைக்க முடிந்தது.
வானம் இருட்டத் தொடங்கியது. “மழை வரும் போலிருக்கிறது; தான் கிளம்ப வேண்டியதுதான்” எனக் கண்ணன் எண்ணியபோது நடந்ததை எல்லாம் மீண்டும் மீள்பார்வைக்குக் கொண்டு வரும் சிந்தனை முளைத்தது.
”குழந்தைப் பருவ விளையாட்டுகள், கம்ச வதம், திரௌபதிக்கு மானம் காக்க ஆடை தரல், தூது போதல், போர்க்கு நாள் குறித்தல், சகதேவனுக்கு வாக்களித்தல், அரவானைக் களப்பலியிடல்” என்று எண்ணிய தொடர்ச்சி அரவான் நினைப்பு வந்ததும் சட்டென அறுபட்டது.
கண்ணனின் வருகையை அரவான் எதிர்பார்க்கவே இல்லை. ஊர்ந்து செல்லும் நாக குலத்தில் தோன்றிய தன்னையும் ஒரு பொருட்டாக மதித்துப் பரந்தாமனின் பாதங்கள் இம்மாளிகையில் பட்டதே என்று அவன் இறும்பூதெய்தினான்.
தனது திருவடிகளில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்த அரவானைத் தூக்கி நிறுத்திய கண்ன்ன் அவனுக்கு ஆசி வழங்கினான். கண்ணனை ஆசனத்தில் இருத்திப் பழங்களும், பாலும், தேனும் கொடுத்து உபசரித்தபின் அரவான் கேட்டான்.
“பெருமானே! என் தந்தையார், சித்தப்பாக்கள், பெரியப்பா, பாட்டியார் அனைவரும் நலம்தானே?”
“எல்லாரும் நலமாக உள்ளனர் குழந்தாய்”
“போர் ஏற்பாடுகள் எல்லாம் எப்படி உள்ளன?”
“எல்லாம் அணியமாகி விட்டன. பாசறைகள் காட்டி முடிக்கப்பட்டு விட்டன. தினமும் ஒத்திகை நடைபெறுகிறது. தண்ணீரும் உணவுப் பொருள்களும் சேகரிக்கப்பட்டு விட்டன. குதிரைகள், யானைகள் ஆகியவற்றுக்குத் தீவனங்கள் மலைபோலக் குவிந்து காட்சியளிக்கின்றன. உன்னைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.”
”என் தாயைவிட்டு என் தந்தை பிரியும்போது கேட்டதற்கு ஏற்ப நானும் போரில் ஈடுபடப் புறப்பட வேண்டியதுதான் பெருமானே!” என்ற அரவான் சற்று சந்தேகத்துடன் “அது சரி; தாங்கள் இங்கு எழுந்தருளியதன் நோக்கம் என்னவோ?” என்று மெல்லிய குரலில் கேட்டான்.
சற்று நேரம் பேசாமல் இருந்த கண்ணன் அரவானின் முகத்தைத் தீர்க்கமாக நோக்கி, “உன்னிடம் விடை பெற்றுப் போக வந்தேன்” என்று கூற அரவான் வியப்புடன் கேட்டான்.
“என்ன பெருமானே! விடைபெற வந்தீரா? எங்கு செல்கிறீர்? துவாரகைக்கா? போர்மேகம் சூழ்ந்துவிட்ட இச்சூழலிலா” என்று கேள்விமேல் கேட்கக் கண்ணன் மௌனமாக இருந்தான்.
“அரவானுக்குச் சினம் மூண்டது. “உத்தம புருஷன் என்று பெயர் பெற்றவர்கள் இப்படித்தான் செய்வார்களா? போருக்குத் திட்டம் தீட்டினீர்கள்; போர் தொடங்க வேண்டிய நேரத்தில் போய்விட்டால் தங்களையே நம்பிக் கொண்டிருக்கும் என் தந்தைமாரின் கதி என்னாவது? என் தாய் எப்படி கூந்தலை முடிப்பார்? என் தந்தை எப்படிக் கர்ணனை முடிப்பார்? பெரியப்பா எப்படித் துச்சாதனின் குருதியைக் கொப்பளிப்பார்? அந்தத் துரியோதனாதியர் செய்யும் சூழ்ச்சிகள், அவற்றை முறியடிக்கும் வகைகள் எல்லாம் யார் சொல்லித் தருவார்? என்று அரவான் பொரிந்து தள்ள கண்ணன் எழுந்து வந்து அவன் தோள்களைப் பற்றினான்.
மெதுவாகக் கூறினான். “இல்லை அரவான்! துவாரகைக்குச் செல்லவில்லை; இப் பூவுலகை விட்டே போகப் போகிறேன்.”
இப்போது அரவானுக்குச் சிரிப்பு வந்தது. என்ன பெருமானே? இதுவும் ஒரு விளையாட்டா? என்று கேட்கக் கண்ணனோ “இல்லை அரவான்; இது விளையாட்டன்று; இறுதியான முடிவு” என்று உறுதியான குரலில் கூறினான். அரவான் திடுக்கிட்டான். கண்ணன் குரலில் தெரிந்த கண்டிப்பின் கரணம் அவனுக்குப் புரியவில்லை. கண்ணனே பேசத் தொடங்கினான். “அரவான்; உனக்குத் தெரியுமே! போரை எப்படித் தொடங்க வேண்டும்? சொல் பார்ப்போம்”
“தெரியாதா? களத்திற்குக் காத தூரத்தில் பாசறை வீடுகள் அமைக்க வேண்டும்; வசதிகள் செய்யப்பட வேண்டும். போர் தொடங்குமுன் களப்பலி தர வேண்டும்”
“சரியாகச் சொன்னாய்; அந்தக் களப்பலி நான்தான்”
“தாங்களா? வேறு யாரும் இல்லையா? அவர்களுக்குத் தெரியமா? ஒப்புக் கொண்டார்களா?” என்று அரவான் கேட்கக் கண்ணன், “சம்மதிக்க வைத்தேன்; வேறு யாரும் இல்லையாமே! எல்லா சாமுத்திரிகா லட்சணமும் பொருந்தியவன் நான்தானே?” என்று பெருமிதத்துடன் கூறினான்.
கண்ணன் குரலில் தெரிந்த கர்வம் அரவானைத் தூண்ட, “ஏன் நான் ஒருவன் இருக்கிறேனே?” என்று பட்டென்று சொன்னான்.
வலையில் மீன் தானே விழுந்ததைக் கண்ட கண்ணன், “களப்பலி கொடுப்பவர் தாமாக முன்வர வேண்டுமே” என்று அரவானைச் சீண்டினான். அரவான் உணர்ச்சி வயப்பட்டான்.
”என் தாய் உலூபி மீது ஆணை; நடைபெற இருக்கும் குருச்சேத்திரப் போரில் என் தந்தைகளின் வெற்றிக்காக நான் அவர்கள் பொருட்டுக் களப் பலியாகிறேன்.”
அரவானின் சபதம் கேட்ட கண்ணன் தன் மகிழ்ச்சியை வெளிக் காட்டாமல், “வேண்டாம் அரவான்; நீ இள வயதுக்காரன்; எதுவும் அனுபவிக்காதவன்.” என்றான். சற்றுப் பேசாமல் இருந்த அரவான் பின் தெளிவாகப் பேசினான். ”பெருமானே! தாங்கள் நினைத்தால் என் குறையைப் போக்க முடியும்.”
”என்ன அரவான்?”
“நான் பெண்சுகம் அறியாத மனக்குறையுடன் களப்பலியாகக் கூடாது. எனவே நான் பலியாவதற்கு முன்னம் ஓரிரவாவது சுகம் அடைய வேண்டும்”
“என்ன அரவான்? மடியப்போகிறவனை மணக்க எந்தப் பெண் முன்வருவாள்?”
அரவான் சிரித்தான். “நீங்கள்தாம் மாயத்தில் வல்லவராயிற்றே! உங்களால் முடியாததா? நீங்கள் தேடினால் பெண் கிடைக்க மாட்டாளா?” என்று கேட்டுக் கைகளைக் குவித்தான்.
கண்ணன் பெண் தேடும் பொறுப்புடன் விடை பெற்றான். பெண்ணும் மோகனாங்கி எனும் பெயரில் மகிழ்ச்சியுடன் வந்தாள். மண மேடையில் அமர்ந்தாள். இன்பமும், துன்பமும் எல்லார் முகத்திலும் உள்ளேயும் குடியிருக்கத் திருமணமும் முதல் இரவும் நடந்தேறின.
நீராடி முடித்துப் புத்துணர்ச்சியுடனும் களைப்புடனும் இருந்த அரவானிடம் அப்போதுதான் அங்கு வந்த கண்ணன் கேட்டான்.
“என்ன திருப்திதானே?”
அரவான் வெட்கத்துடன் தலைகுனிந்தான். மெதுவாகச் சொன்னான். “நான் அணியமாகி விட்டேன். ஆயத்தங்கள் தொடங்கலாம்.”
“சரி! உன் விருப்பப்படியே செய்கிறேன்” என்று கூறிக் கண்ணன் புறப்பட்டான். வாயில்வரை சென்ற அவனை அரவானின் குரல் இழுத்தது
“தலைவா! ஒரு செய்தி”
“என்ன அரவான்?” என்று கேட்டு அருகில் வந்தான் கண்ணன்.
“விதவைக் கோலம் பூண இருக்கும் அவளின் துன்ப முகத்தைக் காண விரும்பவில்லை நான். இரவு முகமே இருக்கட்டும்.”
“சரி; நீ அவளை மீண்டும் பார்க்க முடியாது.”
அரவான் மெல்லிய குரலில் பேசினான். “உங்களால்தான் இதுவும் முடியும்; என்னால் மோகனாங்கிக்குக் கரு உண்டாகிக் குழந்தை பிறந்தால் அந்த வாரிசை அது ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி! தங்களே வளர்த்து உருவாக்க வேண்டும்.”
கேட்ட கண்ணன் கடகடவென்று சிரித்தான். “வாரிசா? கவலைப்பட வேண்டாம்; நிச்சயம் உருவாகாது.”
கண்ணன் உறுதியாகக் கூற அரவான் வியப்புடன் கேட்டான். “என் உருவாகாதா?”
“ஏன் தெரியுமா? அரவான், இதோபார்; என்னை நன்றாகப் பார்”. கண்ணன் உரு ஒரு கணம் மறைந்துபோய் மோகனாங்கி தெரிய அரவான் வியப்படைய மீண்டும் கண்ணன் தோன்றினான்.
“எந்தப் பெண் மரணம் அடையப்போகும் மணமகனுக்குக் கழுத்தை நீட்டுவாள்? பைத்தியக்காரா! நான்தான் மோகனாங்கியாக வந்தேன்; வாரிசு எப்படி வரும்?”
கேட்ட அரவான் இருகைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டு குனிந்தான். அவனைப் பார்த்தால் பரிதாபமாக இருந்தது. ஆறுதல் கூற அருகே வந்த கண்ணன் அவன் தோளைத் தொட்டான். தொட்ட கையை அரவான் தட்டிவிட்டான். அவன் வார்த்தைகள் வெடித்துக் கிளம்பின.
“நான் பைத்தியக்காரன்தான்; உங்கள் பேச்சை நம்பியவன் அல்லவா? கடைசியில் என்னிடமே மாயாஜாலம் காட்டிவிட்டீரே! திருமணத்தில் தங்களைக் காணாதபோதே நான் சந்தேகப்பட்டிருக்க வேண்டும்; மோகனாங்கியின் மோகம் என் கண்களைக் கட்டி விட்டது. எவ்வளவு பெரிய மோசம் செய்து விட்டீர்கள்? எனது வேண்டுதலை இப்படியா நிறைவேற்ற வேண்டும்? முடியவில்லை என்று சொல்லியிருக்கலாமே?” என்று அவன் தலையில் அடித்துக் கொண்டான்.
“வேண்டாம் அரவான்; பொறுமையாக இரு” என்ற கண்ணன் குரல் அவனுக்கு இன்னும் கோபமூட்டியது.
“பொறுமை எப்படி வரும் பெரியவரே! எப்படி வரும்? பெரியவர்கள் பெரிய தவறு செய்வார்கள்; நாங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுமா?” அரவானின் குரலில் ஆத்திரம் தொனித்தது.
“பெரிய தவறா?” ஏதோ கேட்க வேண்டும் என்பதற்காகக் கண்ணன் கேட்டான்.
“ஆமாம்; இதைவிட எனக்கென்னத் தீங்கு செய்ய முடியும்? திருமணம் புரிய ஏன் ஆசைப்பட்டேன்? சுகம் அனுபவிக்க மட்டுமா? எனக்கோர் மகன் பிறப்பான்; நல்ல நோக்கத்துக்காக நான் மறைந்தாலும் அவன் வாரிசாக உருவாகி எங்கள் நாக குலத்தை வாழ வைப்பான் என்று நம்பினேனே! என் ஆசையைத் தவறாகப் புரிந்துகொண்டு மண் அள்ளிப் போட்டு விட்டீரே!”
“நடந்தது நடந்து விட்டது; விடு அரவான்”
“விட்டு விடுவதா? உங்களுக்கென்ன எளிதாகச் சொல்லி விட்டீர்கள்” என்று கத்தினான் அரவான். கண்ணன் சிரித்தான்.
“சிரிக்காதே கண்ணா! நான் சாபமிடப் போகிறேன்”
“எனக்கே சாபமா?” கண்ணன் குரலில் கேலி தொனித்தது.
”ஆமாம்; இந்த உத்தம புருஷனின் சாபம் நிச்சயம் பலிக்கும்; எனக்கு வாரிசு இல்லாமல் செய்து என் குலம் அற்றுப் போகக் காரணமாய் இருந்த உன் குலம் அடியோடு அழிந்து போகும். நீ உட்பட யதுகுலத்தில் யாரும் இருக்க மாட்டார்கள். இது நிச்சயம்.”
அரவானின் இறுதிக் கட்டப்பேச்சு சாபக் குரலாய் மரத்தில் சாய்ந்து கொண்டிருந்த கண்ணனின் செவிகளில் இப்போது ஒலித்தது. கண்ணன் தெளிவடைந்தான்.
அப்போது உடைந்துபோன உலக்கையின் சிறு இரும்புத் துண்டைத் தன் அம்பு நுனியில் பொருத்தி இருந்த ‘ஜான்’ என்னும் வேடன் தொலைவிலிருந்து கண்ணன் பாதத்தை ஒரு பறவை என்று நினைத்து அதை நோக்கி அம்பு எய்ததால் கண்ன்ன் கதையும் முடிந்தது.

Series Navigationசேவாபாரதி ‘வெற்றித் திருநாள்’ விழா நடத்தி பாரத இராணுவத்திற்கு பாராட்டு விழாநன்னூலாரின் வினையியல் கோட்பாடு
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *