புத்தகங்கள்புத்தகங்கள் !! ( 4 ) கலாமோகினி இதழ் தொகுப்பு

author
0 minutes, 12 seconds Read
This entry is part 5 of 12 in the series 10 ஜனவரி 2016

ஸிந்துஜா

 

 

தொகுப்பு : சிட்டி , ப.முத்துக்குமாரசுவாமி

 

 

 

‘ மணிக்கொடி’ யின் மறைவுக்குப் பின், மறுமலர்ச்சி இலக்கியத்துக்கு என்று ஒரு தனிப் பத்திரிகை தேவைப் பட்ட போது,

வி. ரா, ராஜகோபாலன் ( சாலிவாஹனன் ) மிகுந்த தைரியத்துடன் , ” கலாமோகினி ” என்ற மாதம் இருமுறை பத்திரிகையை

ஆரம்பித்தார் . 1942 ஜூலை மாதம் முதல் இதழ் வெளியாயிற்று . ” இது லட்சியவாதிகளின் கனவு , நீண்ட நாள் தாமதத்திற்குப் பிறகு நனவாகி இருக்கிறது .இதன் வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் தமிழ் நாட்டுக் கலாரசிகர்களின் ஆதரவை வேண்டி நிற்கிறோம் ” என்று முதல் இதழில்

ஆசிரியர் எழுதினார் . தொடர்ந்து ” இந்தத் தமிழ் நாட்டில் எத்தனை காலம் வாழ முடியுமோ  அத்தனை காலம் வாழ்ந்து , தமிழ் பாஷையின்

புனருஜ்ஜீவனம் என்ற சேதுபந்தனத்திற்கு , இந்த அணிலும் தன்னாலான சேவையைச் செய்ய வேண்டுமென்றே கலாமோகினி பிறந்துள்ளது ” என்று குறிப்பிட்டார் .    .

 

வல்லிக்கண்ணன் தனது ” சரஸ்வதி காலம் ” புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார் :

 

” கலாமோகினியின் முதல்இதழ் அட்டையில்  ந. பிச்சமூர்த்தியின் படம் வெளியாயிற்று .இரண்டாவது இதழில் , கு.ப.ரா., ,மூன்றாவது இதழ்   அட்டைப் படம் சிட்டி , இவ்வாறு இதழ்தோறும் ஒரு எழுத்தாளர் படத்தைப் பிரசுரித்து ‘ இவர் நமது அதிதி ‘ என்று அவரைப் பற்றி உள்ளே அறிமுகம் செய்யும் வழக்கத்தை  கலாமோகினி . அனுஷ்டித்தது . ”  ஒரு தருணத்தில் கலாமோகினி சிட்டியை இந்தப் பகுதிக்கு அணுகிய போது அவர் அரசாங்கப் பணியில் இருந்ததால், தனது படத்தைக் கொடுக்க மறுத்து விட்டார். கலாமோகினி ஆசிரியர், சிட்டியின்  கண்டிப்பு நிறைந்த மேலதிகாரியைப் சிட்டிக்குத் தெரியாமல் போய்ப்  பார்த்து அவரது அனுமதியைப் பெற்று , ஒரு போட்டோக்காரருடன் வந்து சிட்டியைப் படமெடுத்துக் கொண்டு போய் , அவரை அதிதியாகக் கலாமோகினியில் பிரசுரம் செய்தார் !

 

புத்தகத்தின் தொகுப்பாளர்களில் ஒருவரான சிட்டி ஒரு மிகச் சிறந்த முன்னுரையை ” தமிழ் மறுமலர்ச்சி  / மீட்பு முயற்சிகள் ” என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார் .ஜி.டி . நாயுடுவின் அழைப்பில் கோவையில் நடந்த எழுத்தாளர் மாகாநாட்டில் கலாமோகினியின் ஆசிரியர் சாலிவாகனன் கீழ்க் கண்டவாறு பேசியதாக சிட்டி குறிப்பிடுகிறார் :

 

” நான் கலாமோகினி என்ற பத்திரிகையின் ஆசிரியன் . இந்த இதழ் எந்தெந்தத் தேதிகளில் வெளியாகும் என்று சொல்ல முடியாது .இஷ்டம் போல் வரும் . இலக்கிய வளர்ச்சி   குறிக்கோள் .” .இந்த நிலைமை பின்னாட்களில் வந்த மிகப் பெரும்பாலான serious little magazine களுக்கும் பொருந்தியது .

 

கவிதைகள் , கட்டுரைகள் , கதைகள் .கு.ப.ரா. நினைவு மலர் என்று நான்கு பகுதிகளை  புத்தகம் தன்னுள் கொண்டிருக்கிறது .

 

” கவிதைகள் ” பகுதியில் ஒன்பது கவிதைகள் தெரிவு செய்யப் பட்டு  பிரசுரம் பெற்றிருக்கின்றன . ந.பிச்சமூர்த்தி , கு. ப. ரா. ., சாலிவாகனன் போன்ற பிரபலமான கவிகளைத் தவிர , இ. சரவணமுத்து , அப்புலிங்கம் நல்லை இளங்கோவன் போன்ற புதிய பெயர்களும் காணக் கிடைக்கின்றன . ந. பி., ‘ சாகா மருந்து ‘ என்ற ஒரு நீண்ட கவிதை எழுதியிருக்கிறார் . உயிரின் மீது விடாப் பற்றுக் கொண்டு அலையும் மனிதன் சாவைக் கண்டு அஞ்சி ,அதை முறியடிக்க முடியுமா எனத் தேடியலையும் பொழுதில் , ஒரு ஞானி அவர்களுக்கு வெளிச்சத்தைக் காட்டும் முயற்சியைக் கவிதையாக

வடித்திருக்கிறார் .

 

” ஒளிதோன்றச் செய்த அன்று / இருள் தோன்றச் செய்தாய் ஏனோ ? / உருத் தோன்றச் செய்த அன்று / நிழல் தோன்றச் செய்தாய் ஏனோ ? / அரளி தரும் அமுதம் சொன்னேன் / போதையே அமுதம் என்றார் /உடல் தோன்றி மறையும் என்றேன் / உடல் சாகா மருந்திதென்றார் /

உண்மையை அறிவில் நாட்டிப் / போலியும்  ஏன் சமைத்தாய் ? / உள்ளத்தில் அமுதம் காட்டி / உலகினில் நறவேன் வைத்தாய் ? ”

என்று கேட்கிறார் .

 

பெரும்பாலான கவிதைகள் , காதல் பற்றியும், பெண்கள் பற்றியும், சிறிது தத்துவ விசாரம் பற்றியும் . இருக்கின்றன  . கலாமோகினி

நடத்தப்பட்ட சமயம் , சுதந்திரப் போராட்ட காலமாயிருந்திருக்கிறது .  அன்றைய தினத்து ” பற்றி எறியும் ” பிரச்சனைகள் மேல் கலாமோகினியின் கவிதைகள்  இருந்தனவா என்று தெரியவில்லை .

 

கட்டுரைகள் ” பகுதியில் மொத்தம் 18 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன . இற்றில் முன்பு சொன்ன ” அதிதி ” கட்டுரைகள் நான்கு பேர் பற்றி – எம் . வி . வெங்கட்ராம் , தி. ஜ ர., அப்புலிங்கம் , சங்கு சுப்ரமணியம் –  உள்ளன . ‘ மாரீச இலக்கியம் ‘ என்று வல்லிக்கண்ணன் சுவாரஸ்யமான கட்டுரை ஒன்று எழுதியிருக்கிறார் . அவரது  “முத்து” என்ற கதை ஏப்ரல் கலைமகளில் பிரசுரமானது , அதே கலைமகளின்  பின் வந்த பொங்கல் மலரில்  ‘சுரபி’ என்பவரால் “சிப்பியின் காதல்” என்ற கவிதையாக மறுபிறவி எடுத்ததாம் .இக் கட்டுரையிலிருந்து தெரிய வரும் விஷயம் , கலைமகளில் அக்காலத்தில் பல மாரிசக் கதைகள் வெளியாகி இருக்கின்றன. அயல் நாட்டுக் கதைகளைத் தவிர , உள்ளூர் எழுத்தாளர்களின் கதைகளும் திருடப் பட்டு வெளியாகி இருக்கின்றன என்கிறார் வல்லிக்கண்ணன் . மாரீச இலக்கியம் என்கிற இந்தக் கட்டுரையை அவர் எழுதக் காரணம் , அவர்  கலைமகள் மே 1942 இதழில் எழுதிய ” கனவு ” என்ற வசன கவிதையை  கலாமோகினி 26வது இதழில்  ” பனிமாது ” என்ற கவிதையாக கலைவாணன் என்பவர்

மாற்றி விட்டார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் , அந்தக் கவிஞர் கலைவாணன் கலாமோகினியில் பதிலளித்துக்

கட்டுரை , எழுதினர். அதில் வல்லிக்கண்ணன் குறிப்பிட்ட விஷயத்தில் தான் தவறு செய்த விட்டதாக ஒப்புக் கொண்டு வருத்தம் தெரிவித்திருந்தார் .  இத்தகைய நேர்மை இன்று நமக்குக் காணக் கிடைக்காத ஒன்றாகும்.  ‘என்னய்யா , ஓநாயைப் பாக்கறதே கஷ்டம் , அதோடு  சண்டை போட்டுக் கொல்லுவதை  இவ்வளவு உன்னிப்பாகக் கவனித்து  எழுதக் கூடிய அனுபவம் எப்படி அய்யா கிடைத்தது ? ‘ என்கிற கேள்விக்கு , இன்றைய நம்மூர் எழுத்தாளரிடமிருந்து கிடைத்தது ஒரு  deafening silence மட்டும்தானே ?

 

‘ கதைகள் ‘  பகுதியில் 33 கதைகள் இடம் பெற்றிருக்கின்றன . க. நா. சு ., தி. ஜானகிராமன் ,சுவாமிநாத ஆத்ரேயன் , சிட்டி , கு.ப.ரா., எம். வி.வெங்கட்ராம் , கரிச்சான் குஞ்சு ஆகிய மணிக்கொடி எழுத்தாளர்களின் கதைகள்  கலாமோகினியில் இடம் பெற்று, பத்திரிகையின் இலக்கியத் தரத்தைச் செழுமைப் படுத்தியிருக்கின்றன. கு. ப. ரா. வின் பிரசித்திப் பெற்ற ” சிறிது வெளிச்சம் ” கலாமோகினியில்தான் முதன் முதலாகப்  பிரசுரமாகி இருந்திருக்கிறது இக் கதைகளை வாசிப்பது, சென்ற நூற்றாண்டின் செழுமையான இலக்கிய வீதியில் நடமாடும் குதூகல உணர்ச்சியை மனதில் எழுப்புகிறது.

 

கடைசிப் பகுதி ” கு. ப. ரா. நினைவு  மலர் ” ஆகப் பரிமளித்திருக்கிறது . கலாமோகினியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு, அதன் இலக்கியச் செழுமைக்குப் பாடுபட்ட கு.ப.ரா.வின் திடீர் மறைவை ஒட்டி மற்ற எழுத்தாளர்கள் , தாங்க முடியாத வருத்தத்துடன் தங்கள் உணர்ச்சிகளை  இக்கட்டுரைகளில் வடித்திருக்கிறார்கள் . கு. ப. ரா. இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் காட்டிய உற்சாகத்தையும் , அவர்களை எழுதச் சொல்லி வற்புறுத்தியதையும் பலர் விரிவாக எழுதியிருக்கிறார்கள் .” சிறுகதை ” என்ற தலைப்பில் திருச்சி வானொலி நிலையத்தில் கு.ப.ரா. ஆற்றிய உரையை (பக்.311) இத் தொகுப்பில் காணலாம். இது ஒரு மிகச் சிறந்த, கட்டுரை .( முடிந்தால் , மற்றொரு சந்தர்ப்பத்தில் ,இக் கட்டுரையை திண்ணையில் பிரசுரம் செய்ய வேண்டும் )

 

பத்திரிகையின் பின் அட்டையில் எழுதப் பட்டிருக்கும் வாசகங்கள் கலாமோகினி ஆசிரியர் வி.ரா. ரா.வுடையது. கு.ப.ரா. என்று தப்பாக அச்சிடப் பட்டிருக்கிறது .

 

—————————————————————————————————————-

கலாமோகினி இதழ் தொகுப்பு

பிரசுரம் : கலைஞன் பதிப்பகம்

19, கண்ணதாசன் சாலை ,

தி. நகர் ., சென்னை 600017

விலை:    ரூ. 200.00

Series Navigationமருத்துவக் கட்டுரை தொண்டைப் புண்ஜெ.டி.எட்ஸனின் “ டிக்ஸி “
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *