தொடுவானம் 115. சிங்கப்பூர் பயணம்.

This entry is part 3 of 17 in the series 10 ஏப்ரல் 2016

தொடுவானம்

டாக்டர் ஜி. ஜான்சன்

115. சிங்கப்பூர் பயணம்.

இரண்டாம் வருடத் தேர்வுகள் அனைத்தும் முடிந்து விட்டதால் ஒரு மாதம் விடுமுறை விடப்பட்டது.கல்லூரி மீண்டும் தொடங்கும்பொது முடிவுகள் தெரியும்.
அப்பா என்னை சிங்கப்பூர் வரச் சொல்லி எர் இந்தியாவில் பணம் கட்டிவிட்டார். நான் விடுதியிலிருந்தெ பிரயாணத்துக்குத் தேவையானவற்றை முன்பு சிங்கப்பூரிலிருந்து கொண்டு வந்திருந்த சூட் கேசில் அடுக்கிக்கொண்டு சென்னை புறப்பட்டேன். சம்ருதி, டேவிட் ராஜன், பெஞ்சமின் ஆகியோர் சிங்கப்பூர் சட்டைகள் கொண்டுவரச் சொன்னார்கள். அப்போதெல்லாம் அந்த சட்டைகள் மிக அழகாக இருக்கும்.
நேராக தாம்பரம் சென்று அத்தை வீட்டில் தங்கினேன். அத்தைக்கு அதிக மகிழ்ச்சி. அவருடைய அண்ணனிடம் செல்லப்போகிறேன் அல்லவா. அண்ணனிடமிருந்து சிங்கப்பூர் பொருள்கள் கிடைக்கும். அத்தை மகள் நேசமணிக்கும் தலை கால் புரியவில்லை. அப்போதெல்லாம் சிங்கப்பூர் செல்வது பெரிய காரியம். அவ்வளவு எளிதில் தமிழ் நாட்டவர் சென்றுவிட முடியாது. நிறைய செலவாகும்.அதிலும் விமானத்தில் செல்வதை நினைத்துக்கூட பார்க்கமுடியாது.
அன்று மாலை வெரோனிக்கா வீடு சென்றேன். அவள் பி.எஸ். சி. தாவரவியல் பாஸ் செய்துவிட்டு எம்.எஸ்.சி.பிரிவில் முதல் ஆண்டில் உள்ளாள்.இதிலும் மூன்று ஆண்டுகள் பயில வேண்டும். என்னைக் கண்ட அவளுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.அவளுடைய பெற்றோரும் அன்போடு வரவேற்றனர். சிங்கப்பூர் செல்வது பற்றிக் சொன்னேன். வாழ்த்து தெரிவித்தனர்.
அவளை அழைத்துக்கொண்டு மெரினா கடற்கரை சென்றேன். அங்கு கடல் மணலில் அமர்ந்து வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம். வருங்காலம் எப்படி இருக்கும் என்பது பற்றி கற்பனை செய்தோம். இப்போது படிப்பு முடிக்க எனக்கும் இன்னும் இரண்டு வருடங்கள். அவளுக்கும் இரண்டு வருடங்கள். ஒரே நேரத்தில்தான் முடிப்போம். அதன்பின்பு என்ன செய்யலாம் என்று சிந்தித்தோம். அதை நிச்சயமாகக் கூற இயலாதுதான். அவளுக்கு சிங்கப்பூரிலிருந்து என்ன வேண்டும் என்று கேட்டேன். நீங்கள் பத்திரமாகத் திரும்பினால் போதும் என்றாள். ஒரு அழகான சேலை வாங்கி வருவதாகக் கூறினேன். உண்மையில் நான் தனியாக அவளுக்கு சேலை வங்க முடியாதுதான். அப்பா கொடுத்தனுப்பும் சேலைகளில் ஒன்றை அவளுக்குத் தந்துவிடலாம். புஹாரியில் பிரியாணி உட்கொண்டோம். இரவு திரும்பி அவளை வீட்டில் விட்டுவிட்டு அத்தை வீடு சென்றேன்.
நான் சிங்கப்பூரிலிருந்து வந்தபோது வயது பதினெட்டு. தற்போது வயது இருபத்திரண்டு. நான் வரும்போது சிங்கப்பூரின் மைனர் குடிமகனாக இருந்தேன். தற்போது நிரந்தரக் குடிமகனாகப் பதிவு செய்துகொள்ள அப்பா அங்கு அழைத்திருந்தார். அதற்கான பயணச்செலவை அங்கேயே கட்டிவிட்டார். நான் சென்னை எக்மோரில் உள்ள ஏர் இந்தியா அலுவலகத்தில் பயணச் சீட்டை நேரில் வாங்கிக் கொள்ளலாம். காலையிலேயே புறப்பட்டேன்.உடன் அத்தை மகன் பாஸ்கரனும் வந்தான். அவன் எனக்கு இளையவன்.” அத்தான்…அத்தான் ..” என்று பாசத்துடன் அழைப்பான்.
எனக்கு இந்தப் பிரயாணத்தில் பெரும் மகிழ்ச்சி. நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் செல்கிறேன்…ஒரு மருத்துவ மாணவனாக! மீண்டும் நண்பர்களைக் காணலாம்! ஜெயப்பிரகாசம், கோவிந்தசாமி, பன்னீர் செல்வன் ஆகியோரோடு கதைகதையாகப் பேசலாம். அவர்கள் யாருடனும் கடிதத் தொடர்பு வைத்துக்கொள்ளவில்லைதான். அதனால் என்ன? உற்ற நண்பர்கள்தானே? நாங்கள் எப்போதும் நண்பர்களாகவேதான் இருப்போம்.
அதோடு லதாவையும் பார்க்கலாம்! திடீரென்று அவள் முன் நின்றால் எப்படி வியந்துபோவாள்! அவளால் அதை நம்பவே முடியாது! எவ்வளவு மகிழ்ந்து போவாள்? கல்லூரியில் புதுத் தோழிகள் உள்ளனரா என்று நிச்சயம் கேட்பாள். வெரோனிக்கா பற்றி அவளிடம் சொல்லக்கூடாது. வருந்துவாள்!
அப்பா எப்படி இருப்பார்? மாறியிருப்பாரா அல்லது அப்படியேதான் இருப்பாரா? லதாவைப் பார்த்துவிடுவேன் என்று இன்னும் பயப்படுவாரா? அல்லது பார்த்தால்தான் என்னவென்று பாராமுகமாக இருப்பாரா? என் சிந்தனைகள் உண்மையில் சிறகடித்துப் பறந்தன!
சிரமம் ஏதுமின்றி பிரயாணச் சீட்டு கிடைத்தது. இன்னும் இரண்டு நாட்களில் பயணம்.விடுமுறை முடியும்வரை சிங்கப்பூர்தான். அண்ணனுக்கும் அம்மாவுக்கும் கடிதம் எழுதித் தெரிவித்தேன்.ஊர் சென்று வரலாம். ஆனால் விடுமுறை நாட்கள் குறைந்துபோகும். அதனால் இந்த முடிவு.
இது எனக்கு இரண்டாவது விமானப் பிரயாணம். வரும்போதும் ஏர் இந்தியாவில்தான் வந்தேன். அப்போதெல்லாம் ஏர் இந்தியா மிகவும் பிரபலமான விமான நிறுவனமாகும் அதன் மகாராஜா சின்னமும் பிரபலமானது!
தாம்பரத்திலிருந்து மீனம்பாக்கம் அருகில் இருந்ததால் மின்சார இரயில் ஏறி அங்கிருந்து டாக்சியில் விமான நிலையம் சென்றோம்.அத்தை வீட்டிலிருந்து அனைவரும் உடன் வந்தனர்.
அது பகல் நேரப் பயணம். பயணம் முழுதும் வங்காள விரிகுடா மேலேதான். மேகங்களின் மேலே பறந்தாலும் சில வேளைகளில் கீழே வெகு தொலைவில் கடல் தெரிந்தது.
சரியாக மூன்றரை மணி நேரத்தில் பாய லேபார் விமான நிலையத்தில் தரை இறங்கியது. அப்பாவும் சிதம்பரம் சித்தப்பாவும் காத்திருந்தனர். நண்பர்கள் யாரும் வரவில்லை. அப்பா அவர்களிடம் சொல்லவில்லை போலும். இருவரும் எனக்குக் கை குலுக்கி வரவேற்றனர்.சிதம்பரம் சித்தப்பா பாரதிதாசன் தமிழ்ப் பாடசாலையில் பணியாளராக உள்ளார். அப்பா அங்குதான் தமிழ் ஆசிரியர். முன்பு இருந்த இரத்தினம்தான் இன்னும் தலைமையாசிரியர்.
வாடகைப் ஊர்தி மூலம் புறப்பட்டோம். தேர்வுகள் பற்றிக் கேட்டார் அப்பா.நான் பரவாயில்லை என்றேன்.ஊரில் எல்லாரும் நலமா என்று கேட்டார் சிதம்பரம் சித்தப்பா. நலம் என்று தலையாட்டினேன்.
அப்பா புது வீட்டில் குடியிருந்தார். அது அரசாங்கத்தின் அடுக்கு மாடி வீடு. அதில் இரண்டாவது மாடியில் தங்கியிருந்தார். அந்த வீட்டை அப்பா வாங்கியிருந்தார். வசதியானது. மூன்று அறைகளும் ஒரு கூடமும் கொண்டது. கூடத்தில் நான் விட்டுச்சென்ற என்னுடைய மேசை அப்படியே இருந்தது.நான் பள்ளியில் பரிசு பெற்ற நூல்களும் அப்படியே இருந்தன. சமையல் கூடம் இருந்தாலும் அப்பா கடையில்தான் சாப்பிடுவது தெரிந்தது. தேநீர் மட்டும் கலக்கிக்கொள்வார் போலும்.உணவு அருந்தும் மேசையின்மேல் ரொட்டி, வெண்ணெய், ஜேம் இருந்தன. காலையில் அவற்றைப் பயன்படுத்துவார் போன்றிருந்தது. அல்லது எனக்காகவும் வாங்கி வைத்திருக்கலாம்.
முதல்முதலாக அப்பாவின் மீது இரக்கம் கொண்டேன். அண்ணனும் நானும் படிப்பதற்காகவே இப்படி தனிமையில் இருந்து அவர் செய்துவரும் தியாகம் அளப்பரியது. வாழ்கையின் பெரும் பகுதியை இப்படி உற்றார் உறவினருடனும் சொந்த ஊராரிடமும் இல்லாமல் கடல் தாண்டி வந்து தனிமையில் காலத்தைக் கழித்துவிட்டவர்கள் ஏராளம். திருமணம் ஆனபின்பு கூட குடும்பத்தை ஊரில் விட்டுவிட்டு பணம் சம்பாதித்து சொத்து சேர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இங்கே வாழ்ந்து வருகிறார்கள். வேலையில் ஓய்வு பெற்ற பின்பு வயதான நிலையில் ஊர் திரும்புகின்றனர். போதுமான நிலங்கள் வாங்கியிருந்தால் மீத நாட்களை மகிழ்ச்சியுடன் கழிக்கின்றனர். இதுதான் இங்குள்ள பல தமிழர்களின் வாழ்க்கை முறையாக உள்ளது.
அப்பாவைப் பொருத்தவரை அவர் அதிக நிலம் வாங்கவில்லை. அதற்கு மாறாக அவருடைய சம்பாத்தியம் அனைத்துமே அண்ணனுக்கும் எனக்கும்தான் செலவாகிறது. அண்ணன் ஒரு பட்டதாரியாகிவிட்டார். இனி நான் மருத்துவம் படித்து முடிக்கும் வரை அப்பா இந்த தனிமை வாழ்கையை வாழ்ந்துதான் ஆகவேண்டியுள்ளது! அவர் மீது பாவப்பட்டேன்! அப்பாவின் இலட்சியம் உயர்ந்தது. தன்னுடைய இரண்டு மகன்களும் பட்டதாரிகளாக வேண்டும் என்பதே அவருடைய உயர்ந்த இலட்சியமாக இருந்துள்ளது. ஒரு தந்தைக்கு இத்தகைய இலட்சியம் இருந்தால் மட்டும் போதாது. பிள்ளைகள் நன்றாகப் படிக்கவும் வேண்டும். அந்த வகையில் அண்ணனும் நானும் அவருடைய கனவை நனவாக்கிவிட்டோம்.
அலமாரியில் எனக்கு புது சட்டைகள் வாங்கி அடுக்கி வைத்திருந்தார். தேவையான முழுக்கால்சட்டைகளை தையல் கடையில் தைத்துக்கொள்ளலாம்.
அந்த அடுக்குமாடி வீடு மூன்று அடுக்குகள்தான் கொண்டது. அது ஹெண்டர்சன் மலை அடிவாரத்தில் ரெட் ஹில் சாலை தாண்டி தை ஹாங் பிஸ்கட் பேக்டரி செல்லும் வழியில் இருந்தது. அங்கிருந்து அப்பா பணிபுரியும் பாரதிதாசன் தமிழ்ப் பள்ளிக்கு நடந்தே சென்றுவிடலாம்.
நகர சபை வரிசை வீடுகள் அப்படியே இருந்தன. அவற்றில் குடியிருப்பவர்கள் அனைவரும் தமிழர்கள்தான். அது ஒரு சிறு காலனி போன்றது. அங்குதான் பாரதிதாசன் தமிழ்ப் பள்ளி இருந்தது. அதன் பின்புறம் பெரிய காற்பந்து திடல் இருந்தது. அங்கு மாலையில் தமிழ் இளைஞர்கள் சீருடை அணிந்து காற்பந்து விளையாடுவார்கள். ஜெயப்பிரகாசம் வீடு பள்ளியின் அருகில் இருந்தது.
ஹெண்டர்சன் மலையில் நகரசபை வரிசை வீடுகளும் அப்படியே இருந்தன. அங்கு கோவிந்தசாமி இருந்தான். மலை மீது ஒரு பக்கத்தில் நகரசபை வீடுகளும் மறுபக்கத்தில் கம்பத்து வீடுகளும் அப்படியே இருந்தன. அங்கு செல்லப்பெருமாள் மாமாவும், இரத்தினசாமி மாமாவும் ஒரே வீட்டில் குடியிருந்தனர். அவர்களின் வீட்டின் அருகேதான் லதாவின் வீடும் இருந்தது. நான் இன்னும் மலைப் பக்கம் செல்லவில்லை.அங்கு செல்ல எனக்கு தயக்கமாக இருந்தது. லதாவை நான் மறந்திருப்பேன் என்று அப்பா எண்ணியிருக்கலாம். எம்.பி.பி.எஸ். மாணவனா இன்னும் அவளை நினைத்துக்கொண்டிருப்பான் என்று கூட அவர் நினைத்திருக்கலாம். இந்நேரம் வகுப்பில் வேறு பெண் தொடர்பு இல்லாமலா போகும் என்றுகூட அவர் கற்பனை செய்திருக்கலாம். அங்கு சென்று லதாவைப் பார்த்தேன் என்றால் அவருக்கு பழையபடி கோபம் வரலாம். அதனால் எதற்கு வீண் பிரச்னை?
அதற்காக நான் லதாவைப் பார்க்காமல் இருப்பதா? அது எப்படி முடியும்? நான் அவளை முன்புபோல் அவள் பணி புரியும் ஹை ஸ்ட்ரீட்டில் சந்திக்க முடிவு செய்தேன்.

( தொடுவானம் தொடரும் )

Series Navigationதினமும் கொஞ்சம் ஜெயகாந்தன்மேல்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *