ஆ.மாதவனுக்கு வாழ்த்துகள்

This entry is part 13 of 18 in the series 27 டிசம்பர் 2015

madhavan

ஆ.மாதவன் என்னும் எழுத்தாளரை ‘கிருஷ்ணப்பருந்து’ நாவலாசிரியராகத்தான் நான் முதலில் தெரிந்துகொண்டேன். அப்போது நான் தீராத தாகம் கொண்ட வாசகனாக இருந்தேன். நூலகத்திலிருந்தும் நண்பர்களிடமிருந்தும் புத்தகங்களைப் பெற்று படித்துக்கொண்டிருந்த காலம் அது. கிருஷ்ணப்பருந்துதான் நான் படித்த அவருடைய முதல் படைப்பு. என்னைத் தொடர்ந்து என் நண்பன் பழனியும் அதைப் படித்தான். நாங்கள் இருவரும் ஒருநாள் முழுக்க அந்த நாவலைப்பற்றி விவாதித்தோம்.

ஒரு சாமியாருக்குள் இப்படி ஒரு பெண்ணாசையா என்பதுதான் அன்று எங்களுடைய விவாதத்தின் மையம். அது இருக்கலாமா, இருக்கக்கூடாதா, இருந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளலாமா காட்டிக்கொள்ளக்கூடாதா, ஆசையைக் கடக்கமுடியுமா முடியாதா என்றெல்லாம் வேறுவேறு கோணங்களில் யோசித்துப் பேசிக்கொண்டோம். ’ஒரு அரசனுக்கு இன்னொருவன் மனைவிமீது ஆசை வரும்போது, ஒரு சாமியாருக்கு வருவதில் என்ன தப்பு இருக்கிறது?’ என்று கேட்டான் பழனி. விவாதத்துக்கு துணையாக அவன் ராமாயணத்தை இழுத்துவைத்துக்கொண்டான். ’இருந்தாலும் அவன் சாமியார் அல்லவா? அவன் கவனம் துறவின் மீதல்லவா இருக்கவேண்டும்?’ என்று கேட்டேன் நான். ’இருக்கட்டுமே, அவளைப் பார்க்கிறவரைக்கும் துறவின்மீதுதான் அவன் கவனம். பார்த்தபிறகு அவள்மீது கவனம் மாறிவிட்டது. அதில் பிழையென சொல்ல என்ன இருக்கிறது?’ என்று பழனி கேட்டான். சட்டென அவனுக்கு நாங்கள் ஏற்கனவே படித்திருந்த ‘தாசியும் தபசியும்’ மொழிபெயர்ப்பு நாவலின் நினைவு வந்துவிட்டது. அதை நினைவூட்டிவிட்டு ‘அந்த மொழி சாமியாருக்கு ஆசை வரும்போது நமது மொழி சாமியாருக்கு ஆசை வரக்கூடாதா என்ன?’ என்று புன்னகைத்தான். ’ஆசை என்பது சகஜம்தானே? ஆசைப்படாமல் எப்படி ஒரு மனிதனால் இருக்கமுடியும்? சாமியாராக இருப்பதாலேயே அவன் ஆசைப்படக்கூடாது என்று கட்டுப்பாடெல்லாம் இருக்கிறதா என்ன?’ என்றெல்லாம் கேள்விகளை அடுக்கியபடி சென்றான். எனக்கு தலை சுற்றியது. தன் வாதத்தால் எப்படியாவது என்னை அந்த மையத்தை ஏற்றுக்கொள்ளவைத்துவிட முடிவெடுத்தவன் போல அன்று நீண்ட நேரம் பேசியபடி இருந்தான் பழனி.

நாவலைவிட பருந்து என்னும் சொல்லை என் மனம் நீண்டநேரம் அசைபோட்டபடி இருந்தது. இரைக்காகக் காத்திருக்கும் பருந்து. வெகுதொலைவில் இருந்தபடியும் கூர்மையாகக் கவனித்தபடியும் இருக்கும் பருந்து. வெளியே ஒரு சாதுபோல இருந்தாலும் உள்ளே ஒரு பருந்து உற்றுப் பார்த்தபடியும் வட்டமிட்டபடியும் இருக்கிறது. பசுத்தோல் போர்த்திய புலிபோல, மனிதத்தோலுக்குள் ஒரு பருந்து. இப்படி எதை எதையோ நினைத்து அந்தச் சொல்லை உருட்டிக்கொண்டே இருந்தேன். அந்த வயதில் அப்படி ஒரு பழக்கம் எனக்கு.

இதெல்லாம் நான் புதுச்சேரியில் படித்துமுடித்து வேலை செய்து வந்த காலத்தில் நடந்த சம்பவங்கள். எண்பதுகளின் தொடக்கத்தில் கர்நாடகத்தைச் சேர்ந்த பெல்லாரி கோட்டத்தில் இளம்பொறியாளராக வேலைக்குச் சேர்ந்தேன். அலுவல் தொடர்பாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ ஆறுமாதங்களுக்கு ஒரு முறையோ என்னைச் சென்னைக்கு அனுப்புவார்கள். சென்னையில்தான் எங்களுடைய தலைமை அலுவலகம் இருந்தது. அப்படி வரும்போதெல்லாம் நான் படிப்பதற்காக புத்தகங்கள் வாங்கிக்கொண்டு செல்வேன். அடுத்த பயணம் வரும்வரை தாங்கும் அளவுக்கு பழைய புத்தகங்கள், புதிய புத்தகங்கள் என பெட்டி நிறைய வாங்கி அடுக்கியெடுத்துக்கொண்டு செல்வேன். ஒருமுறை தீபம் அலுவலகத்திலிருந்தும் கணையாழி அலுவலகத்திலிருந்தும் கிடைத்த பழைய இதழ்களையெல்லாம் வாங்கிக்கொண்டு சென்றேன். என் தனிமையை அந்த வாசிப்பின் வழியாகவே கடந்துவந்தேன்.

ஒரு பழைய தீபம் இதழைப் புரட்டிக்கொண்டிருந்தபோது ‘பூனை’ என்னும் தலைப்பில் ஒரு சிறுகதையைப் படித்தேன். அந்தத் தலைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எழுதியவரின் பெயர் ஆ.மாதவன் என்று போட்டிருந்தது. அந்தப் பெயரை எங்கோ படித்திருக்கிறோமே, எங்கே எங்கே என சில கணங்கள் நினைவுகளை ஓடவிட்டேன். சில நிமிடங்களுக்குப் பிறகு நினைவில் ஒதுங்கியிருந்த ஏடு மிதந்து வந்துவிட்டது. ‘கிருஷ்ணப்பருந்து’ மாதவன். அந்த நாவலைப் படித்துவிட்டு நானும் பழனியும் மணிக்கணக்கில் உரையாடிக்கொண்டதெல்லாம் நினைவுக்கு வந்துவிட்டது. அவர் எழுதிய சிறுகதை என்று அறிந்துகொண்டதும், அவர்மீது என் மதிப்பு மிகுதியானது.

அதற்குச் சில நாட்களுக்கு முன்புதான் நண்பரொருவர் தான் வளர்க்கும் பூனையைப்பற்றி கதைகதையாகச் சொல்லி, பூனையைப்பற்றிய என் ஆவலை அதிகப்படுத்தியிருந்தார். அவருடைய குடும்பம் வெளியூரில் இருந்தது. வேலையின் பொருட்டு அவர் தனியாக ஒரு வீடெடுத்து தங்கியிருந்தார். ஒரு சமயம் குடும்பத்தைப் பார்ப்பதற்காக சென்றவர் ஒருநாள் தாமதமாகத் திரும்பினார். அவர் வீட்டைத் திறந்து உள்ளே வந்ததைக் கண்டதும் அந்தப் பூனை ஓடோடி வந்து அவர் காலைத் தொட்டு அழுவதுபோல குரல்கொடுத்திருக்கிறது. அவர் அதை மெதுவாகத் தூக்கி தட்டிக் கொடுத்து கொஞ்சியிருக்கிறார். அந்தப் பூனை அவர் கன்னத்தைத் தொட்டு எதையோ கேட்டு மன்றாடுவதுபோல இடைவிடாமல் குரல் கொடுத்திருக்கிறது. முதலில் பிரிவின் ஆற்றாமைதான் பூனையின் குரலுக்குக் காரணம் என்று தவறாக நினைத்த நண்பர், மெல்ல மெல்ல அது பசியின் தவிப்பு என்பதைத் தாமதமாகப் புரிந்துகொண்டார். உடனே பதறியடித்துக்கொண்டு வெளியே ஓடிச் சென்று பால் வாங்கி வந்து, அது வழக்கமாக பாலருந்தும் தட்டில் ஊற்றியிருக்கிறார். ஆர்வத்துடன் அதை சில நிமிடங்கள் நக்கிக் குடித்தபிறகுதான் அந்தப் பூனையின் கண்களில் தவிப்பு அடங்கியது. ’பூனை வளர்க்கறது ஒரு குழந்தையை வளர்க்கிறமாதிரி சார்’ என்று சொல்லும்போதெல்லாம் அவர் முகம் கனிவில் குழைந்திருக்கும். மாதவனுடைய கதையின் தலைப்பைப் பார்த்ததுமே இந்தப் பழைய நினைவுகளெல்லாம் புரண்டுவர, உடனடியாக கதையைப் படிக்கத் தொடங்கிவிட்டேன்.

ஆனால் மாதவனின் கதையில் இடம்பெற்றிருந்த பூனை நண்பருடைய வளர்ப்புப் பூனைபோன்றதல்ல. அந்தப் பூனை வேறுவிதமாக இருந்தது. அந்தப் பூனை முறைக்கிறது. நேரம் கெட்ட நேரத்தில் குறுக்கில் ஓடுகிறது. சத்தம் போட்டு அதிர்ச்சியை உருவாக்குகிறது. கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துகொள்கிறது. எதிர்பாராத நேரத்தில் எதிர்ப்புறத்தில் குதித்தோடுகிறது. சில சமயங்களில் விரட்ட விரட்ட ஓடாமல் நின்று வேடிக்கை பார்க்கிறது. தப்பித்து ஓடுகிறது. பதுங்குகிறது. பாய்கிறது. பூனையைப்பற்றிய எல்லாத் தகவல்களும் பூனையை நேரிடையாகக் குறிப்பதுபோல இருந்தாலும், மனசாட்சியை பூனையின் வடிவத்தில் உலவவிட்டதுபோல இருந்தது. பூனை ஒதுங்குவது, பாய்வது எல்லாமே மனம் பதுங்குவதையும் பாய்வதையும் குறிப்பதுபோலவே இருக்கிறது. இப்படியெல்லாம் கூட கதை எழுத முடியுமா என்று ஆச்சரியமாக இருந்தது. மயில்முட்டைகளை உருட்டி விளையாடும் குரங்குக்குட்டியை ஒரு பாத்திரமாக்கி தலைவியின் அருமையைப் புரிந்துகொள்ளாமல் விடலைப்பிள்ளையாக திரியும் தலைவனை இடித்துரைக்கும் குறுந்தொகைப்பாட்டை அத்தருணத்தில் நினைத்துக்கொண்டேன். கவிதையில் சாத்தியமான ஒன்று அந்தக் கதையிலும் சாத்தியமாகியிருப்பதாக நினைத்துக்கொண்டேன். பூனைக்கு இப்படி ஒரு படிமத்தன்மையை வழங்கமுடியும் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. என்ன அருமையான கதை, என்ன அழகான சித்தரிப்பு, எழுதினால் இப்படி எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். பருந்தாக இருந்தாலும் சரி, பூனையாக இருந்தாலும் சரி, எப்படி அவரால் அழகாக அதை வேறொன்றாக மாற்றிக் காட்டமுடிகிறது என ஆச்சரியத்தில் மூழ்கினேன்.

பூனை சிறுகதை முள்மீது விழுந்துவிட்ட துணியை எடுப்பதுபோல மிகவும் கவனமாக எழுதப்பட்ட ஒரு படைப்பு. ஆ.மாதவனின் மேதைமைக்குச் சான்றாக விளங்கும் படைப்பு அது. கணவனும் மனைவியும் கொண்ட ஒரு குடும்பம். அக்குடும்பத்தில் மனைவி ஆசையாக ஒரு பூனை வளர்க்கிறாள். கணவனுக்கு அந்தப் பூனையைப் பார்த்தாலேயே பிடிப்பதில்லை. வெறுக்கிறான். ஒருநாள் காலையில் மனைவி ஏதோ அவசரமான ஒரு வேலையின்பொருட்டு ஊருக்குக் கிளம்பிச் சென்றுவிடுகிறாள். வேளாவேளைக்குச் சரியாகச் சாப்பிடும்படி கணவனிடம் சொல்கிறாள். அவர் சாப்பிடும்போது மறவாமல் பூனைக்கும் சாப்பாடு கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறாள். அவர்களுடைய வீட்டுக்குப் பக்கத்துவீட்டில் ஒரு பெண் இருக்கிறாள். அவனுடைய மனைவி அவளை அக்கா என்றே அழைக்கிறாள். அவசரத்துக்கு அக்கா வந்து சாப்பிடுவதற்கு ஏதேனும் செய்துகொடுப்பாள் என்றும் கணவனிடம் சொல்லிவிட்டுச் செல்கிறாள் மனைவி.

அன்று மதியமே சாப்பாட்டு வேளைக்கு சரியாக அடுத்த வீட்டுப் பெண் உள்ளே வருகிறாள். அவனுக்காக சூடாக சமையல் செய்து கொண்டுவந்து மேசையில் வைத்துப் பரிமாறுகிறாள். அந்தத் தனிமை அவனை என்னமோ செய்கிறது. அவள் பேச்சும் நளினமும் புன்னகையும் உடற்கட்டும் அவனை அலைக்கழிக்கின்றன. அவன் மனம் தடுமாறுகிறது. அவளை நெருங்க ஒருபக்கம் விருப்பமாகவும் இருக்கிறது. இன்னொரு பக்கம் அச்சமாகவும் இருக்கிறது. இறுதியில் ஆசையே வெல்ல, அவளுடைய கைகளை மெதுவாகப் பற்றி இழுக்கிறான். அவளுக்கும் அதில் விருப்பமிருக்கும்போலத் தெரிகிறது. புன்னகைக்கிறாள். குறும்புப்பேச்சு பேசுகிறாள். அவன் தன் தயக்கங்களைத் துறந்து இன்னும் சற்றே தன் நடவடிக்கைகளில் முன்னேற விரும்புகிறான். சட்டென எதிர்பாராத விதமாக அவர்கள் இருவரிடையே பூனை புகுந்து சத்தமிடுகிறது. பூனையை விரட்டியடிக்க அவன் திரும்பும் தருணத்தில் அவள் புன்னகையோடு வெளியே சென்றுவிடுகிறாள்.

கைக்குக் கிடைத்தது வாய்க்குக் கிடைக்காத எரிச்சலில் அவன் அந்தப் பூனைமீது கோபம் கொண்டு விரட்டுகிறான். அவனிடமிருந்து தப்பிக்க ஓடிச் செல்லும் பூனை, அவசரத்தில் நிலை தடுமாறி அருகில் இருந்த கிணற்றுக்குள் விழுந்துவிடுகிறது. திடீரென அவனுக்கு அச்சம் வந்துவிடுகிறது. மனைவி வந்து கேட்டால் என்ன பதில் சொல்வது என்று தவிக்கிறான். அக்கம்பக்கத்து வீட்டிலிருக்கும் சிறுவர்கள் அவனுக்காக உதவ முன்வருகிறார்கள். ஒரு ஏணியை கிணற்றுக்குள் இறக்கிவைக்கிறார்கள். அந்தப் பூனை தானாக ஏறி வந்துவிடும் என்று நம்பிக்கையோடு கலைந்து செல்கிறார்கள். மறுநாள் காலைவரைக்கும் அந்தப் பூனை தென்படவே இல்லை. இறந்துபோய்விட்டதாகவே அவன் நினைத்துக்கொள்கிறான். அன்று மதியமும் பக்கத்துவீட்டுப் பெண் சாப்பாடு கொண்டு வருகிறாள். குறும்புப் பேச்சு பேசியபடி அவனுக்குச் சோறு பரிமாறுகிறாள். பூனை இல்லாத தெம்பில் சட்டென கதவைச் சாத்திவிட்டு அவளைத் தழுவுகிறான் அவன். அதுவரை பரணில் பதுங்கியிருந்த பூனை சட்டென சத்தம் போட்டபடி குதித்து அவர்களுக்கு நடுவில் ஓடிவந்து நிற்கிறது. அவள் சட்டென விலகி, கதவைத் திறந்துகொண்டு வெளியேறிவிடுகிறாள். அவளை ஏமாற்றத்துடன் பார்த்தபடி இருக்கும்போதே பூனையும் வெளியேறிவிடுகிறது. ஏமாந்துவிட்ட வெறி அவன் தலையில் வெப்பமாகப் படர்கிறது.

கதையில் இடம்பெற்ற பூனையை முதலில் அவனுடைய மனைவியின் மாற்று இருப்பாகவே நான் எடுத்துக்கொள்ள விரும்பினேன். அப்படி நினைப்பதைவிட, அவனுடைய மனசாட்சியின் வடிவமாக அந்தப் பூனையை நினைத்துக்கொள்வதுதான் நன்றாக இருப்பதாகத் தோன்றியது. படித்து முப்பதாண்டுகளுக்குப் பிறகும் என் ஆழ்மனத்தில் அந்த வாசிப்பனுபவம் பசுமையாக இன்னும் படிந்திருக்கிறது. அதை ஆ.மாதவனின் கதைக்குக் கிடைத்த வெற்றி என்றே சொல்லவேண்டும்.

ஆ.மாதவனுடைய வேறு ஏதேனும் சிறுகதை வெளிவந்திருக்கிறதா என கையிலிருந்த தீபம் இதழ்களில் தேடினேன். இன்னொரு இதழிலும் அவருடைய சிறுகதையைப் பார்த்தேன். அது ‘கோமதி’ என்னும் சிறுகதை. இக்கதையிலும் அவர் கைவண்ணமும் . கலைவண்ணமும் படிந்திருந்தன. ஒரு பெண்ணின் பெயரைப்போல நினைக்கவைக்கிற கோமதி என்னும் பெயர் உண்மையில் ஒரு பசுவின் பெயர். ஒரு சாஸ்திரி அந்தப் பசுவை வளர்த்து வருகிறார். அதை வளர்க்க இயலாத அளவுக்கு வறுமை வாட்டியெடுத்ததும் வீட்டைவிட்டு அனுப்பிவிடுகிறார். அது தெருவில் கிடைப்பதையெல்லாம் தின்று தெருவோரத்தில் தூங்கி தெருவிலேயே திரியத் தொடங்குகிறது. எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள ஒரு தெருவில் அது புகுந்து வருகிறது. மனிதர்களை மோதுகிறது. தள்ளுகிறது. முட்டுகிறது. விரட்டுகிறது. கிடைத்த இடத்தில் படுத்துத் தூங்குகிறது. அதை எப்படி கடைத்தெருவிலிருந்து அகற்றுவது என்பது அங்கிருக்கும் அனைவருக்கும் ஒரு பெரிய சவாலாக இருக்கிறது.

ஒருநாள் இரவில் ஒரு பாழ்மண்டபத்துக்கு அருகில் படுத்துத் தூங்குகிறது அந்தப் பசு. அந்த மண்டபத்தை ஒட்டி வாடிக்கையாளர்களுக்காகக் காத்திருக்கிற பெண்ணைத் தேடிச் செல்லும் ஒருவன் இருளில் படுத்திருக்கும் பசுவின்மீது தடுமாறி விழுந்து காயமடைகிறான். அவனும் அந்தப் பெண்ணும் சேர்ந்து பசுவின் இருப்பை ஒரு பிரச்சினையாக மாற்றிவிடுகிறார்கள். பசுவை விரட்ட அவர்கள் தனிப்பட எடுக்கும் முயற்சிகள் தோல்வியடைந்ததும் நகராட்சியை அணுகி உதவி கேட்கிறார்கள். ஒரு இன்ஸ்பெக்டரும் களத்தில் இறங்குகிறார். ஊழியர்கள் அந்தப் பசுவைப் பிடிக்க விரட்டுகிறார்கள். அதைப் பிடித்துச் சென்று பட்டியில் அடைக்கவேண்டும் என்பது அவர்கள் திட்டம். பசு அங்குமிங்கும் ஓடி அவர்களுக்கு ஆட்டம் காட்டுகிறது. வழியை மறித்துக்கொண்டு நின்றபடி வேடிக்கை பார்க்கிற பொதுமக்களைக் கடந்துசெல்ல அந்தப் பசுவால் முடியவில்லை. எல்லாப் பக்கங்களிலும் தடைகள். ஓடி ஓடி களைத்துப்போன பசு சோர்ந்து வாயில் நுரைதள்ள கீழே விழுந்து விடுகிறது. ஒருவன் ஓடிவந்து அதை அசைத்துப் பார்த்துவிட்டு மாட்டாஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்று சொல்கிறான். இதற்கு மருத்துவம் ஒரு கேடா, சாகட்டும் விடு, ஒரேவடியாகப் புதைத்துப் போட்டுவிடலாம் என்கிறார் ஒருவர். இடுகாட்டுக்கு அதை ஏற்றிச் செல்வதற்காக ஒரு வண்டிக்காக ஏற்பாடு செய்கிறார்கள். ஆஸ்பத்திருக்கு அழைத்துச் செல்லலாம் என்று சொன்னவனிடமேயே வண்டியில் ஏற்றி இடுகாட்டுக்குக் கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பைக் கொடுத்துவிட்டு அனைவரும் கலைந்துபோய்விடுகிறார்கள்.

தெருவே வெறிச்சிட்டுவிடுகிறது. அந்தப் பசுவை மிகவும் வருத்தத்துடன் தொட்டுப் பார்க்கிறான் அவன். பிறகு உள்ளார்ந்த வருத்தத்துடன் அங்கிருந்து விலகி நின்றபடி நண்பர்களுடன் பீடி புகைக்கத் தொடங்குகிறான். மெல்ல விழி திறந்து பார்க்கும் பசு தெரு நடமாட்டமின்றி இருப்பதைப் பார்க்கிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் சட்டென எழுந்து தப்பித்து ஓடத் தொடங்குகிறது. நடப்பதை சில கணங்களுக்குப் பிறகே உணர்ந்துகொண்ட ஆட்கள் அதைப் பிடிக்க பின்தொடர்ந்து ஓடுகிறார்கள். ஒரு பெரிய தெருவில் ஏதோ ஒரு கட்சியின் ஊர்வலம் வருகிறது. பசுவும் அதைக் கனிவுடன் பார்த்தவனும் மட்டும் அந்த ஊர்வலம் வருவதற்கு முன்பாக கடந்து ஓடிவிடுகிறார்கள். மற்றவர்கள் பாதையைத் தொடுவதற்குள் ஊர்வலம் குறுக்கிட்டுவிடுகிறது. பசு தப்பிவிடுகிறது.

அந்தக் கதையும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பூனையைப்போலவே அந்தப் பசுவும் ஒரு படிமமாகவே எனக்குத் தோன்றியது. வாழும் இச்சை கொண்ட உயிர். வீட்டுக் கொட்டிலில் கட்டியிருந்தாலும் சரி, தெருவோரம் மரத்தடியில் படுத்துறங்கும் நிலைமையிலும் சரி, வாழும் தீரா இச்சையே அந்தப் பசுவை வாழவைக்கிறது. எந்த நிலைமையையும் எதிர்கொள்ளவும் கடந்துசெல்லவும் வைக்கிறது. பசுவுக்கு மட்டுமல்ல, கடைத்தெருவில் அன்றாடங்காய்ச்சியாக கைக்குக் கிடைத்த வேலைகளைச் செய்தபடி அலைகிற பலருக்கும் அதுதான் நிலைமை. உள்ளூர உத்வேகமூட்டியபடி இருக்கும் வாழும் இச்சையே எல்லோரையும் எப்படியோ வாழவைத்தபடி இருக்கிறது.

அன்றுமுதல் நான் விரும்பிப் படிக்கும் எழுத்தாளர்களில் ஒருவராக அவர் மாறிவிட்டார். ஒருமுறை எனக்கு அவருடைய ‘கடைத்தெருக் கதைகள்’ தொகுப்பு ஒரு பழைய புத்தகக்கடையில் கிடைத்தது. மோகபல்லவி, ஆனைச்சந்தம் ஆகிய புத்தகங்களை கடையிலேயே வாங்கினேன். ’எட்டாவது நாள்’ பட்டாணியை என்னால் ஒருபோதும் மறக்கமுடியாது. நாயனம், ஈடு, பறிமுதல், சுசிலாவின் கதை, தூக்கம் வரவில்லை, பாச்சி, அழுகை என அவருடைய மிகச்சிறந்த கதைகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம். ஒவ்வொரு கதையைப்பற்றியும் ஒரு கட்டுரை அளவுக்கு எழுதமுடியும். அவ்வளவு நுட்பங்கள். அவ்வளவு அழகு. கலைநேர்த்தியும் நுட்பமும் ஒருங்கே அமையப்பெற்றவை அவருடைய சிறுகதைகள்.

அவருடைய ‘கடைத்தெருக் கதைகள்’ 1975 ஆம் ஆண்டில் வெளிவந்த தொகுப்பு. படைப்பூக்கம் கொண்ட மிகச்சிறந்த கதைகள் அத்தொகுப்பில் இருக்கின்றன. அனைத்தும் தமிழுக்குப் பெருமையைச் சேர்க்கக்கூடிய கதைகள். சாகித்திய அகாதெமி முதலாக எல்லா விதமான விருதுகளுக்கும் தகுதியான தொகுதி அது. ஆனால் அன்றுமுதல் அவர் தொடர்ச்சியாக புறக்கணிப்பையே சந்தித்து வந்தார். தமிழ்ச்சிறுகதை வரலாற்றை முன்னூற்றுச் சொச்சத்துப் பக்கங்களில் எழுதிய சிட்டியின் நூலில் ஆ.மாதவன் என்னும் எழுத்தாளர் தமிழில் எழுதிக்கொண்டிருக்கிறார் என்னும் சுவட்டை அடையாளம் காட்டுகிற ஒரே ஒரு குறிப்புகூட இல்லை என்பது புறக்கணிப்பின் உச்சம்.

ஆ.மாதவன் கதைகள் என்னும் பெயரில் பெருந்தொகுப்பொன்று 2001 ஆம் ஆண்டில் தமிழினி வெளியீடாக வெளிவந்தது. ஓர் ஆளுமையாக ஆ.மாதவனை முன்னிறுத்துவதற்கு பொருத்தமான படைப்பு அது. விருதுக்குப் பொருத்தமான நேரமாகவும் இருந்தது அப்போது. ஆனால் அப்படி எதுவும் நடைபெற்றுவிடவில்லை.

பெயர்நீக்கம் செய்து ஒரு பட்டியலைத் தயார் செய்வதில் கைதேர்ந்த வல்லுனர்கள் நம்மிடையே பலர் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறார்கள். என்றென்றும் இருக்கும் அவர்களைக் கடந்து, நாற்பது ஆண்டு காலம் தாமதமாக சாகித்திய அகாதெமியின் விருது ஆ.மாதவனைத் தேடி இன்று வந்திருக்கிறது. செய்தி கிடைத்ததும் எனக்கு பழனியின் நினைவுதான் வந்தது. உடனே அவனை அழைத்து தகவலைத் தெரிவித்தேன். அவனும் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். ’நம்ம கிருஷ்ணப்பருந்து மாதவனுக்கா?’ என்று அக்கணத்தில் அவன் கேட்ட கேள்வி இன்னும் என் செவிகளில் ஒலித்தபடி இருக்கிறது. ’ஆமாம்’ என்றபடி அவருடைய கதைகளைப்பற்றி மறுபடியும் சிறிது நேரம் பேசினோம்.

கிருஷ்ணப்பருந்து வெளிவந்து எவ்வளவோ ஆண்டுகள் ஓடிவிட்டன. அவற்றையெல்லாம் கடந்து ஒரு படைப்பின் பெயருடன் சேர்த்து ஒரு படைப்பாளியை நினைவுகூர்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆ.மாதவனுக்கு நம் வாழ்த்துகள்.

Series Navigationபசியாக இருக்குமோ…ஹாங்காங் தமிழ் மலரின் டிசம்பர் 2015 மாத இதழ்
author

பாவண்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *