அ. கல்யாண சுந்தரம் என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் -ஆவணப்படம்

This entry is part 3 of 19 in the series 7 பெப்ருவரி 2016

Pattukottai-Documentary-Cover-600-x-400

 

 

 

                கோவையில்  நடைபெற்ற பஞ்சாலைத் தொழிலாளர் மத்தியிலான ஒரு கூட்டத்தில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பேசுவதற்கு முன்னால் “ மக்கள் கவிஞன் வாழ்க”  என்று முழக்கமிடுகையில் பேச முடியாமல்   நெகிழ்வடைந்து விடுகிறார். அவரின் 29 ம் வயதில் அக்கூட்டம் கோவை பீளமேட்டில் நடைபெற்றது. அது முதலேதான் அவர் மக்கள் கவிஞர் ஆனார்.” காலம் தெரிந்து கூவும் குயிலாய் “ இருந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை ஜனத்திரள் அங்கீகரித்து பட்டம் வழங்கிய அதே ஆண்டில்தான் அவர் அற்பாயுசியில் மரணமடைந்தார்.

பெங்களூரில் தற்போது வசித்து வரும் ராமச்சந்திரன் என்ற முக்கிய ஓவியரின் பார்வையில் ஒரு கவிஞரின் வாழக்கை ஊடகவியலாளர் சரோனால் இந்த ஆவணப்படத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒரு  பாட்டாளி படைப்பாளியான வரலாற்றை வெகு விரிவாக 2 1/2 மணி நேரத்தில் சொல்கிறது. ( 1930-1959 )   29 ஆண்டுகளே வாழ்ந்த திரைப்பட  கவிஞரின் வாழக்கை அவர் பிறந்த பட்டுக்கோட்டையைச் சார்ந்த செங்கப்படுத்தான் காடு என்ற கிராமம் முதல் சென்னை பொன்னுசாமி தெருவில் இறந்தது வரைக்குமான வாழ்க்கையின் பல அம்சங்களை இந்த ஆவணப்படம் கொண்டிருக்கிறது. 15 வயதில் ஏரிக்கரையில் அவரின் முதல் கவிதை பிறக்கிறது. விவசாயி, மாட்டு வியாபாரி, முறுக்கு வியாபாரி, மீன் நண்டு பிடிப்பவன், தண்ணீர்வண்டிக்காரன், நாடக நடிகன், திரைப்பட பாடலாசிரியன் என்று 17 தொழில்கள் செய்தவர்.திரைப்பட பாடலாசிரியராக மலர்வதற்கு முன் அவர் வாழக்கை அனுபவம் பல திசைகளில் விரிந்திருக்கிறது. கிராம வாழக்கை அனுபவ்ங்கள், பல்வேறு வேலைகள், தஞ்சை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபாடு, விவசாயத் தொழிலாளர் மாநாட்டு அக்கறை , பாரதிதாசனுடனான உறவு நாடகங்களில் நடிக்க வழி கோலுகிறது. சென்னை வந்த பின் நாடக நடிகர் பணி தொடர்கிறது. ஆங்கிலப்படங்கள் பார்ப்பது, கேரம் போர்டு விளையாட்டு, மல்யுத்தக் கலைப் பயிற்சி, நண்டு போட்ட ஓட்டையாய் பல சிக்கல்கள். ” பாச வலை”  மூலம் தமிழ்த் திரைப்பட பாடல்களில் புது பரிணாமம்  காட்டி நடை, ரிக்‌ஷா, கம்பனி கார் என்றுபயணம் செய்து  திரைப்பட உலகினை ஆக்கிரமித்தவர். பதிபத்தி, கல்யாணப்பரிசு போன்ற முக்கிய படங்களில் முழுப்பாடல்களையும் எழுதியிருக்கிறார். 19 இசையமைப்பாளர்கள் அவரது பாடல்களுக்கு, கவிதைகளுக்கு மெட்டமைத்திருக்கிறார்கள்.பொங்கும் புது வெள்ளமாய்   அவரின் திரைப்படப் பாடல்கள் ஜிம்கானா கவிகள் ஆக்கிரமித்திருந்த காலத்தில் உழைக்கும் மக்களைப்பற்றி அவர்களின் மொழியில் எழுதப்பட்டதால் மக்களிடம் வெகுவாகச் சென்று சேர்ந்தவை.காலம் அறிந்து கூவிய குயில்  இரண்டாண்டு திருமண வாழக்கை. 5 மாதக் குழந்தையை வீட்டு விட்டு சைனஸ் காரணமாக மரணம்.. 84 ஆண்டுகளுக்குப் முன் பிறந்தவரின்  அவரது கவிதைகள்  இன்றைக்கும் கவிதையின் செயல்பாடு குறித்த அக்கறையை வெவ்வேறு கோணங்களில்  வெளிபடுத்திக் கொண்டிருப்பதே அப்பாடல்களின் வெற்றி எனலாம்.

கல்யாணசுந்தரத்தின் நண்பர் என்ற வகையில் ஓவியர் ராமச்சந்திரன் அவருட்ன் பழகிய அனுபவங்களை எடுத்துரைக்கும் பாண்பும், அவர் வாழந்த இடங்களுக்கு நேரிடையாகச் சென்று படம்ப்பிடித்ததும்,பழைய நணபர்களைச் சந்தித்ததும் அவ்விடங்களை ராம்ச்சந்திரன் வர்ண ஓவியங்களாகத் தீட்டியும், கோட்டுச் சித்திரங்களாக்கியிருப்பதும் இந்த ஆவணைபடத்தை இன்னொரு அடுக்கிற்குக் கொண்டுச் செல்கிறது. காலம் நகர்வதை ராமச்சந்திரனின் ஒவியங்கள் கட்த்திக் கொண்டு போய் காட்டுகின்றன. பாடல்களும் காலத்தை நகர்த்தும் உத்திக்காக சரியாகப் பயன்படுத்தப்பட்டிருகின்றன. படபட்டுக்கோடையாரின் திரைப்பாடல்கள் அவரின் வாழ்க்கை அனுபவங்களோடு இயைந்து இருப்பதை அப்பாடல் காட்சிகளை இணைத்திருக்கிற விதத்தில் வெறும் ஆவணப்படம் என்பதை மீறி.  சுவாரஸ்யமானப் படமாக்குகிறது.. பட்டுக்கோட்டையாரின் பாடல்கள்  தழிழ்த் திரைபடங்களுக்கு  தனித்த அடையாளத்தை வழங்கின.பாட்டாளி மக்களின் வாழ்க்கை அனுபவங்களை அவர்களின் புழங்கு மொழியிலேயே  பாடல்களாகக் கொண்டு கதை சொல்லும் வடிவம் நம்மை வெகுவாக ஈர்த்திருப்பதை  இந்த ஆவணப்படம் தெளிவாக்குகிறது. அந்த கால கட்டத்தின் அரசியல், கலாச்சார, உழைக்கும் மக்களின் வாழக்கையை நினைவுபடுத்துகின்றன  என்ற அளவில் இதில் இணைக்கப்பட்டிருக்கும் பாடல் காட்சிகள் ஜீவனுள்ளவையாக இருக்கின்றன. மக்களுக்கான அரசியல் சமூகப் பார்வையை விரிவுபடுத்தும் முயற்சியாக இந்த ஆவணப்படம் வடிவெடுத்திருக்கிறது எனலாம். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு படம் நகர்கிற போது முந்தைய காட்சியே ஒரு முழு நீளப் படத்துக்கான உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பது போல் படுகிறது. எந்தக் காட்சியும் மனிதர்கள் முன்னிலையில் காட்சிப்படுத்தப்படும் போது அதற்கு வாய்க்கிற  அழகை இதில் கண்டு கொள்ளலாம். பின்னணியில் ஒலிக்கும் பல பாடல்கள் அவரது வாழ்வோடு ஊடுருவி நெஞ்சை அறுக்கின்றது. பொதுவுடமைவாதியாக அவரை கண்டு கொள்கிற அம்ச்ங்கள் இந்த ஆவணப்படதின் முக்கிய   பகுதியாகியிருக்கிறது.  தஞ்சை விவசாயிகள் போராட்டம், விவசாயத் தொழிலாளர் மாநாடுகள், நாடக மன்ற நடவடிக்கைகளின் போதான அவரின் பாட்டாளி வர்க்க சார்ப்புப் பாடல்கள், ஜனசக்தி, தாமரை இதழ் தொடர்பு, மாயாண்டி பாரதி, ஜீவபாரதி  எடுத்துரைக்கும் அனுபவங்கள், மொழிப்போர் தியாகி சங்கரலிங்கனார் போன்றோர் பற்றிய வில்லுபாட்டுகள்,  விவசாயத் தோழர்களின் தியாகங்கள் பற்றி காவியங்கள் எழுத ஆசைப்பட்ட எத்தனிப்பு போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.

எனது முதிய நண்பர் ஒருவர் அவர் வீட்டில் எம்.ஜி.ஆரின் படத்தையும், பட்டுக்கோட்டையாரின் படத்தையும்  அருகருகே வைத்திருப்பார். பட்டுக்கோட்டையார் பற்றி பேசுகிற போதெல்லாம் பெருமை கொள்ளும் வகையில் சொல்வார். . நாடோடி மன்ன்னுக்குப் பிறகு எம்.ஜி.ஆர் தந்த தொடர் ஆதரவு,  அவருடன் கம்பு சுத்தியது, ” என் முதல்வர் நாற்காலியின் மூன்று கால்கள் எதுவென்று என்க்குத் தெரியாது, நான்காவது கால் பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம்”  என்று சொல்லியிருப்பது போன்றவற்றைச் சுட்டிக் காட்டுவார்.பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்கு பயணம் போய் வாழ்க்கை அனுபவங்களைக் கற்றுக் கொண்டவர். கடைசிப் பாடலை பாலச்சந்திரன் என்ற நடிகருக்காக ஓடும் புகை வண்டியில்தான் எழுதியிருக்கிறான். அதுவும் நாடகப்பாடலே.

1954ல் ஜனசக்தியில் வெளிவந்த முதல் பாடல் முதல் அவரது பாடல்கள் பற்றிய விரிவானச் செய்திகள் , கவிதைகள் இருந்த காகிதங்களை 2 ரூபாய்க்கு நண்பர்கள் விற்று உணவுண்ட போதும் வராத கோபம், பாரதி மறைந்த நாளிலான அவரின் திருமணம், பாடல்களே உலகம் என்று குடும்பத்தை விட்டு விலகியே இருந்தது வரை எல்லாம் நாவலுக்குரிய விவரிப்போடே சொல்லப்படிருக்கின்றன.எம்.எஸ். விசுவநாதன், சுசீலா, நடிகர் கண்ணன், சுரதா, மன்னர் மன்னன்  ஆகியோரின்  அவருடனான அனுபவங்கள் .சுவாரஸ்யமாகபதிவு செய்யப்பட்டிருக்கின்றன. கலைஞர் கருணாநிதியுடான அனுபவங்கள் பதிவு இல்லாமல் இருக்கிறது. பட்டுக்கோடையார் கலைஞரிடம் பாட்டு வாய்ப்பைத் தேடி போன போது  அவர் இன்னும் நீ வளர வேண்டும் என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். ஆனால் 3 மாதங்கள் கழித்து அவரை  அழைத்து பாச வலை படத்திற்கு  பாடல் எழுதச் சொன்னபோது 3 மாதங்களில் நான் வளர்ந்து விட்டேனா என்று கேட்டிருகிறார். கலைஞரின் 4 படங்களுக்கு பட்டுக்கோட்டையார்  பாடல்கள் எழுதியிருக்கிறார் என்பது பற்றியும் பத்திரிக்கைகளில் படித்திருக்கிறேன்.  எம்.ஜி. ஆர், அண்ணா ஆகியோரின் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது போல் கலைஞர் கருணாநிதியின் அபிப்பிராய எழுத்து வடிவ கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இது போல் பல பதிவுகள் இல்லாதைக் குறையாகச் சொல்லலாம்.

அவரின் தோற்றத்தைப் பார்த்து  வட நாட்டுக்காரர் என்று நினைத்து அவரை ஜீ  என்று பலர் அழைப்பார்களாம்.ஆங்கிலப்படம் தொடர்ந்து பார்க்கிற பழக்கம் அவரை ஏதாவது ஆங்கில கவிதை போல் எதையாவது சுவாரஸ்யமாகச் சொல்ல வைத்ததுண்டாம்.

அவர் வழக்கமாக பயணம் செய்யும் காத்தவராயன் என்ற ரிக்க்ஷாக்காரனை அவர் ஒரு நாள் அழைக்க அவர் உடம்பு சுகமில்லை என்று சொல்ல , பரவாயில்லை ஒரு மருத்துவரிடம்  அழைத்துச் செல்கிறேன் என்று மவுண்ட் ரோட்டில் ரிக்‌ஷாவில் இழுத்துச் சென்றதை இராமச்சந்திரன் ஒரு வர்ண ஓவியமாக்கி இதில் காட்டுகிறார்.. அவரின் திரைப்படப் பாடல்களில் தெறிக்கும் கருத்தைப் பற்றி அறிஞர் அண்ணா “ பெரியாருக்கு முன் பிறந்திருக்க வேண்டியவர் “ என்று சொல்லியிருக்கிறார். தமிழ் சமூகத்தை பாட்டாளிகளின் வண்டியில்  முன்னகர்த்தி சென்ற பாட்டாளிக் கவிஞர் பற்றிய முமுமையானச் சித்திரத்தை  இந்த ஆவணப்படம் முன் வைக்கிறது. இலக்கணத்தை  மீறியது மனித சக்தி என்றார் பட்டுக்கோட்டை ராக்கெட்  விட்டதைப் பற்றி..  . தன் சக்தி மீறி பல ஆண்டு  கடுமையான உழைப்பின் மூலம் சாரோன் இந்த நீண்ட  ஆவணப்படத்தைச்  சாத்தியமாக்கியிருக்கிறார். “ நீண்ட காலம் வாழ்ந்து நீண்ட் பெரும் படியல்களை அளித்த கவிஞ வரிசையில் பட்டுக்கோட்டை நிற்கவில்லை. அவர் படைப்பு அளவை விட தரம் உயர்ந்த்து. அகல் உழுவதிலும் ஆழ உழுதார் “என்கிறார்  பா.ஜீவானந்தம்.. அப்படி விரிவாய், ஆழமாய் பட்டுக்கோட்டையை இந்த ஆவணப்படத்தின் மூலம் இந்தத் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார் பு. சாரோன்           ( 9444285103 ) விலை ரூ 325

Series Navigationதொடுவானம் 106. சோக கீதம்கானல் வரிகள்
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Comments

 1. Avatar
  BSV says:

  மனித சமூகத்தின் அவலட்சணங்களைக்கண்டு இறைவனே வெறுத்தொதுக்குவார் என நான் நினைக்கும்போதெல்லாம். ஒவ்வொரு குழந்தை பிறந்து அப்படியில்லை இறைவன் மனிதனைக் கைவிடவில்லை என்ற நினைப்பு தோன்றுகிறது என்பது தாகூரின் வசனமொன்று.

  தமிழர்கள் என்றாலே வெறுத்தொதுக்கிச் சோர்வைடையும போதெல்லாம், பட்டுகோட்டை கலியாணசுந்தரத்தின் அரிய வாழ்வும் மனமும் தொண்டும் நினைவுக்கு வந்து அப்படியெல்லாம் இல்லை; இவரும் அவர்களுள் ஒருவர்தானே தமிழர்களைத் திட்டினால் இவரையும் திட்டுவது போலாகிறதே என மனம் அவ்வெறுப்பை மாற்றுகிறது. எனக்குப்பின்னாலும் வரும் சந்ததிக்கும் அவ்வாறுதல் கிடைக்கும்படி இவ்வாவணப்படம் துணையாக இருக்கும்.

  17 தொழில்கள்; வாழ்க்கையெனபது பூங்காவனமன்று; போர்க்களம் என்று பறையும் பாடல்கள். வறுமையும் பஞ்சையும் தொடர்கதைகள். ;போராட்டமும் தொடரட்டும். வெற்றி முழமையாகக் கிடைக்காவிட்டாலும் கால்வயிற்றுக்கஞ்சி அரைவயிறாகட்டுமே என்பதுதான் இப்பாவலர் நமக்குச் சொல்லும் செய்தி.

  கலியாணசுந்தரத்தின் காலத்தில் நான் பிறக்கவில்லை. அதனாலென்ன? எனக்குப்பின்னும் அவர் வாழ்வார் என்பதுதான் நற்செய்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *