இனப்பெருக்கம்

This entry is part 8 of 13 in the series 28 பெப்ருவரி 2016

அழகர்சாமி சக்திவேல் 

 

இனப்பெருக்கம் தான்

திருமண வாழ்க்கையின் அர்த்தம்

மதம் அடித்துச் சொன்னது.

சமூகமும் ஜால்ரா அடித்தது.

 

ஜால்ராவின் சத்தம் கூடியபோதுதான்

பிள்ளை பெற முடியாத பெண்

மலடியாக்கப்பட்டாள்

பிள்ளை பெற முடியாத ஆண்

பொட்டை ஆக்கப்பட்டான்.

 

உலகத்தில் 150 மில்லியன் அனாதைகள்.

தத்து எடுக்க ஆள் இல்லை.

காக்கை எச்சமிட்ட விதைகளாய்..

தன் பழத்தாயும் தெரியாமல் மரத்தந்தையும் புரியாமல்

மதம் போற்றும் எல்லோரும்

அவரவர் இனப்பெருக்கத்தில் மட்டுமே சுயநலமாய்…

தன் இரத்த வெறியர்களாய்….

சமூகத்தின் ஜால்ரா சத்தத்துக்குள்

ஈனசுரமாய் அனாதைக்குரல்கள்.

 

நவீனப் பெண்மை

தாய்மையை சுமக்க விரும்புகிறது..

அதற்காய் தன் தலைவனையும் சுமக்க விரும்பவில்லை.

ஒற்றை  மாட்டு  வண்டியாய்  இழுப்பதிலும் ஒரு சுகம்.

கழுதை பொதி சுமக்கலாம்..

கழுதையை  வழி  நடத்துபவனை  ஏன் சுமக்க வேண்டும்?

பிடித்தால் பொதியுடன்  கூட நட..

பிடிக்காவிட்டால் ஓங்கி எட்டி உதைத்து விரட்டு..

எளிமையான  திருமண  தத்துவங்கள்.

 

இனப்பெருக்கம் இப்போது எளிமையாயிற்று..

விந்து வங்கிகளில் ஆண்மை விற்கப்படுகிறது..

இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்…

வலைத்தளத்தில் ஆர்டர் செய்தால்

நான்கே நாட்களில்

வீடு தேடி வரும் விந்து.

 

சில பெண்கள் பெற்றுக்கொள்வதேயில்லை..

புருஷ சுகத்தையும். பிள்ளைப் பேற்றையும்

முடிச்சுப்போட்டு அவஸ்தைப்படாமல்

தத்து எடுத்துக் கொள்கிறார்கள்..

சுயநலத்திற்குள் ஒரு பொது நலம்.

 

இனப்பெருக்க அறிவியல் இப்போது எங்கேயோ போய்விட்டது.

குழந்தைக் கருவுக்காய்

விந்து அண்டத்தோடு இனி விளையாட வேண்டியது இல்லை.

கருக்களை இனி ஸ்டெம் செல்களின் மூலமே

உருவாக்கிக் கொள்ளலாம்.

 

விஜயன் கீதாவுடன் சேர்ந்தால்தான்

இனி விஜயகீதா பிறந்தாகவேண்டும் என்பதில்லை.

விஜயன் தன் நண்பன் கீதன் உடன் சேர்ந்தும்

இனி விஜயகீதா உருவாக்கலாம்.

விஜயா கீதாவோடு சேர்ந்தும்

இனி விஜயகீதா உருவாக்கலாம்.

 

“இனப்பெருக்கத்திற்கு இனி

ஆண் பெண் உறவு தேவையில்லை” என

மதம் என்ற மாட்டை

மண்டையாட்ட வைத்தாயிற்று.

சமூக ஜால்ராவும் தன் தாளம் மாற்றியது…

 

பெண்-ஆண் இனப்பெருக்க உறவு விதிகளில்

பெண்ணுக்கும் ஆணுக்கும் இப்போது ஆயிரம் சலுகைகள்..

எத்தனையோ விதி மீறல் வசதிகள்..

 

இப்போது கடைசியாய் என் கேள்வி..

இனப்பெருக்கம் இல்லாமல்..

பெண் பெண்ணோடு சேர்ந்தால் எந்தக் குடி முழுகும்?

ஆண் ஆணோடு சேர்ந்தால் எந்தக் கோட்டை சரியும்?

உங்கள் சுயநலங்களுக்கு ஒரு அளவேயில்லையா?

 

ஆக்கம் – அழகர்சாமி சக்திவேல்

Series Navigationநூலின் முன்னுரை: பறந்து மறையும் கடல் நாகம் : ஜெயந்தி சங்கர் நூல்எழுபதில் என் வாழ்க்கை

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *