தொடுவானம் 121. சிங்கப்பூரில் நேதாஜி.

This entry is part 9 of 12 in the series 22 மே 2016
 
Netaji and Hitler

ஜப்பானியர் ஆட்சியின் கீழ் சிங்கப்பூர் இருந்தபோது அங்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வந்தது வரலாற்றுச் சிறப்பு மிக்கது.
அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு பரம எதிரி. கல்கத்தாவில் அவர்களால் வீட்டுக் காவலில் இருந்தபோது மாறுவேடம் பூண்டு தப்பித்தார். ஆப்கானிஸ்தான் வழியாக தரை மார்க்கமாக ரஷியா சென்றார். அங்கு இந்தியாவிலிருந்து பிரிட்டிஷாரை எதிர்த்துப் போர் புரிய  உதவி கேட்டார். ஆனால் அவர்களிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை. அங்கிருந்து அவர் ஜெர்மன் தூதரகத்தின் உதவியுடன் ஜெர்மனியின் தலைநகரான பெர்லின் சென்றார்.

ஜெர்மனியில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இரண்டாம் உலகப் போரின் உச்ச கட்டம் அது. ஹிட்லரின் படைகள் ஆஸ்திரியா, பெல்ஜியம், ருமேனியா, போலந்து, நார்வே, டென்மார்க்,ஸ்வீடன், செக்கோசுலோவிக்கியா பிரான்சு, ஆகிய ஐரோப்பாவின் அனைத்து நாடுகளையும் கைப்பற்றி வெற்றி வாகைச் சூடியது  ஜெர்மனி. அடுத்த இலக்காக இங்கிலாந்தைக் குறிவைத்தது. லண்டன் நகரின் மீது குண்டுகளும் வீசியது.
Netaji1          ஜெர்மனியுடன் கூட்டு சேர்ந்திருந்த ஜப்பான் தென் கிழக்கில் எல்லா நாடுகளையும் கைப்பற்றிவிட்டது. அவற்றில் மலாயா, சிங்கப்பூர், இந்தோனேசிய, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் ஜப்பானின் கைவசம் மாறியது அவற்றில் சிங்கப்பூரை இழந்தது பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு பெருத்த அவமானமும் இழப்புமாகும்.  இங்கிலாந்தின் தற்காப்பு அமைச்சர் வின்ஸ்டன் சர்ச்சில் நிலை தடுமாறினார். அவருக்கு  இங்கிலாந்தைக் காப்பதா அல்லது கிழக்கில் இருந்த இந்தியாவையும் இதர பிரிட்டிஷ் காலனிகளைக் காப்பதா என்ற குழப்பம்.

அதுபோன்றே ஹிட்லருக்கும் சிறு குழப்பம். இங்கிலாந்தைத் தாக்குவதா அல்லது ரஷ்யாவைத் தாக்குவதா என்பது அவரின் குழப்பம். ரஷ்யாவின் ஸ்டாலின் முன்பு இத்தாலியின் முசோலினியுடன் சேர்ந்து ஹிட்லரை ஆதரித்தவர்தான். ஆனால் இடையில் அவர் பின்வாங்கிவிட்டார். ஸ்டாலின் ரஷ்யப் புரட்சியில் கவனம் செலுத்தினார். அவருக்கு ஹிட்லர் அண்டை நாடுகளைப் பிடித்து ஜெர்மனியுடன் இணைத்துக்கொள்வதில் இணக்கம் இல்லை. எந்த நேரத்திலும் ஹிட்லர் ரஷ்யா பக்கமும் திரும்பலாம் என்பது அவருடைய அச்சம். அதனால் அவர் ஹிட்லரிடமிருந்து விலகிக்கொண்டார். அவர் எதிர்பார்த்தபடியே ஹிட்லர் ரஷ்யா மீதும் தாக்குதல் நடத்த டாங்கிகளை அனுப்பினார்.

Netaji in Singapore          இத்தகைய உச்ச கட்டப் போரின்போதுதான் நேதாஜி ஹிட்லரைச் சந்தித்தார் அது 1941 ஆம் வருடம் ஏப்ரல் மாதம். இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்களை வெளியேற்ற இதுவே சரியான தருணம் என்று அவர் ஹிட்லரிடம் கூறி ஒரு திட்டத்தையும் முன் வைத்தார். அதன்படி ஜெர்மன் படைகள் ஆப்கானிஸ்த்தான் வழியாக இந்தியாவை வடமேற்கில் இருந்து தாக்குவது. ஜப்பானியர் பர்மா வழியாக கிழக்கிலிருந்து தாக்குதல் நடத்துவது. அப்படிச் செய்தால் இந்தியாவை எளிதில் கைப்பற்றி ஆங்கிலேயர்களை அங்கிருந்து வெளியேற்றிவிடலாம் என்பதே அந்தத் திட்டம். அதைக்  கூர்ந்து கவனித்தபோதும், ஹிட்லர் அது பற்றி அவ்வளவாக ஆர்வம் காட்டாதது நேதாஜிக்கு ஏமாற்றத்தை உண்டுபண்ணியது. அதனால் அவர் அடுத்தபடியாக ஜப்பானின் உதவியைத்தான் நாடவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்.

ஆனால் ஜப்பானுடன் சேர்ந்து இந்தியாவைக் கைப்பற்றவேண்டுமானால் தன் வசமும் ஒரு வலுவான இராணுவம் இருக்க வேண்டியதின் அவசியத்தையும் உணர்ந்தார்.ஆனால் அதற்கும் அவர் ஹிட்லரின் உதவியையே நாடவேண்டியிருந்தது.

            அப்போது ஜெர்மனியர்களிடம் சரண் அடைந்திருந்த பிரிட்டிஷ் படைகளின் போர் வீரர்கள் சிறைக் கைதிகளாக பெர்லின் கொண்டுவரப்பட்டிருந்தனர். அவர்களில் 3,000 பிரிட்டிஷ் இந்திய போர் வீரர்கள் இருந்தனர். அவர்கள அனைவரையும் நேதாஜி தன்னிடம் ஒப்படைக்க வேண்டினார். அவர்களை பிரிட்டிஸ் அரசுக்கு எதிராக மாற்றி இந்திய விடுதலைக்கு பயன்படுத்தப்போவதாகக் கூறினார். அது நல்ல திட்டமாக ஜெர்மனியருக்குத் தோன்றியதால் சம்மதம் தெரிவித்தனர். இந்திய விடுதலைப போரில் பங்கு கொண்டால் அவர்கள் அனைவருக்கும் விடுதலை என்பதை உணர்ந்த பிரிட்டிஷ் இந்திய போர்க்கைதிகள் ஆர்வமுடன் நேதாஜியின் பக்கம் சேர்ந்து கொண்டனர்.

இந்தியா பற்றி முழுமையான ஆதரவு ஹிட்லர் காட்டவில்லையென்றாலும் நேதாஜியின் விடுதலை வேட்கையை அவர் ஓரளவு புரிந்து கொண்டு  உதவினார். அதன்படி 1941 நவம்பர் மாதத்தில் ஜெர்மன் நாட்டு நிதி உதவியுடன் பெர்லின் நகரில்   இந்திய விடுதலை  மையம் ( Free India Centre ) செயல்படத் தொடங்கியது. அங்கிருந்து அன்றாடம் இரவில் இந்திய விடுதலை வானொலி மூலம் நேதாஜி உரையாற்றினார். அந்த 3,000 இந்திய போர்க் கைதிகளை வைத்து இந்திய விடுதலைப் படையை உருவாக்கினார்.இந்தியாவை ஜெர்மன் படைகள் தாக்கும்போது அவர்களுடன் அதுவும் சேர்ந்துகொள்வதுதான் நேதாஜியின் திட்டம்.அதற்கான போர்ப் பயிற்சிகளும் ஜேர்மனிய இராணுவத் தளபதிகளால் தரப்பட்டன. அதற்குமுன் அவர்கள் ஒரு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். “.இந்தியாவுக்காக சுபாஷ் சந்திர போசின் தலைமையில் போரிடப்போகும் ஜெர்மன் நாட்டின் தலைவரான அடோல்ப் ஹிட்லரை ஜெர்மன் ஆயுதப் படைகளின் தளபதியாக ஏற்று அவருக்குக் கீழ்ப்படிவேன் என்று கடவுளின் மீது ஆணையிடுகிறேன் ” ” I swear by God this holy oath that I will obey the leader of the German race and state, Adolf Hitler, as the commander of the German armed forces in the fight for India, whose leader is Subash Chandra Bose.” என்பதே அந்த உறுதிமொழி.

1942 ஆம் வருடத்தில் தென்கிழக்கில் ஜப்பான் பெற்ற மகத்தான வெற்றிகளால், ஜெர்மனி தன்னுடைய போர் நடவடிக்கைகளில் சில மாற்றங்களைச் செய்துகொண்டது. அதன்படி இந்தியாவை ஜெர்மன் படைகள்கொண்டு தாக்கும் எண்ணம் கைவிடப்பட்டது.அது நேதாஜிக்கு பெரிய அதிர்சியானது! அவருடைய கனவுக் கோட்டை இடிந்து தரைமட்டமானது! வேறு வழியின்றி அவர் இனி ஜப்பானின் உதவியை நாட வேண்டியிருந்தது.

ஹிட்லரும் நேதாஜியை ஜப்பானின் உதவியுடன் இந்தியாவை விடுவிப்பதே சிறந்ததாகப் படுவதாகக் கூறி அவர் தென்கிழக்கு ஆசியா செல்ல ஒரு நீர்மூழ்கி கப்பலையும் ஏற்பாடு செய்தார்.

1943 ஆம் வருடம் பெப்ருவரி மாதம் நீர்மூழ்கியில் புறப்பட்டார்  நேதாஜி . மடகாஸ்காரில் அவர் ஜப்பானிய நீர்மூழ்கி கப்பலுக்கு மாற்றப்பட்டார். மே மாதம் அவர் சுமாத்திரா வந்தடைந்தார். அது அப்போது ஜப்பானின் கைவசம் இருந்தது.

          ஜப்பானியரின் ஆதரவுடன் சிங்கப்பூரில் இந்திய தேசியப் இராணுவத்தை நேதாஜி சீர் செய்தார்.இந்த படை ஐ.என். எ. ( I. N. A. – Indian National Army ) என்று அக் காலத்தில் புகழ் பெற்றது. இதன் துவக்க காலத்தில் ஜப்பானியர்களால் சிங்கப்பூர் போரில் பிடிபட்ட பிரிட்டிஷ் இந்தியப் படையின் போர்க் கைதிகள் அடங்கினர். நேதாஜி சிங்கப்பூர் வந்தபின்பு சிங்கப்பூர் மலாயா வாழ் இந்தியர்கள் ( பெரும்பாலும் தமிழர்கள் ) அதில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.அவர்கள் அதுவரை பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்துவந்தாலும், இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெறவேண்டும் என்பதால் இதை தங்கள் தேச பற்றாகக் கருதி நேதாஜியின் ஆயுதமேந்திய விடுதலைப் போருக்கு ஆதரவு தந்தனர். ( இதற்கு மாறாக இந்தியாவில் காந்தியின் தலைமையில் அகிம்சை முறையில் இந்திய தேசியக் காங்கிரஸ் போராடிக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இருவகையான மாறுபட்ட அணுகுமுறையால் காந்திக்கும் நேதாஜிக்கும் கடைசிவரை கருத்து வேறுபாடு நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தேசியக் காங்கிரஸ் நேதாஜியின் தேச பற்றைப் பாராட்டினாலும், அவர் ஜேர்மனி, ஜப்பானுடன் கொண்டிருந்த உறவை விரும்பவில்லை. )
           சிங்கப்பூரில் அமைக்கப்பட்ட இந்திய தேசிய இராணுவம் நேதாஜி சிங்கப்பூர் வருமுன்பே இயங்கியது. அதை உருவாக்க காரணமாக இருந்தவர் ஜப்பானிய இராணுவத்தின் லெப்டனண்ட் ஜெனரல் இவாய்ச்சி புஜிவாரா ( Lieutenant General Iwaichi Fujiwara ) என்பவர். அப்போது பாங்காக்கில் இயங்கிய இந்திய விடுதலை இயக்கத்தின் தலைவர் பிரித்தாம் சிங் டில்லன் என்பவருடன் ஆலோசித்து இதை உருவாக்கினர். 1941ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் மேற்கு மலாயாவில் சரணடைந்த பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தின் கேப்டன் மோகன் சிங் என்பவர் போர்க் கைதியாக சிங்கப்பூரில் வைக்கப்பட்டிருந்தார். புஜிவாரா அவருடன் பேசி அவரின் தலைமையின் கீழ் இந்திய தேசிய இராணுவம் என்று பெயர் சூட்டப்பட்டு 1942 ஜனவரியிலிருந்து இயங்கியது.அதில் பிரிட்டிஷ் இந்திய இராவத்தினர் அனைவரும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். அவர்கள் அனைவருமே ஜப்பானியரிடம் போர்க் கைதிகளாக இருந்தவர்கள். பிரிட்டிஷ் இராணுவத்திற்கு சேவை செய்வதைவிட விடுதலைப் பெற்றவர்களாக இந்திய சுதந்திரத்துக்காக பிரிட்டிஷாரை எதிர்த்துப் போரிடலாம் என்று அவர்களுக்குக் கூறப்பட்டது. ஆதலால் இந்திய தேசிய இராணுவம் ஜப்பானியருடன் சேர்ந்து போரிடும் என்றும் முடிவுசெய்யப்பட்டது.அவ்வாறு போரிட்டு இந்தியாவைப் பிடித்து ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெறலாம் என்பதே அப்போதைய திட்டம்.
             அந்த முதல் இந்திய தேசிய இராணுவம் ஒரு வருடம்தான் செயல்பட்டது. ஜப்பானியர்கள் தங்களுடைய பரப்புரைக்காகவே அதைப் பயன்படுத்துவதை கேப்டன் மோகன் சிங் அறிந்துகொண்டார். அதனால் அவருக்கும் புஜிவாராவுக்கும் கருத்து வேறுபாடு உண்டாயிற்று. இராணுவம் கலைக்கப்பட்டது. மோகன் சிங் உட்பட அனைவரும் கைது செயப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
          அதன்பின் 1943 ஆம் வருடம் நேதாஜி சிங்கப்பூர் வந்தபின்புதான் இந்திய தேசிய இராணுவம் புத்துயிர் பெற்று மீண்டும் தீவிரமாக இயங்கியது.சிறையில் அடைக்கப்பட்ட அனைவரும் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். சிங்கப்பூர் மலாயா இந்தியர்களும் அதில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். தனியாக ஒரு பெண்கள் இராணுவமும் உருவாக்கப்பட்டது. அதற்கு ஜான்சி ராணி அணி என்று பெயர் சூட்டப்பட்டது. கேப்டன் லட்சுமி சுவாமிநாதன் அதற்கு தலைவியாகச் செயல்பட்டார்.
          ஜப்பானியருடன் சேர்ந்து இந்திய விடுதலை இராணுவம் இந்தியாவைப் பிடிக்க பர்மா வழியாக முன்னேறியது. 1944 ஆம் வருடம் ஜுலை மாதத்தில் பர்மாவில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் நேதாஜி உரையாற்றினார். இந்தி மொழியில் பேசிய அவர், ” எனக்கு இரத்தம் கொடுங்கள், நான் உங்களுக்கு விடுதலைத் தருகிறேன்! ” என்று முழங்கினார்.பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக தம்மோடு வந்து சேருமாறு இந்திய மக்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

       ( தொடுவானம் தொடரும் )
Series Navigationதமிழ் ஆய்வுக்கட்டுரைகள் எழுதுதல் மற்றும் பதிப்பித்தல் முறைகள்நைல் நதி நாகரீகம், எகிப்தின் ஒப்பற்ற கலைத்துவப் படைப்புகள் -6
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *