ரிஷியின் 3 கவிதைகள்

This entry is part 7 of 16 in the series 17 ஜனவரி 2016

 

 

  1. சொல்லதிகாரம்

 

’ஐந்து’ என்ற ஒரு வார்த்தை மட்டும் சொல்லித்தரப்பட்டது

அந்த ஐந்து வயதுக் குழந்தைக்கு.

அது ஒரு இலக்கத்தைக் குறிப்பது என்ற விவரம் கூடத் தெரியாத

பச்சைப்பிள்ளையது.

பின், பலர் முன்னிலையில் அந்தக் குழந்தையிடம்

எண்ணிறந்த கூட்டல் கழித்தல் வகுத்தல் பெருக்கல் கணக்குகளுக்கான

விடை கேட்கப்பட

எல்லாவற்றுக்கும் மிகச் சரியான பதிலளித்தது குழந்தை:

 

“ஐந்து”

 

பிள்ளையின் அறிவைப் பார்த்து வாய் பிளந்து

மூக்கின் மேல் விரலை வைத்தார்கள்

ஐந்தே பதிலாகக் கட்டமைக்கப்பட்ட கணக்குகளின்

சூட்சுமம் அறியா அப்பாவிகள்.

 

அந்த ஒற்றையிலக்க விடை யொரு

தடையில்லா அனுமதிச் சீட்டாக

அந்த அப்பாவிகளின் முதுகிலேறி சிலர்

அன்றாடம் அயல்நாடுகளுக்குக்

கட்டணமில்லாப் பயணம் போய்வந்தவாறு.

  1. பொருளதிகாரம்

 

கத்திக் கத்திக் களைத்த தொண்டைக்குள்

ஒரு கோலி சோடா புட்டியை ஊற்றிக்கொண்டவர்

திரும்பவும் பெருங்குரலெடுத்துப் பட்டியலிடத் தொடங்கினார்-

கோலி சோடாவின் கேடுகள் பற்றி;

தன் பேச்சைக் கேட்காமல் கோலி சோடாவைக்

குடித்துக்கொண்டிருக்கும்

படித்த முட்டாள்களைப் பற்றி.

 

புட்டிக்குள்ளிருக்கும் கோலிகுண்டை சிறைப்பிடித்திருப்பது

சித்திரவதை, அநியாயம் என்று சுட்டிக்காட்டியபடியே

ஒரு ‘லிம்க்கா’வை வாயில் விட்டுக்கொண்டு

அடுத்த ஒலிவாங்கியிடம் சென்றார்

அந்தப் பெட்டிக்கடைக்காரருக்குப் பணம் தராமலே.

 

மினரல் வாட்டர் புட்டி தயாராய் மேஜைமீது வைக்கப்பட்டிருக்க

ஜனரஞ்ஜகத் திரைப்படக் கலைஞர்கள்

மேடையில் வரிசையாய் வீற்றிருக்க

மாற்று இலக்கியத்தின் தேவை குறித்து மிக நீண்ட உரையாற்றி

மற்ற பேச்சாளர்களின் நேரத்தை அபகரித்துக்கொண்டவர்

காலம் பொன்னானது என்று கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி கூறினார்;

முத்தாய்ப்பாய் எத்தாலும் பேணுவோம் சமத்துவம் எனச் சொல்லி

அரங்கிலிருந்து வெளியே சென்றார்

அவருடைய கைப்பெட்டியைத் தூக்கமாட்டாமல் தூக்கியபடி

ஒரு குழந்தைத் தொழிலாளி பின்தொடர

 

அடுத்து,

இன்னொரு கோட்-சூட் போட்டுக்கொண்டு

இந்தியக் கலாச்சாரம் பற்றி உரையாற்றத் தொடங்கினார்.

தமிழை வாழவைக்கவேண்டும் என்றார்

அந்த மொழிக்கே உரிய தனிச்சிறப்பான ழகரத்தைப்

பிழையாக உச்சரித்து.

எளிமையாக வாழவேண்டும் என்றார்;

பழம்பெருமை போற்ற வேண்டும் என்றார்.

இடையிடையே ’கார்ப்பரேட்’ஐ வசைபாடி முடித்த பின்

இரவு காக்டேய்ல் பார்ட்டிக்குக் கிளம்பிச் சென்றார்

புதிதாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்த

சொகுசுக் காரில்

 

 

  1. எழுத்ததிகாரம்

 

காற்றும் கடலும் வானும் மண்ணும் நீரும் நெருப்பும்

நாய் நரி பூனை எலி மான் ஆண் பெண் பிள்ளை

மூத்தவர் இளையவர் மரம் செடி புல் பூண்டு –

எல்லாவற்றுடனும் கைகோர்த்து

எல்லாமாக உருமாறி

உயிர்த்தெழுவன என் கவிதைகள்.

கருப்பும் வெண்மையும் நீலமும் மஞ்சளுமாய்

கணமொரு கோலம் தீட்டும் என் கவிதைகள்.

 

கவிதையின் அரிச்சுவடிகளை எனக்குக் கற்றுக்கொடுப்பதற்கு

வாழ்க்கை இருக்கிறது. நீ யார்?

உன்னுடைய கவிதைகளின் பொய்மை, போதாமைகளை

உய்த்துணர முடியுமா பார்.

 

கற்காலச் சாம்பலைக் காட்டி தற்கால நெருப்பைத்

தரைவிரிப்பின் கீழ் ஒளிக்கப் பார்க்கும் உன் துக்கிரித்தனம்

வக்கிரம் என்பதோடு அண்டை அயலில் தீவிபத்தை ஏற்படுத்தக்கூடும்

விபரீதம். அறிவாய் நீ. தெரியும்.

அடுத்தவர் பரிதவிப்பில் குளிர்காய்வதே உன் மனிதநேயம்;

உனக்குப் பிடித்திருக்கும் மதம்…..

 

அதிகாரமும் சுரண்டலும்

இறந்தகாலத்திற்கு மட்டுமானவையா என்ன?

 

படைப்புவெளியின் போக்குவரத்துக் காவலராக

உன்னை நீயே நியமித்துக்கொண்டு

அபராதச்சீட்டுகணக்காய் எதையோ கிறுக்கித்தள்ளிக்கொண்டிருக்கிறாய்

பொறுக்கித்தனங்களில் இதுவும் ஒருவகை – புரிந்துகொள்.

தரம் அறம் பற்றியெல்லாம் மற்றவர்க்கு வகுப்பெடுக்குமுன்

அவரவர் தராதரம் பற்றித் தெரிந்துகொள்ளல் உத்தமமல்லவா.

 

சூரியனைப் பார்த்து நாய் குலைத்து நான் கண்டதேயில்லை.

[அப்படியே செய்தாலும் அது சூரியனோடு சங்கேத மொழியில்

பேசிக்கொண்டிருக்கக் கூடும்; நம்மால் பொருள்பெயர்க்க இயலுமா என்ன?]

ஆனால் அதையே நாமும் செய்தால் அனுதாபத்திற்குரியதாயிற்றே!

 

Series Navigationநோயுற்றிருக்கும் எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் அவர்களுக்கு நலநிதி திரட்டித் தருவதற்கான வேண்டுகோள்தாரை தப்பட்டை – விமர்சனம்
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *