திரும்பிப்பார்க்கின்றேன். நான் சாகமாட்டேன் எழுதிய செ.கதிர்காமநாதன்

author
0 minutes, 6 seconds Read
This entry is part 9 of 23 in the series 24 ஜூலை 2016

திரும்பிப்பார்க்கின்றேன்

நான்  சாகமாட்டேன்  எழுதிய  செ.கதிர்காமநாதன் இன்றும்  நினைவுகளில்  வாழ்கிறார்

மேகத்திற்கு   மீண்டும்  செல்லும்  கொட்டும்பனி போன்று அற்பாயுளில்   மறைந்த   ஆளுமையின்    நாட்குறிப்பும் தொலைந்தது.

                                                     முருகபூபதி   – அவுஸ்திரேலியா

 

” செ.கதிர்காமநாதன்  பட்டப்படிப்பு  முடிந்ததும்  இலங்கையின் பிரபல்யமான பத்திரிகை   நிறுவனம்  ஒன்றில்  சில  ஆண்டுகள் பணிபுரிந்தார்.    இக்காலம்  மிக  இக்கட்டான  காலம்.  தக்க  ஊதியமே இவருக்கு    கிட்டவில்லை.   எழுத்தாளரான  இவருக்குக் கிடைத்த மாதச்சம்பளத்தையே    சொல்லத்தயங்கினார்.   தன்  உழைப்பிற்கேற்ற ஊதியம்   கிடைக்கவில்லை  என்று  வருந்தினார்.  மனம் நொந்தார். கூடிய   ஊதியம்  கிடைக்கத்தக்க  இடங்களிலெல்லாம்  வேலைக்காக முயன்றுகொண்டேயிருந்தார்.

பத்திரிகையில்    பணியாற்றியவேளை  ஒரு  நாவலையும்  அதே இதழில்  தொடராக  எழுதினார்.   அதற்குத்தனியாக  பணம் கிடைத்ததா ?  என்று  கேட்டேன்.   கிடைத்த  தொகையை வேதனையோடுதான்  கூறினார்.

வழமையான   லாப நோக்காகவா ?  அவரது  உழைப்பிற்கு நன்றிக்கடனாகவா ?   இலக்கிய  ஆர்வத்தினாலேயா ?  தெரியவில்லை. அவரது    மொழிபெயர்ப்புக்கதை  ஒன்றையும்  முன்னர்  வெளியிட்ட மூன்று   சிறுகதைகளையும்  சேர்த்து  இன்று   நூலாக வெளியிட்டுள்ளனர்,    அவர்  பணியாற்றிய  நிறுவனத்தினர்.

113   பக்கம்.    கிரவுன் 1/8 மடித்தாளில்  நியுஸ் பிரிண்ட் பேப்பரில் அச்சிடப்பட்ட   இந்நூலின்   விலை  ரூ.2/25.

மலிவுப்பதிப்பு   நூல்களை  வெளியிட்டு  வெற்றி  (இலாபத்தில்) பெற்றுவிட்டதாகக்கூறும்   இவர்கள்  தந்த  நூல்களில்  இதுவே முதன்மைபெறுகிறது.

நூலின்   பெயர்:   நான் சாகமாட்டேன்.

மேற்கண்டவாறு  கொழும்பிலிருந்து  1972  இல்  செ. கணேசலிங்கன் தாம்   வெளியிட்ட  குமரன்  இதழில்  ஒரு  சிறிய  கட்டுரை எழுதியிருந்தார்.   செ.கதிர்காமநாதன்  மறைந்தவுடன்  பதிவான நினைவஞ்சலிக்குறிப்பாக   அதனை  எடுத்துக்கொள்ளலாம்.

அவர்   மறைவதற்கு  சில  மாதங்களுக்கு  முன்னர்  ஒரு இலக்கியக்கூட்டத்தில்தான்   முதலும்  கடைசியுமாக  நான் அவரைச்சந்தித்தேன்.

அக்கூட்டம்  கொள்ளுப்பிட்டி  தேயிலைப் பிரசார  சபை  மண்டபத்தில் நடந்தது.   முன்வரிசையிலிருந்த  கதிர்காமநாதனை  எனக்குக் காண்பித்தவர்   நண்பர்  மு. கனகராஜன்.   நிகழ்ச்சி  முடியும்பொழுது இரவு   எட்டுமணியும்  கடந்துவிட்டது.    தொலைவிலிருந்து வந்திருந்தமையினால்   அவரைச்சந்தித்துப்பேசமுடியாமல்,   பிறிதொரு   சமயம்  பார்க்கலாம்  என்ற  எண்ணத்தில் புறப்பட்டுவிட்டேன்.

ஆனால் , அதன்பின்னர்  அவரைச்சந்திக்கவே முடியாமல்போய்விட்டது.

அவருடைய   கொட்டும்பனி   சிறுகதைத்   தொகுப்பினை 1972 தொடக்கத்தில்   வெள்ளவத்தை  விஜயலக்ஷ்மி  புத்தகசாலையில் வாங்கிப்படித்திருக்கின்றேன்.   அந்தப்  புத்தகசாலையின்  அதிபரும் குமரன்   அச்சகத்தின்  உரிமையாளருமான  செ. கணேசலிங்கன்தான் தமது   குமரன்  பதிப்பகத்தினால்  அதனை  வெளியிட்டிருந்தார்.

கொட்டும்பனியில்   இடம்பெற்றிருந்த  ஒரு  கிராமத்துச்சிறுவன் பள்ளிக்கூடம்   போகிறான்   என்ற  சிறுகதையை   மறக்கமுடியாது.  அந்தக்கதை   அவருடைய  தனிப்பட்ட  வாழ்க்கை  என்று  சக எழுத்தாளர்கள்   கூறக்கேட்டுள்ளேன்.

நான்   இலக்கியவாசகனாக  எனது  இலக்கிய வாழ்வைத்தொடங்கியபொழுது,  கொழும்பில்  நவயுகப்பதிப்பகம் வெளியிட்ட   மூவர்  கதைகள்  என்ற   தொகுப்பையும்   படித்திருந்தேன்.   இந்த  நூல்  1971  இல்  வெளிவந்தது.  எனது  வாசிப்பு அனுபவப்பதிவை   எழுதி  பூரணி’ மகாலிங்கம்  அவர்களிடம் கொடுத்தேன்.

அதில்   நீர்வைபொன்னையன்,  செ.யோகநாதன்,  செ. கதிர்காமநாதன் ஆகியோரின்   சிறுகதைகள்  இடம்பெற்றிருந்தன.   நீர்வையினதும்  செ.யோகநாதனினதும்  கதைகளில்  பிரசாரவாடை மேலோங்கியிருந்தது.  அத்துடன்  அழிவுவாதமும்  தூக்கலாக  இருந்தது. எனது  பதிவில்  அதுபற்றிக்குறிப்பிட்டிருந்தேன்.

எனது   ஆரம்பகால  எழுத்து  முயற்சிகளில்  அக்கட்டுரையும்  ஒன்று. அதனை   மேலும்  செம்மைப்படுத்தித்தருமாறு  பூரணி  மகாலிங்கம் கேட்டிருந்தார்.    பிரதியை  மீளப்பெற்றுச்சென்றேன்.

சிறுதைகள்  எழுதக்கூடிய  நீர்,  எதற்காக  விமர்சனத்துறைக்கு வருகிறீர்.    பேசாமல்  தொடர்ந்து  சிறுகதைகளே   எழுதும்  என்று மு.கனகராஜன்    என்னைத்தடுத்தார்.   நானும்  அதனை செம்மைப்படுத்தாமல்    எங்கோ   தொலைத்துவிட்டேன்.

மூவர்  கதைகள்  படித்த  காலத்திலேயே   செ. கதிர்காமநாதனின் கொட்டும்பனி  தொகுப்பையும்  படித்திருந்தேன்.  அதனை  செ. கணேசலிங்கன்  1968  இல்  வெளியிட்டிருந்தார்.   அந்த  நூலுக்கு அவ்வாண்டுக்கான   தேசிய  சாகித்திய  விருதும்  கிடைத்திருந்தது.

அந்நாளைய  மு.வரதராசனின்  நூல்களின்  முகப்பு  அட்டைபோன்று கொட்டும்  பனியின்   அட்டையும்    அச்சாகியிருந்தது.   அது  ஒருவகை எளிமையான  வடிவமைப்பு.   நவீன ஓவியங்களோ கோட்டுச்சித்திரங்களோ    இல்லாமல்,  அதேசமயம் கவர்ச்சிகரமானதாகவும்  அமைந்திருக்கவில்லை   என்பது கொட்டும்பனியின்   தனிச்சிறப்பு.

1942  ஆம்  ஆண்டு  வடமராட்சியில்  கரவெட்டியில்  பிறந்த  செ. கதிர்காமநாதன்,   விக்னேஸ்வராக்   கல்லூரியிலிருந்து பேராதனைப் பல்கலைக்கழகம்    சென்றவர்.    அங்கு  1963  இல் கலைப்பட்டதாரியானார்.    பல்கலைக்கழக  மாணவர்  இதழில் எழுதியிருப்பதுடன்   சிறிதுகாலம்  அதன்  ஆசிரியராகவும் இயங்கியிருப்பவர்.

1972   ஆம்  ஆண்டு  தமது  30  வயதில்  அற்பாயுளில்  அவர்  திடீரென்று மறைந்தது   அதிர்ச்சியாக  இருந்தது.   அவர்  மறைவதற்கு  சில மாதங்களுக்கு    முன்னர்  அவரைக்கண்டும்  பேசமுடியாமல் போய்விட்டதே   என்ற  கவலை  அன்று  மட்டுமல்ல,  இன்றும் நீடிக்கிறது.    அவரது  மறைவின்  பின்னர்  வெளிவந்த  மல்லிகையில் (1972  ஆம்  ஆண்டு   மார்கழி  மாதம்)  அவர்  அட்டைப்பட  அதிதியாக கௌரவிக்கப்பட்டிருந்தார்.

வங்காளத்தில்  1942  காலப்பகுதியில்  நிலவிய  கொடிய  பஞ்சத்தை பின்னணியாகக்கொண்டு   கிருஷ்ணசந்தரால்  எழுதப்பட்ட உருதுமொழியில்   வெளிவந்த  நாவலின்  ஆங்கிலமொழிபெயர்ப்பின் மூலத்திலிருந்து   நான்சாகமாட்டேன்  என்ற    மொழிபெயர்ப்பு நாவலை    வீரகேசரியில்  தொடர்கதையாக  எழுதியவர்  செ. கதிர்காமநாதன்.

வியட்நாம்   உனது  தேவதைகளின்  தேவவாக்கு  என்ற  கதையை அவர்   வீரகேசரி  வாரவெளியீட்டில்  எழுதியிருந்தார்.   1972  இல் மறைவதற்கு   சில  மாதங்களுக்கு  முன்னர்  வத்தளையிலிருந்து அக்காலப்பகுதியில்   செல்வராஜா  என்பவர்  வெளியிட்ட  அஞ்சலி மலையகச்  சிறப்பிதழில்  வெறும்  சோற்றுக்கே  வந்தது  என்ற நெஞ்சை   நெகிழச்செய்யும்   ஒரு  சிறுகதையையும்  அவர் எழுதியிருந்தார்.

இக்கதை   பின்னர்  தமிழகத்தில்  வெளியான  கார்க்கி  இதழிலும் மறுபிரசுரம்   கண்டுள்ளது.   தெளிவத்தை  ஜோசப் –  துரைவி பதிப்பகத்தின்   வெளியீடு  ஒன்றிலும்  இக்கதையை  மலையக சிறுகதைகள்   வரிசையில்  இணைத்திருக்கிறார்.

இலங்கையில்  அப்பொழுது   இயங்கிய  புத்தக  அபிவிருத்தி  சபையினால்  சிறந்த அட்டைப்படத்திற்கான   விருது  வீரகேசரி ஓவியர்;  மொராயஸ்  வரைந்த  செ. க.  எழுதிய நான் சாகமாட்டேன்  தொகுப்பின்  அட்டைப்படத்திற்கே  கிடைத்தது. அதனை  வழங்கியவர்  அன்றைய  கல்வி   அமைச்சர்  பதியுதீன் முகம்மத்.   புத்தக  அபிவிருத்திச்சபையில்  அங்கம்  வகித்த பேராசிரியர்  கா. சிவத்தம்பி,  மொராயஸை   இலங்கை  வானொலி கலையகத்திற்கு   அழைத்து  நேர்காணலும்  ஒலிபரப்புச்செய்தார்.

இவ்வாறெல்லாம்   செ.கதிர்காமநாதன்  இலக்கிய  உலகிலும்  இதழியல் – பிரசுர – பதிப்புலகிலும்   கொண்டாடப்பட்டது  அவருடைய மறைவுக்குப்பின்னர்தான்   என்பது  குறிப்பிடத்தகுந்தது.

ஒருவருடைய   ஆளுமையை  மற்றும்  குறிப்பிடத்தகுந்த சிறப்பியல்புகளை    நினைத்துப்பார்த்து  கொண்டாடுவதற்கு  அந்த ஒருவர்    மறைந்தால்தான்  சாத்தியமாகுமோ ? என்றும் எண்ணத்தோன்றுகிறது.

இச்சந்தர்ப்பத்தில்   அண்மையில்  மறைந்த  யூத  எழுத்தாளர்  எலிவீசஸ்  குறிப்பிட்டிருக்கும்    வாசகம்  நினைவுக்கு  வருகிறது.

”  இறந்தவர்களையும்   அவர்களின்  வரலாற்றையும்  மறப்பதென்பது அவர்களை   இரண்டு  தடவைகள்  கொல்வதற்கு  ஒப்பானது.”

இதுவிடயத்தில்   எமது  தமிழர்களிடம்  மறதிக்குணம்  சிறப்பிடம் வகிக்கிறது.   அதனால்  தாம்  வந்த  பாதைகளையும்  இலகுவில் மறந்துவிடுகிறார்கள்.

செ.கதிர்காமநாதன்  அன்று  பால்யகாலத்தில்  தமது  கிராமத்திலிருந்து பாடசாலைக்குச்சென்ற   காட்சியை  –  தான்  கடந்துவந்த  பாதையை மறக்காமல்   தமது   படைப்பு  இலக்கியத்தில்  அற்புதமான சிறுகதையாகத்    தந்துள்ளார்.   அவரின்  படைப்புகளில் பாதிக்கப்பட்டவர்கள்   மீதிருக்கும்  அவருடைய  இரக்கமும் மனிதநேயமும்தான்    தூக்கலாகத்தெரியும்.

கரவெட்டிக்கிராமத்து    ஏழைச்சிறுவனின்    ஆதங்கமும்,   வெறும் சோற்றுக்காகவும்    லயன்  குடியிருப்பு  வாழ்க்கையற்ற  கொழும்பின் சௌகரிய   வாழ்க்கைக்கும்  எதிர்பாராதவிதமாக  வந்து சேரும்  அந்த மலையகத்தோட்டத்துச்  சிறுமியின்   வீட்டைப் பிரிந்து  வந்த  ஏக்கமும்  எங்கோ    தொலைவில்  அமெரிக்காவின்  ஆக்கிரமிப்புக்கு ஆளாகியிருந்த   வியட்நாம்  மக்களின்  நலிந்துபோன  குரலும்தான் அவருடைய    கதைகளுக்கான  கருப்பொருளாக  அமைந்திருந்தன.

சாகாவரம்பெற்ற   அத்தகைய  சிறுகதைகளையும்    வங்கத்தில் நிலவிய    பஞ்சத்தின்  கொடுமையை   மொழிபெயர்ப்பு  மூலம்  தமிழ் இலக்கிய   உலகிற்கு  அறிமுகப்படுத்தும்  நான்  சாகமாட்டேன் நாவலையும்    எழுதிய  செ.கதிர்காமநாதன்,   இன்னமும்  சாகவில்லை. அவர்    நினைவுகளில்  வாழ்ந்துகொண்டிருக்கிறார்  என்பதை அண்மையில்   கனடா  வாழ்   இலக்கிய   அன்பர்கள்  அவருடைய குடும்ப    உறுப்பினர்களுடன்  சேர்ந்து  அவரை   சிறப்பாக கொண்டாடியிருக்கிறார்கள்.

கனடா   தேடகம்  அமைப்பும்  கரவெட்டி  கலாசாரப்பேரவையும் இணைந்து   டொரண்டோவில்  செ. கதிர்காமநாதன்   படைப்புகள் நூலை   வெளியிட்டிருக்கிறார்கள்.   இதுபற்றிய  செய்தியை  பதிவுகள் இணையத்தில்   தமது  வாசிப்பும்  யோசிப்பும்  பத்தியில் அழகாகப்பதிவு செய்துள்ளார்.    அதனைப் படித்ததும் – 44 வருடங்களுக்கு    முன்னர்  ஒரே  ஒரு  தடவை  பார்த்தும்   பேசமுடியாமல்    போய்விட்ட  இந்த  ஆளுமையின்   30 வயதுத்தோற்றம்தான்   எனது  மனதில்  நிழலாடியது.

மேதாவிலாசம்   மிக்கவர்களுக்கு  அற்பாயுள்தானோ ?  என்ற சுந்தரராமசாமியின்  (ஜே. ஜே.  சில  குறிப்புகள் –  நாவல்)  கருத்து நினைவுக்கு   வருகிறது.

செ.கதிர்காமநாதன்   இயல்பிலேயே  மிகவும்  அமைதியானவர். நிதானமானவர்.   அதிர்ந்து பேசத்தெரியாதவர்  என்று  அவரைப்பற்றி மற்றவர்கள்   சொல்லி   அறிந்துள்ளேன்.  ஆனால்,   அந்த அமைதிக்குள்ளும்   தர்மாவேசம்  அடங்கியிருந்துள்ளது என்பதைப்பற்றியும்   அறிந்திருக்கின்றேன்.

அவருடன்    இளமைக்காலத்தில்  கரவெட்டி விக்னேஸ்வராக்கல்லூரியில்   பல்கலைக்கழக   புகுமுகவகுப்பில் படித்த    நண்பர்  தெணியானின்  வாக்குமூலத்தை  இங்கே  பாருங்கள்:

” 1958  ஆம்  ஆண்டு  எங்கள்  மாணவ மன்றத்தில்  ஒரு  தினம் ஆலயப்பிரவேசம்   பற்றி  மாணவர்  மத்தியில்  விவாதம்  ஒன்று எழுந்தது.   மாணவர்களில்  பெரும்பான்மையோர் ஆலயப்பிரவேசத்தை   ஆதரிப்பவர்களாக  இருக்கவில்லை. தாழ்த்தப்பட்ட  மக்களை  ஆலயங்களுக்குள்  விடக்கூடாது  என்பதில் வன்மையான   கருத்துள்ள  சக  மாணவன்  ஒருவன்,  தனது கட்சிக்குரிய   நியாயத்தை   எடுத்துச்சொல்லும்போது, ‘தாழ்த்தப்பட்டவர்கள்   எங்களுடைய   கோயிலுக்குள்  ஏன் வரவேண்டும் ?  தாங்களே  ஒவ்வொரு  கோயிலைக்கட்டி வழிபடுவதுதானே ?  ‘ என்ற  பொருள்பட  நையாண்டியாகப் பேசினான்.

அப்போது  அவனுடைய  குரலைத்தவிர  அமைதி  குடிகொண்டிருந்த அந்தச்சபையில்   திடீரென  ஒரு  குரல்  குமுறி  எழுந்தது. தார்மீகக்கோபமும்   கொந்தளிப்பும் கொண்ட  மனிதாபிமானத்தின் சங்கநாதமாக  ஒலித்துச் சபையின்  ஒழுங்குமுறைகளை உதாசீனம்செய்து,    பொறுமையின்  எல்லையில்  பிறந்த அந்தக்குரலின்   தகிப்பிலே  வாடிப்போனவனாய்  அந்த  மாணவனும் வாயடங்கி  அமர்ந்தான்.

இதுவரை   அமைதியாக  இருந்த  அந்தச்சபையில்  சிறு  சலசலப்பு. தாங்கள்  தோன்றிய  வர்க்கத்தின்  நலனைப்பாதுகாக்கின்ற பிரதிநிதிகளாக    எண்ணிக்கொண்டிருந்த  மாணவர்களின் சிந்தனையில்   ஒரு  திருப்பம்.   அந்தக்குரல்  வந்த  திக்கையே மாணவர்கள்   எல்லோரும்  வியப்போடு  நோக்குகின்றனர். உள்ளக்குமுறலை    வார்த்தைகளாக  கொட்டியபின்  முகத்தில் துளிர்த்திருந்த    வியர்வையைத்  துடைத்துக்கொண்டிருந்தது  –  அந்த எரிமலைக்குரலில்   பேசிய  சின்னஞ்சிறிய  உருவம்.   அமைதியான இந்தச்சிறிய   உருவத்திடமா  இவ்வளவு  ஆழமான  போர்க்குணம் கொண்ட   நல்ல  உள்ளம்  என்ற  வியப்பு  எங்கள்  எல்லோருக்கும்.

அந்த   உருவம்  வேறு  யாருமல்ல.   நண்பன்  செ. கதிர்காமநாதன்தான்.

( ஆதாரம் :   மல்லிகை   டிசம்பர் 1972)

——————–

நான்   எனது  மனைவி  மாலதியை  சந்தித்த  முதல்  நாள், ”  செ. கதிர்காமநாதன்   என்ற  எழுத்தாளரைத்தெரியுமா ? ”  என்று  கேட்டாள். அவள்   என்னிடம்  கேட்ட  இலக்கியம்  சார்ந்த  முதல்  கேள்வியே அதுதான்.    பல  “முதல்”  களை  வாழ்க்கையில் மறக்கமுடியாதிருப்பதுபோன்று   அந்த  முதல்  கேள்வியையும் மறக்கமுடியாது.

நான்   அதுவரையில்  அறிந்திருந்த  கதிர்காமநாதன்  பற்றியும் அவருடைய   படைப்புலகம்  பற்றியும்  அவரை  முதலும்  இறுதியுமாக பார்த்த    அந்த  நாள்  பற்றியும்  சொன்னேன்.

அவருடைய   தங்கை  செல்வராணி ,  பருத்தித்துறை  மெதடிஸ்ட் கல்லூரியில்    தன்னோடு  படித்தவர்  என்ற  தகவலையும்  தெரிவித்த மனைவி,     தனக்கும்  செ.கதிர்காமநாதனின்  சிறுகதைகள் பிடித்தமானது    என்றாள்.

சில   வருடங்களின்  பின்னர்  நான்  இலங்கைக்கு  வந்தபொழுது மாத்தளைக்கு   சென்றசமயம்,    அங்கு  வதியும்  நண்பர்  மாத்தளை கார்த்திகேசு   எனக்கு   கதிர்காமநாதன்  பற்றிச்சொன்ன முற்றிலும் ஆச்சரியமான   அதிர்ச்சியான  தகவல்  என்னை  ஒரு  சிறுகதையே எழுதும்   அளவிற்கு  தூண்டியது.

அக்கதையின்   பெயர் :    கதைத்தொகுப்பின்  கதை. யாழ்ப்பாணம் ஜீவநதி   இதழில்  வெளியானது.

———————-

பம்பலப்பிட்டி  கதிரேசன்  மண்டபத்திற்கு  அருகில்  ஒரு சைவஉணவகம்  நடத்தினார்  மாத்தளை கார்த்திகேசு.   இவர்  நல்ல கலை,   இலக்கிய  ஆர்வலர்.   கொழும்பில்  இயங்கும்  தமிழ்  கதைஞர் வட்டத்தில்   (தகவம்)  நீண்டகாலமாக  இருப்பவர்.   அதன் ஸ்தாபகர்களில்   ஒருவர்.  அவள்  ஒரு  ஜீவநதி  என்ற   ஈழத்துத்  திரைப்படத்திற்கு   கதை  – வசனம்  எழுதிய  அதன்  தயாரிப்பாளர். குறிஞ்சி    வெளியீட்டகம்  என்ற  பெயரில்  சில  நூல்களை வெளியிட்டிருக்கிறார்.

ஒருநாள்   அந்த  சைவ  உணவகத்தில்  வாடிக்கையாளர்கள் சாப்பிட்டுவிட்டு   கைகழுவியபின்னர்  துடைப்பதற்கு  கொடுக்கும் காகிதங்கள்   தீர்ந்துவிட்டன.   அங்கிருந்த  ஒரு  பணியாளரை  அருகில் இருந்த    பழையபேப்பர்கள்  விற்கும்  நாடார்  கடைக்கு அனுப்பியிருக்கிறார்.

அன்றையதினம்  மாலை,    அங்கு  உணவருந்த  வந்திருந்த  ஒருவர், சாப்பிட்டபின்னர்  கைதுடைத்து  எறிந்துவிட்டுச்சென்ற  காகிதத்தை மாத்தளை  கார்த்திகேசு   எதேச்சையாகப் பார்த்தார்.  அது  ஒரு  நூலின்   ஒரு  பக்கம்.   குனிந்து  எடுத்துப்பார்த்துள்ளார்.  அது  ஒரு சிறுகதையின்   ஒரு  பக்கம்.   ஈழத்துச்சிறுகதை.   உடனே  உள்ளே சென்று    உணவருந்தும்  மேசைகளில்  வைக்கப்பட்டிருந்த காகிதங்களை    பார்த்திருக்கிறார்.   அவை  அனைத்தும் அச்சிறுகதையின்   இதர  பக்கங்கள்.  உடனே சமையல்கட்டுக்குச்சென்று,   வாழை  இலைக்கட்டு,   மற்றும் வெங்காயம்,    உருளைக்கிழங்கு,   வட்டக்காய்  முதலான மரக்கறிவகைகள்    பரத்திவைக்கப்பட்டிருக்கும் இடத்தைப்பார்க்கிறார்.

அங்கே   செ. கதிர்காமநாதனின்  கொட்டும்பனி  சிறுகதைத்தொகுப்பின்   பல  பிரதிகள்  இருந்துள்ளன.   மாத்தளை கார்த்திகேசு    அதிர்ச்சியுடன்,  அவற்றை  அந்த  நாடார்  கடையில் வாங்கிவந்த    ஊழியரை  அழைத்து  விசாரிக்கிறார்.

” கைதுடைப்பதற்கு   அளவான  சைஸில்  இருந்தமையால் அந்தப்புத்தகங்களை   எடைபார்த்து  வாங்கிவந்தேன் ”  என்றார்  அந்த ஊழியர்.   உடனடியாக   அந்தக்கடைக்கு  மாத்தளை  கார்த்திகேசு ஓடியிருக்கிறார்.

அங்கே   கொட்டும்பனியின்   மேலும்  சில  பிரதிகளும்,  ஒரு   டயறியும் இருந்திருக்கிறது.   அது  கதிர்காமநாதனின்  நாட்குறிப்பு. அனைத்தையும்    கேட்டுள்ளார்.   கடைஉரிமையாளர்,   எடைபார்த்து விற்றுள்ளார்.

அந்த   நாட்குறிப்பில்  பல  இலக்கிய  சுவாரஸ்யங்களையும்  சில அதிர்ச்சியூட்டும்    தகவல்களையும்  செ. கதிர்காநாதன் எழுதியிருந்தாராம்.    நீண்ட  நாட்கள்  அந்த  நாட்குறிப்பு  மாத்தளை கார்த்திகேசுவிடம்    இருந்திருக்கிறது.   அதில்  ஒரு இலக்கியப்பேராசிரியர்   பற்றிய  கடுமையான  விமர்சனத்தையும் செ.கதிர்காமநாதன்    எழுதியிருந்தாராம்.

இலக்கிய   உலகில்  தொடர்ச்சியாக  அந்தப்பேராசிரியரை கடுமையாக   விமர்சித்து வந்திருக்கும்  ஒரு  மூத்த  எழுத்தாளரிடம் அந்த    நாட்குறிப்பு  பற்றி  மாத்தளை  கார்த்திகேசு,   ஒருநாள் பேச்சுவாக்கில்   பிரஸ்தாபித்தபொழுது,  அந்த  நாட்குறிப்பை தனக்குத்தருமாறு   அந்த  எழுத்தாளர்  கேட்டுள்ளார்.  ஆனால்,  மாத்தளை   கார்த்திகேசு  அதனை  அவருக்கு  கொடுக்கவேயில்லை.

இடப்பெயர்வுகளின்போதோ  அல்லது  எப்படியோ  அந்த  டயறி தொலைந்துவிட்டது   என்று  மாத்தளை கார்த்திகேசு  என்னிடம் கவலையுடன்   சொன்னார்.

கொட்டும்பனி   நூலின்  பிரதிகளும்,  அந்த  டயறியும்  இறுதியாக செ.கதிர்காமநாதனிடம்தான்   இருந்திருக்கவேண்டும்.   அவருடைய மறைவுக்கு   சில  மாதங்களுக்கு   முன்னர்தான் திருமணமாகியிருந்தார்.   அவருக்கு  நிருவாகசேவையிலும்  பணி கிடைத்தது.    நல்ல  இடத்தில்  அவருக்கு  திருமணமும்  நடந்தது.

ஆனால்,  அவருடைய  வாழ்க்கை  கனவுபோன்று  திடீரென்று கலைந்துவிட்டது.   அவருக்கு  வாய்த்திருந்த   இந்த  வாழ்க்கையும், அவருடைய   முதல்  நூலின்  அந்திமகாலமும்  என்னை வெகுவாகப்பாதித்தது.   அத்துடன்  அவரை  வாழ்வில்  ஒரே  ஒருமுறை கண்டிருந்தும்    பேசமுடியாமல்  போய்விட்ட   துயரமும் என்னைத்தாக்கியிருந்தது.

அத்தகைய   அழுத்தங்கள்  வரும்பொழுது  ஏதும்  எழுதி  என்னை ஆற்றுப்படுத்திக்கொள்ளும்    இயல்பினால்,   கதைத்தொகுப்பின்  கதை   என்ற    சிறுகதையை  எழுதினேன்.  ஆனால்,  அதில் கதிர்காமநாதன்    வரமாட்டார்.   அவருக்குப் பதிலாக  சுந்தரி  டீச்சர் என்ற   கற்பனைப்பெண்  எழுத்தாளரைச் சித்திரித்தேன்.

————————-

இது   இவ்விதமிருக்க  அண்மையில்  எனக்கு  கிட்டிய  செய்தியை எங்கள்   தமிழ்  எழுத்தாள  பிரம்மாக்களுக்கு  காலத்தின்  தேவை உணர்ந்து   சமர்ப்பிக்கின்றேன்.

தமிழகத்தில்   எஸ்.பொன்னுத்துரை  நடத்திய  மித்ர  பதிப்பகத்தில் எம்மவர்கள்   பலரின்  நூல்கள்  அழகிய முறையில்  அச்சாகியதை அறிவோம்.    நேர்த்தியாகவும்   நவீன  வடிவமைப்பிலும் மித்ர வெளியீடுகள்  வந்தமை   குறிப்பிடத்தக்கது.

அங்கு   சில   வருடங்களுக்கு  முன்னர்  அச்சிடப்பட்ட  கவிஞர் அம்பியின்   கொஞ்சும்  தமிழ்,   நடேசனின்   வாழும்  சுவடுகள்  முதல் பாகம்,   மறைந்த  கவிஞர்  நீலாவணனின்  வழி கவிதைத்தொகுப்புகளுக்கு   நடந்த  கதையைக் கேளுங்கள்.

அம்பியின்   கொஞ்சும்  தமிழ் –  குழந்தை  இலக்கிய  நூலில்  சுமார்  300 பிரதிகள்   சென்னையில்  தேங்கியிருந்துள்ளன.  ஆனால்,  தற்பொழுது படுக்கையில்   இருக்கும்   அம்பிக்கு  இந்தத்தகவல்  சமீபத்தில்தான்  தெரியவந்தது.     அதுபோன்று  நடேசனின்  வாழும்  சுவடுகள்  முதல் பாகத்தில்   மேலும்  பல  பிரதிகள்  ( நூறுக்கும் மேல்)   அவ்வாறே  அங்கு கவனிப்பின்றி    கிடந்துள்ளன.   கவிஞர்  நீலாவணன்  தாம்  வாழும் காலத்தில்    வெளியிட்ட  வழி  கவிதைத்தொகுதியை எஸ்.பொன்னுத்துரை    தாமாகவே  விரும்பி  இரண்டாம் பதிப்பை  மித்ர சார்பில்   முதல்  பதிப்பு  என்ற  அறிவிப்புடன்  வெளியிட்டார். அந்தப்பிரதிகள்  இலங்கை  வந்தபொழுது  நாற்பதுக்கும்  அதிகமான அபத்தமான   எழுத்துப் பிழைகளுடன்  காணப்பட்டன.

அவற்றில்    ஐம்பதிற்கும்  மேற்பட்ட  பிரதிகள்  சென்னையில் தேங்கியிருக்கும்   செய்தியும்  காலம்  தாழ்த்தி  நீலாவணனின்  புதல்வர்    எழில்வேந்தனுக்கு  கிடைத்தது.   அவை  நிறம்  மங்கி  பழுப்பு நிறமாக   உருமாறியிருக்கின்றன.

நல்லவேளையாக    அம்பியின்  நூல்  பிளாஸ்ரிக்  பாதுகாப்பு உறையுடன்    வெளிவந்தமையால்  தப்பியிருக்கிறது.   எனினும் அம்பியின்   கொஞ்சும்  தமிழ்,  2005  ஆம்  ஆண்டே  சென்னையில் வெளியாகிவிட்டது.     அவுஸ்திரேலியா  சிட்னியிலும்  மெல்பனிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.    எஞ்சியிருந்த  பிரதிகள்  அனைத்தும்   சுமார்   11  ஆண்டுகள்  சென்னையில்  தேங்கியிருந்த   தகவலும் தெரியாதிருந்திருக்கிறார்   தற்பொழுது  85  வயதை  நிறைவுசெய்துள்ள  கவிஞர் அம்பி.

நடேசன்   தமது  வாழும்  சுவடுகள்  நூலின்  இரண்டாம்  பாகத்தையும் பின்னர்   மித்ர  பதிப்பகத்தினாலேயே   வெளியிட்டார்.   தற்பொழுது முதலாம்   பாகமும்  இரண்டாம்  பாகமும்  இணைந்த  புதிய செம்பதிப்பினை   தமிழகத்தில்  காலச்சுவடு  வெளியிட்டுள்ளது.

கவிஞர்   அம்பியின்  மகன்  திருக்குமாரன்,   தமது  தந்தையின் வேண்டுகோளை   ஏற்று  கொஞ்சும்  தமிழ்  நூலின்  பிரதிகளை அண்மையில்   ஒருவாறு  அவுஸ்திரேலியாவுக்கு  தருவித்துவிட்டார்.

நடேசனும்,   நீலவாணன்  மகன்  எழில்வேந்தனும்   அங்கு எஞ்சியிருக்கும்    நூல்களின்  பிரதிகளைப்  பெறுவதில்  ஆர்வம் காண்பிக்கவில்லை   என்பது   தெரிகிறது.

எழுத்தாள   பிரம்மாக்களே  எங்காவது  நீங்கள்  உங்கள்  நூல்களை அச்சிட்டிருப்பின்   உங்களுக்கு  கிடைத்தமை  தவிர,  எஞ்சிய பிரதிகளுக்கு   என்ன  நேர்ந்தது ?  என்பதில்  கவனம்  செலுத்துங்கள்.

செ. கதிர்காமநாதனின்   தேசிய  சாகித்திய  விருதுபெற்ற கொட்டும்பனி   நூலுக்கு   இறுதியில்  நேர்ந்த  கதி  உங்கள் நூல்களுக்கும்   வந்துவிடக்கூடாது.

செ. கதிர்காமநாதன்  தான்  கடந்து  வந்த  பாதையை   மறக்கவில்லை. அவரைத்தொடர்ந்து   அவர்  கடந்த  பாதையில்தான்  நாமும் கடக்கின்றோம்   என்பதையும்  நாம்  மறந்துவிடலாகாது.

—-0—

 

Series Navigationஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை 2016 மாத இதழ்சூலை – 21. நடிகர் தில்கம் சிவாஜி கணேசன் நினைவு தினம்.
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *