நான் ஒரு பிராமணன்?

This entry is part 1 of 19 in the series 7 பெப்ருவரி 2016
ஆம்.
நானும் ஒரு பிராமணன் தான்.
உச்சிக்குடுமி வைத்திருக்கவில்லை.
பஞ்சக்கச்சம் உடுத்த வில்லை.
பூணூல் போடவில்லை.
கோத்திரம் இல்லாத ஒரு கோத்திரம்
எனக்கு உண்டு.
கோவில்களில்
யாகம் நடத்தி
அதி ருத்ர ஹோமங்களுக்காக‌
ஸ்ரீ ருத்ரம் சமகம் சொல்லி
பூர்ண ஆகுதிக்கு
அந்த நீண்ட மர அகப்பையில்
எல்லாவற்றையும்
பொசுக்கப்போகிறேன் என்று
அடையாளமாய்
சில தானியங்களையும்
தனங்களையும்
தீயின் நாக்குகளுக்கு
கொடுக்க வில்லை தான்.
ஆனாலும் நான் பிராமணன் தான்.
பண்ணிக்குட்டிகளை மேய்ப்பவன் நான்.
பிணங்களைச் சுடுகிறவன் நான்.
ஆனாலும் நானும் ஒரு பிராமணன் தான்.
மும்மலங்களை கழுவுவதற்கு முன்
நான்காவது ஐந்தாவது ஆறாவது…
இன்னும் இன்னும்
மலங்களை அள்ளி சுத்தப்படுத்துபவன் நான்.
ஆனாலும் நானும் பிராமணன் தான்.
பிராமணத்துவம் என்பது
எல்லா உயிர்களிடமும்
எல்லா கல் மண் கட்டைகளிடமும்
தன் பிராணத்தைக் கரைத்து ஊற்றி
பிரமன் எனும் அந்த சூன்யனையும்
துரத்திப்பிடித்து
அவன் வாய்க்குள்ளும்
உன் பிராணனச்செலுத்தி
அவனை நீயாகவும்
உன்னை அவனாகவும் உணர்வது.
சமம் ஆதி எனும்
சமாதியை
கல் மண் புழு பூச்சி மனுஷன்
ஆகிய எல்லாவற்றுள்ளும் (ஆதி)
சமம் அடைவதே ஆகும்.
இதை அடைந்த பிராமணன்
ஒருவர் கூட இல்லை.
ஏன்?
பூமியில் அவதரிக்கும் பிரமன் கூட‌
இந்த சமாதியை அடைய இயலாது.
ஏனெனில்
அவன் தானே இந்த சமாதி.
சமாதிக்குள் சமாதியை தேடுவது
விதர்க்கம் ஆகும் குதர்க்கம் ஆகும்.
ஆம் முரண்பாடுகளை
சூத்திரபடுத்தியிருக்கிறார்கள்
நமக்கு முன் வந்தவர்கள்.
ஒவ்வொரு தீக்குச்சியாய் கொளுத்துகிறார்கள்.
எரிந்ததும் அணைந்து விடுகிற‌
அந்த மின்மினிபூச்சிகளை
பிடித்துப்பார்ப்போமா?
அதஹ யோகாநுசாசனம்.
யோகம் சித்த விருத்தி நிரோதஹ‌
ததா த்ரஷ்டும் ஸ்வரூபே அவஸ்தானம்
விருத்தி ஸாரூப்ய மிதரத்ர
விருத்தயம் பஞ்சதயம க்லிஷ்டா(அ)க்லிஷ்டா
ப்ராமண விபர்யய விகல்ப நித்ரா ஸ்ம்ருதய‌
ப்ரத்யக்ஷானு மானாகமா ப்ரமாணானி
விபர்யயோ மித்யாக்ஞானமதத் ரூபப்ரதிஷ்டம்
சப்தக்ஞானானுபாதீ வஸ்து சூன்யோ விகல்ப‌
அபாவ ப்ரத்யயாலம்பனா விருத்தி நித்ரா
அனா பூதவிஷயா(அ) ஸம்ப்ரோமோஷஹ ஸ்ம்ருதி
யோகம் என்றால்
சித்த விருத்தி நிரோதம் என்றும்
அந்த விருத்தி அஞ்சு வகைப்படும் என்றும்
அவை
ப்ராமண வ்பர்யய விகல்ப நித்ரா ஸ்ம்ருதய‌
என்றும்
அவற்றின் முகங்கள்  இவை என்றும்
அடுக்குகிறார்
இவை அந்த பொருளில்லாத பொருளுக்கு
பொய்மெய்ப்பொருளின்
அல்லது
“ஏதோ ஒன்றான பொருண்மை”யின்
(அப்சொல்யூடிஸம்)
முகமூடிகளை
ஒவ்வொன்றாய் கழற்றி எறிகிறார் பதஞ்சலி!
சமாதி…சாதனா…விபூதி…கைவல்யம்
சாதனா என்பது
சமாதி அடைவதற்கான வினைப்பாடுகள்.
விபூதி என்பது
முன்சொன்னவற்றின் பலன்கள் எனும் சித்திகள்
கைவல்யம் என்பதே விடுதலை.
எதிலிருந்து எதன் விடுதலை?
புருஷத்தை பற்றியிருக்கும் ப்ரகிருதியிலிருந்து
புருஷமே விடுதலை.
இதுவே “அப்சொல்யூட்”முனையம்.
சூத்திரங்கள் புரிந்தனவா?
இதைப்பாருங்கள்
இதுவும் ஒரு சூத்திரமே!
“எஸ்
இஸ் ஈக்குவல் டு ஹெச் க்ராஸ்
டிவைடெட் பை
2 எம் ஐ
மல்டிப்லைடு பை ஹோல் இன் ப்ரேக்கெட்
ப்சை டு தி பவர் ஆஃப் ஸ்டார்
இண்டு
இன்வெர்டெட் ட்ரையாங்கிள்
ப்ஸை மைனஸ்
ப்ஸை இன்வெர்டெட் ட்ரையாங்கிள்
ப்ஸை டு தி பவர் ஆஃப் ஸ்டார்”
இது உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?
இது “ஹெய்ஸன்பர்க் அன்செர்டன்டி ப்ரின்சிபிள்”படி
எஸ் எனும் ப்ராபலிடி ஸ்ட்ரீம் டென்சிடிக்கு
குவாண்டம் மெகானிக்ஸ் கொடுக்கும் சூத்திரம்.
இந்த சூத்திரங்கள் எல்லாம்
சூத்திரன்களுக்கு புரியும்போது
எந்த சூத்திரமும் எல்லா சூத்திரன்களுக்கும்
புரிந்து விடுமே
எனவே பதஞ்சலியையும்
இப்படி பல்லைப்பிடித்துப் பார்த்தால்
ஒன்றும் குடிமுழுகிப்போவதில்லை.
இருந்தாலும்
பதஞ்சலி மன ஆகாயத்தையே
அக்கு வேறு ஆணி வேறு
பிரித்துப்போட்டிருக்கிறார்.
மனத்தையே பூராவும் தோண்டியெடுத்து
அந்த புழுக்கூட்டில்
ஒரு மின்னல் பிழம்பை ஊற்றுகிறார்.
சமாதி என்று விறைத்த கட்டையாய்
பார்த்தபின்
பிராமணன் பிராமணன் அல்லாதவன்
என்பதும்
விறைத்துப்போன உறைந்து போன‌
தத்துவ சாரமே.
உள்ளத்தூய்மை
பல்லுயிர் நேயம்
பிரபஞ்ச நேயம் எனும்
ஹொலோகிராஃபிக் காஸ்மாலஜியை
பிரியமாக அணுகுவது
இவை மட்டும் போதும்.
மற்ற அடையாளங்கள் தேவையில்லை.
எனவே
நானும் பிராமணன்.
அல்லது
பிராமணன் இல்லை.
Series Navigationதொடுவானம் 106. சோக கீதம்
author

ருத்ரா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *