கலவை வெங்கட்
ஜனவரி 30, 1948.
“மஹாத்மா காந்தி வாழ்க!” என்ற பெரும் கோஷம் யமபுரியில் சித்ரகுப்தன் வீற்றிருந்த அவையின் வெளியே கேட்டது. இவ்வாறான கோஷத்தை அதுவரை சித்ரகுப்தன் கேட்டதே இல்லை.
பல்லாயிரம் ஆண்டுகள் முன், யமராஜன் யமபுரியின் ஆளுநராக இருந்தார். புவியில் மனிதர்கள் செய்யும் நல்ல மற்றும் தீய செயல்களை கவனமாகக் கண்காணித்து கணக்கெழுதுவது அவர் வேலையாக இருந்தது. ஒருவர் செய்கின்ற நல்ல மற்றும் தீய செயல்களுக்கு ஏற்றார்போல வினைப்பயன் கூடும். அவரவர் வினைப்பயனுக்கு ஏற்றார் போல கொஞ்ச காலம் சுவர்க்கத்துக்கோ இல்லை நரகத்துக்கோ யமனால் அனுப்பிவைக்கப்படுவர். வரையறுக்கப்பட்ட சுவர்க்கவாசமோ நரகவாசமோ முடிந்தபின் புவியில் மறுபிறவி என்ற சுழற்சி தொடரும்.
புவியில் ஜனத்தொகை பெருகியது. மனிதர்கள் செய்யும் நல்ல மற்றும் தீய செயல்களும் பெருகின. யமனுடைய வேலை ஒரு பிரம்ம பிரயத்தனமாகவே மாறிவிட்டது. தவறான கணக்கெழுதிவிடக்கூடாதே என்ற கவலையில் எமன் பிரம்மனிடம் உதவிகேட்டு முறையிட்டார். பிரம்மனும் தியானத்தின் வழியாக, மனித கணக்கை எழுதுவதற்காகவே, சித்ரகுப்தனைப் படைத்தார். சித்ரகுப்தனுக்கு அபரிமிதமான சக்திகளையும் கொடுத்தார். சித்ரகுப்தனும் யமனுடைய மகளை மணந்து யமபுரியில் அவை நடத்தினார்.
மரித்தபின் யமபுரி வரும் ஒவ்வொருவரும், சித்ரகுப்தன் தங்களுக்கு சுவர்க்கவாசம் அளிப்பாரா இல்லை நரகவாசம் அளிப்பாரா என்று அறியாது, பயந்துகொண்டு, மௌனமாகத்தான் வருவார்கள். பல்லாயிரம் ஆண்டுகளில், இன்றுதான் முதன்முறையாக வாழ்த்தொலியோடு ஒருவர் யமபுரிக்குள் நுழைவதை சித்ரகுப்தன் கண்டார்.
ஆச்சரியத்தோடு மந்திரிகளைக் கேட்டார், “யார் இந்த மஹாத்மா காந்தி?”
“என்ன சித்ரகுப்தரே, மஹாத்மா காந்தியுடைய பெருமை தெரியாமலே அவருடைய கணக்கை இத்தனை நாட்களாக எழுதியிருக்கிறீரே? அவரைப் பற்றி புவியில் பெயர் பெற்ற செய்தித்தாள்கள் எப்படியெல்லாம் புகழ்கின்றன என்று பாருங்கள்” என சொல்லி நியூ யார்க் டைம்ஸ், ஹிந்து முதலிய செய்தித்தாள்களையும், பாரதியார் காந்திஜியைப் போற்றி எழுதிய வரிகளையும் அவர் முன் மந்திரிகள் வைத்தார்கள். அவற்றை அவசர அவசரமாகப் படித்த சித்ரகுப்தன் வெலவெலத்துப் போய்விட்டார். இந்தியர்கள், மேற்கத்தியவர்கள் என்று எல்லாரும் சகட்டு மேனிக்கு போற்றியிருக்கும் இந்த மஹாத்மாவைப் பற்றி ஒன்றும் தெரியாமல் இருந்துவிட்டோமே என்று அவருக்கு உறுத்தல்.
தொண்டர்கள் புடைசூழ காந்திஜி அவையில் நுழைந்தார். சித்ரகுப்தன் அதீத மரியாதையுடன், கூப்பிய கைகளோடு காந்திஜியை வரவேற்றார்: “பூலோகத்து செய்தித்தாள்கள் எல்லாம் படித்தேன். உங்களை அவர்கள் போற்றுவதைப் பார்த்து பிரமித்துவிட்டேன். பாரதியார் இயற்றிய பஞ்சக வரிகளும் படித்தேன். எவ்வளவு அசாதாரணமான மனிதர் நீங்கள்? உங்களைப் போன்ற மஹாத்மாவை வரவேற்கும் பேறு எனக்குக் கிடைத்ததே! நீங்கள் பல்லாயிரமாண்டுகள் சுவர்க்கத்தில் தங்கியருள வேண்டும் மஹாத்மா அவர்களே. நீங்கள் எளிமையான வாழ்க்கையை விரும்புபவர் என்றாலும் உங்களுக்கு சுவர்க்கத்தில் ஒரு அரண்மனையையும், தோளில் கைபோட்டு நடக்க இரண்டு இளம் தேவதைகளையும் ஒதுக்கியிருக்கிறேன்.”
செய்தித்தாள்களைப் படித்து மட்டுமே முடிவெடுக்காமல் காந்திஜியின் செயல்களைப் பதிவு செய்த கணக்குப் புத்தகத்தையும் ஒருமுறை பார்த்துவிடலாமே என்று முணுமுணுத்த மந்திரியை சித்ரகுப்தன் கோபப்பார்வையால் தகித்துவிட்டார்.
“அதனாலென்ன, அதிக செலவில் பராமரித்த ஆசிரமங்களில் நான் எளிமையாக வாழவில்லையா? அதே போன்ற எளிய வாழ்வை, இராட்டை சுற்றிக்கொண்டு, சுவர்க்க அரண்மனையிலும் வாழ்ந்தால் போச்சு!” என்று சிரித்துக்கொண்டே சொன்ன காந்திஜி தேவதைகளின் தோள்களை அணைத்தவாறு சுவர்க்க அரண்மனையை நோக்கி நடக்கத் தொடங்கினார். அவையில் இருந்த எல்லாரும் அவருக்குத் தலை வணங்கி நின்றார்கள்.
ஒரு சிலர் தவிர.
அந்த ஒருசிலரில் ஒரு இளம் பெண், “காந்திஜி, ஒரு நிமிஷம் நில்லுங்கள்!” என்றாள். மஹாத்மா என்று அழைக்கவில்லை. வயதுக்கு மரியாதை அளித்து ஒரு ‘ஜி’ மட்டுமே சேர்த்திருந்தாள்.
“என்னைத் தெரிகிறதா?”
இல்லை என்று காந்தி தலையசைத்தார்.
“என்னை உங்களுக்குத் தெரியுமென்று நான் நினைக்கவில்லை. நான் கேரளாவில் பிறந்து வளர்ந்த ஒரு ஹிந்து. எனக்கு பதினெட்டு வயதில் கல்யாணம் ஆனது. கல்யாணமாகி ஒரு வருஷம் இருக்கும். ஏழு மாதம் கர்ப்பமாக இருந்தேன். அப்போது கேரளாவில் மோப்ளா கலவரம் வெடித்தது. முஸ்லிம்கள் ஹிந்து ஆண்களைக் கொன்று போட்டுவிட்டு ஹிந்து பெண்களைக் கற்பழித்தார்கள்.
அன்று எனக்கு வளைகாப்பு சடங்கு. அன்றுதான் எங்கள் வீட்டின் மேல் முஸ்லிம்கள் குவிந்தார்கள். என்னுடைய அப்பாவை என் கண்ணெதிரேயே வெட்டித்தள்ளினார்கள். என் கணவர் என்னைக் காப்பாற்ற தைரியமாகத்தான் போராடினார். என்னை ஓடச்சொன்னார். ஆனால் எங்கே ஓட? அவரை சகட்டுமேனிக்கு வெட்டினார்கள். குற்றுயிரும் குலையுயிருமாக வீழ்ந்தார். கண்ணில் அசைவு இருந்தது. ஏதோ சொல்ல முயல்கிறாரே? காதில் ஒலிக்கவில்லையே. ஏன்?
என் அழுகைக் குரல்தான் எனக்குக் கேட்டது. விலாவில் ஒருவன் உதைத்தான். தடுமாறி விழுந்தேன். உடலிலிருந்த சேலையை ஒருவன் உருவி எறிய மற்றவர்கள் மாறி மாறிக் கற்பழித்தார்கள். அய்யோ வயிற்றில் இருக்கும் என் குழந்தை! யாராவது உதவிக்கு … ஏன் யாருமே வரவில்லை? சுருக்கென்று வயிற்றில் ஏதோ தைக்க, கண் இருண்டது.
கண் விழித்தபோது தெருவோரத்தில் கிடந்தேன். மருத்துவச்சி என்னை அணைத்துக்கொண்டிருந்தாள். வயிற்றில் கட்டு போட்டிருந்தாள். தொடையிலும் கையிலும் பிசிபிசுப்பாக காய்ந்த இரத்தமும், திசுக்களும் ஒட்டிக்கொண்டிருந்தன. அய்யோ வயிற்றில் இருந்த என் குழந்தையா? ஓவென்று அழுதேன். என் கணவர் எங்கே? அம்மா? யாருமே இல்லையா? நான் ஏன் சாகவில்லை? திரும்ப கண் இருண்டது.
என்னைப் போல எத்தனையோ பெண்கள். யாருக்கு என்று வைத்தியம் பார்க்க என்றாள் மருத்துவச்சி. எதை வைத்து வைத்தியம் பார்க்க? ரொம்ப வலித்தது. பசித்தது. நாவறண்டு, தடித்து, எது பேசினாலும் குழறியது. ஓடு என்று சொன்னாரே? ஏன் ஓடவில்லை? எங்கே ஓட? இரவில் திடீரெண்டு கண் விழித்தால், அருகில் சில நாய்கள் எதையோ தின்றுகொண்டிருந்தன. அது திசுத்தானே? அய்யோ என் குழந்தை! அலறினேன். ஊளையிடுவதுபோல என் குரல் வெளிப்பட்டது. உறுமிக்கொண்டு ஒரு நாய் என் மீது பாய, கண் இருண்டதுதான் தெரியும். திரும்ப கண் திறக்கவில்லை.
அன்று நவம்பர் 4, 1921. எனக்கு வளைகாப்பு போட்ட நாள். அதுவே நான் இறந்த நாளும். மோப்ளா கலவரத்தில் கற்பழிக்கப்பட்டு, குடும்பத்தை இழந்து, நாதியில்லாமல் தெருவோரம், நிர்வாணமாக இறந்த பல ஆயிரம் ஹிந்துப் பெண்களில் நானும் ஒருத்தி.”
அந்த இளம் பெண் இதை சொல்லி முடிக்கையில் அவையே ஸ்தம்பித்திருந்தது. காந்திஜியும் கலங்கிப் போயிருந்தார். அடங்கிய குரலில் “மகளே உனக்கு நடந்த அசம்பாவிதம் எனக்கு வருத்தமளிக்கிறது” என்றார்.
வேறு யாருக்கும் பேச நா எழவில்லை. அவளே தொடர்ந்து பேசினாள்:
“காந்திஜி, இன்று சித்ரகுப்தன் படித்த செய்தித்தாள்களை, நான் யமபுரி வந்த நாள் முதல் தினமும் கவனமாகப் படிக்கிறேன். நீங்கள் மோப்ளா கலவரத்தைப் பற்றி இட்ட அறிக்கைகளையும் படித்தேன். நீங்கள் என்னைப் போல ஹிந்துப் பெண்களை கொடூரமாகக் கற்பழித்துக் கொன்றவர்களைக் கண்டனம் கூட செய்யவில்லையே? மாறாக, கொலையும், கற்பழிப்பும் நடத்திய முஸ்லிம்கள் போலீஸிடம் சிக்கி இறந்தபோது அந்த முஸ்லிம்களுக்கு வக்காலத்து வாங்கி அறிக்கை விட்டீர்கள். அவர்களுக்குப் பண இழப்பீடு தரவேண்டும் என்றும் வலியுறுத்தினீர்கள். காந்திஜி, என்னைப் போல அப்பாவிப் பெண்களைக் கொடூரமாகக் கற்பழித்துக் கொன்றவர்களை தார்மீக ரீதியாகப் போராடியவர்கள், வீரர்கள் என்றெல்லாம் பாராட்டி அறிக்கை விட்டீர்கள்.”
காந்திஜி வாயே திறக்கவில்லை.
அந்த இளம் பெண் கேட்டாள்: “காந்திஜி, என்னை மகளே என்று அழைத்தீர்களே? ஒருவேளை நான் நிஜமாகவே உங்கள் மகளாக இருந்திருந்தால் அப்போதும் என்னைக் கருவறுத்து, கற்பழித்துக் கொன்றவர்களை தார்மீகமானவர்கள், வீரர்கள் என்று வர்ணித்திருப்பீர்களா?”
சில கணங்கள் பதில் பேசாமல் நின்று, பின் வேதனையுற்ற குரலில் காந்தி சொன்னார், “நான் என் குடும்பம் அடுத்தவர்கள் என்ற வேறுபாடு பார்ப்பதில்லை. ஒருவேளை. நீ எனக்குப் பிறந்த மகளாக இருந்திருந்தாலும் …”
“அப்படியானால், நீங்கள் ஒரு நல்ல தலைவராகவோ, தார்மீகமான மனிதராகவோ மட்டுமில்லை, ஒரு நல்ல தந்தையாக இருக்கும் தகுதிகூட அற்றவர்” என்றாள் அந்த இளம் பெண். அவள் குரலில் கோபமோ, வெறுப்போ இல்லை. நிதர்சனமான உண்மையை சொல்லும் வைராக்கியம் மட்டுமே இருந்தது.
காந்திஜி தலை குனிந்து நின்றார்.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த சித்ரகுப்தன் நிலைகுலைந்துவிட்டார். கற்பழிப்பும் கருக்கலைப்பும் மஹாபாதகமன்றோ? அந்த செயல்களையா தார்மீகமானவை என்று காந்திஜி நியாயப்படுத்தினார்? அந்த மஹாபாதகங்களை செய்தவர்களையா வீரர்கள் என்று போற்றினார்? பாதிக்கப்பட்டவர்களுக்கு வக்காலத்து வாங்காமல் மஹாபாதகர்களுக்கா வக்காலத்து வாங்கினார்? அவரைப்போய் மஹாத்மா என்று செய்தித்தாள்கள் வர்ணித்ததெல்லாம் வெறும் பிரச்சாரமா? எப்படி நான் வெறும் தலைப்பு செய்தியைப் படித்துவிட்டு அவசர முடிவுக்கு வந்தேன்? இந்த இளம் பெண்ணோ பிரச்சாரத்தைத் தாண்டி உண்மையை நாடியிருக்கிறாளே? உண்மை அறிந்துதான் மஹாத்மா என்று அழையாமல் காந்திஜி என்று வயதுக்கு மட்டுமே மரியாதை அளித்து விளித்தாளோ?
அவரைப் போய் எங்ஙனம்
“பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி
மஹாத்மா! நீ வாழ்க! வாழ்க!
…
முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்
புவிக்குள்ளே முதன்மை யுற்றாய்!”
என்றெல்லாம் பாரதியார் போற்றினார்? அதுசரி, பாரதியாரும் வெறும் மனிதர்தானே? மகத்தான சக்திகள் பெற்ற நானே தவறான ஊகத்துக்கு வரமுடியுமென்றால், பாரதியார் தவறாக ஊகித்ததில் ஆச்சரியமென்ன? இனிமேலாவது,
“எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண் பதறிவு”
என்ற வள்ளுவன் வாக்கை மறவாது நடக்க வேண்டுமென்று சித்ரகுப்தன் தீர்மானித்தார்.
அவையில் இருந்த அனைவர் மனதிலும் ஒரு கேள்வி முள்ளாய் நிரடியது: மஹாபாதகங்கள் செய்த இழிசனர்களை வீரர்கள், தார்மீகமானவர்கள் என்று மெச்சி வக்காலத்து வாங்கிய காந்திஜியிடம் தார்மீக திசைகாட்டி என்று ஒன்று இருந்ததா?
பின்னுரை: இது மோப்ளா கலவரத்தில் காந்தியின் செயல்களையும், சொற்களையும் சரித்திர அடிப்படையாய் கொண்டு அமைத்த கதை. ஆதாரம் வேண்டுவோர், R. C. Majumdar இயற்றிய The History and Culture of the Indian People, Volume XI, Struggle for Freedom என்ற நூலின் பக்கங்கள் 360-365 காண்க. ஆர்வலர்கள் பார்வையில் காந்திஜி மஹாத்மாவாகத் தென்படுகிறார். ஆனால் அது வெறுமே ஊகத்தை ஊர்ஜிதப் படுத்தும் விதமாக அமைந்த பார்வையே. மீளாய்வைத் தாக்குப்பிடிக்கும் ஒன்றல்ல. ஆதாரம் பின்பற்றி அமைந்த மதிப்பீடு அல்ல. காந்திஜியை வேறு ஒரு விதமாகவும் மதிப்பீடு செய்ய முடியும். அது அவர் செயல்களால் வாழ்கையின் விளிம்புக்கு வெளியே தள்ளப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, ஆனாலும் தார்மீக சிந்தனை வழுவாதவர்கள் பார்வையின் மூலமாக. அது வெறுமே ஊகத்தை ஊர்ஜிதப் படுத்தும் விதமாக அமைந்த பார்வை அன்று. அது ஆதாரம் பின்பற்றி அமைந்த மதிப்பீடு சார்ந்த பார்வை. அப்பார்வையில் காந்திஜியைப் பற்றி அமைத்த மதிப்பீடே இக்கதை.
- யாதுமாகியவள்
- பிளிறல்
- சேதுபதி கவிதைகள் — ஒரு பார்வை ‘ வனந்தேடி அலையும் சிறுமி ‘ தொகுப்பை முன் வைத்து …
- யானைகளும், கோவில்களும், ஆன்மீகப் பாரம்பரியமும் – 3
- சொல்லவேண்டிய சில
- விண்வெளிச் சுனாமிக் கதிர்வீச்சு மூன்றாம் பூகாந்த வளையம் தோன்றி மறையக் காரணமாகும்.
- நைல் நதி நாகரீகம், பிரமிடைக் காண வந்த பிரெஞ்ச் போர்த் தளபதி நெப்போலியன், சூயஸ் கால்வாய்த் திட்டம் – 10
- மீனாட்சி கோபாலகிருஷ்ணனின் மின்னும் கைவண்ணங்கள்!
- ஓர் இலக்கிய வாதியின் யாத்திரை அனுபவங்கள் எட்டுத் திக்கும் :சுப்ரபாரதிமணியன் பயண நூல்
- குறிப்பறிதல்
- உலகமயமாக்கலும் உள்ளூர் அகதிகளும்
- கவியரசு கண்ணதாசன் பிறந்த நாளுக்கு
- காப்பியக் காட்சிகள் 10.பொழுதுபோக்குகள், பழக்க வழக்கங்கள்
- மஹாத்மா (அல்ல) காந்திஜி
- பாடம் சொல்லும் கதைகள்
- தொடுவானம் 125. முன்றாம் ஆண்டின் முதல் நாள்..
- அம்மா கணக்கு – இயக்குனர் அஸ்வினி ஐயர் திவாரியின் வரவு
- நெஞ்சிலிருந்து ஒரு சொல் – ரவி சுப்பிரமணியனின் ‘ஆளுமைகள் தருணங்கள்’
- அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக குறுநாவல் போட்டி 2016
- சிறுவர் நாவல்கள் மின்னூல்களாக
- திருலோக சீதாராம் என்றொரு கவியாளுமை