குரு அரவிந்தனின் தமிழ் சிறுகதை பற்றிய சிறு குறிப்பு

author
0 minutes, 0 seconds Read
This entry is part 6 of 10 in the series 17 ஏப்ரல் 2016
 KuruAravindan
முனைவர் மனோன்மணி சண்முகதாஸ்

 

(ஈழத்து இலக்கிய வரலாற்றில் இணைந்திருக்கும் புலம் பெயர் இலக்கியம் கனடியத் தமிழ் இலக்கியம் என்ற புதிய மரபின் தொடக்கத்திற்கான ஒரு அடித்தளமாக அமைய குரு அரவிந்தன் முக்கியமாகப் பங்காற்றியுள்ளதை அடுத்த தலைமுறையினர் நன்குணர்வர். – முனைவர் மனோன்மணி சண்முகதாஸ்)

மிழ்ச் சிறுகதை என்னும் இலக்கியம் தோன்றி ஒரு நூற்றாண்டு கடந்து விட்டது. செய்யுள் வடிவாக இருந்த தமிழ் இலக்கியம் மேலைத் தேயத்தவர் வருகையால் உரைநடை இலக்கியம் என்ற புதிய வடிவத்தையும் பெற்றுக் கொண்டது.  அந்த வடிவம் இன்று மக்களிடையே செல்வாக்குப் பெற்றுள்ளது.  செய்யுள் இலக்கியம் படிப்பதற்குக் கடினமானது என்ற எண்ணமும் ஏற்பட்டுள்ளது.  அதனால் சிறுகதை இன்று தமிழ் வாசகர்களிடையே வாசிப்புப் பழக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஊடகங்களும் பேருதவியாக உள்ளன. நாளேடுகள் பருவ இதழ்கள் வானொலி தொலைக்காட்சி என்பன சிறுகதை என்னும் இலக்கிய வடிவத்தை மக்களுக்கு விரைவாக அறிமுகம் செய்தன.  பல சிறுகதை ஆக்கங்கள் உருவாகின. அவற்றை எழுதிய எழுத்தாளர்கள் தொகையும் பல்கிப் பெருகியது.

நவீன தமிழ்ச் சிறுகதை என்ற முகவரியுடன் இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள் வெளிவரு கின்றன.  அவை தொகுப்பாக்கமும் செய்யப்பட்டுள்ளன. எனவே அச் சிறுகதைகளை ஓரிடத்திலே பார்ப்பதற்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.  அந்த வகையில் தமிழ்ச் சிறுகதைக்கு குரு அரவிந்தனின் பங்களிப்புப் பற்றிய கருத்துப் பகிர்வாக இக்கட்டுரை அமைகிறது.  இன்றைய சிறுகதை எழுத்தாளர்கள் உலகெங்கும் பரவி நிற்கின்றனர். குறிப்பாக ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு அதற்கு ஒரு காரணமாக அமைந்ததெனலாம்.  தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் இடங்களில் தமிழ் ஊடகங்களும் உருவாகின.  அவ்வாறு உருவாகிய ஊடகங்கள் தமிழ் எழுத்தாளர்களின் ஆக்கங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியையும் ஏற்றிருந்தன.  இந்தச் சூழலில் குரு அரவிந்தன் என்ற சிறுகதை எழுத்தாளரையும் அடையாளம் காண முடிகிறது.

குரு அரவிந்தனின் சிறுகதைகள்

பிரசுரமான சிறுகதைகளைக் கொண்டு குரு அரவிந்தனின் கனடிய எழுத்துப் பணியின் தொடக்கம் 1988 என்று கொள்ளலாம்.  இக்காலக் கணிப்பு சற்று முன் பின்னாகவும் அமையலாம்.  இக்கட்டுரை அவருடைய சிறுகதை எழுத்துப்பணி பற்றியே கருத்துரைத்தல் என்ற வரையறையைக் கொண்டிருப்பதால் அவருடைய ஏனைய எழுத்தாக்கங்கள் இங்கு தவிர்க்கப்பட்டுள்ளன.  இன்னும் சிறு கதைகளையே குரு அரவிந்தன் நிறைய எழுதியுள்ளார்.  அவரது ஆக்கங்களை வெளியிடப் பல ஊடகங்கள் விருப்போடு வாய்ப்பளித்துள்ளன.  விகடன் தீபாவளி மலர்இ விகடன் பவளவிழா மலர்இ ஆனந்தவிகடன்இ கலைமகள்இ கல்கிஇ குமுதம்இ யுகமாயினி போன்ற தமிழ்நாட்டுப் பிரசுரங்களும் தாய்வீடுஇ தூறல்இ உதயன்இ ஈழநாடுஇ நம்நாடுஇ தமிழர் தகவல் போன்ற கனடா நாட்டுக் களங்களும் தினக்குரல்இ வீரகேசரி (இலங்கை)இ வெற்றிமணி (ஜேர்மனி)இ புதினம்இ காற்றுவெளி (இலண்டன்)இ உயிர்நிழல் (பரிஸ்)இ வல்லினம் (மலேசியா) போன்ற பிரசுரக் களங்களும் பதிவுகள்இ திண்ணைஇ தமிழ் ஆதேஸ் போன்ற இணையத் தளங்களும் இவருடைய ஆக்கங்களை வெளியிட்டுள்ளன.  இது குரு அரவிந்தன் சிறுகதையைச் சர்வதேச மட்டத்தில் பல வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது. அத்துடன் எமது பிரசுரங்களில் வெளியிடுவதற்குரிய கதைகள் என்ற மதிப்பீட்டையும் வழங்கி யுள்ளன.  இன்னும் உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழ் மக்கள் இவரை ஒரு சிறந்த சிறு கதை எழுத்தாளராகப் பாராட்டவும் ஏற்ற வாய்ப்பை நல்கியுள்ளன.  இதனால் குரு அரவிந்தனின் சிறுகதைகள் பெரும்பான்மையும் தமிழ் வாசகர்களின் தேவையை நிறைவேற்றவே எழுத்துருக் கொண்டுள்ளன.

சிறுகதை உருவமும் உள்ளடக்கமும்

சிறுகதைகளின் உருவம் என்னும் போது அதன் சொல்லளவும் கருத்திற் கொள்ளப்படும் காலமிது.  போட்டிக்கு என எழுதப்படும் சிறுகதைகளில் சொற்களின் எண்ணிக்கை வரையறை செய்யப்படும்.  எனவே அதை விடுத்து கதையின் களத்தை உருவமெனக் கொண்டால் குரு அரவிந்தனின் சிறுகதைக் களங்கள் சிறப்பிடம் பெறுகின்றன. புலம்பெயர் நாட்டுச் சூழல் களமாகி நிற்கும்போது வாசகருக்கு ஒரு சுய அநுபவச் சுவையையூட்டுகிறது. மற்றவர்களுக்குக் கற்பனைக் களமாய் நிற்கிறது.  பணியகம்இ பனிப்பொழிவுஇ வாகன ஓட்டம்இ விருந்தகம்இ மருத்துவ நிலையம் எனக் காட்சிப்படுத்தும் களங்கள் இவருடைய சிறுகதைகளின் உருவத்தை வாசகர் தம் நினைவில் பொறிக்க வழிகாட்டுகின்றன.

உள்ளடக்கம் என்னும் பொருள் பற்றி நோக்கும்போது சிறுகதையின் மையக்கருவை அது தாங்கி நிற்கிறது.  ஏறக்குறைய ஐம்பது வீதமான சிறுகதையின் கரு காதல் என்ற உணர்வையே உட்பொதிய முற்பட்டுள்ளது.  மனித வாழ்வில் காதல் ஒரு பருவத்திலே தோன்றும் உடலின் உன்னுதல் என்பதை ஆசிரியர் பல கதைகளிலே புலப்படுத்தியுள்ளார். தமிழர் பண்பாட்டில் பயிற்றப்படாத பண்புநிலைகளைத் தமிழர் இயைபாக்கம் செய்ய முற்படும்போது ஏற்படும் இன்னல்களை ஆசிரியர் எழுத்திலே பதிவு செய்துள்ள புனைதிறன் பாராட்டிற்குரியது.  இது புலம் பெயர் தமிழ் மக்களின் வாழ்க்கையில் ஒரு சடங்காகிவிட்டதையும் குரு அரவிந்தன் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுகதையில் வரும் கதாபாத்திரங்கள் இக்காலத்தின் கோலத்தைக் காட்டி நிற்கின்றன. பெண் பாத்திரங்களின் உளவியல் வெளிப்பாடு அவர்கள் முன்னேற்றச் சிந்தனைகளைக் காட்டுகின்றன.  பெண் விடுதலை என்ற போராட்டம் ஓய்ந்து பால் சமத்துவம் என்ற சமர் தொடங்கி யிருப்பதைப் பல கதைகள் கோடிட்டுக் காட்டுகின்றன. விகடனில் வெளிவந்த ‘ரோசக்காரி’ என்ற சிறுகதையை இதற்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம். பெண்களின் உணர்வுகளைப் புரியவைக்கும் திறன் குரு அரவிந்தனிடம் இருப்பதைப் பல பாத்திரங்கள் உணர்த்துகின்றன.  ‘சிலந்தி’ என்னும் கதையிலே வரும் நிருஜா என்ற பெண் பாத்திரத்தின் உணர்வை இவ்வாறு காட்டுகிறார்.

“சாதாரண ஒரு குடும்பத்தில் பிறந்ததால் அவளுக்குள் இப்படி ஒரு தாழ்வு மனப்பான்மை எப்பொழுதும் இருக்கும்.  அவளை அப்படி நினைக்க வைத்தது அவளது பொருளாதார நிலை.  பிறந்த மண்ணில் பாடசாலை டென்னிஸ் போட்டிகளில் பங்குபற்றி பரிசுகள் பல பெற்றவள்.  திருமணமாகி இங்கே வந்தபோது பல கனவுகளையும் சுமந்து வந்தாள்.  கணவனின் இரவு வேலையும் அதன்பின் பகுதி நேர வேலையும் அது முடிய பகலில் தூக்கமும் அவளைக் குடும்ப வாழ்க்கையில் விரக்தியடைய வைத்தது.  எனவேதான்  அந்த விரக்தியை விரட்ட பழையபடி டென்னிஸ் ஆடத் தொடங்கினாள்.”

பெண்மையின் மனப் பிறழ்வுகளைத் தனது பாத்திரங்களுடாகக் காட்டும் குரு அரவிந்தன் பெண் மொழியிலே பேச முற்பட்டுள்ளார்.  பெண்களின் மரபான கற்பு நிலைக்கு அப்பால் அவர்கள் தமக்கான தடைகளைத் தாண்டிச் செல்வதை எழுத்திலே பொறிப்பதற்கும் ஒரு துணிவு வேண்டும். பெண்களின் மன அவலங்களை வெளிக்கொணர்வது ஒரு மரபு மீறிய செயற்பாடு என வாதிடு பவரும் உளர்.

ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாக வாழ்வும் இந்நாட்டிலே எனப் பாரதி காட்டிய புதுமைப் பெண்களின் போக்கிற்குப் புலம்பெயர் நாட்டு வாழ்க்கை வாய்ப்பாக இருப்பதையும் பல கதைகள் பதிவு செய்துள்ளன.  ஆனால் அதற்கூடாகத் தமிழ்ச் சமூகத்திற்கு மறைமுகமாக ஆசிரியர் ஒரு செய்தியையும் சொல்ல விழைகிறார். பால் சமத்துவம் இயற்கை மனிதனுக்கு அளித்துள்ள விழுமியங்களைத் தகர்த்துவிடக் கூடாது.  அது மனித வாழ்வியலில் குறிப்பாகக் குடும்ப வாழ்வியலில் குழப்பத்தையே தரும்.  பெண்மையின் பண்பு நலன் பேணப்பட வேண்டும்.  அதன் வழிகாட்டல் என்றும் தேவை என்பதைப் பல கதைகளிலே நினைவூட்டி யுள்ளார்.

மொழிநடை

குரு அரவிந்தன் கதைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழிநடை ஓர் ஊடகத் தமிழ்நடை என்று கூறலாம்.  கதைகளின் கருப்பொருளையும் காட்சிகளையும் புலப்படுத்தல் என்ற வகையில் அந்தந்தக் களங்களுக்குரிய மொழிநடையைப் பயன்படுத்தியுள்ளார்.  தாயகத் தமிழ்நடைஇ புலம்பெயர் நாட்டுத் தமிழ்நடை என இரு வகைப்பாட்டைக் கதைகளில் இனங்காண முடிகிறது. இத்தகைய வகைப்பாட்டை ஊடகங்களும் பேணிவருகின்றன.  இது தற்காலத் தமிழ்மொழியின் வளர்ச்சிநிலை எனக் கருதப்படுகின்றது.  எதிர்காலத் தமிழர் தலைமுறை இந்த ஊடகத் தமிழ் மொழிநடை மூலமாகவே தொடர்பாடலை மேற்கொள்ளவுள்ளது என நம்பப்படுகிறது.

தொகுத்து நோக்கும்போது தமிழ்ச் சிறுகதைக்கு குரு அரவிந்தனின் பங்களிப்பாக இந்த மொழிநடையே முதன்மை பெறுகிறது.  வருங்காலச் சிறுகதை எழுத்தாளர்களான புலம்பெயர் தமிழரின் தலைமுறைகள் தாம் வாழும் நாட்டில் தமிழ் மொழியைப் பிற மொழியாகக் கற்கும் நிலையில் உள்ளார்கள்.  அவர்கள் பண்டைய செம்மொழித் தமிழ் இலக்கியங்களைப் படிக்க முன்னர் நவீன இலக்கியங்களை நாடுவர்.  அவர்களுக்கு குரு அரவிந்தனின் சிறுகதைகள் நல்ல ஆற்றுப்படை நூல்கள்.  அதுமட்டுமன்றி நாங்களும் தமிழில் சிறுகதை இலக்கியம் படைக்கலாம் என்ற நம்பிக்கையை ஊட்டும் விண்மீன்கள்.   அவர்கள் வாழும் சூழலில் நடமாடிய கதை மாந்தரை அடையாளம் கண்டுகொள்வர்.  ஈழத்து இலக்கிய வரலாற்றில் இணைந்திருக்கும் புலம் பெயர் இலக்கியம் கனடியத் தமிழ் இலக்கியம் என்ற புதிய மரபின் தொடக்கத்திற்கான ஒரு அடித்தளமாக அமைய குரு அரவிந்தன் முக்கியமாகப் பங்காற்றியுள்ளதை அடுத்த தலைமுறையினர் நன்குணர்வர்.

Pro.Manonmani-Shanmugthas2016

Series Navigationபுரியாத மனிதர்கள்….நல்ல சிறுகதைகள் – ஒரு பட்டியல்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *