பா. சிவக்குமார்
முனைவர்பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை,
பாரதியார் பல்கலைக்கழகம்,
கோவை – 46.
நீர் உயிர் வாழ்வதற்கு மிக இன்றியமையாத ஒன்று. இதனை, “நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்” (புறம். 18:18) என்று புறநானூறும், “நீரின்று அமையாது உலகு…” (குறள். 20) என்று திருக்குறளும் நீரின் சிறப்பினைப் வெளிப்படுத்துகின்றன. இத்தகைய சிறப்புமிக்க நீரைப் பாதுகாத்து, வறண்ட காலத்திலும் நீர்வளத்துடன் இருக்க குளங்கள் மற்றும் பிற நீர் நிலைகள் பெரும்பங்காற்றி உள்ளன. சங்ககால மக்களின் குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்கும் வேளாண்மைக்கும் நீர் ஆதாரமாகக் குளங்கள் விளங்கியுள்ளன. இதனைக் ”குளம் தொட்டு வளம் பெருக்கி” (பட்டினப். 284) என்று பட்டினப்பாலையும் குளத்தால் வளம் பெருகியதாகப் பாடப்பட்டுள்ளமையைக் காணலாம். அவ்வகையில், ஆற்றுவளமிக்க மருதநிலத்தில் மட்டுமே நெல் உற்பத்தி செய்த நிலை மாறி நெய்தல் நிலத்திலும் நெல் உற்பத்தி செய்யும் அளவிற்கு சங்கத் தமிழர் நீர் மேலாண்மை திறன் பெற்றிருந்தனர் என்பதை வெளிக்கொணர்வதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.
நெய்தல் நிலத்தில் நெல் உற்பத்தி
கடல் சார்ந்த நெய்தல் நிலம் உப்பினை உற்பத்தி செய்யும் நிலமாக இருந்தது. இந்நிலத்தில் உற்பத்தி செய்த உப்பினை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு மருத நில மக்களிடத்தில் சென்று நெல்லுக்கு இணையாக உப்பினைப் பண்டமாற்று செய்து வந்ததனை,
“நெல்லின் நேரே வெண்உப்பு எனச்
சேரி விலைமாறு கூறலின் ……….” (அகம் 140:7-8 )
“உப்பை மாறி வெண்ணெல் தரீஇய” (குறுந் 269:5)
என்பதன் மூலம் தெளியலாம்.
நெல் உற்பத்தி மருத நிலத்தில் மட்டும் உள்ள நிலை தாண்டி நெய்தல் நிலத்திலும் விளைவிக்கும் அளவிற்கு மாற்றம் நிகழ்ந்திருப்பதற்குச் சான்றாக சங்க இலக்கியப் பதிவில், கழனி உழவர்கள் விரைந்து வீசும் காற்றில் நெல்லினைத் தூற்றும் பொழுது, பறந்து சென்ற தூசுக்கள் அருகிலிருந்த உப்பு விளைவிக்கும் உப்பளத்திலுள்ள சிறிய பாத்திகளில் சென்று வீழ்ந்து, உப்பு பாழ்பட்டுப் போனமையால் சினந்த நுளையர்கள், கழனி உழவருடன் சென்று சேற்றுக் குழம்பினை எடுத்தெறிந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளதை,
“தாழ்சினை மருதம் தகைபெறக் கவினிய
நீர்சூழ் வியன்களம் பொலியப் போர்பழித்துக்
கள்ளார் களமர் பகடு தளை மாற்றிக்
கடுங்காற் றெறியப் போகிய துரும்புடன்
காயற் சிறுதடி கண்கெடப் பாய்தலின்
இருநீர்ப் பரப்பிற் பணித்துறைப் பரதவர்
தீம்பொழி வெள்ளுப்புச் சிதைதலிற் சினைஇக்
கழனி உழவரொடு மாறெதிர்ந்து மயங்கி
இருஞ்சேற் றள்ளல் எறிசெருக் கண்டு” (அகம் 366:1-9)
என்ற பாடலின் வழி அறியலாம். இப்பாடலில், உப்பு விளைவிக்கும் நிலம் அருகில் இருந்ததால் அது கடலை ஒட்டிய பகுதியாகவே இருந்திருக்க வேண்டும். மேலும், உழவர்கள் நெல்லைத் தூற்றும் போது கொடியகாற்றினால் தூசும் துரும்பும் உப்பளங்களில் கலந்தது என்பதால், இந்த உப்பளங்களின் மிக அருகிலேயே இந்நெல்விளையும் வயல்கள் இருந்திருக்க வேண்டும். எனவே, நெய்தல் நிலத்திலேயே நெல் விளைவித்திருக்க வேண்டும்.
இதற்குச் சான்றாக நெய்தல் நிலத்திலே மழை பெய்யும் காலத்து நெல்லும் மழை இல்லாத காலத்து உப்பும் விளைவித்துள்ளனர். இதனை,
“பெயினே, விடுமான் உழையினம் வெறுப்பத் தோன்றி
இருங்கதிர் நெல்லின் யாணர் அஃதே
வறப்பின், மாநீர் முண்டகந் தாஅய்ச் சேறுபுலர்ந்து
இருங்கழிச் செறுவின் வெள்ளுப்பு விளையும்
அழியா மரபின்நம் மூதூர் நன்றே” (நற்.311:1-5)
என்பதன் மூலம் அறியமுடிகிறது. இதற்கு உமணர்களின் பங்கு இன்றியமையாததாக இருந்திருக்கக் கூடும்.
நெய்தல் நிலத்தில் நெல்லும் உப்பும் வேறு வேறு காலத்தில் உற்பத்தி செய்யப்பட்டிருந்தால், கழனி உழவருக்கும் நுளையருக்குமிடையே வன்முறை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும். ஆனால், இங்கு நெல்லும் உப்பும் ஒரே காலத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. உப்பினை வேனிற் காலத்தில் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். அது போன்றே நெல்லிற்கு நீர் மிக இன்றியமையாத ஒன்றாகும். எனவே, நெய்தல் நில உழவர்கள் நெல்லிற்குத் தேவையான நீரை, குளம், கிணறு, கால்வாய் போன்றவற்றின் ஏதேனும் ஒன்றில் பெற்று வேனிற்காலத்திலும் நெல் விளைவித்திருப்பர் என அவதானிக்கலாம்.
சங்கத்தமிழர் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கினர். பாறைகளையும், சிறுகற்களையும் (சிறு குளம் என்று குறிப்பிட்டுள்ளதால் இப்பாடலில் பொறை என்பதற்கு மலை என்று பொருள்கொள்ளாமல் கற்கள் என்று பொருள் கொள்ளப்பட்டது). இடையிடையே அமைய இணைத்து பிறை வடிவில் ஏரிகளுக்குக் கரையமைத்து பாதுகாக்கும் முறை சங்ககாலத்தே இருந்துள்ளமையை,
“அறையும் பொறையு மணந்த தலைய
எண்ணாட் டிங்க ளனைய கொடுங்கரைத்
தெண்ணீர்ச் சிறுகுளங்…………………..” (புறம்.118:1-3)
என்ற பாடல் வழியும் சங்கத்தமிழரின் நீர் மேலாண்மைத் திறன் வெளிப்படுகிறது.
மேற்கண்ட கருத்துகளின் அடிப்படையில் பண்டைய சங்கத் தமிழர்கள் மருத நிலத்தில் மட்டுமன்றி நெய்தல் நிலத்திலும் நெல் விளைவித்துள்ளனர். ஆறு, குளம், போன்ற நீர் நிலைகளை பாதுகாத்தும் பராமரித்தும் வரும் மேலாண்மைத் திறன் பெற்றிருந்தனர் என்பதும் பெறப்படுகிறது.
பயன்பட்ட நூல்கள்
- ஔவை சு. துரைசாமிப்பிள்ளை, (உ.ஆ.), புறநானூறு, கழக வெளியீடு, சென்னை, 2007
- ந.மு. வேங்கடசாமி நாட்டார், ரா. வேங்கடாசலம் பிள்ளை. அகநானூறு, கழக வெளியீடு, சென்னை, 2008
- பரிமேலழகர், திருக்குறள், திருமகள் நிலையம், சென்னை,1998
- பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், நற்றிணை, கழக வெளியீடு, சென்னை, 2007
- பொ.வே. சோமசுந்தரனார், (உ.ஆ.), குறுந்தொகை, கழக வெளியீடு, சென்னை, 2007
- பொ.வே. சோமசுந்தரனார், (உ.ஆ.), பத்துப்பாட்டு மூலமும் உரையும், பகுதி-2, கழக வெளியீடு, சென்னை, 2008
- தொலைந்து போன கடிதம்
- பீப் பாடலும் பெண்ணியமும்
- இலை மறை காய் மறை
- புதியதோர் பூதக்கோள் புறக்கோளாய் நீண்ட நீள்வட்டத்தில் சூரியனைச் சுற்றி வருவதற்குச் சான்றுகள் அறிவிப்பு
- சாவு சேதி
- சலனங்கள்
- தொடுவானம் 104 பாவ்லோவ் நாய்கள்
- தியானம் என்பது….
- நண்பர்கள் உதவிக்குழு அறக்கட்டளை சிறுவர் நூல் வெளியீடு
- மரணத்தின் கோரம்
- பேராசிரியர் இரா ஆண்டி நினைவு சொற்பொழிவு
- உன்னைப் பற்றி
- மயூரா ரத்தினசாமி கவிதைகள் — ஒரு பார்வை
- மனுஷி கவிதைகள் —- ஒரு பார்வை ‘ முத்தங்களின் கடவுள் ‘ தொகுப்பை முன் வைத்து….
- “ஆங்கிலம்” என்பது ஒரு மொழி மட்டுமே “அறிவு” அல்ல
- திரும்பிப்பார்க்கின்றேன் ஈழத்தின் தொண்டமனாறு படைப்பாளியின் கதைக்கரு அய்ரோப்பாவரையில் ஒலித்தது
- நெய்தல் நிலத்தில் நெல் உற்பத்தியும் சங்கத் தமிழரின் நீர் மேலாண்மையும்
- ஹாங்காங் தமிழ் மலரின் ஜனவரி 2016 மாத இதழ்
- வானொலியில் ஹாங்காங் இலக்கிய வட்டம் – பகுதி-3 எனக்குப் பிடித்த எனது உரை
- மூன்று எழுத்தாளர்களின் நினைவஞ்சலி நிகழ்ச்சி
- கட்புலனாகாவிட்டால் என்ன?
- “குத்துக்கல்…!” – குறுநாவல்