மருத்துவக் கட்டுரை தொண்டைப் புண்

This entry is part 4 of 12 in the series 10 ஜனவரி 2016
 
      Sore Throat1     தொண்டை வலி, கரகரப்பு, தொண்டை வீக்கம் போன்ற அனைத்தையுமே தொண்டைப் புண் என்று பொதுவாகக் கூறலாம். உண்மையில் இது தொண்டைப் பகுதியில் உண்டாகும் அழற்சியாகும்.

சாதாரணமாக இது வைரஸ் தொற்றால் உண்டாவது. பெரும்பாலும் சாதாரண சளியை உண்டுபண்ணும் வைரஸ் கிருமியால்தான் அதிகமான தொண்டைப் புண் உண்டாகிறது. சில வேளைகளில்  பேக்டீரியா கிருமிகளாலும் இது உண்டாகலாம்.

          தொண்டைப் புண் சிறு பிள்ளைகளுக்கு எளிதில் ஏற்படும் ஒரு நோயாகும். ஆனால் பெரியவரிடமும் இது பரவலாகக் காணப்படும்.

                                                                       அறிகுறிகள்

தொண்டைப் புண் அல்லது வலி எதனால் உண்டானது என்பதைப் பொருத்து அறிகுறிகள் மாறுபடலாம். அவை வருமாறு:

* வலி அல்லது அரிப்பு போன்ற உணர்வு

* உணவு  விழுங்கும்போதும் பேசும்போதும் வலி

* உலர்ந்த தொண்டை

* கழுத்துப் பகுதியில் கரலை உருண்டைகள்

* தொண்டைச் சதை வீக்கம்

* தொண்டைச் சதையில் சீழ் அல்லது வெள்ளைப்  புள்ளிகள்

* குரல் கம்மிப்போதல்

சில கிருமித் தொற்றால் உண்டாகும் தொண்டைவலியுடன் கூடிய இதர அறிகுறிகள் வருமாறு:

* காய்ச்சல்

* குளிர்

* இருமல்

* சளி

* தும்மல்

* தலைவலி

*உடல்வலி

* குமட்டல் அல்லது வாந்தி

குழந்தைகளுக்கு தொண்டை வலியுடன் மூச்சுத்திணறல் அல்லது உணவு விழுங்குவதில் சிரமம் ஏற்பட்டால் உடன் மருத்துவரைப் பார்க்கவேண்டும். அதுபோன்று பெரியவர்களுக்கு பின்வரும் அறிகுறிகள் தோன்றினாலும் உடன் மருத்துவ ஆலோசனை பெறவேண்டும்.

* ஒரு வாரத்துக்கு மேல் தொண்டை வலி

* உணவு விழுங்குவதில் சிரமம்.

* மூச்சுத் திணறல்.

* வாயைத் திறப்பதில் சிரமம்.

* காது வலி

* காய்ச்சல்

* சளியில் இரத்தம்

* கழுத்தில் கட்டி

* குரலில் மாற்றம் இரண்டு வாரங்களுக்கு மேல்.

                                                            தொண்டைப் புண்ணை உண்டுபன்னுபவை

பெரும்பாலும் தொண்டைப் புண் வைரஸ் கிருமிகளால் உண்டாகிறது. இது சளிக் காய்ச்சல் ஏற்படும்போது காணப்படும்.ஆனால் சில வேளைகளில் அது பேக்டீரியா  கிருமிகளாலும் உண்டாகும். அவை ஸ்ட்ரெப்ட்டோகாக்கஸ் பேக்டீரியா கிருமிகளால் உண்டாகிறது.கக்குவான், டிப்தீரியா கிருமிகளாலும் உண்டாகலாம். இவை  தவிர தொண்டைப் புண் வேறுபல காரணங்களாலும் உண்டாகலாம். அவை வருமாறு:

* ஒவ்வாமை – புகை, தூசு, செல்லப் பிராணிகளின் ரோமம் போன்றவை ஒவ்வாமையை உண்டுபண்ணி தொண்டையில் புண் ஏற்படலாம்.

* உலர்ந்த காற்று

* சுற்றுச் சூழல் தூய்மையின்மை

* புகைத்தல், மது

* எச்.ஐ. வி.

* காளான் தொற்று

* புற்று நோய்

* உடலின் எதிர்ப்புச் சக்தி குறைவு

                                                                           பரிசோதனைகள்

மருத்துவர் தொண்டையை நேரடியாக விளக்கு வெளிச்சத்தில் பரிசோதனை செய்வார். தேவைப்பட்டால் இரத்தப் பரிசோதனையும் செய்து பார்க்கலாம்.அத்துடன் தொண்டையில் பஞ்சு நனைத்து எடுத்தும் பரிசோதனை செய்து பார்க்கலாம். இதன் மூலம் பேக்ட்டீரியா கிருமிகள் உள்ளது தெரியவரும். ஒரு சிலர் காது மூக்கு தொண்டை நிபுணரையும் பார்க்க நேரிடலாம்.

                                                                         சிகிச்சை முறைகள்

வைரஸ் காரணமாக தொண்டைப் புண் உண்டானால் தானாக ஒரு வாரத்தில் குணமாகும். பேக்டீரியா காரணமாக இருந்தால் அதற்கு எண்டிபையாட்டிக் தேவைப்படும். ஓய்வும், நிறைய நீர் பருகுவதும் நல்லது. உப்பு கலந்த சுடுநீரில் வாய் கொப்பளிப்பது நல்லது. கிருமிகளைக் கொல்லும் சப்பும் மருந்துகளும், தொண்டை கொப்பளிக்கும் மருந்துகளும் பயன்படுத்தலாம்.ஒவ்வாமையை உண்டுபண்ணுபவற்றைத் தவிர்ப்பது நல்லது.

                                                                         தடுப்பு முறைகள்

தொண்டைப் புண்ணை உண்டுபண்ணக்கூடிய கிருமிகள் எளிதில் தோற்றும் தன்மைகொண்டவை. தொண்டைப் புண் பரவலாக குழந்தைகளுக்கு வரலாம் என்பதால் அவர்களுக்கு சில சுகாதாரமான பழக்கவழக்கங்களைச் சொல்லித்தரவேண்டும். அவை வருமாறு:

* கைகளை நன்றாக கழுவவேண்டும் ​ குறிப்பாக கழிவறை சென்றபின், உணவு உண்ணும் முன் , இருமிய தும்மிய பின்.

* அடுத்தவர் குடித்த குவளையில் பகிர்ந்து குடிக்கக்கூடாது.

* கண்டதையும் வாயில் வைத்து சப்பக்கூடாது.

* பிறர் பயன்படுத்தும் கைபேசியையும், தொலைகாட்சியை இயக்கம் கைக்கருவியையும் கையில் எடுத்து விளையாடக்கூடாது. அதில்கூட கிருமிகள் இருக்கலாம் – முன்பு பயன்படுத்தியவருக்கு கிருமித் தொற்று இருந்தால்.

.* இருமும்போதும் தும்மும்போதும் மெல்லிய காகிதத்தைப் பயன்படுத்தி உடன் குப்பைத் தொட்டியில் போட்டுவிடவேண்டும்.

* நிறைய நீர் பருக வேண்டும்.

* காய்கறிகள் பழங்கள் உண்ணும் பழக்கத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. அவை உடலின் எதிர்ப்புச் சக்தியை உயர்த்தி கிருமிகள் தொற்றைத் தவிர்க்கும்.

( முடிந்தது )

Series Navigation13-ம் நம்பர் பார்சல் – புது நாவல் தொடர் (7,8)புத்தகங்கள்புத்தகங்கள் !! ( 4 ) கலாமோகினி இதழ் தொகுப்பு
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *