’ரிஷி’யின் நீள்கவிதை – பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா…..!

This entry is part 14 of 16 in the series 24 ஏப்ரல் 2016

 

”உனக்கு அப்பாவைப் பிடிக்குமா? அம்மாவைப் பிடிக்குமா?”

என்று வழக்கம்போல் கேட்டார்கள்.

”அம்மாவை, அப்பாவை, ஆட்டுக்குட்டியை,

அம்மிணிக்கொழுக்கட்டையை

இன்னும் நிறைய நிறையப் பிடிக்கும்”

என்று  மிக உண்மையாக பதிலளித்தது குழந்தை.

 

 

 

 

ன்னொரு நாள் _ “உனக்கு லட்டு அதிகம் பிடிக்குமா?

ஜாங்கிரி அதிகம் பிடிக்குமா?” என்று கேட்கப்பட்டது.

”லட்டு அதிகம் பிடிக்கும், ஜாங்கிரியும் அதிகம் பிடிக்கும்,

பால்கோவா, பர்ஃபி, பக்கோடா, பபுள்கம்,

பஞ்சுமிட்டாய் எல்லாமே அதிகமதிகம் பிடிக்கும்

ஆனால் மண்ணை மட்டும் தின்னவே மாட்டேன்”,

என்று தன்னிலை விளக்கியது பிள்ளை.

 

 

 

 

பேராசைக்கும் பேரன்புக்குமான

சன்னக்கயிற்றரவத்தின் மேல்

இன்றின் நேற்றிலும் நேற்றின் நாளையிலுமாய்

தன் சின்னக்கால்களால் அப்படியுமிப்படியும் ஓடி

காலக்காற்றில் அலைப்புண்டவாறு

களித்து விளையாடிக்கொண்டிருக்கும்

குழந்தையை

ஏந்த வழியின்றிப் பேதுறும்

என் இடுப்பின்  குழிவளைவு.

 

 

 

 

ப்பொழுதுமே

இருகால்களை இருவேறு படகுகளில் வைத்துக்கொண்டு

பயணம் செய்யவே பிடிக்கும் குழந்தைக்கு.

நீரின் இருப்புப்பாதைகள் ஒரே சீராகச் செல்லமாட்டா

என்பது அதன் அறிவுக்கு எட்டுமோ தெரியவில்லை.

படகுகள் அளவுக்கதிகமாய் ஒன்றிலிருந்து ஒன்று

விலகிச் செல்வதும்

ஒன்றுக்கொன்று நெருங்கிவருவதும்

நதியோட்டத்தில் நடந்தேதீருவது.

நிலைதடுமாறி நீரில் விழுந்தும்

படகுவிளிம்பில் தலை இடித்தும்

என எத்தனை பட்டாலும்

இருபடகுகளில் தனித்தனியே

இருகால்களைப் பதித்துப் பயணம் போவதிலுள்ள

சாகசவுணர்வெழுப்பும் சந்தோஷமே

குழந்தைக்கு வேண்டியிருக்கிறது எப்போதும்.

 

 

 

 

 

டைத்தூரம் நிறையவாய்

வளர்ந்துவிட்ட குழந்தையின்

உறைகாலப் புகைப்படத்திலிருந்து

கண்கள் மட்டும் என்னையே

குறுகுறுவெனப் பார்த்தவண்ணம்!

 

 

 

 

 

ன்னிலிருந்தே வந்ததெனினும் உனதல்ல குழந்தை

என்கையில்

என்னிலிருந்து வராதவொன்று எனதேயாகுமென்ற

எதிர்பார்ப்பும் நம்பிக்கையும்

எல்லோர் வாழ்விலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன

வரமும் சாபமுமாய்!

 

 

 

 

 

குழந்தைக்கண்களைக் குதூகலிக்கச் செய்யும்

ரயில்வண்டியோ ஆகாயவிமானமோ

நம் விழிகளுக்குத் தட்டுப்படுவதேயில்லை!

முக்கண்களாலும் மேலும் பார்க்கத்தெரிந்த குழந்தையின்

வாய்க்குள் தெரியும் மூவேழுலகங்களையும்

கண்டு வியந்து கலங்கிப்போகும் பேதை

உரலில் கட்டிவைக்கப்பார்த்தாலோ

சிரித்தபடி சிறகடித்துச்சென்றுவிடும் பிள்ளை!

 

 

 

 

 

ல்லையின்மையில் தோய்ந்த துளி வானவில்,

துளி நிலா துளி கனா துளி நீலம் கடலின்  துளி

ரீங்காரம் காற்றின் நினைவின் நிறப்பிரிகையில்

ஒரு துளியென் பித்துக்குளி மனதின் ஒரு துளி

கலந்து இன்னும் என்னென்னவோ துளிகள் சேர்த்து

பார்த்துப்பார்த்துச் செய்த அன்புப்பரிசை

இன்னும் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையின்

அருகில் வைத்துவிட்டுச் சென்றுவிடுகிறேன்.

கண்விழித்ததும் குழந்தை காண்பது

அதன் மிகுவிருப்பத்திற்குரியதாகட்டும்.

 

 

Series Navigationஅன்னியமாய் ஓர் உடல்மொழிநித்ய சைதன்யா கவிதை

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *