தமிழினியின் சுயசரிதை: “ ஒரு கூர்வாளின் நிழலில் “

This entry is part 11 of 16 in the series 6 மார்ச் 2016

 Tamilini

நடேசன்

இளம் வயதில் வெதரிங் ஹைட் ஒரே நாவலை தந்துவிட்டு இறந்த எமிலி புரண்டே ஆங்கில இலக்கியத்தில் முக்கியமான இடம் வகிக்கிறார் (Wuthering Heights – Emily Brontë’) அதுபோல் தமிழினியின் சுயசரிதையும் ஈழத் தமிழர்களால் பலகாலம் பேசப்படும். அரசியல் போராட்டத்தை இப்படி எடுத்துக் கொண்டு போகக்கூடாது என்பதோடு நமக்கு தவறுகளைப்புரிந்து கொள்ளும் பாலபாடமாக இருக்கவேண்டும் என விரும்புகிறேன்

அரசியல்

முப்பது வருடகால தமிழ் விடுதலைப் போராட்டத்தை மகோன்னத போராட்டமாகவும் அதன் தலைவரை கடவுளுக்கு நிகராகவும் வைத்து எதுவித விமர்சனமற்ற போராட்டமாக எடுத்துச்;சென்றோம். ஆனால் போராட்டம் 2009 இல் முற்றாக ஆவியான பின்பு இயக்கத்தில் வெவ்வேறுகாலங்களில் இருந்தவர்கள் நாவல்களாக எழுதினார்கள்.

நமது சமூகத்தில் இலக்கியம் படிப்பவர்கள் எத்தனைபேர்?

தொடர்ந்தும் இந்த ஆயுதப்போராட்டம் பேசாப்பொருளாக இருக்கிறது. இதை பாவித்து சுயநலமிகள் தங்களது வேலையை செய்துகொண்டிருக்கிறார்கள்.

அரசியலில் உள்ளவர்கள் புலி எதிர் – புலி ஆதரவு என்று பேசி பதவிப்போட்டியில் இறங்கினார்கள். இலட்சக்கணக்கான மனிதர்கள் உயிர்கொடுத்த ஆயுதப்போராட்டம் பற்றிய அறிவுசார் தர்க்கங்களை மக்களிடம் அவர்கள் எடுத்து செல்லவில்லை..

தமிழ் ஊடகங்கள் கலாச்சார பண்பாட்டுத்தளத்திலோ அரசியலிலோ எதுவிதமான பங்களிப்பை செய்யாது அமெரிக்க கால்பந்தாட்டத்தின்போது நடனமாடும் இளம் பெண்கள் செயரிங் குழுவாக இருந்தது.

பல்கலைக்கழகங்களைப் பற்றி பேசிப்பயனில்லை அதைவிட எங்கள் காலத்தில் இருந்த பொண்ட் ரியூட்டரியின் சமூகபங்களிப்பு அதிகம்.

இந்த நிலையில் வெளிவந்திருக்கும் தமிழினியின் சுயசரிதை நூல் பல விடயங்களை நமக்குத் தெரிவிக்கிறது. எனது அறிவில் இருந்த சில வெற்றிடங்களை நிரப்புகிறது.

தமிழினியின் கூர்மையான எழுத்துக்கு அறிமுகம் தேவையில்லை. அவரது ஒரு சிறுகதையைப் படித்துவிட்டு தொடர்பு கொண்டு முகநூல் நண்பராகினேன்

இலக்கியம்

பல பெண்கள் தங்களது தாம்பத்திய உறவை முறித்தபின் தங்களுக்கு கணவனால் நடந்த கொடுமையை மடைதிறந்தால்போல் கொட்டுவார்கள் இதை நான் எனது தொழிலில் பலமுறை கேட்டிருக்கிறேன். இப்படியான செய்கை அவர்களது பாரத்தை இறக்குவதுடன் மீண்டும் வேறுதிசையில் பயணத்திற்கு தயார்ப்படுத்துகிறது. நான் நினைக்கிறேன் பெண்களின் தாய்மையோடு இது சம்பந்தபட்டுள்ளது. அவர்களது இலட்சியங்கள் உடலுறவு தாம்பத்தியத்துடன் முடிவடைவதில்லை. இந்த தன்மையுடன் தனது மனப்பாரத்தை மிகவும் தெளிவான மனதுடன் தமிழினி இந்த நூலில் இறக்கி வைத்திருக்கிறார்..

எஸ்பொவின் வரலாற்றில் வாழ்தல் யாழ்ப்பாணத்து சாதியின்மேல் ஏற்பட்ட வெறுப்பால் தனது மனதில் உள்ளபாரத்தை வெளிக்காட்டும கத்தாசிஸ் இலக்கியமாக அடையாளப்படுத்தினேன். . எஸ்பொவின் சுயசரிதையில் சில இடங்களில் நம்பகத்தைன்மை தெளிவற்று இருந்தது.

கத்தாசில் இலக்கியத்தில் (Catharsis literature )முக்கியமாக சொல்லப்படுவது உண்மையாக இருக்கவேண்டும். அதன்படி தமிழினியின் புத்தகம் சத்தியமான வார்த்தைகளைக் கோர்த்து கத்தாசில் இலக்கியம் படைத்திருக்கிறார்..

இந்த புத்தகத்தில் உள்ள சில முக்கிய பந்திகளை இங்கு அடையாளப்படுத்தியுள்ளேன். இதுவரைகாலமும் நாலுகால் மிருகங்கள் எட்டுக்கால் நட்டுவக்காலிகள் போன்றவர்கள் எல்லாம் ஈழத்து அரசியல் என்னுடன் பேசுவார்கள். இவர்களுடன் பழகுவதற்கு 37 வருட மிருகவைத்திய அனுபவம் துணை செய்தது.. இனிமேல் அரசியல் பேசவருபவர்களிடம்   குறைந்தபட்சமாக தமிழினியின் ஒரு கூர்வாளின் நிழலில் ‘ படித்துவிட்டுவா என சொல்வதற்கு தீர்மானித்திருக்கிறேன்.

புத்தகத்தின் சில பகுதிகள்

தலைவரைப்பற்றியது :-

“ஒருநாள் நானும் தளபதிகள் விதுஷாவும், துர்க்காவும் தலைவரை சந்திப்பதற்காக அழைக்கப்பட்டிருந்தோம். அது சமாதானம் தொடங்கிய ஆரம்ப கால கட்டம். அந்த சந்திப்பில் தலைவர் பல விடயங்கள் பற்றியும் எம்மோடு பேசிக்கொண்டிருந்தார். அதில் ஒரு சந்தர்ப்பத்தில் கூறினார்;

“மட்டக்களப்பு, அம்பாறைப் போராளிகள் போராட்டத்தில எவ்வளவோ கஷ்டங்களைப் பட்டிருக்கிறாங்கள் அவங்கட குடும்பங்களுக்கும் அந்த மக்களுக்கும் நிறைய வேலைகள் செய்யவேணும். நிதித்துறை மூலமா ஒரளவு பண உதவியையும் செய்து கருணாவுக்கும் சொல்லியிருக்கிறன், அந்தச் சனத்திற்கு நிறைய உதவிகள் செய்யச் சொல்லி. அவன் செய்யிறான், இவங்கள் பொட்டு ஆக்கள் என்னட்ட வந்து அங்க அது பிழை இது பிழை எண்டு சொல்லிக் கொண்டு நிக்கிறாங்கள், தளபதிமாருக்குள்ள முதலில ஒற்றுமை இருக்கவேணும்” என்று குறிப்பிட்டார்.”

தமிழினியின் கருத்தாக:-

“இலங்கைப் படையினரை வலுச் சண்டைக்கு இழுத்து யுத்தத்தை ஆரம்பிப்பதன் மூலம் தலைவரால் திருகோணமலைப் படையணிகளுக்கு வழங்கப்பட்டிருந்த ஆட்லறிகளைப் பயன்படுத்தி வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டு இராணுவக் கட்டுப்பாட்டிலிருக்கும் பிரதேசங்களைக் கைப்பற்ற முடியும் என திருகோணமலையின் தளபதியாக இருந்த சொர்ணம் கருதினார். அவரது திட்டத்திற்கு தலைவருடைய அனுசரணையும் இருந்தது. இயக்கம் எதிர்பார்த்த படியே இறுதி யுத்தம் திருகோணமலை மாவிலாற்றங்கரையில் மூண்டது. 2006 ஆகஸ்ட் 15 இல் மாவிலாறு பகுதி முழுமையாக இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டதுடன், மூதுார், சம்பூர், கட்டைப்பறிச்சான், தோப்பூர் எனப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளை நோக்கி யுத்தம் விரிவடையத் தொடங்கியது. புலிகள் இயக்கம் எதிர்பார்த்தமைக்கு மாறாக திருகோணமலைத் தோல்விகள் அமைந்தன. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இராணுவ பலத்தின் மீது இருந்த அதீத நம்பிக்கை மாவிலாற்றில் பலத்த அடிவாங்கத் தொடங்கியது.” “

 

எதிர்பாரது சந்தித்த இராணுவ அதிகாரி பற்றி தமிழினி::-

“வணக்கம் தமிழினி” என சளரமான தமிழில் பேசினார். அவரைக் கண்டதும் எனக்கு மிக அதிர்ச்சியாக இருந்தது.. அந்த மனிதரை முன்னர் எங்கேயோ சந்தித்துப்பேசிய நினைவு பொறி தட்டியது. ஒரு கணம்தான். தலைக்குள் மின்னலடித்ததைப்போல சுதாகரித்துக் கொண்டேன். சமாதான காலத்தில் வன்னிக்கு வந்த ஊடகவியலாளர்களோடு ஏதோவொரு சிங்கள ஊடகத்தின் சார்பில் அதன் பிரதிநிதியாக இவரும் வந்திருந்தார். அரசியல் பொறுப்பாளர் உள்ளிட்ட பல இயக்க முக்கியஸ்தர்களைச் சந்தித்ததுடன் கிளிநொச்சியில் அமைந்திருந்த அரசியல்துறை மகளிர் செயலகத்தில் என்னையும் சந்தித்திருந்தார்.

சளரமாகத் தமிழில் பேசக்கூடிய அவர், பல போராளிகள், பொறுப்பாளர்களுடன் போராட்டத்திற்கு சார்பான ஒருவர் என்ற தோரணையுடன் மிக இலகுவாக நட்புரிமையுடன் பழகிய ஞாபகங்கள் வந்தது. அது மட்டுமல்லாமல், 2004ம் ஆண்டில் முதல் பெண் மாவீரரான 2ம் லெப் மாலதியின் நினைவு நாள் நிகழ்வுகள் மிகவும் எழுச்சியாக கிளிநொச்சியில் நடத்தப்பட்டபோது இவரும் கலந்துகொண்டு அனைவரோடும் தன்னை ஊடகவியலாளர் என அறிமுகப்படுத்திக்கொண்டு மிக இயல்பாக பல விடயங்கள் பற்றியும் உரையாடியதும் நினைவுக்கு வந்தது. அந்த இராணுவப் புலனாய்வு அதிகாரி எவ்வளவு சாதுரியமாகப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினரின் கண்களில் மண்ணைத் துாவிவிட்டு கிளிநொச்சியின் சந்து பொந்துகளில் உலவித் திரிந்தார் என்பதை பெரும் திகைப்போடு நினைத்துப் பார்த்தேன்

யுத்த இறுதிநாட்களில் பொட்டம்மான்:-

மிகவும் சுருக்கமாக பின்வரும் விடயங்களைப் பொட்டம்மான் தெரிவித்தார்;

“ஒரு அதிசயம் நடந்தாலே தவிர இயக்கம் வெல்வது என்பது இனிச் சாத்தியமில்லை, இயக்கத்தின் ஆவணங்களை வைத்திருப்பவர்கள் அவற்றை முற்றாக அழித்து விடுங்கள், மக்கள் இராணுவத்திடம் செல்லத் தொடங்கி விட்டார்கள், இறுதிக் கட்டத்தில் போராளிகளும் அவர்களோடு சேர்ந்து செல்ல வேண்டி வரும்போது ’இதிலே புலி இருந்தால் எழும்பிவா’ என்று கூப்பிடுவான் அப்போது ’நான் புலி’ என எழுந்து போகும் போது சுட்டுக் கொல்லுவான், இதுதான் நடக்கப்போகுது, யுத்தத்தில ஒரு திருப்பு முனையை ஏற்படுத்துவதற்கு தலைமை முழு முயற்சிகளையும் செய்து கொண்டுதான் இருக்கிறது, ஆனாலும் திரும்பவும் ஒரு விடயத்தை தெளிவாக விளங்கிக் கொள்ளுங்கள், அதிசயமொன்று நடந்தாலே தவிர நாங்கள் வெல்லுறது சாத்தியமில்லை, நான் உங்களை குழப்புவதற்காக இப்படி சொல்லவில்லை. உண்மையான நிலைப்பாட்டைச் சொல்லுகிறேன், முக்கியமாக உங்களை இன்றைக்கு கூப்பிட்ட விடயம் உங்களிடமிருக்கும் ஆவணங்களை அழித்துவிடுங்கள் என்பதை கூறுவதற்காகத்தான்”.

அத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது. காயப்பட்டிருந்த போராளிகளைப் பற்றியோ அல்லது இயக்கத்தையே நம்பி பராமரிப்பு இல்லங்களில் இருந்தவர்களைப் பற்றியோ கூட ஒரு வார்த்தை கூறப்படவில்லை. பெண் போராளிகள் எதிர் நோக்கக் கூடிய இரட்டிப்பு ஆபத்து பற்றியோ எதுவுமே பேசப்படவில்லை. ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளவும் தோன்றாத மனநிலையில், அனைவரும் கலைந்து சென்றோம். விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்களுக்கு புதுக்குடியிருப்பில் நடைபெற்ற இறுதியான ஒன்றுகூடல் அதுவாகத்தான் இருந்தது.-

விதுஷா தமிழினியிடம்கூறியது :-

“சண்டைப் பயிற்சி உள்ள இருபத்தையாயிரம் பேரும் ஆட்லறிக்குரிய எறிகணைகளும் இருந்தால்தான் மீண்டும் கிளிநொச்சியை பிடிக்கலாம்,” என்று தலைவர் கூறியதாக சுரத்தேயில்லாமல் கூறினார் விதுஷா. ”பொட்டம்மான் கதைக்கிற கதைகளை நினைச்சா விசர்தான் பிடிக்கும். எனக்கென்டால் அவரில இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போட்டுது. நிலைமைகள் விளங்காமல் கதைச்சுக் கொண்டு நிற்கிறார்”

“எல்லாரும் என்னுடைய கையிலதான் எல்லாம் இருக்குது எண்டு நினைச்சுக் கொண்டிருக்கினம். என்னட்ட ஒன்டுமில்லை என்ர கை வெறுங்கை” என்று தலைவர் தனது கையை விரித்துக் காட்டியதாக ஈழப்பிரியன் தனது கைகளை விரித்துக் காட்டினார். “அண்ணையே இப்பிடிச்சொன்னால் நாங்கள் என்ன செய்ய முடியும்?” என மன வருத்தத்துடன் கூறிவிட்டுச்சென்ற அடுத்த சில நாட்களில், ஈழப்பிரியன் என்ற இளம் போராளி மகாபாரத்தில் வரும் அபிமன்யூவின் தீரத்துடன் கிளிநொச்சியில் தன்னைச் சுற்றி வளைத்த இராணுவத்துடன் மோதி வீர மரணத்தைத் தழுவினான்..:: “

உயிரோடு இருந்தால் ஏதோ அரசியல் லாபத்திற்காக தமிழினியால் எழுதப்பட்டது என்பார்கள். இறந்த பின்பு இதை எமக்கு தந்து விட்டதால் தமிழினி தனது மரணத்தை அர்த்தமுளளதாக செய்துவிட்டு போயிருக்கிறார். இவர் போல் எத்தனைபேர் யார் யாரோ கனவுகளுக்கு உயிர்கொடுக்க நினைத்து மாண்டார்கள் என்பது நினைப்பதற்கு கடினமானது.

தமிழினியின்ஆரம்ப வக்கீலாக இருந்த தமிழ்க் காங்கிரசின் தலைவர் விஞாயகமூர்த்தியால் கைவிடப்பட்ட பின்பு சிங்கள வக்கீலான மஞ்சுல பத்திராஜாவால் (Manjula Pathirajah)  மேல்கொண்டு தமிழினியின் கேஸ் எடுத்து செல்லப்பட்டது. தமிழினி மிகவும் குறைந்தகாலத்தில் சிறையில் இருந்து விடுதலையாகினார். தமிழினிக்காக ஆஜரானபோது எதுவித பணமும் வாங்காது மடடுமல்ல நோர்வேயில் இருந்து சில உறவினர் பணம்கொடுக்க முன்வந்தபோது மஞ்சுல பத்திராஜாவால் வாங்க மறுத்தார். தமிழினியை சந்திக்க சிறைக்கு செல்லும்போது உணவுப்பண்டங்களைக் கொண்டு செல்வது இவரது வழக்கம்.

இலங்கையில் போரில் இருசமூகங்கள் ஈடுபட்டபோதும் மனித விழுமியங்களை பலர் பாதுகாத்தனர் என்பது எதிர்காலத்ததை அடுத்த சந்ததியினருக்கு நம்பிக்கையுள்ளதாக்கும் என்பதால் இந்த விடயத்தைக் இங்கு குறிப்பிடுகிறேன்

ஒரு கூர்வாளின் நிழலில் – காலச்சுவட்டின் வெளியீடு

 

Series Navigation“போந்தாக்குழி”சொல்வது
author

நடேசன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *