வாழ்க்கை எல்லாரையும் புரட்டித்தான் போடுகிறது. சிலநேரங்களில் காரணமே தெரியவில்லை. உலகில் நாமே கண் கூடாகப் பார்க்கிறோம். நல்லவராய் இருப்பவர்கள் பல துன்பங்களுக்கு ஆளாகிறார்கள். வாழ்வில் வெற்றி காண முடியாமல் திணறுகிறார்கள். அதே நேரத்தில் பல வழிகளில் எல்லார்க்கும் துன்பங்கள் செய்யும் தீயவர்கள் நல்லபடியாய்க் காட்சி தருகிறார்கள். இதற்கு என்ன விடை என்று பலரும் தேடினால் இறுதியில் விதி எனும் ஒற்றைச் சொல்லில் முடித்து விடுவார்கள் இது சான்றோர் பெருமக்களால் இன்னும் ஆராயப்படவேண்டும் என்றுதான் பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன் குறள் எழுதிய வள்ளுவப்பெருமானும் கூறுகிறார். அதனால்தான்,
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்”
என்கிறார். அதேபோல என்னதான் பகுத்தறிவு என்று பேசினாலும் சில வேளைகளில் சகுனங்கள், சாத்திரங்கள் இறை நம்பிக்கை எல்லாமே உண்மைதானா என்றெண்ணத்தான் தோன்றுகிறது. இவற்றைப் புறந்தள்ளவும் முடியவில்லை. ஒரு சிலரின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை வைத்துப் பார்க்கும்போது அவை எல்லாமே நமக்குப் பாடங்கள் சொல்கின்றனவோ என்று எண்ணத் தோன்றுகிறது. சிலநேரம் பகுத்தறிவும் மற்ற சில நேரங்களில் பழமைவாதமும் போட்டிக்கொண்டு வெல்கின்றன. இவற்றை எல்லாம் எண்ணிக்கொண்டுதான் தாரமங்கலம் வளவனின் “ஐயனார் கோயில் குதிரைவீரன்” சிறுகதைத் தொகுப்பை அணுக வேண்டியுள்ளது.
தனத்துக்குப் பெயரே ராசியில்லாதவள் என்றுதான். அவள் வாழ்வில் அது பலித்துக்கொண்டே வருகிறது. மணம் முடிந்து நல்லபடியாய் இல்லறம் நடக்கும்போது கணவனும் பிள்ளையும் விபத்தில் மறைகின்றனர். பெற்றவர்களுடன் வாழ வருகிறாள். அவர்களும் மடிந்துபோகிறார்கள். அவளுக்கும் கால் ஒடிந்து போகிறது. அவளை மணக்க வேண்டிய முறை மாமன் அவளுக்காகவே இன்னும் காத்திருக்கிறான். இப்போது கடைசியில் அவன் அவளை அவன் மணந்துகொள்கிறான். இதுதான் ”முறைமாப்பிள்ளை” சிறுகதை. இங்கு சில கேள்விகள் எழும்புகின்றன. முறைமாப்பிள்ளைக்காகவே தனத்தின் வாழ்வில் விதி விளையாடியதா? இக்கதை ராசியை நம்புங்கள் எனச் சொல்கிறதா? இறுதிவரை காத்திருந்து ஊனமான பின்னரும் அவளைக் கைப்பிடிப்பவனின் உன்னத மனத்தைச் சொல்கிறதா?
ஒரு சிறுகதை படித்து முடித்த பின்னாலும் வாசகனின் மனத்தில் இடம் பெற்று அவன் மனத்தைக் குடைந்து கொண்டே இருக்க வேண்டும். சில முடிவுகளை வாசகனின் மனத்தில் எழும்பச் செய்ய வேண்டும். ஒருமலர் மெல்ல மலர்வதுபோல அவன் ஒரு முடிவுக்கு வர வேண்டும். ஆசிரியர் தானாக ஒரு முடிவை அவனிடம் திணித்தால் அது பிரச்சாரமாகிவிடும். முதலில் நாம் தனத்தைப் படித்துப் பரிதாபப்படுகிறோம். அவள் தன் மாமனை வேறு திருமணம் செய்துகொள்ளச் சொல்கிறாள். ஆனால் இறுதியில் அவள் மாமன் இசக்கிதான் வாசகனின் மனத்தில் இடம் பெறுகிறான். ராசி என்ற பேதமும் மறைந்து போய்விடுகிறது.
”சுமங்கலி வேஷம்” மற்றும் “ஜமீன்தார் மனைவி” ஆகிய சிறுகதைகள் நம் பண்டைய பாரம்பரியமான பெண்களின் மனத்தைக் காட்டிப் பாடம் நடத்துகின்றன.
இன்னும் கூட இவ்வாறு பெண்கள் இருக்கிறார்களா என்ற கேள்வியையும் இக்கதைகள் எழுப்புகின்றன. ஊடகங்கள் சொல்லித்தரும் நச்சுப் புனைவுகளுக்கிடையிலும் இவை போன்ற படைப்புகள் என்றாலும் காலம் காலமாக இது இன்னும் தொடர வேண்டுமா என்றும் வாசகன் கேட்கின்ற சூழலை கதை உருவாக்குகிறது. ஆனால் நாகரிகம்தான் மாறக்கூடியது; பண்பாடு என்றும் மாறாததுதானே என்ற விடையும் எழுவது தவிர்க்க முடியவில்லை.
இருகதைகளின் தலைவிகளுக்கும் இருவேறு வகைகள் என்றாலும் துன்பம் ஒன்றுதான். பாலுக்குச் சர்க்கரை இல்லை என்றாலும், கூழுக்கு உப்பில்லை என்றலும் வேதனை ஒன்றுதானே? சுந்தரத்தின் அப்பா குடிகாரர்; குடும்பத்தைவிட்டுப் பிரிகிறார். இப்படிச் சொல்வதை விட சுந்தரத்தின் அம்மா அவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே கணவனை விட்டுப் பிரிந்துபோகிறார் என்று சொல்லலாம். அவனை நல்ல பணிக்கு வரும்படி ஆளாக்குகிறார். கணவன் எல்லாம் இழந்து உடல்குன்றி வரும்போது மன்னித்து ஏற்றுக்கொள்கிறாள். இத்தனை நாள் சுமங்கலி வேஷம் போட்டவள் உண்மையிலேயே சுமங்கலியாகிறாள்.
ஜமீன்தார் மனைவி ரங்கநாயகியின் கணவனான கோபால் குமாரர் ஜமீன்தாரோ தாசி சுசீலாவின் வயப்பட்டு அவள் வீடே கதி எனக் கிடக்கிறார். மனைவியை மறந்து போகிறார். ஜமீன்தார் நோய்வயப்பட்டு மறைந்து போகிறார். தாசியைக் கவனிக்க ஆளில்லை. அவள் வறுமையினால் மற்றும் முதுமையினால் மெலிந்து வாடி ரங்கநாயகி வீட்டு வாயிலில் விடப்படுகிறாள். “நீங்க தொட்ட அந்த உடம்பை அநாதையாகச் சாகவிடமாட்டேங்க” என்று கூறி ரங்கநாயகியானவள் அந்தத் தாசி சுசிலாவை அடக்கம் செய்யும் புதுமைக்கதை இது. இக்கதை கூறிச் செல்லும் முறையிலும் ஒரு வித்தியாசம் தெரிகிறது. இறந்த கணவனின் படத்தின் முன்னால் ரங்கநாயகி பேசுவதுபோல் ஆங்காங்கே காட்டி உள்ளார்.
ஐயனார்கோயில் குதிரைவீரன் கதையும் தொன்ம வகையைச் சார்ந்தது எனக் கூறலாம். கிராமங்களில் ஐயனார் என்பவர் காவல்தெய்வம் ஆவார். அதுவும் நல்லதைக் காத்துத் தீயதை அழிக்கும் தன்மை கொண்டவர் என்று கூறப்படுபவர். இக்கதையிலும் ஏமாற்றி வஞ்சிக்கப்பட்ட சுப்ரமணி வந்து மருதமுத்துவைப் பழிவாங்குகிறான்.
”தெய்வத்தின் வாழ்வுதனைச் சூதுகவ்வும்; மீண்டும் தெய்வம் வெல்லும்” என்பதுதான் உலகநீதி. ”அல்லவை தேய அறம் பெருகும்” என்பது வள்ளுவம். ”இவ்வுலகம் இன்னும் அழியாமல் இருப்பதற்குக் காரணமே சான்றோர் இருப்பதனால்தான்” என்பார் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி. ”அனுபவத்தைத் தவிர பெரிய கடவுள் வேறில்லை” என்பார் கவியரசர் கண்னதாசன்.
இத்தொகுப்பின் சிறுகதைகளில் சில வெளிப்படையாகவும் பல மறைபொருளாகவும் அனுபவங்களை வடித்துக் காட்டி நாம் வாழ்வை எப்படி வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்று பாடம் சொல்கின்றன என்று துணிந்து கூறலாம்.
- யாதுமாகியவள்
- பிளிறல்
- சேதுபதி கவிதைகள் — ஒரு பார்வை ‘ வனந்தேடி அலையும் சிறுமி ‘ தொகுப்பை முன் வைத்து …
- யானைகளும், கோவில்களும், ஆன்மீகப் பாரம்பரியமும் – 3
- சொல்லவேண்டிய சில
- விண்வெளிச் சுனாமிக் கதிர்வீச்சு மூன்றாம் பூகாந்த வளையம் தோன்றி மறையக் காரணமாகும்.
- நைல் நதி நாகரீகம், பிரமிடைக் காண வந்த பிரெஞ்ச் போர்த் தளபதி நெப்போலியன், சூயஸ் கால்வாய்த் திட்டம் – 10
- மீனாட்சி கோபாலகிருஷ்ணனின் மின்னும் கைவண்ணங்கள்!
- ஓர் இலக்கிய வாதியின் யாத்திரை அனுபவங்கள் எட்டுத் திக்கும் :சுப்ரபாரதிமணியன் பயண நூல்
- குறிப்பறிதல்
- உலகமயமாக்கலும் உள்ளூர் அகதிகளும்
- கவியரசு கண்ணதாசன் பிறந்த நாளுக்கு
- காப்பியக் காட்சிகள் 10.பொழுதுபோக்குகள், பழக்க வழக்கங்கள்
- மஹாத்மா (அல்ல) காந்திஜி
- பாடம் சொல்லும் கதைகள்
- தொடுவானம் 125. முன்றாம் ஆண்டின் முதல் நாள்..
- அம்மா கணக்கு – இயக்குனர் அஸ்வினி ஐயர் திவாரியின் வரவு
- நெஞ்சிலிருந்து ஒரு சொல் – ரவி சுப்பிரமணியனின் ‘ஆளுமைகள் தருணங்கள்’
- அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக குறுநாவல் போட்டி 2016
- சிறுவர் நாவல்கள் மின்னூல்களாக
- திருலோக சீதாராம் என்றொரு கவியாளுமை