(Paintings in The Great Abu Simbel Temples of Egypt)
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா
ஓ! உறங்குகிறாய் நீயோ!
உறக்கம் என்ப தென்ன ?
இறப்பின் எதிர்ப் பிம்பம் அது!
சிறப்பாக உன்னதப் படைப்புகள்
பிறக்கட்டும்,
மறைந்த பிறகு நின் பிம்பம்
இறவாத ஓர் நிரந்தரம் நிலை
பெறுவதற்கு!
ஓவிய மேதை: லியனார்டோ டவின்ஸி
‘உன் மண்டை ஓட்டை எடு; எலும்புகளை சேகரி; மற்ற உடற் கூறுகளையும் சேர்த்து ஒட்டியுள்ள மண்ணை உடற் சதையி லிருந்து உலுக்கி விட்டு நீக்கு! …. உந்தன் கரங்களைப் பற்றி உன்னை சொர்க்க புரிக்கு அழைத்துப் போக, வாசல் காப்போன் உன்னை நோக்கி வெளியிலிருந்து வருகின்றான்! ‘
பண்டைப் பேராட்சிப் பிரமிட் வாசகம்
5000 ஆண்டுகளுக்கு முன்பாக இயற்கையான பாறைக் குன்றுகளைக் குடைந்து பிரமிக்கத் தக்க முறையில் பேரெழிலுடன் செதுக்கிய ஆபூ சிம்பள் ஆலயங்கள் [Abu Simbel Temples] போன்று உலகிலே வேறு எந்த நாட்டிலும் காண முடியாது! அப்பெரும் இரண்டு ஆலயங்களை ஃபாரோ வேந்தன் ராம்ஸிஸ் [Ramses II] கி.மு.(1279-1213) ஆண்டுகளில் தனது பராக்கிரமத்தையும், தெய்வீக உணர்ச்சியையும் எடுத்துக் காட்ட ரா-ஹாராக்டே [Ra-Harakhte] ஞாபகமாகவும், மனைவி நெஃபர்டாரி [Nefertari] நினைவாகவும் அமைத்ததாக அறியப்படுகிறது. 1813 ஆம் ஆண்டில் எகிப்தின் நைல் நதி நாகரீகத்தைக் காண வந்த ஜே.எல் புர்காரெட் [J.L. Burckhardt] என்பவர் நைல் நதியைக் கடந்து குன்றுகளைப் பார்வை யிட்ட போது, மணல் மூடிய அழகிய ஓர் ஆலயத்தை நவீன சூடான் எல்லைப் பகுதியில் கண்டுபிடித்தார். நைல் நதியில் அமைக்கப் பட்டுள்ள உலகப் பெரும் அணைகளில் ஒன்றான அஸ்வான் உயர்ந்த பேரணையிலிருந்து சுமார் 170 மைல் தூரத்தில் வரலாற்றில் புகழ் பெற்ற அப்பெரும் இரண்டு ஆலயங்கள் கட்டப் பட்டிருக்கின்றன.
ராம்ஸிஸ் வேந்தர் தனக்காகக் கட்டிய முதல் ஆபூ சிம்பள் ஆலயத்தின் வாசலில் 67 அடி உயரமுள்ள நான்கு பூத வடிவான சிற்பச்சிலை மன்னர் வீற்றிருக்கும் கம்பீரமான காட்சி காண்போரைப் பெரு வியப்பில் தள்ளிவிடும்! ஆலய முகப்பில் சிற்பச் சிலைகள் வீற்றிருக்கும் தளப்பகுதி மட்டும் 120 அடி அகலமும், 100 அடி உயரமும் கொண்டது! வேந்தரின் இரண்டு கற்சிலைகள் வலது புறமும், அவற்றைப் போல் இரண்டு கற்சிலைகள் இடது புறமும் பிரம்மாண்டமாக அமர்ந்துள்ளன. நான்கு பூதச் சிலைகளில் இடப்புறத்தில் உள்ள ஒன்று மட்டும் பூகம்பத்தால் உடைந்து போனதாக அறியப் படுகிறது! அந்த ஆலயம் கிழக்கு நோக்கி நிற்கிறது. சூரியக் கடவுளின் சிற்பம் தலை வாயிலின் மேலே உயரத்தில் செதுக்கப் பட்டிருக்கிறது. கோயில் நேரமைப்பு [Temple Alignment] முதலில் துல்லியமாக நகர்த்தப் பட்டு, ஆண்டுக்கு இருமுறை பரிதி கடக்கும் போது, அதன் ஒளிக்கதிர்கள் உள்ளிருக்கும் சன்னிதியில் இருக்கும் தெய்வங்கள் மீது நேராக விழும்படி நூதனப் பொறியியற் திறமையுடன் கட்டப் பட்டுள்ளது!
ஆபூ சிம்பளின் அடுத்த ஆலயம் ஹாதுர் [Hathur] என்னும் எழில் தேவதைக்கு அர்ப்பணம் செய்யப்பட்டு உள்ளது. அதை ராமெஸிஸ் வேந்தன் காதல், எழில் தேவதையான ஹாதுருக்கு [Hathur] அர்ப்பணம் செய்ததோடு, தனது மனைவி நெஃபர்டாரி நினைவாகவும் கட்டியதாக அறியப்படுகிறது. காதலிசை ஆலயத்தின் முன்பு 33 அடி உயரத்தில் பிரமிக்கத் தக்க ஆறு சிற்பச் சிலைகள் செதுக்கப்பட்டு கம்பீரமாக நிற்கின்றன! அப்பெரும் சிற்பங்களின் கீழே அவரது குழந்தைகளின் வடிவச் சிலைகளும் அமைக்கப் பட்டுள்ளன. அந்த இரண்டு கோயில்கள் சூடானின் எல்லையில் இருப்பதால் பல நூற்றாண்டுகள் பலரும் அறியாத வண்ணம் 1813 ஆண்டுவரை மறைந்தே இருந்து விட்டன. 1817 இல் இரண்டு ஆலயங்களையும் இத்தாலிய எகிப்திய புதைச் சின்னவாதி [Egyptologist] கியோவன்னி பாட்டிஸ்டா பெல்ஸானி [Giovanni Batissta Belzoni] என்பரால் துருவி ஆராயப் பட்டு ஃபாரோ அரசர், அரசிகளின் வரலாறுகள் பதிவு செய்யப்பட்டன. சிற்பங்கள், சிலைகள், சித்திரங்கள் யாவும் சீராக்கப் பட்டு, உலகிலே மிக உன்னத நாகரீகச் சின்னக் களஞ்சியங்களாய்ப் பாதுகாக்கப் பட்டு வருகின்றன!
ஆபூ சிம்பளில் உள்ள பேராலயம்
ஃபாரோ பரம்பரை மன்னன் இரண்டாம் ராம்ஸெஸ் கட்டிய ஆபூ சிம்பள் ஆலயங்களைப் பின்வந்த மதங்கள் எவையும் மாற்றமோ அல்லது சிதைவோ செய்யவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. 2001 மே 2 ஆம் தேதி ஆஃப்கானிஸ்தானில் மூடத்தனமான தாலிபான் மூர்க்கர்கள் உலகப் பெரும் உயரம் கொண்ட 2000 ஆண்டு வயது கடந்த புத்தச் சிலையை இஸ்லாமுக்குப் புறம்பானது என்று இகழ்ந்து தகர்த்துச் சிதைத்தது வரலாற்றில் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு வன்மை நிகழ்ச்சியாகும்! ஆபூ சிம்பள் ஆலய முகப்பின் சிகரத்தில் வரிசையாக ஆஃப்ரிகன் குரங்குகளின் சிலைகள் சூரியோதயத்தை வரவேற்றுச் சிரிப்பவை போல அமைக்கப் பட்டுள்ளன! ஆலயக் கதவின் அருகே அரசரின் பெயர் ‘செர்மாத்ரா ‘ [Ser-Ma ‘at-Ra] என்று எழிலுடன் எழுதப் பட்டிருக்கிறது. முகப்புக்கு அருகில் வீற்றிருக்கும் பிரம்மாண்டமான இரண்டாம் ராம்ஸெஸ் சிலையின் கால்களுக்கிடையே சிறு சிறு சிலைகளாக அவரது அன்னை முத்தூய் [Mut-tuy], மனைவி நெஃபர்டாரி, [Nefertari] புதல்வர், புதல்வியர் ஆக்கியோர் சிலைகளும் அமைந்துள்ளன. ராம்ஸெஸ்ஸின் திருமண நிகழ்ச்சிகள், அவரது போர் முறைகள் கூட சித்திரங்களாகச் சுவர்களில் பொறிக்கப் பட்டுள்ளன. ஹிட்டைட்ஸ் மன்னனின் மகளை ஃபாரோ வேந்தன் ராம்ஸெஸ் [King of the Hittites] திருமணம் புரிந்த நிகழ்ச்சி கூட ஒரு சுவரில் வரையப் பட்டிருக்கிறது.
ஆலய வாசற் படிகளைத் தாண்டி உள்ளே நுழைந்தால், எட்டுத் தூண்கள் தாங்கிய பெரு மண்டபம் ஒன்று எதிர்ப்படுகிறது. எட்டுத் தூண்களிலும் இரண்டாம் ராம்ஸெஸ்ஸின் சிலைகள் ஃபாரோ பரம்பரை மன்னரின் மரணக் கடவுளான, ‘ஓஸிரிஸ் ‘ [Osiris, God of the Dead] வடிவத்தில் செதுக்கப் பட்டுள்ளன! ஃபாரோ பரம்பரை மன்னர்களின் முதலான தெய்வம் சூரியக் கடவுள் என்று அறியப் படுகிறது. அதுபோல் மன்னர்கள் மரணக் கடவுளான ஓஸிரிஸ் தெய்வத்தின் மீதும் மதிப்பு வைத்திருந்தது காணப்படுகிறது. பண்டைக் கால எகிப்தில், ஃபாரோ மன்னர்கள் உள்பட ஏனைய எகிப்தியர்களும் மரணக் கடவுளையும் தொழுது வந்ததாகத் தெரிகிறது. புராண எகிப்து மத நூல்களில் ஓஸிரிஸ் தேவன் மனிதனாக இருந்து, மண்ணிலே வாழ்ந்து எப்படியோ மனித ஆற்றலுக்கும் மேலான ஓர் அசுர சக்தியைப் பெற்று, மரணத்துக்குப் பிறகு மாபெரும் பிரதேசத்தை ஆண்டதாகவும், அவரைப் போல் ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தோர் அனைவரும் தமது மரணத்திற்குப் பிறகு அவரது பிரதேசத்தில் வந்து சேர்ந்ததாகவும் நம்பப் படுகிறது!
அந்த எழில் உள் மாளிகைச் சுவர்களில் இரண்டாம் ராம்ஸெஸ் கதேஷ்ப் போரில் [Battle os Kadesh] ஹிட்டைட்ஸ் மன்னருடன் புரிந்த போர் ஓவியமாக வரையப் பட்டிருக்கிறது. ராம்ஸெஸ் பெரிய மாளிகையைத் தாண்டி இன்னும் உள்ளே சென்று சிறு மாளிகைக்குள் நுழைந்தால், அங்கே நான்கு சதுரத் தூண்களைக் காணலாம். அந்த சிறு மாளிகை ‘கோமகனார் மாளிகை ‘ [Hall of the Nobles] என்று குறிப்பிடப் படுகிறது. இறுதியில் சன்னதியின் புனித இடத்திற்கு வருகிறோம். அங்குதான் ரா-ஹாரக்டே, பிரா, அமுன்-ரா, ராம்ஸெஸ் வேந்தர் [Ra-Harakhte, Prah, Amun-Ra, King Ramses] ஆகிய நான்கு சிலைகள் உள்ளன. அபூ சிம்பள் முதல் ஆலயத்தின் சிறப்பு: ஆண்டுக்கு இரண்டு முறைகள் [பிப்ரவரி 21, அக்டோபர் 22] பரிதியின் ஒளி நேரடியாகப் புனிதச் சன்னதியின் மேல் படுகிறது. அந்த தேதிகளின் முக்கியத்துவம் என்ன ? பிப்ரவரி 21 ஆம் தேதி ராம்ஸெஸ் மன்னர் பிறந்த நாள்! அடுத்து அக்டோபர் 22 ஆம் தேதி மன்னர் மகுடம் சூடிய நாள்.
ஆபூ சிம்பளில் உள்ள சிற்றாலயம்
இரண்டாம் ராம்ஸெஸ் தனக்குக் கட்டிய பேராலயத்திற்கு வடக்கில் சிற்றாலயத்தைத் தன் எழில் மனைவி நெஃபர்டாரிக்குக் கட்டியுள்ளதாக அறியப் படுகிறது. ஆலயம் காதல் எழில் தேவதையான ஹாதுருக்கு [Hathur] அர்ப்பணம் செய்யப்பட்டது! ஆலய முன் முகப்பில் ஆறு சிலைகள் கம்பீரமாக நிற்கின்றன. அவற்றில் நான் கு சிலைகள் இரண்டாம் ராம்ஸெஸ் மன்னருக்கும், இரண்டு சிலைகள் அவரது மனைவி நெஃபர்டாரிக்கும் செதுக்கப் பட்டிருக்கின்றன. ஆலயத்தின் உள்ளே நுழைந்தால் ஆறு தூண்கள் நிற்கும் ஒரு மாளிகைக் காணலாம். ஆறு தூண்களிலும் ஹாதுர் பெண் தேவதையின் தலைகள் அமைந்துள்ளன. கிழக்குத் திக்கில் உள்ள சுவரில் ராம்ஸெஸ் மன்னன் ரா-ஹாரக்டே, அமுன்-ரா தேவர்கள் முன்பாக எதிரிகளைத் தாக்கி வீழ்த்தும் காட்சி வரையப் பட்டிருக்கிறது! மற்றுள்ள சுவர்களில் ராம்ஸெஸ் மன்னனும், மனைவி நெஃபர்டாரியும் தெய்வங்களுக்குப் பூசை செய்து தொழும் நிகழ்ச்சி காட்டப் பட்டுள்ளது. உள்ளே சன்னதியில் மாபெரும் ஹாதுர் பெண் தெய்வச்சிலைக் காண்போரைப் பிரமிக்க வைக்கிறது. அதன் மேலேதான் மனிதன் செதுக்கிப் படைத்த, மிக உயர்ந்த செயற்கையான வளை கோபுரம் அற்புதமாய்ப் பார்ப்போரை ஊர்ந்திடும் எறும்புகளாக ஆக்குகிறது!
அடுத்து எகிப்தின் உன்னத ஓவியக் கலைத்துவம் பற்றியும், ஒப்பற்றக் கட்டிடக் கலைத்துவம் பற்றியும் காண்போம்.
(தொடரும்)
1. Guide to Places of the World Egypt By: Reader ‘s Digest (1987)
2. Atlas of the World History By: Harper Collins (1998)
3. The Ancient World, Quest for the Past (1984)
4. How in The World By: Reader ‘s Digest (1990)
5. Age of the Pyramids, Egypt ‘s Old Kingdom By: National Geographic (January 1995)
6. Finding A Pharaoh ‘s Funeral Bark & Riddle of the Pyramid Boats By: National Geographic (April 1988)
7. The History of Art for Young People By: H.W. Janson.
8. Ancient Egypt, Who Built the Pyramids, How old Are the Pyramids, PBS & WGBH Web Site (1997)
9. The Sphinx of Egypt – The Great Sphinx [www.nmia.com/~sphinx/
10 Ramesses II Temple & Nafertari Temple at Abu Simbel Egypt [Several Web Sites]
11 The New American Desk Encyclopedia, Abu Simbel (1989)
12 Britannica Concise Encyclopedia, Abu Simbel Temples (2003)
13. http://witcombe.sbc.edu/
14. http://www.ancient.eu/Abu_
15. https://en.wikipedia.org/
**************
S. Jayabarathan [jayabarathans@gmail.com] (April 3, 2016) [R-1]
- காப்பியக் காட்சிகள் 3.சிந்தாமணியில் சமய நம்பிக்கைகளும் சமய உரிமைகளும்
- நைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க ஆலய ஓவியங்கள் – 4
- ‘ சொற்கள் – எதிர்ச்சொற்கள் ‘ — நூல் அறிமுகம் !
- உரிமையில் ஒன்றானோம்
- இலக்கிய சிந்தனை 2015 ம் ஆண்டின் சிறந்த சிறுகதைகள்
- அடியில் உறங்கும் அறச்சீற்றம் [சு. தமிழ்ச்செல்வியின் “கண்ணகி” நாவலை முன்வைத்து]
- உன்னை நினைவூட்டல்
- தொடுவானம் 119. ஜப்பானியர் கைப்பற்றிய சிங்கப்பூர்..
- ”வேட்பாளருக்கு ஒரு வேண்டுகோள்”
- மாறுபட்ட அனுபவம் – கதிர்பாரதியின் ‘ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்’ –