“வெங்காச்சம் இருக்கானா?” – பேருந்தை விட்டு இறங்கியதுமே ஆர்வமாய் நான் கேட்ட முதல் கேள்வி இதுதான்.
“அப்புறம் உறாலாஸ்யம்னு ஒருத்தர் இருப்பாரே….அவர் இருக்காரா?”
ஒன்றைத் தொடர்ந்து உடனே வந்த இன்னொன்றினாலும் அவனிடம் எந்தச் சலனமும் இல்லை. அவனே மறந்து விட்டதான ஒன்றைப்பற்றி யோசிக்கிறானோ?
“என்னடா, பதில் சொல்லு, பேசாம இருக்கே?”
முத்துச்சாமி வாயைத் திறந்தான்.
“யாரையெல்லாம் நாங்க நினைச்சுக் கூடப் பார்க்கிறதில்லையோ அவுங்களைப்பத்தி சட்டுன்னு நீ கேட்டவுடனே முதல்ல அந்த முகங்களை ஞாபகத்துக்குக் கொண்டு வர வேண்டியிருக்கு. உற{ம்…என்ன கேட்டே …வெங்காச்சம் பத்திதானே…இல்லியா? இருக்கான்…இருக்கான்…தெருவுலே எங்கயாவது உட்காந்திருப்பான்…”
“அப்டீன்னா?”
“அப்டீன்னா எந்த வீட்டுத் திண்ணையிலாவது கிடப்பான்னு அர்த்தம்…”
“என்னடா சொல்ற? அவனுக்குக் கல்யாணம் காட்சி ஒண்ணும் ஆகலையா?”
“அடப்போடா…கல்யாணமாவது காட்சியாவது? அவனக் கட்டிக்க எவ வருவா?”
“ஏண்டா, அவுங்களமாதிரியே ஏதாச்சும் ஒரு ஏழை வீட்டுப் பெண்ணாப் பார்த்துக் கட்டி வச்சா ஆச்சு?”
“அத அப்பயேல்ல செய்திருக்கணும்…இனிமே என்னத்தச் செய்ய? உடம்பு முறுக்கு இருக்கிறவரைக்கும் அவன எல்லாரும் நல்லாப் பயன்படுத்திக்கிட்டாங்க…அவனும் சோறு கண்ட எடம் சொர்க்கம்னு கிடந்திட்டான். எல்லாருக்கும் மாங்கு மாங்குன்னு செய்தான். அந்த மாதிரி ஒரு கட்டத்துக்கு நாமளும் போகணும்ங்கிறதெல்லாம்தான் அவனுக்குத் தெரியாதே! யாராச்சும் உரைக்கிற மாதிரி ஞாபகப் படுத்தியிருந்தாலோ அல்லது அங்க இங்கன்னு இழுத்திட்டுப் போயிருந்தாலோ புரிஞ்சிருக்குமோ என்னவோ? பொதுவா நம்ம ஆளுக ஒருத்தன் ரொம்ப உபயோககரமா இருக்கான்னா அவன அப்டியே வச்சிருக்கணும்னுதான பார்ப்பாங்க…”
“சரி, அந்த உறாலாஸ்யம்?”
“அவுருக்கென்ன, இருக்காரு…”
“இருக்காருன்னா?”
“இருக்காருன்னா இருக்காரு…அவ்வளவுதான்…”
“என்னடா சொல்ற, ஃபேமிலி இருக்குல்ல…?”
“ஃபேமிலியாவது ஒண்ணாவது? பேய் முழிதான்…”
“கண்ணை உருட்டி உருட்டிப் பார்ப்பாரே, அதச் சொல்றியா?”
“அதேதான்…கண்ணாடி வழியா அத விடாமப் பண்ணிட்டிருக்கார்…அவ்வளவுதான்…”
“என்னடாது…எடுத்த எடுப்புல கேள்விப்படுறது ரெண்டுமே சரியில்லையே?” “உனக்குச் சரியில்லே…அவ்வளவுதானே…அவுங்களுக்கு அப்படியில்லையே…அவுங்க சந்தோஷமாத்தானே இருக்காங்க…” “நம்ப தெருவுலே என்னென்னவோ பட்டப் பெயர்லெல்லாம் ஆட்கள் இருப்பாங்களே…அதச் சொல்லித்தானே நாமளே அவுங்களைக் கூப்பிடுவோம்…” “அதுக்கென்ன பஞ்சம்…அது நெறயவே இருக்கு…காப்படி மாங்கா பேரன், இட்லி மாமி, சட்டிப்பீ வெங்கட்ராமன், ரப்பர் பாலு, மைக்கா ராமநாதன், சைபால் குருமூர்த்தி, வாழக்கா வடை ரங்கன், ஓடுகால் ராமமூர்த்தி, நூறடி நீளம் பத்தடி அகலம் ரங்காச்சாரி,….”இடைவெளியில்லாமல் சொல்லிக் கொண்டே போனான் முத்து. எனக்கா ஒரே வியப்பு. அத்தனையும் மறக்காம வச்சிருக்கியேடா?” “பின்ன, நா இந்த ஊர்லயேதான இருக்கேன்…நீங்கள்லாம் போயாச்சு…” “சரி, உன் ஏஜென்ட் பிஸ்னசெல்லாம் எப்டியிருக்கு?” “அது சர்தான்…இன்னும் நா அப்டியேதான் இருக்கேன்னு நினைச்சிட்டிருக்கியா? ஏண்டா நீங்கள்லாம் கவர்ன்மென்ட் உத்தியோகம், ஆபீசு, ஆபீசர்னு போவீங்க…நாங்கமட்டும் அப்டியே இருக்கணுமாக்கும்? “ “இப்டி இப்டி வசதி வாய்ப்போட இருக்கேன்னு சொல்லிட்டுப் போயேன்…சந்தோஷப் பட்டுட்டுப் போறேன்…” “நீ பஸ் ஸ்டாண்டுல இறங்கினவுடனே ஒரு பெரிய கடை பார்த்தியே…அது யாருதுன்னு நினைச்சே? அய்யாவோடதுதான்…” “அதுவா, அவ்வளவு பெரிய புஸ்தகக் கடையா?” “ஏன் இருக்கக்கூடாதா? நீ ஊர்விட்டுப் போற போது எப்டியிருந்திச்சோ அப்டியேதான் இருக்கணுமா?” “அதுக்கில்லடா…கொட்டிக் கிடக்குதே புத்தகங்கள்னு கேட்டேன்…” “ஊருக்கே நியூஸ் பேப்பர் பூராவும் நம்ம கிட்டேயிருந்துதான் சப்ளையாகுதாக்கும்…பசங்க உட்கார்ந்து பிரிச்சிக்கிட்டிருந்தாங்களே, கவனிக்கலையா? இன்னிக்கு உன்னோட இருக்கிறதுனாலதான் இப்டி போன்ல பேசிட்டிருக்கேன்…இல்லன்னா அங்கதா இருப்பேன்…” – சொல்லிவிட்டு போனில் கட்டுக்கள் பிரிக்கப்பட்டு அடுக்கியாயிற்றா என்றும், ஆள் கிளம்பியாச்சா என்றும் விரட்டிக்கொண்டிருந்தான் முத்து. எனக்கு மெய் சிலிர்த்தது முத்துவின் உயர்வினைப் பார்த்து. சாதாரண வேட்டி சட்டையோடு;தான் அப்பொழுதும் இருந்தான். என்றைக்கும் அவன் டிரஸ் அதுதான். அவனின் ஆளுமைத் திறன் என்னை வியக்க வைத்தது. தினசரி வீடு வீடாய்ப் பேப்பர் போட்டவன். சினிமா தியேட்டரில் டிக்கெட் கிழித்தவன். Nஉறாட்டலில் சர்வராய் இருந்தவன். இ.பி.யில் மம்புட்டி. சட்டியுடன் தினக் கூலியாய் அலைந்தவன். எதற்கும் அஞ்சியதில்லை அவன். அந்த கௌரவம் பார்க்காத அவனது உழைப்புதான் அவனை இன்று இந்த நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன் நான். இடையிடையில் வாடிக்கையாளர்களோடு அவன் பேசும் பாங்கு அவன் எந்த அளவுக்குப் பக்குவப்பட்டிருக்கிறான் என்பதை உணர்த்தியது எனக்கு. “நம்ப ராசேந்திரன், அதாண்டா மாசான்னு கூப்பிடுவோமே? இருக்கானா?” “ஓ, இருக்கானே…அவனுக்கென்ன? சர்க்கரை ஆலைல வேலை…” “செடி மனோகரன்…?” “எது செடி மனோகரனா? யாரச் சொல்ற?” முழித்தான் முத்து. “அதாண்டா, ஸ்கூலுக்கு எப்பப்பார்த்தாலும் அப்பா கொடுத்தாருன்னு ஏதாச்சும் ஒரு செடியக் கொண்டுட்டு வந்து நட்டுட்டு இருப்பானே? சப் ரிஜிஸ்திரார் பையன், ஞாபகமில்லையா?” “ஓ! அவனா? அவன் போயிட்டாண்டா?” “என்னடா சொல்ற? செத்துட்டானா?” “ஆமா…மாஸிவ் உறார்ட் அட்டாக்…தண்ணிடா…விட முடியாத தண்ணி…” ஒரு நிமிடம் அவன் நினைவுகள் சுழன்றன. சிறந்த ஃபுட்பால் ப்ளேயர் அவன். பாஸ்கட் பால், கபடி, அதெலடிக் என்று சகலமும் உண்டு அவனிடம். ஆனால் இந்தப் பழக்கம்? மாநிலம் விட்டு மாநிலம் சென்று விளையாடியவன். எப்படியாகிப் போயிருக்கிறது கதை? மனம் சங்கடப் பட்டது. “மாரியம்மன் கோயிலுக்குப் பின்னாடி இருப்பானே மதுரை வீரன்…அவன் தம்பி செல்வம்…அவங்கள்லாம் இருக்காங்களா? அவுங்கப்பா நீலகண்டன். ஒரு வாட்டி ராம நவமி உற்சவத்துல நாகர்கோவில் மகாதேவனுக்கு மிருதங்கம் வாசிச்சாரே, ஞாபகம் இருக்கா? பிழைப்பு மாட்டுக்கு லாடம் அடிக்கிறது…அவர்ட்ட படிஞ்சிருந்த இசை ஞானத்தப் பார்த்தியா? திறமை எங்க வேணாலும் இருக்கலாம்ங்கிறதுக்கு அவர் ஒரு உதாரணம்…” எத்தனை பேரைப் பற்றிப் பேசினாலும் கடைசியாக நினைவில் மிஞ்சியது வெங்காச்சம்தான். “நீ என்னடா அவனைப் பத்தியே கேட்டுட்டிருக்கே? ஒரு ஆபீஸர் ரேங்க்ல இருக்கிறவன் நீ…வெட்டிப்பய அவன்…திண்ணை திண்ணையாக் கிடக்கிறவன்…அவனப் போய்ப் பேசிட்டிருக்கியே?” “சே! சே!! நீ என்னடா? நா ஆபீஸர்னா அது என்னோடடா…இந்த ஊருக்கு நா பழைய ராமசாமிதாண்டா….உனக்கு நா ராமுதாண்டா…இன்னைக்கு நம்மளோட படிச்சவங்கள்லாம் எங்கெங்கேயோ பிரிஞ்சு போயிருக்கலாம்…நாமெல்லாம் ஒண்ணா இருந்தப்போ, நம்மள தினந்தோறும் சந்தோஷப் படுத்தினவன் அவன்தாண்டா…நம்ம கூடவே அவன எடுபிடிமாதிரி வச்சிருந்தோமே, அதையெல்லாம் நினைக்காம அலைஞ்சானே? மறந்திட்டியா? எங்க பாட்டி செத்தப்போ அம்புட்டுக் காரியமும் செய்தவன் அவன்தாண்டா…நா தீப்பந்தம் பிடிச்சிட்டுப் போகைல நீ கூட உங்க வீட்டுத் திண்ணைல நின்னுக்கிட்டு சிரிக்கல…அப்பக்கூட உன்னை “போடா வெண்ணன்னு” நா திட்டினேன்…ஞாபகமிருக்கா…நாம சினிமா சினிமான்னு அலைஞ்சப்போ நமக்காக கூட்டத்துல இடிச்சுப் பிடிச்சு, தலை மேலெல்லாம் ஏறி அந்தப் பொந்துக் கவுன்டருக்குள்ள போய் டிக்கெட் எடுத்திட்டு முத ஆளா வருவானே? அந்தக் காட்சி என் கண் முன்னால நிக்குதடா…வீட்டுக்கு வீடு எம்புட்டுத் தண்ணி எடுத்து விட்டிருப்பான்? எல்லாரும் போடுற பழைய சோத்தத் தின்னுட்டுத் திரிஞ்சவனை இன்னும் அப்டியே வச்சிருக்கிறது பெரிய பாவம்டா…” “அவன அவுங்க வீட்டுலயே கை விட்டுட்டாங்க…அதனால வேறே வழில கெட்டழிஞ்சு குடி கூத்தின்னு போகாம நம்ம கூடவே இருக்கானேன்னு சந்தோஷப்படு…தெரு மக்கள் இன்னும் அவன விடாம ஆதரிச்சிட்டு இருக்காங்களேன்னு சந்தோஷப்படு…” – முத்துச்சாமி சொல்வது சரியாயிருக்குமோ என்றுதான் எனக்கும் தோன்றியது. ஏனென்றால் அவன்தான் கூடவே இருப்பவனாயிற்றே? எனக்கு எங்கள் தெருவுக்குள் நுழைந்ததுமே உற்சாகம் கரைபுரண்டு ஓட ஆரம்பித்துவிட்டது. கோயிலைச் சுற்றியதான மூன்று தெருக்களில்தான் எத்தனை மாற்றங்கள்? ஒரு வீடு கூட அந்தப் பழைமை அழகோடு காணப்படவில்லையே? நாங்கள் குடியிருந்த வீடுகளின் வடுக்களைக் கூடக் காணவில்லையே? வீட்டு வாசல் சாக்கடை மட்டுமே அப்படியே இருந்தது. அரசாங்கம் எதுவுமே செய்யவில்லை என்பதற்கு அதுவே சாட்சி. தினமும் பொழுது இருட்டின வேளையில் உட்கார்ந்து அரட்டை அடிக்கும் குழாயடி என்னவாயிற்று? அருகிலே சும்மாக் கிடக்கும் பாழ் என்னவாயிற்று? இரண்டு தெருக்களை வீடுகளின் பின்புறம் இணைக்கும் முடுக்கு என்னவாயிற்று? அந்த முடுக்குக்குள் ஓடிய திருடர்களை யார் என்று தெரியாமலே ஓடிப் பிடித்து பின் சட்டையைப் பிடித்து இழுத்தானே அண்ணா…அவர்கள் அவன் மண்டையில் உருட்டுக் கட்டையால் தாக்கினார்களே! கீழே எறிந்து விட்டுப் போன அந்த உருட்டுக் கட்டை இன்னும் அங்கேயே கிடக்குமா? திருக்கார்த்திகைக்கு டயரைக் கொளுத்தி நெருப்பைச் சுழற்றிக்கொண்டே இருளைக் கிழித்துக் கொண்டு ஓடுவோமே. இன்றும் அந்தப் பாழ் முடுக்கில் அப்படி ஓட முடியுமா? நவராத்திரி கொலுவுக்கு எத்தனை பேர் போனாலும் இல்லை என்று சொல்லாமல் கை நிறைய அள்ளிக் கொடுக்கும் அந்த சுண்டல் மாமி இன்னும் இருப்பாளா? ஆற்றில் ஊற்று மட்டுமே இருந்த தண்ணீர் ஓடாத வேளையில் ஊர் ஜனம் குளிக்க வென்று நூறடி நீளம் பத்தடி அகலத்தில் ஓடு கால் போடும் அந்த தேசிகாச்சாரியைப் பார்க்க முடியுமா? அங்கங்கே பட்டாக்கல் போட்டு, துளியூண்டு சோப்பை அந்தக் கல்லில் ஈஷி அதில் பத்துப் பதினைந்து துணிகளைக் கசக்கி வெளுக்க வைக்கும் பாட்டிமார்களை இன்று பார்க்க முடியுமா? இரு மருங்கும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகையில் அது என்னை ஒன்றும் செய்யாது, இது என் ஆறு, என்னை அறிந்த ஆறு, நான் பழகின ஆறு என்று எதிர்க்கரைக்குச் சென்று சுற்றிச் சுழன்றிருக்கும் பாம்பு பல்லிகளையும் பொருட்படுத்தாது தாழம்பூ பறித்து வருவோமே அது இன்று முடியுமா? “அடேயப்பா…என்னென்னவோல்லாம் சொல்றடா நீ…எனக்கு அதெல்லாம் அவ்வளவா ஞாபகம் இல்லை…”- விகல்பமின்றிச் சொன்னான் முத்துச்சாமி. “எது இருக்கோ இல்லையோ, வெங்காச்சம் இருக்கானில்ல எனக்கு அது போதும்…ஊருக்கு வந்ததுக்கு அடையாளமா அவனப் பார்க்கணும்…நாள்பூரா விளையாட்டு விளையாட்டுன்னு எங்க கூடவே கிடப்பானே…அத மறக்க முடியுமா?” “அதோ வந்துட்டாண்டா உன்னோட வெங்காச்சம்….போ…போ…போய் கட்டிக்கோ…”தூரத்தில் கையைக் காண்பித்தான் முத்து. நான் பார்வையை வீசினேன். அதோ வெற்று உடம்போடு, தோளில் துண்டோடு ஒல்லியாய் வருகிறானே அதுதான் அவனா? “டேய் வெங்காச்சம், நில்லுடா உன்னப் பார்க்கத்தான் வந்திட்டிருக்கோம்…” – எங்கோ சந்தில் திரும்பப் போன அவனை சத்தம் கொடுத்து நிறுத்தினான் முத்து. நான் அவனையே உற்றுப் பார்த்தேன். அதே ஒன்றரைக்கண். யானைக் காதுகள். சப்பை வாய். சற்றுக் கட்டையான இடது கை. அதை இடுப்பில் மடக்கி வைத்துக் கொண்டு வலது காலை முன்னே நீட்டி சற்றே தலையை கோணக்கச் சாய்த்துக் கொண்டு பார்க்கும் பார்வை. நெற்றியில் மிளிரும் பட்டை விபூதி. அதில் நடுவே குழைத்து இட்டிருக்கும் சந்தனம். அதன் மேல் பதித்திருக்கும் குங்குமம். சந்தேகமேயில்லை அது வெங்காச்சம்தான். “டேய் என்னைத் தெரில…..” “யாரு?” “நல்லாப் பாரு தெரியும்…” “;நல்லாப் பார்த்துத் தெரியறதுக்கு நீங்க என்ன சிவனா?” “சிவன் இல்லடா…பெருமாளு…பெருமாளு…அதாண்டா ராமசாமி…ராமு என்னைத் தெரில…” “தெரிலயே….” வேண்டுமென்றே சொல்கிறானோ? எனக்குச் சந்தேகம் வந்தது. “என்னடா, திரும்பத் திரும்பத் தெரிலங்கிறே? கிட்டி முட்டி, கிட்டி முட்டி, கிட்டி முட்டி….இப்ப ஞாபகம் வருதா? ஈஸ்வரன் கோயில் சமாராதனைக்கு வீடு வீடாப் போய்ச் சொல்லிட்டு வருவமே…நீ கூட வாயால கிட்டி முட்டி அடிப்பியே…மறந்திட்டியா?” வெங்காச்சம் பிரம்மமாய் நின்றான். “என்னடா இப்டி மறந்திட்டே? நாமெல்லாம் எத்துக் கம்பு விளையாடுவமே? கோயில் வாசல்ல ஆரம்பிச்சு, பாண்டியன் டாக்கீஸ் தாண்டி, சென்றாயன் மலை வரை போவோமே…ஆட்டம் முடியாம எத்துக் கம்பு பறந்திட்டேயிருக்குமே…யாரையும் அவுட்டாக்க முடியாம நீ கூட அழுவியே…அது கூட ஞாபகம் இல்லையா?” “செதுக்குச் சப்பா விளையாண்டு எல்லாப் புளியமுத்துக்களயும் நீயே அள்ளிட்டுப் போவியே?” @ஏன் இப்படி நிற்கிறான் வெங்காச்சம்? உண்மையிலேயே அவனுக்கு இதெல்லாம் ஞாபகம் வரவில்லையா? அல்லது நடிக்கிறானா? நடிக்கக் கூடத் தெரியுமா அவனுக்கு? அவன் என்னையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். என்ன இது வெறித்த பார்வை? என்னவோ தோன்ற நான் என்னையே ஒரு முறை குனிந்து பார்த்துக் கொண்டேன். “வெங்காச்சம், அட…வெங்காச்சம்…” – பிடித்து உலுக்கினேன். அவன் பார்வை என் டிரஸ்ஸிலும,; கால் ஷ{விலும் படிந்திருந்தது. “உம்…உம்…என்ன ஸார்…?”- விழிப்பு வந்தவனைப்போல் என்னவோ கேட்டான். “என்ன, ஸாரா? என்னடாது புதுசா? அதெல்லாம் ஒண்ணும் வேணாம். முடுக்கு ராமசாமின்னே கூப்பிடு. அவன் பேசாமல் இருந்தான். எனக்கு இன்னும் அவனிடம் அந்தப் பழய தன்மை வராதது வருத்தத்தை அளித்தது. பேச்சை மாற்றினேன். “அது சரி வெங்காச்சம்…அந்தப் போந்தாக் குழி இன்னும் இருக்கா? விளையாடுறதுண்டா?” நான் சொன்னதுதான் தாமதம். கடகடவென்று சிரிக்க ஆரம்பித்து விட்டான் அவன். அதே வேட்டுச்; சிரிப்பு! அத்தனை தீப்பெட்டிப் படங்களையும், தனதாக்கி ஜெயித்து, கைகளில் கொள்ளாமல் அடுக்கிக்கொண்டு மற்றவர்களைப் பார்த்துக் கெக்கலியிடும் அதே வெடிச் சிரிப்பு! “போந்தாக் குழி…போந்தாக் குழி….போவமா முத்து…வர்றியா…?” “அருகிலிருந்த முத்துச்சாமி அதிர்ந்து போனான். “என்ன நானா? அடிச்சன்னா? ஏண்டா என்னையென்ன உன்ன மாதிரி வெட்டிப் பயன்னு நினைச்சியா? பிச்சிறுவேன் தாய்ளி….” – கையை ஓங்கிக் கொண்டு பாய்ந்தான.; நான் அவனைத் தடுத்தவாறே “நா வரட்டா வெங்காச்சம்….” என்றேன். ஊரிலிருந்து கிளம்பும் போதே இதே நினைப்பில் பயணித்தவன் நான். நாள் தவறாமல் விளையாடும் விளையாட்டு. தெருவில், கோயில் சுற்று வெளிச் சுவரில், ஆற்றுப் படுகையில், அரசமரத்தடிப் பிள்ளையாருக்குப் பின்புறம், சவுண்டிக் காரியம் செய்யும் சாஷ்டாங்கக் கல் சுவற்றில், என்று எத்தனை இடங்கள் அதற்குத்தான். எல்லாமும் எங்களுக்கு என்று சாசனம் செய்யப்பட்டதுபோல. தரையைச் சமனப்படுத்தி, தண்ணீர் தெளித்து இறுக்கி, குழி குழியாய்ச் சிறிதும் பெரிதுமாய் வட்ட வட்டமாய்த் தோண்டி சாய்வுக்; கிண்ணம் போல் வழித்து மெழுகி, எல்லாக் குழிக்கும் தலைமையாய் அந்தப் போந்தாக் குழி. குழியின் எல்கைக் கோட்டிலிருந்து ஏழடி தூரத்தில் ஒரு கோடு. அந்தக் கோட்டுக்கு அந்தப் பக்கம்தான் பாதம் பதிய வேண்டும். அதைத் தொடக் கூடாது. அங்கிருந்து குண்டுகளை வீச வேண்டும். கண்ணாடி கோலிக் குண்டுகள் சேர்த்தியில்லை. அத்தனையும் இரும்பு பால்ரஸ்கள். அதன் தலைமையாக கையில் ஒரு பெரிய குண்டு. எத்தனை ஜாக்கிரதையாய் நிற்பவன் விளையாடுபவனிடம் சொல்லும் குண்டை, அது நின்றிருக்கும் குழியை, சுட்டிக் காட்டி அடிக்கச் சொன்னாலும், அடிக்கும் குண்டோடு சென்று இழுத்துக் கொண்டு, வழுக்கிக் கொண்டு நேரே போந்தாக் குழிக்குள் சென்று விழுந்து விடும். ஆள் அவுட்! நின்று கொண்டிருந்தவன், அல்லது வர்கள் எத்தனை தீப்பெட்டிப் படங்களை பெட் செய்திருக்கிறார்களோ அதை அவுட் ஆனவன் சிவனே என்று கொடுத்து விட்டு நகர வேண்டியதுதான். ஒருவனுக்கோ அல்லது பலருக்குமோ பெட் கட்டுவதும், வெல்வதும் அவனவன் சாமர்த்தியத்தைப் பொறுத்த விஷயம். போந்தாக் குழிக்குள் விழாமல் குறிப்பிட்ட குண்டை மட்டும் அடிப்பவன் எத்தனை நேரம் வேண்டுமானாலும் விளையாடலாம், ஜெயிக்கலாம், ஜெயிக்கலாம், ஜெயித்துக் கொண்டேயிருக்கலாம். அந்தப் போந்தாக் குழி அப்படி விட்டால்தானே? ஏதோ மாயமந்திரம் செய்தது போல் அடிக்கும் பால்ரஸோடு குண்டையும் சேர்த்துத் தன்னிடம் இழுத்துக் கொள்ளும் வல்லமை அதற்கு உண்டு. அந்த விளையாட்டின் சூட்சுமமே அந்தக் குழிகளை அந்த வாகில் இழைத்து இழைத்து வடிப்பதுதான். நல்ல பிள்ளை போல் விரித்து வீசும் பால்ரஸ் குண்டுகள் ஒவ்வொரு குழியாய் போய் சமர்த்தாய் உட்கார்ந்து கொள்ளும்தான். குறிப்பிட்ட குண்டை அடிக்கும் போதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்து போகும். அதற்கு மிகுந்த உருட்டல் சூட்சுமம் வேண்டும். கையை மென்மையாக இடப் புறமோ வலப் புறமோ உடம்போடு வளைத்து கட்டத்திற்கு உட்பட்ட குறிப்பிட்ட இடத்தில் பெரிய குண்டை மெதுவாக இறக்கி அது பதவாகமாய் உருண்டு சொல்லப்பட்ட பால்ரஸோடு போய் குழியில் அதனை மெல்லத் தொட்டு அப்படியே நின்று கொள்ளுவது எல்லாருக்கும் கை வந்த கலையாய் என்றுமே இருந்ததில்லை. இந்தக் கவின் கலையில் கைதேர்ந்தவன் வெங்காச்சம்தான். அவனுக்கு மட்டும் அது என்னவோ அப்படிப் படிந்து போயிற்று. எல்லோரும் பள்ளிக்குப் போயிருக்கும் நேரத்தில் அவன் அந்தப் போந்தாக் குழிகளோடுதான் உறவாடிக் கொண்டிருப்பான். போந்தாக் குழி எனக்குக் கட்டுப்பட்டது. நான் அதற்குக் கட்டுப்பட்டவன். பேசாமல் இரு என்றால் இருக்கும். இழுத்துக் கொள் என்று அடுத்தவன் விளையாடும் போது மந்திரம் போட்டால் குழிக்குள் தள்ளிவிடும். “வெங்காச்சம், எங்கிட்டத் தீப்பெட்டிப் படம் இல்லையே. பரவாயில்லியா?” “அதெல்லாம் இப்ப இல்ல…காசுதான்…” “ஓ! காசு வச்சா? எம்புட்டு…?” “எம்புட்டுமோ? ஆனா நா எட்டணாதான் வப்பேன்….தோ அம்பது காசு….” “அட! என்னாச்சு வெங்காச்சத்திற்கு? ஏனிப்படித் தோற்கிறான்?” நான் புரியாமல் பார்த்தேன். “வெங்காச்சம், என்னடா…? என்ன? “ பதில் இல்லை. “என்ன பொய்யாட்டமா? டாய்…உண்மையைச் சொல்லு…பொய்தான?” வெங்காச்சம் தலையைக் குனிந்து கொண்டான். வெட்கப்பட்டதுபோல் இருந்தது அவன் செய்கை. “நீங்க ஆடுங்க…” “பார்றா….பேர் சொல்லிக் கூப்பிட மாட்டியா? முடுக்கு ராமசாமின்னு சொல்ல மாட்டியா?” “டேய் முடுக்கு… டேய் முடுக்கு…டாய் ராமசாமி ஆட்டத்துக்கு வராம ஓடுராண்டா…”பழகிப் போன, மனதை விட்டு அகலாத அந்தப் பழைய குரல். வெங்காச்சத்திற்கு ஆட்டத்தில் சகஜ நிலை இல்லை. அவனை எப்படி ஒன்ற வைப்பது? நானும் சேர்ந்து எப்படி ஒன்றுவது? அடக் கடவுளே!! அந்த விளையாட்டென்றால் உயிர் எனக்கு. படிக்கும் காலத்தில் பழியாய்க்; கிடப்பேன் அங்கே. தெருவுக்குத் தெரு எங்கு நடந்தாலும் ஓடி விடுவேன். படிப்பு பிற்பாடுதான். டிராயர் நிறையத் தீப்பெட்டிப் படங்கள் முண்டிக் கொண்டிருக்கும். அத்தனையும் ஜெயித்துச் சேர்த்தது. சரிக்குச் சரியாய் போட்டியாளர் இருந்தால் வெறியாகிவிடாதா? வெங்காச்சம்தான் அன்று நேர் போட்டி! அவனை வெல்வது அத்தனை சாதாரணமில்லை. அதிகம் போனால் ஒன்றிரண்டு விளையாட்டில்தான் இருக்கும்ஃ அது அவன் அசந்த வேளை. பாவம்! ஊருக்கெல்லாம் தண்ணீர் சுமப்பவன். ஒரு வீடு வி;டாமல் எடுபிடி பார்ப்பவன். ஆனாலும் ஜெயிப்பதில் முதல்வன் அவன்தான். அந்த வெங்காச்சமா இது? ஏன் இப்படித் தோற்கிறான். உடம்பு கிடம்பு சரியில்லையா? வயசாகி விட்டதால் பழக்கம் போயிற்றா? என்னவாயிற்று அவனுக்கு?
“வெங்காச்சம், இந்தா இந்தப் பைசாவை நீயே வச்சிக்கோ…இது நீ கொடுத்தது…இந்தப் பணம் நா கொடுக்கிறது…”
மகிழ்ச்சி பொங்க அதை வாங்கிக் கொண்டான் வெங்காச்சம்.
மறுநாள் நான் ஊருக்குக் கிளம்பியபோது அரசமரத்தடி பிள்ளiயார் முட்டுச் சந்து சுற்றுச் சுவரில் பெரிய கூட்டம். கையில் சுற்றி முதுகில் இறக்கிய தோல் பையோடு அந்தக் கூட்டத்தை நெருங்கினேன். அங்கே அந்தப் போந்தாக் குழி. வலதும் இடதுமாக எட்டு விளையாட்டு வீரர்கள். குழிக்கு நேர் எதிரில் எல்லைக் கோட்டில் வெங்காச்சம். அரவமில்லாமல் மெல்லப் போய் நின்றேன். ஆள் மாற்றி ஆள் பந்தயமாய் வைக்கும் காசுகளெல்லாம் அவசர அவசரமாக வெங்காச்சம் கைக்கு மாறிக் கொண்டிருந்தன. மந்திரம் போட்டது போல் குண்டுகள் போய்ப் போய் விழுந்தன. எட்டுக் குழிக்குள் எந்தக் குழி சொன்னாலும் வெங்காச்சம் வீசும் குண்டுகள் லாவகமாய் மிகச் சாகசமாய் குறிப்பிட்ட பால்ரஸோடு போய் பகுமானமாய் உட்கார்ந்து கொண்டது.
எந்தக் குழியைச் சொன்னால் போந்தாக் குழிக்குள் சேர்த்து இழுத்துக் கொண்டு போகும் என்று துல்லியமாக அவனுக்கு மட்டும் தெரிந்திருந்தது. ஆனால் எல்லாக் குழிகளும் என் லாவகத்திற்குள், என் கைக்குள் அடக்கம் என்ற மந்திர சக்திக்குக் கட்டுப்பட்டது போல் அவன் குண்டு வீசிய முறை என்னை பிரமிக்க வைத்தது. இதை ஏன் அவன் நேற்று விளையாடவில்லை? விளையாடவில்லையா? விளையாடிக் காண்பிக்கவில்லையா? அந்த வெங்காச்சமா இது? இவனா நேற்று அப்படித் தோற்றது? நீங்கள்லாம் எங்கெங்கேயோ போயிட்டீங்க…! நா இப்டியேதான இருக்கேன்!!நேற்று அவன் சொன்ன வார்;த்தைகள். இப்போது உறுத்துகிறது.
“போதுங்க ஸார், போவோம்…” – வெங்காச்சத்திற்கு இனி நான் இப்படித்தானா?
அவன் இனித் தன்னோடு விளையாட மாட்டான். அப்படியே விளையாடினாலும் தன்னை ஜெயிக்க மாட்டான். அந்தப் பழைய நாட்கள் இனிக் கிடைக்கவே போவதில்லை! நெஞ்சில் ஏறிய சுமையோடு தயக்கத்துடனேயே நடக்க ஆரம்பித்தேன் நான். ——————————–
- உலகிலே பிரமிக்கத் தக்க ஜப்பானின் மிகப்பெரும் ஊஞ்சல் பாலம்
- இந்த வார்த்தைகளின் மீது
- கணிதன்
- ஆறாது சினம்
- தங்கம் மூர்த்தி கவிதைகள் — ஒரு பார்வை ‘ என் பண்டிகையின் நாட்குறிப்பிலிருந்து … ‘ தொகுப்பை முன் வைத்து …
- அவுஸ்திரேலியாவில் அனைத்துலகப் பெண்கள் தின விழா
- தொடுவானம் 110. தமிழகத்தில் திராவிட ஆட்சி.
- கனவு நீங்கிய தருணங்கள்
- பால்
- “போந்தாக்குழி”
- தமிழினியின் சுயசரிதை: “ ஒரு கூர்வாளின் நிழலில் “
- சொல்வது
- நீருக்குள் சென்னை காருக்குள் என்னை…(32மணிநேரம்)
- தமிழ் ஸ்டுடியோ நடத்தும் படத்தொகுப்பு பயிற்சிப் பட்டறை
- இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி எண் : 156 நாள் : 20-3-2016, ஞாயிறு காலை 9. 30 மணி
- செல்லுலாயிட் மேன் திரையிடல் – பி.கே.நாயர் நினைவாக… நாள்: 12-03-2016, சனிக்கிழமை