உலகமயமாக்கலும் உள்ளூர் அகதிகளும்

This entry is part 11 of 21 in the series 27 ஜூன் 2016

ஜூன்20 : உலக  அகதிகள் தினம்

 

‘சென்ற நூற்றாண்டின் இறுதி உலகம் முழுவதும் அகதிகளை பரப்பிவிட்டிருக்கிறது. இலங்கை தேசிய இனப் பிரச்சனைகள் காரணமாக ஈழத் தமிழர்கள் உலகம் பூராவும் நிறைந்திருக்கிறார்கள். வெவ்வேறு நாடுகளுக்கான போர் மனப்பான்மை, ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகள், தேசிய இனப் பிரச்சனைகள், உள்நாட்டுக் கலகங்கள் ஆகியவை மக்களை இடம் பெயரச் செய்து அகதிகளாக்கிவிட்டன.

உலகமயமாக்கலும் அதன் தொடர்பான தொழிற் சிதைவுகளும் அகதிகளாய் மக்களை வெளித்துப்பிக் கொண்டிருக்கச் செய்கின்றன. அந்நிய முதலீடுகள் பெரிய தொழிற்சாலைகளைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கும் போது சுதேசிமயமானத் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. இவை மூலமான தொழிலாளர்களின் இடப்பெயர்வும் மக்களின் வாழ்நிலையைப் பெருமளவில் பாதித்திருக்கின்றன.

இந்தவகைப் பெயர்விற்கு வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும் முதன்மைக் காரணங்களாக இருக்கின்றன. சமூக நிலையில் கீழ்த்தட்டிலும், அதற்குச் சற்றே மேல் மத்திய தட்டுக்களில் இருக்கும் தொழிலாளர்கள் இடம் பெயர்கிறார்கள். அவர்கள் அதிகம் படிக்காத முறைசாராத தொழிலாளர்களாக இருக்கிறார்கள். வேளாண்மை பொய்த்துப் போவது சாதாரணமாய் தண்ணீர் பற்றாக்குறையால் நிகழ்கிறது. சொந்த நிலங்களை வைத்திருப்போர் வேளாண்மை செய்ய இயலாத போது அவற்றை அங்குள்ள வசதியானவர்களின் ஆக்கிரமிப்பிற்கு ஆள்பட வேண்டி இருக்கிறது. கிடைக்கிற பணம்போதும் என்ற மனப்பான்மையில் விற்று விடுகிறார்கள். பெரும் பணக்காரர்கள், உள்நாட்டு பெரும் வணிக நிறுவனங்கள், அந்நிய முதலீடுகள், பெரும் நிலத்தை ஆக்கிரமிக்க வைக்கின்றன. சாதாரண உணவுப் பொருட்களின் விளைச்சலில் அக்கறை காட்டாமல் பணப்பயிர்களுக்குச் சென்றுவிடுகின்றனர். இவற்றிற்கு விவசாயத் தொழிலாளர்கள் குறைவாகத் தேவைப்படுவதால் மற்றவர்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயர வேண்டியாகிறது. பல தலைமுறைகளாக நிலம் சார்ந்த தொழில்களைச் செய்து வந்தவர்கள் தங்கள் மண்ணின் வேர்களையும், பிடிப்பையும் இழந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. நீர்ப்பற்றாக் குறையும், பருவமழைகள் பொய்த்துப் போவதும் சாதாரண விவசாயிகளை விவசாயத்தில் இருந்து துரத்தி விடுகின்றது.

தொழிற்சாலைகள் நிரம்பிய இடங்களுக்கு இடம் பெயர்வது சாதாரணமாகி விட்டது. அபரிமிதமானத் தொழிலாளர்களின் வருகையால் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்ய அவர்கள் உட்படுத்தப்படுகிறார்கள். வேலை நிரந்தரம் உட்பட பலச் சலுகைகள் மெதுவாகத் தளர்த்தப்பட்டு தற்காலிகத் தொழிலாளர்களாக்கப்படுகின்றனர்.

தொழிலதிபர்கள் நலிவடைந்த தொழிற்சாலைகளை இயக்குவதில் அக்கறை காட்டாமல் அவற்றை நோயுற்றத் தொழிற்சாலைகளாய் ஆக்குவதில் ஈடுபடுகிறார்கள். அதே சமயம் வேறு பின்தங்கிய மாவட்டங்களிலோ அல்லது தற்போதைய தொழிற்சாலை இருக்கும் மாவட்டத்தின் இன்னொரு பகுதியிலோ வேறு தொழிற்சாலைகளை ஆக்கிரமிக்கின்றனர். அங்கு புதிதாய் சேரும் தொழிலாளர்கள் வேலை என்ற உத்தரவாதமே போதும் என்ற நிலையில் சேருகின்றனர். பிற தொழிற்சங்க உரிமைகள் பற்றி அக்கறைப் படுவதில்லை. எனவே தற்காலிகத் தொழிலாளர்களை உருவாக்கிக் கொள்வது புது தொழிற்சாலை நிர்வாகிகளுக்குச் சுலபமாக இருக்கிறது. இவர்கள் தற்காலிகத் தொழிலாளர்களாகவே பல ஆண்டுகளுக்கோ அந்தத் தொழிற்சாலையின் அற்ப ஆயுளுக்கோ நீடிப்பதற்கான பல்வேறு உத்திகளைக் கைக்கொள்கிறார்கள். பழையத் தொழிற்சாலைகளில் இருப்போர் வேலை இழத்தலும், முதுமையடையாத உற்சாகம் குன்றாத, சற்றே உடல் வலிமை கொண்ட பழையத் தொழிற்சாலைகளின் தொழிலாளர்களில் குறைந்த சதவிகிதத்தினரே புதியத் தொழிற்சாலையில் சேருகின்றனர். புதியவர்களில் பெண்களைச் சேர்த்தக்கொள்வது சுலபமாகிறது. தொழிற்சங்க உரிமைகளை பெண்களிடத்தில் நிலைக் கொள்ளாமல் இருக்க எடுக்கப்படும் முயற்சிகள் பெருமளவில் வெற்றி பெற்று விடுகின்றன. பக்கத்து மாநிலங்களிலிருந்து கூட்டம் கூட்டமாய் பெண்களைக் கொண்டு வந்து மாட்டுக் கொட்டடி போன்ற இருப்பிடங்களில் இலவச இருப்பிடம், உணவு போனறச் சிறு சலுகைகளால் ஆறுதல்படுத்திக் கொண்டு தொழிற்சாலைகளில் ஈடுபடுத்துவது சாதாரணமாய் நிகழ்கின்றது.

ஜாதிய வன்முறை காரணமாக உயிரைக் காத்துக் கொள்கிற உபாயத்துடன் இடப் பெயர்வும் நிகழ்கிறது. தொடர்ந்த ஜாதிய கலவரங்களால் தொழில்கள் பாதிக்கப்படுகின்றன. புது இடங்களுக்கு, புது நகரங்களுக்கு இடம் பெயர்கிறவர்கள் தங்களில் பிரதேசம் சார்ந்தவர்கள், ஜாதியைச் சார்ந்தவர்களை அடையாளம் கண்டு தனிப்பிரிவாகச் செயல்பட ஆரம்பிக்கின்றனர். தங்கள் ஜாதிய, பிரதேச அடையாளங்களை தெரு பகுதிப் பெயர்களாகச் சூடிக்கொள்கின்றனர். ஒரு புது ஜாதியாகச் செயல்பட ஆரம்பிக்கின்றனர். ஒரு வகைப் பாதுகாப்பிற்காக என அவர்கள் நினைத்துக் கொண்டாலும் முந்தைய ஜாதியப் பிரதேச அடையாளங்கள் இவர்களைத் தனி அடையாளங்களாக்கி விடுகின்றன. பிறரிடமிருந்து விலகி ஒரு வகை கும்பலாகவே உள்ளூர் மக்களின் கண்களுக்குப் பரிமளிக்கிறார்கள். அவர்களின் பிரதேச மொழியின் சொல்லாடல்கள் வசவுக்கும், பேச்சுக்குமென்றாகி விடுகின்றன. புது சிறு தெய்வ வழிபாடுகளைத் துவங்கி விடுகின்றனர். உள்ளூர் கலாச்சாரம் சில நெருக்கடிகளைத் தருகிறது.

புதிய திட்டமிடாதப் பகுதிகளில் ஏற்படும் இடப்பெயர்வுகள் பல சிக்கல்களை உருவாக்குகின்றன. தண்ணீர் பிரச்சனை தலையானது. சாதாரண உபயோகத்திற்கானத் தண்ணீரை குடம் கணக்கில் காசு கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. குடியிருப்புப் பகுதிகள் மிகவும் நெருக்கமாகக் கூட்டுக் குடும்பத்திற்கு இயைந்ததாக இருப்பதில்லை. கூட்டுக் குடும்பமாய் இடம் பெயர்கிறவர்களும் தனிக் குடும்பங்களாகப் பிரிய வேண்டியிருக்கிறது. நெருக்கடி மிகுந்த இடங்களும், குறைந்தப் பரப்பளவு உள்ள இடங்களுமே வாய்க்கின்றன. உறவினர்கள் யாராவது இருக்கும் பகுதிகளிலோ, வீடுகளிலோ தற்காலிகமாய் குடியமர்கிறார்கள். பட்டா பெறாத இடங்களில் தற்காலிக குடிசைகள் போட்டுக் கொள்வதும் தற்காலிகமாகிறது.

மின்சாரம், சாலை வசதிகள் போன்றவை தங்கள் ஊரில் இருந்ததைவிட சிறப்பாக இருப்பது ஆறுதல் தருகிறது. அவர்களுக்கு தண்ணீர் லாரிகள் காமதேனுவாகின்றன. குழந்தைகளின் படிப்பிற்கு செலவு செய்யும் மனநிலை அற்றுப் போகிறார்கள். நாங்கள் இவ்வளவு கஷ்டப்படும் போது குழந்தைகளுக்குக் கல்வி தேவைதானா என்றக் கேள்வியின் முடிவில் குழந்தைகளையும் வேலைக்கு அனுப்பத் துணிகிறார்கள். குழந்தைகளின் படிப்புச் செலவிற்கும், துணிகளுக்கும் குறைவாகவேச் செலவிடுகிறார்கள். தினமும் குறைந்தது பனிரெண்டு மணிக்கும் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கிறது. இருப்பிடச் சூழலும், தொழிற்சாலைச் சூழலும் அவர்களுக்கு மன ரீதியில் பாதுகாப்பானதாய் இல்லை. உளவியல் சிக்கல்களையும், உளவியல் ரீதியானப் பாதுகாப்பின்மையையும் சில விதங்களில் ஏற்படுத்தி விடுகின்றன. தங்கள் உரிமை குறித்த அக்கறைகளுக்காக தொழிற்சங்கங்களில், அரசியல் இயக்கங்களில் சேர்வ மிகக் குறைவாக இருக்கிறது. பத்து சதவீதமானவர்களே தொழிற் சங்கங்களில் சேர்கிறார்கள். தொழிற்சங்க அரசியல் இயக்கங்களை விட தங்கள் பிரேதேச மக்களின் கூட்டமைப்பு தங்கள் ஜாதியினரின் சங்கங்களில் சேர்வது பாதுகாப்பானது என்று நினைக்கிறார்கள். இதன் அபாயத்தை உணர்வதில்லை.

ஓரளவு சம்பளமும் தொடர்ந்து வேலை கிடைப்பதும் அவர்களின் துயரங்களையெல்லாம் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு ஆறுதல்கொள்ள வைக்கின்றன. இன்னொரு பிரதேசத்திற்கு நல்ல வேலைத் தேடிச் செல்கிற இடப்பெயர்வு கானல் நீர்தான் என்பதையும் உணர்கிறார்கள். உள்ளூரில் தென்படும் பல பிரச்சனைகளுக்கு இடம் பெயர்ந்தவர்களின் கலாச்சாரம் காரணம் காட்டப்பட்டு விடுகிறது. அந்நியர்கள் என்ற முத்திரை சுலபமாகக் குத்தப்பட்டு விடுகிறது. இந்த மனப்பான்மை விலக சரியான அரசியல் இயக்கங்கள் தேவையாகிறது.

உலக மயமாக்கல், நாடுகளின் எல்லைகளே இல்லாமல் செய்துவிட்டது என்கிறார்கள். ஆனாலும் வெவ்வேறு வகையான முள் வேலிகளை உருவாக்கி உள்நாட்டிலேயோ, உள்ளூரிலேயோ அகதிகளை உருவாக்கி விட்டது.

Series Navigationகுறிப்பறிதல்கவியரசு கண்ணதாசன் பிறந்த நாளுக்கு
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *