பிஸ்மார்க் கவிதை எழுதினார்

author
0 minutes, 1 second Read
This entry is part 13 of 17 in the series 10 ஏப்ரல் 2016

நேதாஜிதாசன்


பிஸ்மார்க் கவிதை எழுதி கொண்டிருப்பதாக சொன்னார்கள்
பிரவுனியன் இயக்கம் போல
அவரை பார்க்க செல்ல திட்டமிட்டிருந்தேன்
திடீரென நவீனன் வந்து
என்னை பார்க்க வந்தவர்
தன்னை பார் என சொல்லிவிட்டு சென்றதாக சொன்னார்
ஆனாலும் பயண திட்டத்தை கைவிடும் யோசனை இல்லை
ஜெர்மனிக்கு போக என்னிடம் எதுவும் இல்லை

கண்ணை மூடினேன்
தூக்கம் தூக்கி சென்றது கனவிடம்
அங்கு ஒரு பறவை பறந்து கொண்டிருந்தது
அதன் தனிமையை என்னவென்று சொல்ல என நினைத்த கணநேரத்தில் பறவை தரையிறங்கியது
என் முதுகில் அமர்ந்துகொள் என்றது
மெல்ல மறுத்து இறக்கையை கடனாக கேட்டேன்
அதுவும் கையொப்பம் இட்ட காசோலை கேட்டது
நானும் கொடுத்தேன்
இரு இறக்கைகள் தந்தது
கைகளை அறுத்து வீசி
இறக்கைகளை பொருத்தி கொண்டேன்

அசைத்தேன் இறக்கைகளை
ஆனாலும் பறக்கவில்லை
காரணம் கேட்டேன்
உன் நிறை அதிகம் என்றது
சரி குறைக்கிறேன்
என நிறை அதிகமுள்ள மனதை
கழட்டி எறிந்தேன்
மீண்டும்
இறக்கைகளை அசைத்தேன் பறக்கவில்லை
நினைவுகளை கழட்டி வீசினேன்
மீண்டும் இறக்கைகளை அசைத்தேன்
பறக்க ஆரம்பித்திருந்தேன்

மேகங்களை நெருங்கி கொண்டிருந்தேன்
பல பறவைகள் ஆச்சரியமாய் பார்த்தன
சில மின்னல்களும் என்னை தாண்டின
நேரங்கள் ஓடியது மைதான வீரனை போல
நானும் பறந்து கொண்டிருந்தேன் காற்றைப்போல
ஜெர்மனி கீழே இருந்தது
ஜெர்மனி வானம் என்னுடன் கிடந்தது

அங்கும் ஒருவன்
பறவை பறப்பதை நினைத்து கண்ணை மூடியிருந்தான்
நான் விமானம் போல தரையிறங்கினேன்
அவனும் இறக்கையை கடனாக கேட்டான்
நானும் கர்ணனை போல கழட்டி கொடுத்தேன்
அவனிடம் காசோலை கேட்பதற்குள்
பறந்து போய்விட்டான்
அவனுடைய மனதையும் நினைவையும் கழட்டி வீசிவிட்டு

என்ன இவனுக்கு இவ்வளவு அவசரம் என நினைக்க முயன்றேன்
முடியவில்லை
அவன் விட்டுச்சென்ற மனதையும் நினைவையும் என்னுள் பொருத்திக் கொண்டேன்
இப்போது எனக்கு அவனுடைய கனவுகள் தெரிந்தது
இப்போது எனக்கு அவனுடைய தோல்விகள் தெரிந்தது
இப்போது என்னால் நினைக்க முடியும் என நினைக்க ஆரம்பித்தேன்

அவனுடைய கனவுகள்
ஒன்று கூட நியாயம் இல்லை
அதில் ஒரு கனவில் போர் வீரனாக கிரேக்க கடவுள்களால் தண்டனை பெறுவது போல இருந்தது
வேடிக்கையான தண்டனைகளை அவன் நிறைவேற்றுவது போல இருந்தது
இப்போது அவனுடைய நினைவுகள் என்னை மறைக்க ஆரம்பித்திருந்தது
இப்போது அவனுடைய மனது என்னை மீட்ட ஆரம்பித்தது

கண்ணை மூடினேன் கணநேரம்
அங்கே ஒரு இருள்
யாருமே இல்லை அங்கு
ஆனாலும் ஒரு குரல் கேட்டது
அது அந்த யாருமே இல்லையின் குரல்
அது என உணர சில நிமிடங்கள் பிடித்தது
அந்த குரல் பேச ஆரம்பித்தது
கடவுள் இறந்துவிட்டார் என்றது
என்னால் பதில் பேச முடியவில்லை
கண்ணை திறந்தேன்

ஒன்றுமே இல்லை
போய் முகத்தை கழுவு என சொன்னார்கள்
முகத்தை கழுவி விட்டு அமர்ந்தேன்
நீ மூன்று மணி நேரம் தூங்கினாய் என்றார்கள்
என் ஜெர்மனி என் இறக்கை என்றேன்
நீ என்ன பைத்தியமா என்றார்கள்
உடனே எழுதிவிட்டேன் மரங்களின் வெள்ளை திட ரத்தத்தில்
எழுதிய பின்பு ஜெர்மனி வரை பறந்த நினைவுகள் கிளம்பின
நானும் கிளம்பியிருந்தேன் பெண்கள் கல்லூரி வாசலை நோக்கி

Nethajidhasan
Nethajidhasan.blogspot.in

Series Navigationமுயல்கள்இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி எண் : 157 நாள் : 17-04-2016, ஞாயிறு காலை 10.00 மணி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *