தினமும் கொஞ்சம் ஜெயகாந்தன்

This entry is part 2 of 17 in the series 10 ஏப்ரல் 2016

2000 ஆம் ஆண்டு. ஜெயகாந்தன் அமெரிக்கப் பயணத்தில் நியூ ஜெர்ஸியில். நண்பர்களுடனான உரையாடல். விழுதுகள் குறுநாவல் குறித்தும் ஓங்கூர்ச் சாமியார் குறித்தும் பேச்சு. ஓங்கூர்ச் சாமியார் இறந்துவிட்டார் என்று தெரிந்ததும் ஜெயகாந்தன் போனாரா என்ற கேள்வி. பொதுவாக யார் சாவுக்கும் போகாத ஜெயகாந்தன் தன் நண்பரும் ஓங்கூர்ச் சாமியாரை அறிந்தவருமான நடிகர் சுப்பையாவுடன் போனதாகச் சொன்னார். ஓங்கூர்ச் சாமியாருக்கு சாவுக்கிரியைகள், அலங்காரம் செய்து வைத்திருந்தார்கள். பார்த்தால் ஓங்கூர்ச் சாமியார் மாதிரியே தெரியவில்லை. உடனே கிளம்பி வந்துவிட்டேன் என்றார். அவர் வாழ்ந்த காலத்தில் அத்தகைய கிரியைகளை ஓங்கூர்ச் சாமியார் விரும்பியதில்லை. இறந்தபின் உடல் மட்டும்தானே அது, உயிர் இல்லையே அதற்கு என்ன கிரியை செய்தாலும் செய்யாவிட்டாலும் உயிருக்கு என்ன பாதிப்பு என்றும் அவரே மறுதரப்புக்கான நியாயத்தையும் சொன்னார். தொடர்ச்சியாக – ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரினை நீக்கிப் பிணமென்றுப் பெயரிட்டு என்று தொடங்கும் திருமூலர் பாடலை முழுமையாக அந்த இடத்தில் பொருத்தமாகச் சொன்னார். ஜெயகாந்தனின் முத்திரையும் தனித்தன்மையும் தெரியும் விதமாக சாதாரண உரையாடலை தமிழ் மரபின் வேரின் ஆழத்துள் கொண்டுவந்து நிமிடங்களில் அந்தப் பாடலில் நிறுத்தினார்.
ஓங்கூர்ச்ச்சாமியாரின் மரணத்துக்குச் சென்றுவந்த பிறகே பிற மரணங்களுக்குச் செல்லாமல் இருக்கிற அவர் செயல்பாடு வலுவானது என்றும் சொன்னார். ஆக – இறந்தபின் இருப்பது உடல். உயிர்களை நேசிக்கும் கலைஞனுக்கு உயிரற்ற உடல்களைப் பார்ப்பதில் விருப்பமில்லை. உயிர்போன பின்னே உற்றார் உறவினர் உடலுக்குச் செய்யும் சடங்குகள் செய்தாலும் என்ன செய்யாவிட்டாலும் என்ன என்ற புரிதலே அவருக்கு இருந்ததாகப் புரிந்து கொண்டோம்.
ஜெயகாந்தன் இறுதிச் சடங்கில் அவருக்கு திருநீறு அணிவிக்கப்பட்டு மதரீதியான சடங்குகள் நிகழ்த்தப்பட்டதாக எழுத்தாளர் பவா செல்லதுரை எழுதியிருந்தார். அதைப் படித்ததும் மேற்சொன்னது நினைவுக்கு வந்தது. கூடவே இதுவும் தோன்றியது. தான் இருக்கும்போதே மற்றவர்களின், தன் குடும்பத்தின் மத நம்பிக்கைகளில் தலையிடாத சுதந்திரம் கொடுத்த ஜெயகாந்தனா இறந்தபிறகு அவற்றை ஆட்சேபித்திருப்பார் என்று எனக்குத் தோன்றியது. ஒரு புன்முறுவலுடன் அந்தத் தன்னுடைய புதிய வேடத்தை அனுமதித்துத் தள்ளி நின்று அந்தக் கிரியைகளை அன்று ஒரு வேடிக்கையாக ரசித்திருப்பார் ஜெகே என்றே நம்புகிறேன். விரதம் இருந்து, மாலை போட்டு, பல வருடங்கள் சபரி மலைக்கு ஜெகே போய்வந்த அனுபவங்களையும் அதற்கான காரணத்தையும் அவரே எழுதிப் படித்த என்னால் அவர் இப்படித்தான் இதை அணுகியிருப்பார் என்றே சொல்லத் தோன்றுகிறது – பி.கே. சிவகுமார்

Series Navigationதமிழக தேர்தல் விளையாட்டுகள்தொடுவானம் 115. சிங்கப்பூர் பயணம்.
author

பி கே சிவகுமார்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *