மாறுபட்ட அனுபவம் – கதிர்பாரதியின் ‘ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்’ –

2
0 minutes, 0 seconds Read
This entry is part 10 of 10 in the series 8 மே 2016

 

கதிர்பாரதியின் கவிதைகளைப் படிக்கும்போது நம்மை வசீகரிக்கும் முதல் அம்சம் அவற்றின் கட்டமைப்புதான். முற்றிலும் இறுக்கமானவை என்றோ அல்லது  முற்றிலும் தளர்வானவை என்றோ ஒருகணமும் தோன்றுவதில்லை. தேவையான அளவில் மட்டுமே இறுக்கத்தையும் தளர்வையும் கொண்டு தன்னளவில் பொருத்தமானதாகவும் வசீகரமானதாகவும் ஒவ்வொரு கவிதையும் அமைந்துவிடுகின்றது. மொழியின் தளத்திலும் உணர்வின் தளத்திலும் இந்த வசீகரம் ஒருபோதும் கூடிவிடாமலும் குறைந்துவிடாமலும் கச்சிதமாக ஒன்றோடு ஒன்று இயைந்து ஒளிர்கின்றன. இதுவே கதிர்பாரதியின் கவிதைகளின் தென்படும் முக்கியமான சிறப்பம்சம். மற்ற கவிஞர்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டுவதும் இந்த அம்சமே.

கதிர்பாரதியின் கவிதைகள் புதிய வகையான குறியீடுகளை உருவாக்க விழைகின்றன. எழுதி எழுதிப் பழகிப் போய்விட்ட காற்று, வெப்பம், மலர், மழை, பறவை போன்ற குறியீடுகளைக் கூட முற்றிலும் வேறொரு தளத்தில் முன்வைக்க விரும்புகின்றன.

ஒரு ஊரில் ஒரு கழுகு வசித்துவருகிறது

தன் கூடு தாங்கும் மரத்தைக்கூட கொத்தி

வேரடி மண்ணோடு சாய்த்தும் வருகிறது

கோழிக்குஞ்சின் மாமிசத்துக்கு

தன் கூர் அலகைப் பழக்கிவரும் அது,

புறாக்கள் களைப்புறும் மாடங்களில்

மைனாக்கள் உலவுவது தகாது எனச் சீறிவிட்டு

கோயில் விமானத்தில் போய் உட்கார்ந்துகொண்டு

தன்னிரு இறக்கைகளைக் கோதிக்கொள்கிறது

பதற்றமே சிட்டுக்குருவிக்கு அழகு என்றும் சொல்லி

மகிழ்ச்சியின் வானில் சுற்றித்திரியும்

சிட்டுக்குருவிகளைப் பதற்றத்துக்குள்ளாக்கவே

கத்தியின் நகலான

தன் நகங்களப் பயன்படுத்திவருகிறது

அதில் பதறிப் போய்த்தான்

ஒரு சிட்டுக்குருவி தண்டவாளத்தில் விழுந்தது

அப்போது

கழுகின் நகம் பளபளத்துக்கொண்டது.

இப்படி ஒரு கவிதை இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அதிகாரத்தின் விளைவுகளை ஒரு காட்சித்தொகுப்பாக முன்வைக்கும் இக்கவிதை தொகுப்பின் முக்கியமான கவிதைகளின் ஒன்றெனச் சொல்லலாம். தன் அதிகாரத்தின் கீழ் தன் வசிப்பிடமான மரம், தன்னைச் சுற்றியுள்ள வானம், மண், மண்ணுக்கும் விண்ணுக்குமிடையே பறந்து திரியும் புறாக்கள், மைனாக்கள், குருவிகள் என எல்லாவகையான பறவைகளையும் ஒவ்வொன்றாகக் கொண்டுவந்து ஆட்சியை விரிவாக்கிக் கொள்கிறது கழுகு. முழு அதிகாரமும் வசப்பட்ட பிறகு, கழுக்குக்கு நகங்களோ அலகுகளோ தேவைப்படவில்லை. தன் தோற்றம் அல்லது இருப்பின் வழியாகவே தன் அதிகாரத்தை நிலைநிறுத்தித் தக்கவைத்துக்கொள்கிறது.  பார்வை ஒன்று மட்டுமே அதற்குப் போதுமானதாக இருக்கிறது. கழுகை அஞ்சும் சிட்டுக்குருவிகள் தண்டவாளத்தில் விழுந்து சாகும் காட்சி மனத்தைக் கனக்கவைக்கிறது. வானம் விரிந்த வெளி. அவ்வெளியில் கழுகுக்கு ஓர் இடம், சிட்டுக்குருவிக்கும் ஓர் இடம் என்னும் இயல்பான வாழ்க்கைமுறை ஒரு முடிவைநோக்கி வந்துவிட்டது என்பதை அறிவிக்கும் கணமாக அந்த மரணம் அமைந்துவிடுகிறது. வானத்தையும் மண்ணையும் வசப்படுத்த நினைக்கும் கழுகின் பேராசைக்கு இன்று சிட்டுக்குருவிகள் பலியாகின்றன. நாளை இந்த அதிகாரப்பரப்பு இன்னும் விரிவாகலாம். அப்போது சிட்டுக்குருவியைவிட இன்னும் சிறியதும் சுதந்திரத்தை விரும்புவதுமான   வண்ணத்துப்பூச்சிகளும் மறையக்கூடும். உயிர்த்திருப்பதையே ஒரு துயரமான அனுபவமாகவும் மரணத்துக்கான காத்திருத்தலாகவும் மாற்றிவிடுகிறது அதிகாரம். அது எவ்வளவு பெரிய அவலம்.

கழுகின் அதிகாரத்தைச் சித்தரிக்கும் கதிர்பாரதி ‘அங்கிங்கெனாதபடி ஓடும் அணில்’ என்னும் கவிதையில் அணிலின் சுதந்திரத்தைப்பற்றியும் சித்தரிக்கிறார். பூங்காவில் அங்கிங்கெனாதபடி எங்கும் தாவிக் குதித்தோடுகிறது அந்த அணில். சரசரவென வாதம் மர உச்சிக்கு ஏறுகிறது. அங்கிருந்து குதித்து சிதறிக் கிடக்கும் வாதம் விதைகளைக் கொறிக்கிறது. அருகில் விளையாடும் சிறுமியைக் குறுகுறுவெனப் பார்க்கிறது. பிறகு அந்தச் சிறுமியைப் போலவே தானும் தாவிப் பார்க்கிறது. வாழைமரத்தில் ஏறி வாழைப்பூவை முகர்ந்து பார்க்கிறது. நெருங்கி உட்கார்ந்திருக்கும் காதலர்களைப் பார்க்கிறது. மரத்தடியில் மல்லாந்து உறங்கும் மனிதர்களையும் பார்க்கிறது. உதிர்ந்து கிடக்கும் மலர்களையும் பார்க்கிறது. எல்லா இடங்களிலும் நின்றுநின்று பார்த்துவிட்டுக் கடந்துபோகும் அணிலைச் சித்தரிக்கும் போக்கில் ஒற்றைக்கணத்தில் புற உலகத்திலிருந்து நம் அக உலகத்துக்குள் அந்த அணில் தாவி விழுந்துவிடுகிறது. நாம் ஒவ்வொருவரும் அணிலாகிவிடுகிறோம். நம் வாழ்க்கை அணில் வாழ்க்கையாகிவிடுகிறது. அணில் வாழ்க்கை என்பதால்தான் அது கழுகால் அனுமதிக்கப்பட்ட வாழ்க்கையாகவும் சுதந்திரமான வாழ்க்கையாகவும் இருக்கிறது.

தனிமையின் துயரைச் சித்தரிக்கும் கதிர்பாரதியின் கவிதை பாரதியாரின் ’ஓடி விளையாடு பாப்பா’ என்னும் வரிக்கு எதிர்முனையில் இருக்கிறது.

மாநகர வாழ்வின்

கண்டிஷன்ஸ் அப்ளைகளுக்குப் பிறந்த மகனொருவன்

சிறகு முளைத்த பந்தை

யாருமற்ற தன் வீட்டின் அறைச்சுவரில்

அடித்து அடித்து விளையாடுகிறான்.

அந்தப் பந்து

அவனுக்கும் தனிமைக்குமாகப்

போய்த் திரும்பி

திரும்பிப் போய்

ஓய்கிற வேளையில்

வந்தே விட்டது

மற்றும் ஓர் இரவு

குழந்தைகள் கூட்டம்கூட்டமாக விளையாடி மகிழ்ந்ததெல்லாம் இன்று இறந்த காலமாகிவிட்டது. பள்ளியையும் படிப்பறையையும் மறந்து தோப்புகளிலும் குளக்கரையிலும் ஆற்றங்கரையிலும் கோவில் மண்டபங்களிலும் விளையாடி களிப்பில் ஆழ்ந்ததெல்லாம் ஒரு காலம். படிப்புக்கென ஒரு நேரத்தை வகுத்துக்கொண்டு எஞ்சிய நேரத்தையெல்லாம் ஆடிக் கழித்து மகிழ்ந்ததெல்லாம் வேறொரு காலம். சுதந்திரமான மானாக துள்ளித் திரிந்த காலம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. இன்று எல்லா இடங்களிலும் தனிமை பரவியிருக்கிறது. யாரும் யாருடனும் இல்லாத அவலம். மாநகரத்திலோ அந்த அவலம் இன்னும் அதிகம். எண்ணிக்கையின் அடிப்படையில் மக்கள் தொகை மிகுதியான நகரில் யாரும் யாருடனும் இல்லாத தனிமையே மாபெரும் துயரம். பாதுகாப்புக்காக பூட்டப்பட்ட வீடுகளில் தனிமையில் தனக்குத்தானே விளையாடி பொழுதைக் கழிக்கும் குழந்தைகளை நினைக்கவே பாவமாக இருக்கிறது. முதுமைத்தனிமையை மட்டுமே இதுவரை பேசி வந்த உலகம் குழந்தைத்தனிமையை இப்போது பேச ஆரம்பித்திருக்கிறது. பொழுதைப் போக்குவதற்காக ஓர் அறையில் அல்லது ஒரு கூடத்தில் தனிமையில் தனக்குத்தானே சதுரங்கம் ஆடிக்கொள்ளும் முதியவர்களைப்போல, இப்போது அடுக்ககக்குழந்தைகள் பூட்டப்பட்ட அறைக்குள் தனிமையில் ஆடி பொழுதைப் போக்குகின்றன. குழந்தை அடிக்கும் பந்தை மறுமுனையில் ஓர் ஆளாக நின்று வாங்கித் திருப்பி அனுப்புகின்றன சுவர்கள். வீடுகளைப் பிரித்துத் தனிமைப்படுத்தும் சுவர்கள், தனிமையில் ஆடும் குழந்தைக்கு உயிரில்லாத் துணையாக மறுமுனையில் நின்று ஆடுகின்றன. மாநகரம் முழுதும் கோடிக்கணக்கான சுவர்கள். கோடிக்கணக்கான குழந்தைகள். ஒவ்வொரு சுவருக்குப் பின்னாலும் ஒவ்வொரு குழந்தை ஆடிக்கொண்டிருக்கிறது. சுவரைவிட்டு வெளியே வந்தால், ஒவ்வொரு குழந்தைக்கும் பல குழந்தைகளின் துணை கிடைக்கக்கூடும். ஆனால் பாதுகாப்புச்சுவர்களை விட்டு கடந்துவரத் தெரியாத பரிதாபத்துக்குரிய குழந்தைகள் அவர்கள். பாதுகாப்பு என்னும் அம்சமே வாழ்வின் மிகப்பெரிய ஆனந்தத்தை குழந்தைகளிடமிருந்து பறித்துவிட்டதென்னும் உண்மையை உணராத மாநகரம் இன்னும் இன்னும் என சுவர்களைக் கட்டியெழுப்பியபடி இருக்கிறது. கண்டிஷன்ஸ் அப்ளை விதிகளைக் கொண்ட விண்ணப்பங்களில் கையெழுத்திட்டு கடன் பெறும் மாநகரவாசிகளுக்காக அடுக்ககங்கள் உருவானபடியே உள்ளன.

’உன்னையொன்று கேட்பேன்’ என்னும் கவிதை மானுட மனத்தைத் தகவமைப்பதில் ஊடக பிம்பத்துக்கு இருக்கும் ஆற்றலைச் சுட்டிக் காட்டுகிறது. திரைப்படத்தைப் பற்றி எதுவுமே அறியாத ஒரு கிராமத்துக்குள் தன்னை ஒரு திரைப்படம் எடுப்பவனாக அறிமுகப்படுத்திக்கொண்டு நுழையும் ஒருவனைப்பற்றிய அயல்நாட்டுப் படமொன்றை இக்கணத்தில் நினைத்துக்கொள்ளத் தோன்றுகிறது.  சுருள் இல்லாத படப்பெட்டியை ஓடவிட்டு, அந்தக் கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரையும் அப்பெட்டியின் முன்னால் நிறுத்திவைத்து தம்மைப்பற்றிப் பேசச் சொல்வான் அந்த இளைஞன். அவனுடைய பொய்மையைப்பற்றி எதுவுமே அறியாத கிராமத்தினர் கடவுளின் முன்னால் நிற்க நேர்ந்ததைப்போல நினைத்துக்கொண்டு கண்ணீர் மல்க ஒவ்வொருவரும் தன் மனத்தைத் திறந்து பேசத் தொடங்குவார்கள். மின்ஊடகத்தின் வலிமை கற்பனைக்கு எட்டாததாக உள்ளது. ஊடகத்துடன் மானுடன் உருவாக்கிக்கொள்ள விழையும் உறவு வியப்பூட்டக்கூடியது. அந்த உறவுப்பின்னலின் சிக்கலை கதிர்பாரதியின் இந்தக் கவிதை வாசகர்களுக்கு உணரவைக்கிறது என்றே சொல்லலாம். உன்னையொன்று கேட்பேன் என்பது ஒரு பாடல். அப்பாடலுக்கு வாயசைத்து நடிக்கிறாள் ஒரு நடிகை. அந்த நடிகையின் முகவசீகரம் பார்வையாளனை அந்த வரிக்குப் பதில் சொல்லத் தூண்டுகிறது என்பதுதான் கவனிக்கவேண்டிய முக்கியமான அம்சம். சக மனிதர்களின் கேள்விகளையும் உறவையும் ஒதுக்கித் தள்ளிவிட்டுச் செல்கிறவர்களாகவே பல நேரங்களில் நாம் இருக்கிறோம். அதே சமயத்தில் ஒரு பிம்பம் முன்வைக்கும் பாவனைக் கேள்விக்கு மனமுருக, உயிருருக பதில்களை நம் ஆழ்மனம் மறுநொடியே முன்வைத்துச் செல்வதில் வேகம் காட்டுகிறோம். ஆச்சரியமான இந்த முரண் மிகப்பெரிய சமூக ஆய்வுக்குரியது.

’அலறி ஓடும் மவ்னம்’ கவிதை அதிர்ச்சியும் துயரும் கலந்த ஒரு சித்தரிப்பு.

இருபது நிமிடங்கள் நகர்வதற்கு முன்பு

தூக்கிலிட்டுக்கொண்டவளின் பொருட்டு

அறையை அறைந்தறைந்து கலங்குகிறது

அலறும் செல்பேசி .

நேற்றைய ஊடலை நேர்செய்வதற்கான

காதலன் முத்தம் தேங்கி நிற்கிற

அந்த செல்பேசிக்குள் சாபமென நுழைகிறது

அவன் அனுப்பிய அந்தரங்கக் குறுஞ்செய்தி

இனிப்புப்பண்டங்களின் மீது ஊர்கிற எறும்புகள்

தற்கொலையின் கசப்பைச் சுமந்து தள்ளாடுகின்றன

திரும்ப இயலாத அகாலத்துக்குள்

சிக்கிக்கொண்டு திணறுகிற அந்த அறையை

காற்று திறக்க அலறிக்கொண்டு ஓடுகிறது

விக்கித்து நின்ற மவ்னம்

கதிர்பாரதியின் கூறுமுறையில் உள்ள கருணையில்லாத விலகல் தொனி இக்கவிதையை செதுக்கிவைத்த சிற்பமாக்கிவிடுகிறது. தூக்கில் தொங்கி மரணமடைந்துவிட்டவளிடமிருந்து நேரிடையாகத் தொடங்கிவிடுகிறது கவிதை. செல்பேசி அலறுகிறது. எடுக்க ஆளில்லை. ஒருமுனையில் உயிரற்ற உடலாக சொற்களை உதறிக் கடந்து சென்றுவிட்ட ஒருத்தி. மறுமுனையில் சொற்களையும் முத்தங்களையும் ஆறுதல்களையும் கொட்டுவதற்குத் தயாராக உள்ள ஒருவன். அவனுடைய மன்றாடல்களாக அலறுகிறது செல்பேசி. திறந்துவைக்கப்பட்ட இனிப்புப்பண்டம் அழுத்தமான ஒரு படிமம். உண்டு மகிழவென வாங்கிவந்த இனிப்பு தின்னப்படாமலேயே எறும்புகளுக்கு உணவாகிவிடுகிறது. கலந்து மகிழவென தொடங்கிய வாழ்க்கை வாழப்படாமலேயே மரணத்தில் முடிந்துபோகிறது. அதைப்பற்றி அதிகம் பேசிவிடக்கூடாது என்பதில் கதிர்பாரதி காட்டும் எச்சரிக்கையுணர்வு மிகமுக்கியமானது. அந்தத் தருணத்தை மிகவிரைவாகக் கடக்க நினைப்பவர்போல அடுத்த வரிக்குச் சென்றுவிடுகிறார். இறந்து தொங்கும் உடல், அலறித் துடிக்கும் செல்பேசி, எறும்புகள் உண்ணும் இனிப்பு என ஒவ்வொன்றாகக் காட்டி நகரும் கவிதை இறுதியில் அரூபநிலையில் அங்கு தேங்கியிருக்கும் மெளனத்தின் நிலையைக் காட்டி நிறைவெய்துகிறது. ஓர் உயிருள்ள ஆகிருதியாக மெளனம் அக்காட்சியைக் கண்டு அதிர்ச்சியில் மூழ்கிவிடுகிறது. துன்பம் கொள்கிறது. துயரத்தின் பாரத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் துடிக்கிறது. இறுதியாக காற்றின் கருணையால் திறந்த கதவின் வழியாக வெளியேறிவிடுகிறது. அந்த மெளனம் ஏன் அலறியடித்துக்கொண்டு ஓடவேண்டும் என ஒருகணம் நினைத்துப் பார்க்கும்போது கவிதையின் ஆழம் நமக்குப் புலப்படுகிறது. அந்த மெளனம் அந்த அறையில் எப்போதும் இருந்து வந்திருக்கிறது. அந்தக் காதலர்கள் சிரித்து மகிழ்ந்ததையும் முத்தமிட்டுக் கொண்டதையும் பேசிக் களித்ததையும் ஒரு சாட்சியாக எப்போதும் பார்த்து வந்திருக்கிறது. இயல்பில்லாத முறையில் நிகழ்ந்துவிட்ட மரணத்தை அதனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எதையும் தடுக்கமுடியாமல் ஒரு சாட்சியாக நின்று பார்க்க நேர்ந்த துக்கத்தின் வேதனையிலிருந்தும் அதனால் தப்பிக்க முடியவில்லை. அந்த அலறலுக்கான காரணம் அதுதான். ஒருபுறம் செல்பேசியின் அலறல். மறுபுறம் அனைத்துக்கும் சாட்சியான மெளனத்தின் அலறல். ஓர் அலறலில் தொடங்கும் கவிதை இன்னொரு அலறலில் முடிவடைகிறது. வாசிப்பின் முடிவில் துயரத்தை நோக்கித் தள்ளும் அனுபவமே இதை கவிதையாக்குகிறது.

தொகுதி முழுதும் இப்படிப்பட்ட நுண்சித்தரிப்புகளைக் கொண்ட பல கவிதைகள் உள்ளன. கதிர்பாரதி வரிகளில் விவரித்திருக்கும் உலகுக்கு இணையாக இன்னொரு உலகத்தை வாசகனுக்குள் உருவாக்கும் ஆற்றல் கதிர்பாரதியின் கவிதைகளுக்கு இருக்கின்றன. ஒருவகையில் கதிர்பாரதியின் கவிதைமொழி மாயாஜால வித்தைக்காரனின் கையில் இருக்கும் அழகான வண்ணத்துணியை ஒத்திருக்கிறது. ஒருமுறை மடித்துவிட்டுப் பிரிக்கும்போது அது இதழ்கள் விரிந்த மலராகத் தோற்றமளிக்கிறது. இன்னொருமுறை அழகான குடையெனத் தோற்றமளிக்கிறது. அடுத்தமுறை சிறகுகள விரித்துப் பறக்கக் காத்திருக்கும் பறவையெனத் தோற்றமளிக்கிறது. கணம்தோறும் மாறிமாறித் தோற்றமளிக்கும் காட்சிகள் வாசகனின் மனவுலகில் விரிந்துவிரிந்து கற்பனைகளைத் தூண்டியபடி இருக்கின்றன. இந்தக் கற்பனைகளே கதிர்பாரதியின் கவிதைகள் வழங்கும் செல்வம் அல்லது கொடை.

 

(ஆனந்தியின் பொருட்டு தாழப் பறக்கும் தட்டான்கள். கதிர்பாரதி கவிதைகள். உயிர்மை பதிப்பகம். 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-18. விலை. ரூ.85)

Series Navigation”வேட்பாளருக்கு ஒரு வேண்டுகோள்”
author

பாவண்ணன்

Similar Posts

2 Comments

 1. Avatar
  என் செல்வராஜ் says:

  புத்தகத்தை வாங்கிப் படிக்கத் தூண்டுகிறது. கதிர் பாரதியின் கவிதைகளை விரிவாக பாவண்ணன் விமர்சித்து இருக்கிறார்

 2. Avatar
  என் செல்வராஜ் says:

  பாவண்ணனின் விமர்சனம் நூலை உடனே வாங்கி படிக்க தூண்டுகிறது.
  கதிர் பாரதியின் மெசியாவின் மூன்று மச்சங்கள் யுவ புரஸ்கார் விருது பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *