தொடுவானம் 102- பழுதற்ற படைப்பு மனித உடல்

This entry is part 9 of 12 in the series 10 ஜனவரி 2016
 Skeleton
          உடற்கூறு பயிலும் பிரேதங்கள் நிறைந்த கூடத்தில் டாக்டர் ஹர்ஷாவை அறிமுகம் செய்துவைத்தார் வகுப்பு ஆசிரியை கிரேஸ் . அவர் சிவப்பாக நல்ல உயரமாக சிரித்த முகத்துடன் எங்களை வரவேற்றார். அவர்தான் பிரேதங்களை அறுத்து பயில்வதைச் சொல்லித்தருவார்.
          உடன் வகுப்பறைக்குத் திரும்பினோம். உடற்கூறு பாடம் துவங்கியது.
          மனித உடலின் அமைப்பு பற்றி கிரேஸ் ஓர் அறிமுகவுரை நிகழ்த்தினார். அதை நாங்கள் அனைவரும் ( உறங்காமல் ) உன்னிப்பாகக் கவனித்தோம். நான் அவற்றை வேகமாக குறிப்புகள் எடுத்துக்கொண்டேன். முதல் நாளிலேயே எனக்கு உடற்கூறு பாடத்தில் ஆர்வம் உண்டாகிவிட்டது. கடவுளால் படைக்கப்பட்ட மனிதனின் உடல் அவ்வளவு விநோதமானது ! மிகவும் நுணுக்கமானது ! நுண்ணியமானது! ஆச்சரியமானது!
          உடலின் ஒவ்வொரு பகுதியும் ஒரு காரணத்துடன் அமைந்துள்ளது. தேவையற்றது ஏதுமில்லை. பழுதற்ற படைப்பு மனித உடல்!
          முதலில் உடலின் எலும்புகளின் அமைப்பை விளக்கினார். நமது உடலைத் தாங்கி நிற்பது எலும்புக்கூடு. இது வலுவான இலகுவான அமைப்புடன் உடலின் தசைகளுக்கும்  உறுப்புகளுக்கும் அடிப்படையாகவும் பாதுகாப்பாகவும் அமைந்துள்ளது. நம் நெஞ்சுக்கூடு உள்ளேயிருக்கும் முக்கியமான உறுப்புகளான இருதயத்தையும் நுரையீரல்களையும் பாதுக்காக்கும் வகையில் அமைந்துளது.
          உயிருள்ள மனித எலும்புக்கூடு பலமான, வளையககூடிய அமைப்பு. அது உடல் எடையைத் தாங்குகிறது. எலும்புகள்  தொடர்ந்து புதிதாகின்றன. உடலுக்கு மிகவும் தேவையான உலோகங்களான கால்சியம், எரியம் ( phosphorus ) போன்றவற்றை சேமித்து வைக்கின்றன. இரண்டு எலும்புகள் சந்திக்கும் மூட்டுகள் பெருவாரியாக அசைவுகளுக்கு உதவுகின்றன. அதிக அசைவுகள் தராத முதுகுத் தண்டு எலும்புகள் உடலுக்கு உயரத்தையும் நிலையான தன்மையையும் தருகின்றன.
          உடலிலுள்ள எலும்புகளின் எண்ணிக்கை ஆளுக்கு ஆள் மாறுபட்டிருந்தாலும் சாராசரியாக மொத்தம் இருநூற்று ஆறு எலும்புகள உள்ளன. இவை வெவ்வேறு வகையிலான வடிவத்திலும் அளவிலும் அமைந்தவை. எலும்புக்கூடு இரண்டு பிரிவுகள் கொண்டது. இதன் மத்தியப் பகுதி மண்டை ஓடு, நெஞ்சுக் கூடு, முதுகுத் தண்டு எலும்புத் தொடர், நெஞ்சு எலும்பு ஆகியவை அடங்கும். கைகால்களின் எலும்புகள், தோள் பட்டை எலும்புகள், நெஞ்சுக்குமேல் இருபுறமும் உள்ள எலும்புகள், இடுப்பு எலும்புகள் போன்றவை பிற்சேர்க்கை  எலும்புக்கூடு எனப்படும்.
          வட்ட வடிவிலான தொடர்புகளைக்கொண்டு  முதுகுத் தண்டு மூளைக்குச் செல்லும் நரம்பு நார்க்  கற்றைக்கு வலுவான பாதுகாப்பு வழங்குகிறது.  இந்த நரம்பு நார்க் கற்றை மண்டை ஓட்டின் அடிப்பகுதியில் உள்ள பெரிய துவாரத்தின் வழியாக மூளையைச் சென்றடைகின்றன. தசைகளின் உதவியுடனும் இணைப் பிழை ( ligament ) உதவியுடனும் இந்த தண்டு எலும்புத் தொடர் மண்டை ஓட்டைத் தாங்குவதோடு உடலை நேராக நிமிர்ந்த நிலையில் வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. அதோடு குனியவும்,  நிமிரவும்,பக்க வாட்டில் திரும்பவும் உதவுகிறது.நெஞ்சுக் கூட்டின் பின்புறமுள்ள தோள்பட்டை எலும்புகள் கைகளையும் தோள்களையும் தாராளமாக அசைக்க வகை செய்கின்றன.
          மனித உடலமைப்பைப் பற்றி உடற்கூறு ஆசிரியை கிரேஸ் அழகாக விளக்கியபோது என் ஆர்வம் அதிகமானது. ஒரேயொரு விந்துவின் உயிரணு ஒரு கரு முட்டையுடன் சேர்ந்து ஓர் உயிரை உருவாக்குகிறது. அந்த நுண்ணிய கரு இப்படி இருநூற்று ஆறு எலும்புகளைக் கொண்டு ஒரு மனிதனை உருவாக்கிவிடுகிறதே என்று எண்ணி வியந்தேன்! இதை என்னவென்று சொல்வது? இது இயற்கையின் சக்தியா? அல்லது கடவுளின் படைப்பா? இதற்கு எக்காலத்திலும் யாராலும் ஆதாரத்துடன் எந்தவிதமான விளக்கமும் தரமுடியாது!
          உடற்கூறு முதல் பாடம் மனிதனின் கையிலிருந்து துவங்கியது. கையின் அமைப்பைப் பற்றி பாடம் எடுத்தார். கரும்பலகையில் அதை அழகாக பல வண்ணங்களில் வரைந்து காட்டினார். அதையே நாங்களும் வரைந்துகொண்டோம். நாம் சாதாரணமாக அனைத்து வேலைகளுக்கும் கைகளைப் பயன்படுத்துகிறோம். அது பற்றி நாம் எண்ணிப்பார்த்ததில்லை. அதை படித்தபோதுதான் தெரிந்தது – அது எவ்வளவு அற்புதமானது என்பது!
          கைகளுக்கும் கால்களுக்கும் உள்ள எலும்புகளின் அமைப்பில் அதிக ஒற்றுமையுள்ளது. இரண்டிலும் சிறு எலும்புகளின் கோர்வை உள்ளன. கையில் பதினான்கு விரல் ,எலும்புகளும், ஐந்து நீண்ட எலும்புகளும், எட்டு மணிக்கட்டு எலும்புகளும் உள்ளன. அதுபோன்றே காலிலும் பதினான்கு விரல் எலும்புகளும், ஐந்து நீண்ட பாத எலும்புகளும், ஏழு கணுக்கால் எலும்புகளும் உள்ளன. இவற்றில் ஒவ்வொரு எலும்புக்கும் ஒரு பெயர் உள்ளது. அவற்றை  மனப்பாடமாக நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். நிறைய எலும்புகளின் பெயர்களை ஒரே நேரத்தில் நினைவில் வைத்துக்கொள்வது சிரமம்.
உதாரணத்துக்கு கை மணிக்கட்டு எலும்புகளை எடுத்துக்கொள்வோம். மணிக்கட்டு அல்லது கணுக்கை எட்டு சிறு எலும்புகளால் உருவானது. இந்த எட்டும் உருவத்திலும் வடிவிலும் வேறுபட்டவை.அவை இரண்டு வரிசையில் நான்கு நான்காக அமைந்துள்ளன  ஒவ்வொரு சிறு எலும்புக்கும் ஒரு பெயர் உள்ளது. அவற்றின் சரியான பெயரை நினைவில் வைத்திருப்பது சிரமம்., மேல்வரிசையிலிருந்து இடமிருந்து வலமாக உள்ள எலும்புகள் பைசிபார்ம் ( Pisiform ) , ட்ரைக்குயெட்ரம் ( Triquetrum ) , லூனேட் ( Lunate ) , ஸ்கேபாய்ட் ( Scaphoid ) என்னும் பெயர்கள் கொண்டவை. கீழ் வரிசையின் வலமிருந்து இடமாக உள்ள நான்கு எலும்புகள் ட்ரேப்பிசியம் ( Trapezium ) , ட்ரேப்பீசாய்ட் ( Trapezoid ) , கேப்பிட்டேட் ( Capitate ) , ஹேமேட்  ( Hamate ) என்னும் பெயர் கொண்டவை. இவற்றை வரிசைப்படி எப்படி ஞாபகம் வைத்திருப்பது? அதற்கு ஒரு எளிமையான வழியும் உள்ளது!
          அது ஒரு கவிதை வரி. கவிதை வரியில் எலும்புகளின் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்வதா? முடியும். இதுதான் அந்த கவிதை வரி: Please tie loose shoes, too tight can’t hold. இதில் ஒவ்வொரு சொல்லின் முதல் எழுத்து ஒரு எலும்பின் பெயரை நினைவு படுத்த உதவும். Please என்பதின் P பைசிபார்ம் ( Pisiform ), Tie என்பதின் T ட்ரைக்குயெட்ரம் ( Triquetrum ) என்பதை நினைவுபடுத்தும்!
        இதுபோன்று மனித உடலின் இருநூற்று ஆறு எலும்புகளையும் பார்த்த மாத்திரத்தில் அவற்றின் பெயரைத் தெரிந்திருக்க வேண்டும். மனித மூளைக்கு இது சிரமம் இல்லை. எப்படி ஒருவரை நாம் பார்த்ததும் அவரின் பெயரைக் கூறுகிறோமோ அதுபோன்றுதான் இதுவும்!
           கையின் அமைப்பு பற்றிய முதல் பாடம் முடிய ஒரு மணி நேரம் ஆனது. அதன்பின்பு அரை மணி நேரம் விடுப்பு. நாங்கள் மூலைக் கடைக்குச் சென்று இளைப்பாறினோம். மீண்டும் உடற்கூறு அறுவைக் கூடத்தில் கூடினோம்.
          நாங்கள் மொத்தம் அறுபது பேர்கள். அங்கு பதினைந்து நீண்ட மேசைகளில் பிரேதங்கள் கிடத்தி வைக்கப்பட்டிருந்தன! ஒரு பிரேதம் நால்வருக்கு தரப்பட்டது. அந்த நால்வரில் இருவர் ஆண்கள். இருவர் பெண்கள். நாங்கள் முப்பத்தைந்து ஆண்களும் இருபத்தைந்து பெண்களும் கொண்ட வகுப்பு என்பதால் சில பிரேதங்களுக்கு நால்வரும் ஆண்களாக இருக்க வேண்டும். பிரேதங்கள் மத்தியிலும் ஆணும் பெண்ணும் கலந்திருப்பது கலகலப்பானதுதானே!
அங்கு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டி கோட் அணிந்து கொள்வோம். சட்டையில் பிணத்தின் கறை படாமல் இருப்பதற்கு அது பாதுகாப்பு.
நாங்கள் ஜோடியாக அமர்ந்துகொள்வோம். ஒரு  ஜோடிக்கு ஒரு கை கிடைக்கும். எங்கள் கைவசம் ” டிசக்ஸ்சன் செட் ” இருந்தது. அது ஒரு சிறிய கறுப்புப் பெட்டி. அதனுள் சிறு  கத்திகள் ,கத்தரிக்கோல்கள், பற்றும் குறடு  (பார்செப்ஸ் ) போன்றவை இருக்கும். ( இதை நாங்கள் வாங்கியுள்ளோம். உடன்  கொண்டுவருவோம். )
          டாக்டர் ஹர்ஷா எப்படி கையில் அறுப்பது என்பதை ஒரு பிரேதத்தின் கையில் செய்து காண்பித்தார். எங்களையும் அவ்வாறு செய்யச் சொன்னார். தோலை எப்படி நேராக அறுத்து இருபுறமும் பற்றும் குறடால் பிடித்து விரித்து வைப்பது என்பதைக் காட்டினார். அதன்பின் உடற்கூறு அறுவை பற்றிய நூலின் உதவியுடன் தொடர்ந்து எப்படி அறுக்கவேண்டும் என்றும் விளக்கினார். அந்த நூலில்,  கையினுள் எவ்வாறு படிப்படியாகச் செல்வது என்பது வண்ணத்தில் படங்கள் போடப்பட்டிருக்கும். அதைப் பார்த்துக்கொண்டே கையிலுள்ள தசைகள், இணைப் பிழைகள், இரத்தக் குழாய்கள், நரம்புகள் போன்றவற்றை அடையாளம் கண்டு அவற்றின் பெயர்களையும் தெரிந்துகொள்ளலாம். எலும்புகள் போன்று அவை அனைத்துக்கும் தனித்தனியே பெயர்கள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக மனதில் பதியவைத்துக்கொள்ளவேண்டும்!
          அந்த கையின் தோல் உலர்ந்திருந்தது. அனால் மிருதுவாகவும் இருந்தது. கத்தியை அழுத்தி நேராக நடுவில் கிழித்தேன். இரத்தம் வழியவில்லை.மஞ்சள் நிறத்தில் கொழுப்பும் இழை சவ்வும் உள்ளே தெரிந்தது. அதையும் அறுத்து உள்ளே சென்றதும் இரத்தக் குழாய்களும் நரம்புகளும் தெரிந்தன. இரத்தக் குழாய்களில் இரத்தம் உறைந்திருந்தது. தசைகள் வெளிறிக்  காணப்பட்டன. நூலில் பார்த்து அவற்றையெல்லாம் அடையாளம் கண்டுகொண்டேன். அவற்றின் பெயர்களையும் தெரிந்துகொண்டேன். உடன் நினைவில் வைத்துக்கொள்வது சிரம்மம்தான். ஆனால் திரும்பத்திரும்ப அவற்றைப் பார்க்கும்போது நிச்சயம் மனதில் பதிந்துவிடும்.
           அது மாதிரி முதல் நாள் அந்த  கைக்குள் குறிப்பிட்ட தூரம் வரை உள்ளே புகுந்து உடற்கூறு பயின்றோம்.
இரண்டு மணி நேரம் கழித்து விடுதி திரும்பினோம். மதிய உணவு தயார். கைகளை சோப்பு போட்டு நன்றாகத் தேய்த்து கழுவினேன். கையுறை அணியாமல் வெறுங்கையுடன்தான் அந்த பிரேதத்தின் கையைத் தொட்டு அறுத்தோம். ( கையுறை அணியக்கூடாது என்பது விதிமுறை ) எப்படிக் கழுவினாலும் கையில் ” அந்த ” வாடை ” வீசியது! வேறு வழியில்லை! அதே கையால்தான் ( ஒருவித புது மணத்துடன் ) உணவு உண்டேன்!
          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationமீள் வருகைமுறையான செயலா?
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *