சேதுபதி கவிதைகள் — ஒரு பார்வை ‘ வனந்தேடி அலையும் சிறுமி ‘ தொகுப்பை முன் வைத்து …

This entry is part 3 of 21 in the series 27 ஜூன் 2016

 

 

புதுச்சேரி மாநிலத்தில் ஒரு கல்லூரியில் பணியாற்றும் சேதுபதி கவிஞர் மட்டுமல்ல , பட்டிமன்றப்பேச்சாளரும் ஆவார். இது அவருடைய மூன்றாவது கவிதைத் தொகுப்பு . ” திரும்பத் திரும்ப எழுதச் சொல்லி, தொல்லை பண்ணுகிறது கவிதை. முல்லைக் கொடி பிணைத்து தேர் விட்டுப் போனவனை ,குன்றேறித் தொடர்ந்த கபிலனின் ஆவி நடுச்சாமத்தில் என்னை உலுக்கி எடுக்கிறது . ” என்று தன் கவிமனம் பற்றிக் குறிப்பிடுகிறார் சேதுபதி . இத்தொகுப்பில் 44 கவிதைகள் உள்ளன. கவிதைகள் எளியவை;நேர்படப் பேசுகின்றன.

‘ வனந்தேடி அலையும் சிறுமி கற்பனை நிறைந்தது . மிகையுணர்வு தன் அழகான வட்டத்தில் புதிய புதியகருத்துகளைப் படிமங்களாகக் கவிதையாக்கம் செய்கின்றன.

வனந்தேடி அலை யுமொரு

சாக்கடைக்குள்ளே

—- என்று தொடங்கும் கவிதை , அடுத்து ஒரு கற்பனை உச்சம் தொடும் காட்சியைப் பதிவு செய்கிறது.

புழுதி படிந்த நட்சத்திரங்களைப்

பனி நனைத்த மலர்கொண்டு

துடைக்கத் தெரிந்தவள்

—- என்பதில் ‘ பனி நனைத்த மலர் கொண்டு ‘ என்பது நுணுக்கமான பதிவு !

நரி விரட்டிப் போய் இன்னும்

மீளாத கடவுளோடு

தன் புன்னகை தொலைத்தவள்

—- என்பதில் குழந்தைமை , தமிழ்ப்பாங்குடன் ஒளிர்கிறது.

தொட்டதும் ஒட்டிக் கொண்ட

பட்டாம் பூச்சியின்

வண்ணங்களேறிச்

சிறகு முளைத்த மலராய்ச் சுழன்றவள்

—- என்ற வரிகளில் புத்தம் புதிய சிந்தனை அழகியல் பாங்குடன் காணப்படுகிறது.

மனிதர்கள் முளைத்த

தெருக்களின் வழியே

வனந்தேடி அலையுமச்

சிறுமியின் கால்கள்

சாக்கடைக்குள்ளே !

—- என்று கவிதை முடிகிறது. ‘ சாக்கடை ‘ என்பது துயரங்களின் குறியீடு எனக்கொள்ள இடமிருக்கிறது.

வாழ்க்கை என்றால் முரண்கள் இருக்கத்தான் செய்யும் என்னும் கருத்தைச் சொல்கிறது ‘ நான்கள் ‘

என்னும் கவிதை .

நன்றாகத் தெரிகிறது

எழுத வந்தது

இதுவல்ல என்று…

நன்றாகத் தெரிகிறது

பேச வந்தது

இதுவல்ல என்று…

நன்றாகத்தான் இல்லை

இப்படி

வாழ்வதும்…

‘ சமகாலத் தமிள்க் கவிக்கு ‘ என்ற கவிதை , ‘ தமிழைப் பிழைகளுடன் எழுதும் சிலர் புத்தகம்   போடுகிறார்கள் ‘ என்ற கருத்தைக் கிண்டலுடன் முன்வைக்கிறது.

உம்பாட்டுக்கு

எளுதினதெல்லாம் புத்தகமாக்கு

எதிர்ப்படுவார்க்கு

கையெளுத்துப் போட்டு

அன்பளிப்பா நீட்டு

—- என்கிறார் சேதுபதி !

கவிஞர் விக்ரமாதித்யன் பற்றி ஒரு குறிப்பு காணப்படுகிறது .

கவிப் பித்தேறி

சடைச்ச தாடியோட

நம்பியண்ணாச்சி

நோட்சு எழுதாரு …

—- தப்பும் தவறுமான கவிதையைக் கிண்டல் செய்கிறார் .

[ வட்டிக்கி வாங்க

வக்கீல்லைன்னா

வாராந்திரிக்குக்

கத்தையா அனுப்பு ]

ஒரு கவிதையின் தலைப்பு புதுமையோடு இருக்கிறது. ‘ நேறைக்கு வந்த சூரியன் இல்லை ‘ என்பதே

அது ! சூரியன் உதிக்கிறது என்பதை வித்தியாசமாகச் சொல்கிறார் சேதுபதி.

பூமிப் பரப்பின்

நீர் தேடி இறங்கும்

சூரிய விழுதுகள்

‘ ராமசாமி மாமா ‘ என்றொரு கவிதை .

இரவு முழுக்க நடக்கும் கூத்தில்

எத்தனை பாத்திரம் வந்து போனாலும்

கனத்த தொண்டையால் அரங்கை

நிறைக்கும்

ராமசாமி மாமாவைக்

காலன் பிடித்துப் போனதற்குக்

காரணம்

எமலோகத் திருவிழாவில்

ஏதேனும் கூத்திடவா ?

—- எனக் கவிதைக்கு அணி சேர்த்து அழகு செய்கிறார் சேதுபதி .

‘ மூலம் ‘ என்ற கவிதை சிந்திக்க வைக்கிறது.

எழுதிக் கொண்டிருக்கும் போதே

எனக்கு முன்னர் இதை

யாரோ

எழுதி வைத்திருப்பதாகப்படிகிறது

எழுதுவார்கள் பின்னும்

என்பதால் எழுத வேண்டியிருக்கிறது

—- என்பதால் , சொல்லும் முறைதான் வேறுபடுகிறது . மற்றபடி எழுதியதைத்தான் திரும்பத் திரும்ப

எழுதுகிறோம் என்ற தகவல் உண்மைதானே !

இவர், அவர் என எண்ணி ஏமாந்து போவது வாழ்க்கையில் எல்லோருக்கும் யதார்த்தமாய் நடக்கிறது.

இதைக் கருவாகக் கொண்டதுதான் ‘ அற்பமானதானாலும் ‘ என்ற கவிதை .

” தள்ளுங்கப்பூ … ” என்று

பின்புறமிருந்து தோள் தொட்டு நகர்த்தும்

குரலுக்குச் சொந்தக்காரர்

மணிவாசகச் சித்தப்பாதான் என்று

ஏமாந்து போயிருக்கிறேன்

அழகான பெண்மை இக்கவிதையில் பேசப்படுகிறது.

ரெட்டைச் சடைக்குட்டி

— இல்லையென்றாலும்

நம்மூரு சுதாக் கண்ணுதான்

 

உருளும் விழிகளில் நீர் வருமளவுக்கு

 

 

குழிவிழச் சிரிக்கும் அக்கள்ளி

இன்னொருவன் மனைவியான பிறகும்

அவள் என்றே படுகிறது

இல்லையான பின்னும்

—- இக்கவிதைக் கருவை யாரும் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை.

நிறைவாக , சேதுபதி கவிதைகள் எளிமையை அடித்தளமாகக் கொண்டு இயங்குகின்றன, பிரமிள்

மற்றும் அபி போன்ற கவிஞர்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் பயணம் செய்கிறார் சேதுபதி !

 

Series Navigationபிளிறல்யானைகளும், கோவில்களும், ஆன்மீகப் பாரம்பரியமும் – 3
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *