‘பறந்து மறையும் கடல்நாகம்’ – ஏற்புரை

This entry is part 1 of 12 in the series 10 ஜனவரி 2016

jayanthi

(நூலாக்கம் பெறாத சில உதிரிக் கட்டுரைகள் தவிர ‘ஏழாம் சுவை’, ‘ச்சிங் மிங்’ ‘கனவிலே ஒரு சிங்கம்’, ‘பெருஞ்சுவருக்குப் பின்னே’, ‘கூட்டுக்குள் அலையும் தெனீக்கூட்டம்’ ஆகிய 5 நூலகளின் ஒட்டு மொத்தத் தொகுப்பான‌ ‘பறந்து மறையும் கடல்நாகம்’ புத்தாண்டு அன்றைக்கு திருவான்மியூர் பனுவல் அரங்கில் எளிமையாக வெளியிடப்பட்டது.)

ஏற்புரை

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கம்யூனிசம் குறித்தும், சீன அரசியல் குறித்தும் அதிகம் பேசாதது ஏன் என்று பேராசிரியர் அரசு அவர்களும் ஜென் பற்றி இன்னும் எழுதிருக்கலாம் என்று எழுத்தாளர் சத்யானந்தனும் கூறியவற்றை யோசிக்கையில், இந்த நூலில் அவற்றை விரிவாகப் பேசுவதை நான் வேண்டுமென்றே தவிர்த்துள்ளது புலனாகிறது. ஏனெனில், என் பார்வை மானுடவியல் பார்வையாக இருந்தது. அவற்றைத் தனியான நூல்களாக எழுத முடியும். ஏன், இந்தப் பெருநூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையுமே ஒரு பெருநூலாக விரியக்கூடியது தான்.

பத்தாண்டுகளுக்கு முன்பு நாலைந்து தோழிகளோடு ஒரு திருமண வரவேற்புக்குச் சென்று கொண்டிருந்தேன். மேலும் இரண்டு யுவதிகளும் உடன் இருந்தனர். என்னைப் போன்றவர்களைச் சந்திப்பவர்களுக்கு கேட்க பெரும்பாலும் வேறு விதமான கேள்விகளே இருப்பதில்லை. எப்போதும் கேட்பது போல இப்ப என்ன எழுதறீங்க என்று கேட்டதும் சீனப் பெண்களைப் பற்றி நிறைய வாசித்து, தொகுத்து எழுதியும் வருகிறேன் என்று சொன்னேன். வொய் சைனீஸ் விமென்? என்று கேட்டதும் சட்டென்று சொல்ல என்னிடம் பதில் ஏதும் இருக்கவில்லை. வெறுமன புன்னகைத்தேன்.

ஆனால், அடுத்த‌ நிமிடத்திலேயே வொய் நாட் என்ற கேள்வி மனதுக்குள் எழுந்தது. அதுபோன்ற மிகச் சாதாரணக் கேள்விகள் எப்போதுமே எனக்குள் நேர்மறையான கிளைக்கேள்விகளை உருவாக்கும். ஏன் வேண்டும், ஏன் வேண்டாம் என்றெல்லாம் நிறையவே யோசிக்கத் தலைப்பட்டேன். மானுடவியல் சார்ந்து என் சிந்தனை விரிவதை உணர்ந்தேன்.

வேறுபாடு, மாற்றம் ஆகிய இரண்டு பொதுத் தளங்களையும் கொண்டதாக இருப்பதே கலாசாரம் என்பதை மானுடவியலாளர்கள் வரையறுக்கிறார்கள். வேறுபட்ட இன்னொரு கலாசாரத்தை குழந்தையின் ஆர்வத்துடன் அறிய முனைவது என்பது உண்மையில் எல்லை கடந்த ஒரு சிந்தனைதான். அவ்வாறு அறிந்துகொள்வதால் என்ன பலன், அவற்றை கட்டுரைகளாகத் தொகுத்து நூலாக்குவதால் என்ன பயன் என்றெல்லாம் ஒன்றுமே யோசிக்காமல் வெறும் ஆர்வம் மட்டுமே செலுத்தியதில் விளைந்த கட்டுரைகள் இவை. இதற்கான நோக்கங்கள் என்று ஒன்றுமே இருக்கவில்லை.

தன் குடும்பம், தன் தெரு, தன் ஊர், தன் இனம், தன் மாநிலம் என்று மட்டுமே யோசிக்காமல் மிக விலாசமாக யோசிக்கும்போதுதான் பிற கலாசாரங்களை அறிவதன் முக்கியத்துவமே விளங்கும். காலாசாரங்களுக்கு இடையே நிலவும் ஒற்றுமை, வேற்றுமைகளை அறிந்து கொள்ளும் ஒருவரால் வாழ்க்கையைப் பார்க்கும் பார்வையையே மேம்படுத்திக்கொள்ள முடியும்.  மாற்றக்கூடியதும் மாற்றமுடியாததுமாக தலைமுறை தலைமுறையாக வந்ததே கலாசாரம்.

மிக எளிமையாகச் சொல்வதென்றால், ஒரு குறிப்பிட்ட இனம், சமூகத்தின் நடைமுறைகள், நம்பிக்கைகள் போன்றவை ஒன்று சேர்ந்து கலாசாரமாகின்றது என்பார்கள். மனிதன் அறிந்தவற்றை மீண்டும் சமூகத்தில் பொருத்திப் பார்த்து தனது கலாசாரம் அடுத்தகட்டப் பரிணாமத்தை எட்டுவதற்குப் பயன்படுத்துகிறான்.  பிற  கலாசாரங்களை அறிவதும் நம்முடையதுடன் அதனை ஒப்பிட்டுக்கொள்வதும் பல்வேறு வாயில்களைத் திறக்க வல்லது. ஒற்றுமை வேற்றுமைகளை உற்று நோக்கும் போது சிந்தனையில் மாற்றமும் விரிவும் ஏற்படும். குறிப்பாக, இன்றைய உலகில் அது போன்ற தேடல்களும் அறிதல்களும்  மிகவும் முக்கியமாகிறது.  வேற்றுமை என்பதை அறிந்து மறந்த ஒருத்துவம் என்பதே இன்றைய உலகிற்கு மிக முக்கியமாகத் தேவைப்படுகிறது. அரைகுறையாக அறிந்து, மறக்காமலும் கடக்காமலும் நம்மில் இருக்கும் கலாசாரம் சார்ந்த புரிதல்கள் சமூகப்பிரச்சினைகளுக்கு அடிகோல்வதை இன்றைய உலகில் நாம் கண்கூடாகவே காண்கிறோம்.

பல்லாயிரக்கணக்கான‌ பக்கங்கள் வாசிக்க மனமும் பொறுமையும் குழந்தையின் ஆர்வமும் ஈடுபாடும் இருந்த 15 ஆண்டு காலத்தில் உருவான நூல். மீண்டும் இது போன்ற நூல் உருவாகலாம்; உருவாகாமலும் போகலாம். காலம்தான் சொல்லும் அதற்கான பதிலை. இந்த நூலுக்குமே எந்தத் திட்டமிடலும் இருக்கவில்லை.

இது ஓர் அரிய நூலா என்றால் ஆமாம். முக்கியமான நூலா என்றால் கண்டிப்பாக முக்கிய நூல்தான். இருந்த போதிலும் ஆர்வம் இருந்தால் யாருமே எழுதிவிடக்கூடிய நூல்தான் என்பதே என்னுடைய‌ உறுதியான கருத்து. நூலாசிரியர் பெயராக யாருடைய‌ பெயரையும் இந்த நூலில் போட்டு விட முடியும். ஏனெனில், இது புனைவு கிடையாது. நேர்த்தியாகத் தொகுத்து எழுதினேன் என்பதைத் தவிர இதில் எங்குமே நான் இருக்க வழியில்லை. இவ்வாறு எனக்குத் தோன்றக் காரணமும் உண்டு. புனைவல்லாத எழுத்து, மொழிபெயர்ப்பு ஆகியவற்றைக் கடந்து என் மனம் எப்போதுமே புனைவெழுத்தை வாசிப்பதிலும், எழுதுவதிலும் மட்டுமே மகிழ்ச்சியும் திருப்தியும் கொள்கிறது.

வேற்றுமைகளின் கொண்டாட்டமாகவே நான் கலாசாரத்தைக் காண்கிறேன். வேற்றுமைகளில் தான் வலிமை உண்டு, ஒற்றுமைகளில் அல்ல என்பதே எனது கருத்து. கற்ப‌வை, அறிப‌வை, அவற்றை மனதுக்குள் தொகுத்து சிந்திப்பவை என்று பலவும் நம் எல்லோருக்குள்ளும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. பலவும் பறந்து மறைந்து போய்விடவே செய்கின்றன. ‘காவ்யா’வின் நேர்த்தியான  நூலாக்கத்தில் கடல்நாகம் ஒன்று பறந்து மறைந்து விடாமல் தமிழுக்கு வந்துள்ளது.  இவ்வளவு பெரிய நூலை மிகப் பொறுமையுடன் வாசித்து சிறப்பாக நூலாய்வு செய்த‌ எழுத்தாளர் சத்யானந்தன் அவர்களுக்கும் நூலை அன்போடு வெளிட்ட பேராசிரியர் அரசு அவர்களுக்கும் முதல் பிரதியைப் பெற்றுச் சிறப்பித்த பேராசிரியர் பிரேமா அவர்களுக்கும் உள்ளார்ந்த நன்றிகள்.

வணக்கம்.

பறந்து மறையும் கடல்நாகம்

வெளியீடு: காவ்யா
16, 2nd Cross Street,3rd floor,
Trustpuram, Kodambakkam,
Chennai 600 024

Series Navigationப்ரதிலிபியும் அகம் மின்னிதழும் இணைந்து கட்டுரைப்போட்டி – கடைசி நாள் – 15/01/2016
author

ஜெயந்தி சங்கர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *