`ஓரியன்’ – 3 , 4

This entry is part 12 of 12 in the series 4 ஜூலை 2016

இவர்கள் குறுக்கே வந்து தடுத்து, ஏதோ கையால் சமிக்ஞை காட்ட அவர்கள் திரும்பிப் போனார்கள்.

“ தோழர்களே! பிரிவு—88 ன் தலைவரின் சார்பாக உங்களை வரவேற்கிறோம். பயம் வேண்டாம் அவர்கள் உங்களின் உடையைப் பார்த்துதான் நீங்கள் வேற்று கிரகத்திலிருந்து வந்த எதிரிகள் என்று துரத்தினார்கள். உங்களின் இந்த உடையைக் களைஞ்சிடுங்க.இங்கே கிருமிகள் ஆபத்து எதுவுமில்லை.” —-இவர்களுக்கு அவர்கள் பாணியிலான மாற்று உடை அணிய ஏற்பாடு செய்தார்கள்.சற்று ஒதுக்குப்புரமாக சென்று இருவரும் உடையை மாற்றினார்கள். அவர்களுடன் வந்திருந்த ஸோம்னா என்ற அழகுப் புயல் நெருக்கமாக வந்து அவன் உடைகளைக் களைய உதவினாள், கண்ட இடங்களில் தயக்கமின்றி கையை வைக்க அவனுக்கு  கூச்சமாக இருந்தது. ஆனால் அவள் எந்த பிரதிபலிப்புமின்றி இயங்கினாள். இமாவுக்கும் அவள்தான் உதவி செய்தாள். அதற்குள் ஜீவன் அவளை நெருக்கத்தில் நிதானித்து கண்களால் முழுசாக தின்று முடித்திருந்தான். விசிலடிக்கத் தூண்டும், சற்று கறுத்த, கட்டான,உடல்வாகு. கறுப்புமுத்து கூட ஒரு அழகுதான். ஆஹா அந்த அழகுப்புயல் இவர்களுக்கு வழிகாட்டியாம்.

“இமா! ஆச்சரியமாக இருக்கிறது. இவர்களுக்கும் நம்முடைய தமிழ்  தெரிந்திருக்கிறது பார்த்தாயா?.”.

“ஐயா! தமிழ் யாரால் இங்கிருந்து உங்கள் கிரகத்துக்கு பரவியது என்று எங்களுக்கு தெரியாது, ஆனால் அது எங்கள் மொழி.” –ஜீவன் சிரித்தான்.

“சரி…சரி..நமக்குள் மொழிப் போர் வேண்டாம். இந்த பிரபஞ்சத்தில் மனிதன் வாழும் இரண்டு கிரகங்களிலும் சில பகுதிகளில் தமிழ் பேசப் படுகிறது என்பதே மகிழ்ச்சி. மிகத் தொண்மையான காலங்களில்இரண்டு கோள்களின் மனிதர்களுக்கிடையில் பரிவர்த்தனைகள் இருந்திருக்கலாம். யார் கண்டது?. சரீ ஏன் வேற்று கிரகத்திலிருந்து வரும் எங்களை நீங்கள் எதிரிகளாக நினைக்க வேண்டும்? நண்பர்களாக இருக்க முடியாதா?.”—என்று கேட்டான் ஜீவன்

” வெளியே இருந்து வந்த வேற்று கிரகத்து ஆட்கள் பரப்பிய ஒருவகை வைரஸால்தான் நம் மக்கள் நிறைய அழிந்து விட்டார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள், அதனால்தான்.”.

அடுத்து சூரியசக்தி வண்டி ஒன்று அவர்களை ஏந்திக் கொண்டு பறந்தது. கூடவே அவன் பக்கத்தில் கைடாக ஸோம்னா என்ற அந்த அழகுப் புயல். .

ஜீவனும்,இமாவும், ப்ளஸ் விண்கலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கம்ப்யூட்டர் ஸீகம்–I ,ஸீகம்—II வும், ஒரு பெரிய அறையில் தங்க வைக்கப் பட்டனர். காலை உணவாகக் களி போன்ற ஒரு வஸ்துவைத் தந்தார்கள். சில முக்கிய அதிகாரிகள் வந்து சந்தித்து விட்டுச் சென்றார்கள். இரவில் ஜீவன் இயற்கையின் உந்துதல் தாளமுடியாமல் இமாவிடம் சிருங்கார அஸ்திரங்களை வீசிப் பார்த்தான். அவள் ஆட்காட்டி விரலை நீட்டி துண்டாகிவிடும் என்று எச்சரித்ததும் சுருண்டுக் கொண்டது மனசு.

காலையில் எழுந்தவுடன் அவர்களுக்கு இடப்பட்டிருக்கும் ஆணைப்படி செயல்பட ஆரம்பித்தார்கள். இந்த கிரகத்தில் பல பாகங்களிலிருந்து எடுத்த மண் , காற்று, மனிதர்களின் ரத்தத் தடவல்கள். என்று எல்லாவற்றையும் பரிசோதிக்க வேண்டும். மண் மாதிரிகள் பரிசோதனைக்காக வரிசைஎண் கொடுக்கப் பட்டு, வந்திறங்கியிருந்தன. ஜீவன் அந்த மண் மாதிரிகளை எப்படி ஸீகம்—I னிடம் சோதனைக்காக கொடுத்து முடிவுகளை வாங்க வேண்டும் என்று இமாவுக்கு சொல்லிக் கொடுத்துவிட்டு, அ.பு. ஸோம்னாவுடன் ஸோலார் காரில் கிளம்பி விட்டான். அவளுடைய உதவிக்கு என்று மூன்று  பெண்களை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

வெறிச்சோடி கிடக்கும் சாலைகளில் சூரிய மின்பலகைகள் போர்த்திய சிறியரக கார்களும், சிறு வேன்களும் எப்போதாவது ஒன்று என்ற அளவில் ஓடிக் கொண்டிருந்தன. சாலையிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக மனிதர்கள் நடமாட்டம் மிக சொற்பமாக இருந்தது. எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது காற்றும், அமானுஷ்ய அமைதியும்தான். நெருக்கமாய் நிற்கும் உயர்ந்த கட்டடங்கள் விசோவென்று காற்றோடிக் கொண்டிருக்க,உள்ளே மனிதர்கள் இருக்கிறார்களா?, தெரியவில்லை.. மொத்தத்தில்  ஒரு அடர்த்தியான அளவில் மனித சமூகத்தைக் கொண்டிருந்த பகுதியில் திடீரென்று மனிதர்கள் அழிந்து அவர்கள் உருவாக்கிய கட்டடங்கள் மட்டும் அடையாளச் சின்னங்களாய் நிற்பதைப் பார்க்க, வாழ்க்கையின் அநித்தியம் உறைக்கிறது. ஊடே நெடு நெடுவென்று நெருக்கமாய் மரங்கள். இங்கே வெய்யிலும், மழையும் மிக நன்றாகவே காயவும், பெய்யவும் செய்கின்றன.

வழியில் எதிர்படும் ஒன்றிரண்டு இளம் பெண்களின் யவ்வனத்தில் ஜீவன் உருகினான். சே! என்னா வார்ப்பு?, என்னா கலர்?. சதா வெளுப்பு நிறங்களிலேயே பெண்களைப் பார்த்திருந்தவனுக்கு, கறுப்பு நிறத்தின் பல்வேறு ரகங்களில் வனப்பாக இருக்கும் அந்தப் பெண்கள் பெரிய ஈர்ப்பாக இருந்தனர். அங்கிருக்கும் மாளிகைகளின் மேல்பகுதிகளில் எல்லாம் பாதுகாப்பாக பறவையினங்கள் ஆக்கிரமித்திருந்தன.அவைகள் போடும்விதவிதமான சத்தங்கள் இங்கே வரை கேட்கின்றன.. அவன் மெய் மறந்து பார்த்துக் கொண்டே வர, அப்போதுதான் கவனித்தான் வெளியே எதையோ காட்டி விவரிப்பாக அவனுக்குச் சொல்லிக் கொண்டேயிருந்த ஸோம்னா தாராளமாய் அவன் தொடையின் மேல் வலது கையை வைத்திருந்தாள்.,

பதிலுக்கு அவன் ஊக்கம் பெற்று அவள் தோளின் மேல் கையைப் போட்டு இழுத்து அணைத்து இச் பதிக்க முயற்சித்தான். எதிர் முனையில் மறுப்பில்லை. ஆஹா இந்த பழம் இவ்வளவு சீக்கிரம் நம்ம மடியில் வந்து விழுந்து விட்டதா?.  அ..ஆ.னா.ல்.. என்னஇவள்? எவ்வித உணர்ச்சி பிரதிபலிப்புமின்றி ஒரு மரம்போல இருக்கிறாளே. இந்த விஷயத்தில் ஆண்களுக்கு தூண்டுதல்தரக்கூடிய வெட்கம் அவளிடத்தில் அறவே இல்லை.அவனுக்குஅது வித்தியாசமாகப்  பட்டது. மீண்டும் அவள் புஜத்தைப் பற்றியபோது

“ ஜீவன்! என்ன பண்ணப் போறீங்க?. அதற்கு இன்னும் ரெண்டுமாசம் பொறுங்கள்”—என்று சொல்லிவிட்டு ஸோம்னா வண்டியை நிறுத்தினாள்.சே! அதை கூட ஒரு நளினமில்லாமல் செத்தவனுக்கு வெத்தலை பாக்கு குடுத்தாற் போல சொல்லில் வறட்சி.

“எதுக்கு ரெண்டு மாசம்?.”—அவள் பதில் சொல்லவில்லை.

“ சரி ஸோம்னா! நாம் இப்போது எங்கே வந்திருக்கிறோம்?..”

“ எங்கள் பகுதியில்இருக்கும் விஞ்ஞானி கோபன். அவரைத்தான் இப்போது  பார்க்கப் போகீறீர்கள்.” .

விஞ்ஞானி சராசரிக்கு சற்று உயரமாக இருந்தார். வயோதிகம் காரணமாய் அவர் நிற்கும்போது கூன் விழுகிறது. இருவரும் பரஸ்பரம் வணக்கம் சொன்ன பிறகு நேரிடையாக விஷயத்திற்கு வந்துவிட்டார்.

“நண்பரே! மனித இனம் இங்கே வேகமாய் அழிந்துக் கொண்டு இருக்கிறது. எங்களுக்கு அதற்கான காரணங்களும் தெரியவில்லை, தீர்வுகளும் தெரியவில்லை. அதை ஆராயும் திறமையான விஞ்ஞானிகளும் இன்று எங்களிடம் இல்லை.    இந்த கிரகத்தில் ஒரு காலத்தில் மின்சார தயாரிப்பு இருந்திருக்கிறது. மனிதர்களின் பற்றாக் குறையினால் பராமரிக்கும் நுணுக்கம் தெரிந்த ஆட்களின்றி இங்கிருந்த பல மின்நிலையங்களும், அணுமின் நிலையங்களும் வெடித்துச் சிதறி லட்ச லட்சமாக மனிதர்கள், உயிரினங்கள் அழிந்ததாக குறிப்புகள் இருக்கின்றன. இப்படித்தான் பலபல அறிவியல் முன்னேற்றங்களெல்லாம் எங்களிடமிருந்து போய்விட்டன.. இன்னும் சொல்லப் போனால்

எங்கள் பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்படும் திட,திரவ,வாயு, எரிபொருட்கள் சுத்தமாய் தீர்ந்து போய்விட்ட காலத்திலிருந்தே எங்கள் அழிவுகள் ஆரம்பித்து விட்டனவாம். இன்று அறிவியலில்…? பூஜ்ஜியம். இரண்டாயிரம் ஆண்டுகள் பின்னால் போய்விட்டோம். இப்போது நான் சொல்லிய அத்தனை விஷயங்களும் என் முன்னோர்கள் எழுதி வைத்த குறிப்புகளை வைத்துதான் சொல்கிறேன். நாங்கள் யாரும் நேரடிக் காட்சியாக எதையும் பார்த்த்தில்லை என்பதுதான் உண்மை.ஆச்சரியமாக சூரியஒளி சக்தி பற்றிய விஷயஞானம் மட்டும் இன்றும் எங்களிடம் உள்ளது.

“என்னா கதையாக இருக்கு?.கற்ற அறிவியல் தொழில் நுட்பங்கள் எப்படி மறந்து போகும்?.”

“மறக்கவில்லை மறைந்து போனார்கள். ஒரு புள்ளி விவரம் சொல்றேன் கேளுங்க. முன்னொரு காலத்தில் எங்கள் பூமியின் மக்கள்தொகை நினைத்துப் பார்க்க முடியாத அளவு பெருகிப் போய் விட்டதாம்..1640 கோடி. அசுர வளர்ச்சி. ஒரு காலத்தில் உலகத்தின் மொத்த ஜனத்தொகையில் நூறு கோடிகள் கூடுவதற்கு இருநூறு வருஷங்கள் ஆயிற்றாம். கடைசியாக ஐந்து வருஷங்களிலேயே நூறு கோடிகள் என்ற வேகத்தில் கூடியிருக்கிறது. அந்தளவுக்கு வளர்ச்சி வேகம்.”—–ஜீவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“அய்யய்யோ! எங்கள் பூமியின் இன்றைய ஜனத்தொகை 800 கோடி, இதற்கே நாங்கள் சொல்ல முடியாத கஷ்டங்களையும் பட்டினிச் சாவுகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். உணவு, தண்ணீர் எல்லாமே பற்றாக்குறை. 1640 கோடி என்றால் ஐயய்யோ!.”

”ஆமாம் காலங்காலமாய் எங்களுக்கு வாய்த்த தலைவர்கள் மக்கள் நலனும், தொலைநோக்குப் பார்வையும் இல்லாதவர்களாகப் போனது எங்களின் துயரம். மக்கள் தொகை பெருக்கத்தை தடுக்க அவர்கள் யோசிக்கவே இல்லை. அரசாங்கப் பணத்தை திருடுவதற்கு திட்டமிடவே அவர்களுக்கு நேரம் சரியாக இருந்தது. ஆனால் பின்னாளில் அவர்கள் சேர்த்த அத்தனை செல்வங்களும், அவர்களின் உயிர்களும் மக்களால் சூறையாடப்பட்டு விட்டன என்பது வேறு விஷயம். யோசித்துப் பாருங்கள் கற்பனைசெய்ய முடியாத அளவுக்கு மக்கள் வெள்ளம். சாப்பிட எதுவுமில்லை.

தண்ணீர் பற்றாக்குறை. பூமியின் சராசரி வெப்பம் ஏகத்துக்கு எகிறிவிட, ஜீவ நதிகளெல்லாம் வறண்டு போய், மழையும் அருகிப்போய், பசி..பசி…உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் அப்படி அலைந்து செத்திருக்கிறார்கள். எஞ்சியிருந்த மிருகங்களை எல்லாம் காலி பண்ணிவிட்டு, கடைசியில் பசிக் கொடுமை தாளாமல் அன்றைக்கு இங்கே சுலபமாய் கிடைக்கக் கூடியதாக இருந்த மனித மாமிசத்தை சாப்பிட ஆரம்பித்தார்களாம். எளியோரெல்லாம் வலியோருக்கு உணவாகினார்களாம். ஆமாம் நண்பரே! எங்களை நாங்களே தின்றோம். இந்த பசிப் போராட்டத்தில்  தகுதியானது தப்பிப் பிழைக்கும் என்ற உயிரியல் கோட்பாட்டின்படி உடல் வலிமைகள் மட்டுமே வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி பெற்றன.. பல பல மேதைகளும், விஞ்ஞானிகளும், வல்லுனர்களும் காணாமல் போனார்கள். இன்றைக்கு யோசிக்கிற போது இப்படி கூட நடந்திருக்குமா? என்று அதிர்ச்சியாக இருக்கிறது. ஆனால் அப்படித்தான் நடந்ததாக குறிப்புகள் கூறுகின்றன.. இது இங்கு மட்டுமில்லை, உலகம் முழுக்க நிகழ்ந்த நிகழ்வுகள்.” —ஜீவன் அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றான். பேசவாய் இல்லை. ஜீவன் சற்று இடைவெளி விட்டு சொன்னான்

“கோபன் அவர்களே எல்லாருக்கும் எல்லாமும் கிடைத்துக் கொண்டிருக்கும் வரையில்தான் நாமும் மனிதர்கள். இல்லையென்றால் விலங்குகள்தான்.”

“உண்மை. அந்த காலக் கட்டத்திற்கு அப்புறந்தான் பிரச்சினையே எழுந்தததாம். இங்கே ஒரு அதிசயம் நிகழ ஆரம்பித்தது. மக்கள்தொகை எப்படி என்று தெரியாமலேயே படிப்படியாக அதேசமயம் படுவேகமாகக் குறைய ஆரம்பித்து விட்டதாம்.. அப்படி குறைந்து வருவதை எம்மக்கள் தெரிந்துக் கொள்ளவில்லை.ரொம்ப காலங்களுக்கப்புறம் நிலைமை கைமீறி போன பின்னால்தான் உணர்ந்திருக்கிறார்கள். அதற்கப்புறம் சுதாரித்துக் கொண்டு பல நாடுகளும் காரணங்களை ஆராய்ந்திருக்கின்றன. ஓரளவுக்கு காரணம் தெரிந்தது பிறப்பு விகிதம் குறைந்திருந்தது. எப்படி என்பதில் திர்வு காணமுடியாமல் நாட்டுக்கு நாடு குழப்பங்கள். அப்படி நீடித்துக் கொண்டேயிருந்த குழப்பங்களூடே மக்கள்தொகை குறைந்துக் கொண்டே வந்து இன்றையதேதிக்கு உலகின் மொத்த மக்கள் தொகை வெறும் நூற்றுநாற்பது கோடிகள்தான். இதுவரையிலும் காரணம் தெரியவில்லை. எங்களுக்கு தெரிந்து விட்டது மனித குலத்திற்கு கேடு வந்திருக்கிறது, முழுமையாக அழியப் போகிறோம்.”—அவர் முகத்தை பொத்திக் கொண்டார்.”

  ( 4)

“இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?, மனுஷனே மனுஷனை தின்றுதின்று தீர்த்திருப்பான்…”

“அப்படி இல்லை, அது ஒரு கட்டம் வரைக்கும்தான். மக்கள் மனித மாமிசம் தின்பதை நிறுத்தி நானூறு ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. பல தலைமுறைகள் கடந்து விட்டன. ஆனால் இன்றைக்கும் தானே குறைந்துக் கொண்டே இருக்கிறோம்?.இந்த இடைப்பட்ட காலத்தில் ஒன்பது தடவைகள் பெருத்த அளவில் பூகம்பங்களும்,  பத்து தடவைகள் ஆழிப்பேரலை சாவுகளும், அப்புறம் விபத்துக்களால், வியாதிகளால் சாவுகள், முதுமைச்சாவுகள், புதுசுபுதுசாகத் தோன்றும் வைரஸ் தொற்று சாவுகள் போன்ற பலப்பல இனங்களில் அழிவுகள் ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் இவை அதிவேக மக்கள்தொகை குறைவுக்கான பொருத்தமான காரணங்களில்லை. ”— ஜீவனுக்கும் குழப்பமாக இருந்த்து.

.                  மறுநாள் இரவு இமாவுடன் பேசிக் கொண்டிருந்தான். அதற்குள் அங்கே மண் பரிசோதனைகள்  முழுமையாக முடிந்து, காற்று மாதிரிகள் அடைத்த சீலிட்ட பைகள் வந்திறங்கியிருந்தன. அந்நேரத்துக்கு இமா சற்று காட்டமாகக் கேட்டாள். அதற்குள் இவர்களுக்கிடையில் ஒரு நெருக்கம் வர ஆரம்பித்திருந்தது.

“என்ன நேற்று ஸோம்னாவை சீண்டிப் பார்த்தியா?”

“இல்லையே. யார் சொன்னது?.” —-இப்போது இமா முகத்தில் சற்று கடுமை தெரிந்தது.

“த்தூ! பொய்காரா! ஸோம்னாவை நீ உறவுக்கு பலவந்தப் படுத்தியிருக்கிறாய். அவள் ரெண்டு மூணு ஆளுங்களோட ரகசியமா பேசிக்கிட்டிருந்ததை நானே கேட்டேன். உன் சேட்டையைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தாள். அவர்கள் சமயம் பார்த்து உன்னை மடக்கிப் பிடிச்சி அவளுக்கு ஜோடியாக்கிட திட்டம் போட்டிருக்காங்க, ஜாக்கிரதை.”—-அவன் நம்பமுடியாதவனாக நின்றான்.

“வந்த இடத்தில் அப்படி நடந்தால் நீ இந்த ஓரியன் கிரகத்தின் பிரஜையாக ஆகவேண்டியதுதான். மறுத்தால் கொன்றுவிடுவார்கள். ஏற்கனவே நம்முடைய இரண்டு விஞ்ஞானிகள் இதே விஷயத்தினால் செத்திருக்கிறார்கள். இல்லை ஸோம்னாவை நம்ம பூமிக்கு கூட்டிட்டுப் போய்விடலாம் என்று நீ நினைத்தால், அது நடக்காது. நம்ம விண்கலம் துல்லியமாக நம் இரண்டு பேருடைய எடைக்குத்தான் வடிவமைக்கப் பட்டுள்ளது. அப்படி இல்லாமல் என்னை இந்த கிரகத்திலேயே உயிருடனோ,பிணமாகவோ தள்ளிவிட்டு அவளை கூட்டிப் போயிடலாம் என்று நீ யோசிப்பாயானால்.”

“இமா..இமா..! என்ன என்னை அவ்வளவு கேவலமாக எடை பொட்டு விட்டாய். உன்னை விடவா அவள்?.”     “ஜீவன்!எனக்கு ஆண்களின் புத்தி தெரியும். அப்படி என்னை இங்கேயே தள்ளிட்டு அவளுடன் போய்விடலாம்னு நீ நினைத்தால், அதுவும் நடக்காது. இந்த ஏவூர்தியை சரியான பாதையில் செலுத்தி பூமியை அடையும் மார்க்கம் எனக்கு மட்டுமே தெரியும். சிஸ்டத்திற்கான பாஸ்வேர்ட் எனக்கு மட்டுமே தெரியும். அதற்காக மட்டுமே பணிக்கப் பட்டவள் நான். நல்லா யோசிச்சிக்கோ.”—ஜீவன் யோசனையில் ஆழ்ந்தான்.

இந்த கிரகத்தைப் பொறுத்தமட்டில் ஒரு விஷயம் மட்டும் ஆரம்பத்திலிருந்தே ஜீவனுக்கு உறுத்திக் கொண்டு இருக்கிறது. அதை யோசிக்கிற போது ஸோம்னாவின் திட்டம் பற்றி இமா சொன்னது, ஜீவனுக்கு  நம்ப முடியாததாக இருந்தது. ஆணோ, பெண்ணோ, இரண்டு பேருமே இங்கே சரியாக இல்லை. இவர்களிடம் என்னவோ தப்பு இருக்கிறது. ஆமாம் எல்லோருமே ஒரு துறவு நிலையில் வாழ்கிற மாதிரிதான் இருக்கிறார்கள். ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையில் இருக்க வேண்டிய அந்த நேசம், நெருக்கம், எல்லா உயிரினங்களுக்கும் உள்ள அந்த ஆண் பெண் ஈர்ப்பு இங்கே மனிதர்களிடம் பார்க்கமுடியவில்லையே. எல்லோரும் மந்திரித்து விட்டவர்கள் போல ஓடிக் கொண்டிருக்கின்றார்களே. காதலோடு பேசிச் செல்லும் ஜோடிகளை எங்கும் பார்க்க முடியவில்லையே. சாலையில் ஒரு அழகிய பெண் நடந்து சென்றால் பூமியில் பத்து கண்களாவது மொய்க்கும். கிழவன் கூட ஒரு தடவை அழகை ரசித்து வைப்பான். இங்கே ஒருத்தன் கூடஅப்படி இல்லையே அது ஏன்?. ஸோம்னா கூட என் போன்ற ஆம்பளை கைபட்டும் கட்டை மாதிரி இருக்காளே. லயிப்போ, வெட்கமோ இல்லையே. ஒரு வேளை அவ பெண்ணில்லையோ. ஆமாம் ஏன் அப்படியிருக்கக் கூடாது?.நாளைக்கு என்ன ஆனாலும் சரி இந்த விஷயத்தை உறுதி செய்திட்றதே சரி.

மறுநாள் ஸோம்னாவுடன் வெளியே கிளம்பி கொஞ்ச தூரம் போனதும் ஒரு தனிமையான இடத்தில் நிறுத்தச் சொன்னான்.

“ஸோம்னா! எனக்கு உன்மேல் சில சந்தேகங்கள் இருக்கின்றன. நீதான் தீர்த்து வைக்க வேண்டும். தலை வெடிக்குது ”.  “என்ன சும்மா வளர்த்தாம கேளு.”—இந்த இரண்டு மூன்று நாட்களிலேயே ஜீவனிடம் ஒருமையில் பேசும் உரிமையை எடுத்துக் கொண்டு விட்டாள்.

“உண்மையில் நீ பெண்ணில்லையா திருநங்கையா?.”

“ஏய்! என்ன என்னைப் பார்த்தால் பெண்ணாய் தெரியலையா?.”                                                             “

ஆமாம் தெரியல நிரூபி.”

“ எப்படி ?.”

“ஈஸி. குழந்தைகளை ஆணா பெண்ணான்னு எப்படி கண்டுபிடிக்கிறோம்?.” –அவள் சிரித்து விட்டாள்.

“ஹும்! உன் எண்ணம் தெரியுது ஜீவன். ஆனால் எனக்கு ஒரு விஷயம் புரியல. நான் பெண்தான்னு நிரூபிச்சிட்றேன். அப்புறம் நமக்குள்ள அப்படியென்ன நடந்துடும்?. அதுக்கு ரெண்டுமாசம் காத்திருக்கணுமில்ல?. உடனே ஏன் ரெண்டுமாசம்னு கேட்டு தொல்லை பண்ணக் கூடாது”— கண்டிப்புடன் சொல்லிவிட்டு மீண்டும் பளீரென்று சிரித்தாள். என்னடா இவ எப்ப பார்த்தாலும் ரெண்டுமாசம் ரெண்டுமாசம்னு  காடி விட்டுக்கிட்டு இருக்கா. அது என்னன்னு தெரிஞ்சிக்கலேன்னா மண்டை வெடிச்சிடும் போல இருக்குதே. இன்னும் வேகமாக முயற்சிக்கலாம்னா இந்த ஒரியன் கிரக மனுஷங்களைப் பத்தி பயம் வருது. அடிச்சே கொன்னுடுவாங்களாமே. ஒவ்வொருத்தனும் திம்சுகட்டை மாதிரி இருக்கான்.

ஏற்கனவே வரையறுக்கப் பட்டிருந்த திட்டப்படி மண், காற்று, ரத்தம் என்று மூன்று விதமான சோதனைகளும் முடிந்து விட்ட நிலையில் நேற்றுடன் இவர்கள் ஓரியன் கிரகத்தில் காலடி வைத்து ஒரு மாதமாகி விட்டது. இன்றுவரை ஒரு சின்ன விஷயம் கூட பிடிபடவில்லை. இடையில் தலைவர் சூர்யா அவ்வப்போது வந்து பார்த்துவிட்டுச் சென்றார். இன்றைக்கு ஸீகம்–I ,ஸீகம்-II, களிடம் இறுதி அறிக்கையைப் பெறவேண்டிய நாள். இதிலாவது காரணங்கள் ஏதாவது தெரியுதான்னு பார்க்கலாம். ஜீவனும் இமாவும்  மண், காற்று , ரத்தத் தடவல்களின் மாதிரிகளை ஸீகம்—I யிடம் கொடுத்து பெறப்பட்ட அறிக்கைகளை ஸீகம்—II யிடம் கொடுத்து விட்டு காத்திருந்தார்கள். அந்த பெரிய ஹாலில் தலைவர் சூர்யாவும்,, விஞ்ஞானி கோபனும்கூட காத்திருந்தார்கள். எல்லாவற்றையும் அலசி முடித்து ஒருமணி நேரம் கடந்த பின்பு இறுதி அறிக்கை திரையில் வர ஆரம்பித்தது.

1) மண் ——- பரவலாக எல்லா பகுதிகளிலும் மண்ணில் அடர்த்தியாக பூச்சிக்கொல்லி ரசாயனங்கள் ஊடுருவியுள்ளன. இந்த விஷம் ஏறக் குறைய 6%—12% அளவுக்கு மனிதர்களிடம் மலட்டுத்தன்மையை உண்டாக்கியிருக்கக் கூடும். அதேசமயம் Y குரோமோசோம்களின் ஆதிக்கத்தினால்  அதிக அதிகளவில் ஆண்குழந்தைகள் மட்டுமே பிறக்கும் நிலை வரும், வந்திருக்கும். (பிறப்பு விகித புள்ளிவிவரங்களை சரிபார்க்க அது சரி என்றது.)

2) வளி மண்டலம் — காற்றில் எல்லா வாயுக்களும் உயிரினங்களுக்கு ஆரோக்கியம் தரும் அளவில் கலந்திருக்கின்றன.

3) மனிதர்களின் ரத்தத் தடவல்கள்—- இங்குள்ள மனிதர்களின் dio.3 ஜீன் தொகுதிகள், மனிதர்களின் ஜீன்கள் போல் இல்லை. அமைப்பில் வித்தியாசப்படுகின்றன. ஜீவனும்,இமாவும் இப்போது பரபரப்பானார்கள். இந்த ரகசியம் சற்று குழப்பமாக இருந்தாலும் ஏன் என்பதற்கான விடைக்கு நெருக்கமாக வந்து விட்டதாக உள்ளுணர்வு சொல்லியது. (எல்லா உயிரினங்களிலும் dio.3 ஜீன்களின் தொகுப்பு தான் பிட்யூட்டரி, பீனியல் சுரப்பிகள், மற்றும் ஸ்ட்ரையேட்டம் பகுதியில் சுரக்கும் D2 டோப்பமைன் ரிஸப்டார் புரதம் மூலம் பாலியல் உணர்வுகளையும், செயல்களையும் கட்டுப்படுத்துகின்றன.  பசி உணர்வையும், சாப்பிட்ட பின்பு போதும் என்ற நிறைவையும் கூட கொடுப்பது இந்த D2 டோப்பமைன் ரிஸப்டார் புரதங்கள்தான்).

சார்!….சார்!…சார்!…எங்க ஓட்றீங்க?. நிச்சயமா இது ஜீனோம் பத்தி கிளாஸ் இல்லை சார்!. கதைதான் சார், கதைதான் நம்புங்க. சரி…சரி.. விட்ருவோம்.சிலதை விலாவாரியா சொல்லலாம்னு நெனைச்சேன். சரி.. இங்க இருக்கிற மனுஷங்களுக்கு மட்டும் பாலியலை கட்டுப்படுத்துகிற ஜீன்ல ஏதோ வித்தியாசம் இருக்கு.அத்த மனசுல வெச்சிக்குங்க போதும்.. ஜீவன் இப்போது தன் கேள்வியை தட்டினான்.

“இதனால் மனிதர்களுக்கு என்ன பாதிப்புகள்”

“கருத்தரிப்பு மோசமாய் குறைந்து போகும்.”

“எப்படி?.” —–சிறிது நேரம் காத்திருந்தான். அதற்கு பதிலேதும் வரவில்லை.ஒருக்கால் அதனிடம் விடை இல்லையோ. அதற்குள் கோபன் குறுக்கிட்டு அவசரமாய தட்டினார்.

“இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டிருக்க முடியும்?.”— பதில் வார்த்தைகள் திரையில் வரத் துவங்கின.

” உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் இதற்கு விடை சொல்வார்கள். இது காலத்தின் கட்டாயம். அதுதான் பரிணாம மாற்றம். பரிணாமம் என்பதுஆயிரக் கணக்கான, லட்சக் கணக்கான வருடங்களில்தான் ஏற்படக் கூடும் என்றொரு சித்தாந்தம் உண்டு. ஆனால் கால இடைவெளிகளை நெருக்கடிகள்தான் தீர்மானிக்கின்றன என்ற கருத்தும் இருக்கிறது.. பரிணாமம் அசாத்திய பலம் பெற்றது. எந்த பரிணாமம் உயிரினங்களின் வெற்றிகரமான வாழ்க்கையை வடிவமைத்து, அதற்கு உறுதுணையாகவும் இருக்கிறதோ, அதே பரிணாமந்தான் உயிர்களின் அழிவுக்கும் காரணியாகிறது. இயற்கையின் சித்தாந்தம் இங்கே நிலைநாட்டப் பட்டிருக்கிறது.

“இந்த உலகம் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளும் தன்மை கொண்டுள்ளது. மிகுதியாக பெருகிப் போகும் உயிரினங்களை அளவோடு அழித்து ஒரு மாதிரி சமன் செய்துக் கொள்ளும் தன்மையும் இருக்கிறது. பூகம்பங்களும், வெள்ளமும், மழையும், உயிரினங்களை சமன் செய்யும் பூமியின் சாகஸங்களில் ஒன்று என்பது இயற்கை சித்தாந்தம். ஆனால் மனிதனின் இனப் பெருக்கத்தை மட்டும் கட்டுப் படுத்த இயலவில்லை. அவன் தன் அறிவுக் கூர்மையால் எப்போதும் தப்பித்தே வந்திருக்கிறான். ஆனால் இந்த தடவை பரிணாமம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. மனிதர்களின்  ஜீனுக்குள் நுழைந்து மனித  உற்பத்தியை குறைத்து, அவனும் தப்பிக்க முடியாதபடி தன் சர்வ வல்லமையை, தலைமைப் பண்பை நிலைநாட்டி இருக்கிறது.” —ஜீவன் தன் கேள்வியை தட்டினான்.

“இந்த கிரகத்தில் மனிதகுலம் முழுவதுமாக அழியப் போகிறதா?”

Series Navigationஈரானின் மஹிஷாசுரமர்தினி
author

செய்யாறு தி.தா.நாராயணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *