படித்தோம் சொல்கிறோம் வன்னிக்காடுறை மனிதர்களின் நிர்க்கதி வாழ்வைப்பேசும் ஆதிரை

author
0 minutes, 9 seconds Read
This entry is part 10 of 12 in the series 31 ஜூலை 2016

போருக்கு முன்னரும் போர்க்காலத்திலும் போருக்குப் பின்னரும் தொடரும் தமிழ் மக்கள் அவலங்களின் ஆவணம்
முருகபூபதி – அவுஸ்திரேலியா

இலங்கை மலையகம் பலாங்கொடையில் எனது உறவினர்கள் சிலர் வசித்தார்கள். எனது அக்காவை அங்கு Alpha தேயிலைத்தோட்டத்தில் Field Officer ஆக பணியாற்றியவருக்கு ( பெற்றோர் பேசிச்செய்த திருமணம்) மணம் முடித்துக்கொடுத்தார்கள். 1966 ஆம் ஆண்டில் நீர்கொழும்பில் அக்காவின் திருமணம் நடந்தபொழுது நான்தான் மாப்பிள்ளைத்தோழன்.
அக்கா மலையகத்தில் குடியேறியதனால் அங்கு உறவுகள் பிறந்தன. ஒருவர் எனது அக்காவின் கணவரின் தங்கையை மணம்முடித்தார். அவருக்கும் பாலங்கொடையில் ஒரு வர்த்தகநிலையத்தில் லொறிச்சாரதி வேலை.
1981 இல் மலையகத்தில் இரத்தினபுரி, காவத்தை, பெல்மதுளை, இறக்வானை, தெனியாய ஆகிய ஊர்கள் சிங்கள இனவாதிகளினால் தாக்கப்பட்டபோது பலாங்கொடையும் தப்பவில்லை.
அக்கா குடும்பம் வவுனியாவில் காணி வாங்கி குடியேறியது. அதுபோன்று அந்தச்சாரதியின்
குடும்பமும் (எனக்கு அண்ணா – அண்ணி முறை உறவு) பூவரசங்குளத்தில் ஒரு துண்டு காணி வாங்கி குடிசை அமைத்து வாழத்தலைப்பட்டது. அவருக்கு வேப்பங்குளத்தில் ஒரு அரிசி ஆலையில் லொறிச் சாரதி வேலை கிடைத்தது.
1985 இல் ஒருநாள் அதிகாலை வழக்கம்போன்று மனைவி தந்த இடியப்பப்பார்சலுடன் வேலைக்குச்சென்ற அவரை, இரண்டு நாட்கள் கழித்து வவுனியா ஆஸ்பத்திரி சவச்சாலையில் சூட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்டோம்.
புலிகள் வேப்பங்குளத்தில் மன்னார் வீதியில் நடத்திய கண்ணிவெடித்தாக்குதலில் சில இராணுவத்தினர் கொல்லப்பட்டதன் எதிரொலியாக நடந்த துப்பாக்கிச்சூட்டில் வேப்பங்குளத்தில் கொல்லப்பட்ட பல அப்பாவிகளில் ஒருவர் அந்த பலாங்கொடையிலிருந்து இடம்பெயர்ந்து வந்த நான்கு பெண்குழந்தைகளின் தந்தை.
இது இவ்விதமிருக்க, எனது மச்சானின் மற்றும் ஒரு சகோதரியின் மகன் தாய், தந்தை இறந்த பின்னர் எனது தங்கையின் பராமரிப்பில் வவுனியாவில் பூவரசங்குளத்தில் உயர்தர வகுப்பில் படித்தான். அவன் ஒரு விடுதலை இயக்கத்தில் இணைந்து அதன் வகுப்புகளுக்கு செல்கிறான் என்பது அறிந்து அவனை எமது ஊருக்கு அழைத்து, கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் சேர்ப்பதற்கு (அதிபர் எனது நண்பர்) முயற்சித்தேன்.
நேர்முகத்தேர்வுக்கும் அழைத்துச்சென்றேன். கொழும்பில் படிக்க சம்மதித்தான். வவுனியா சென்று தனது உடைகளை எடுத்துவருவதாக உறுதியளித்துச்சென்றவன் காணாமல் போனான்.
எதிர்பாராதவிதமாக அவனை யாழ்ப்பாணத்தில் 1986 ஆம் ஆண்டு இறுதியில் அந்த இயக்கத்தின் பயிற்சிபெற்ற போராளியாக, யாழ். கோட்டையிலிருந்து இராணுவம் வெளியேறாதவகையில் ஆயுதத்துடன் சென்ரியில் நிற்கும் களப்போராளியாக மாறியிருந்தான்.
இறுதிவரையில் தனது இயக்கத்தின் தலைமைக்கு விசுவாசமாக நின்ற அவன், 1989 இல் கொழும்பின் புறநகர் பகுதியில் அந்தத் தலைவர் கொல்லப்பட்டதையடுத்து, எதிலும் நம்பிக்கையற்று தனது எதிர்காலம் குறித்த கனவுகளுடன் அய்ரோப்பிய நாடொன்றுக்குச்சென்று, திருமணம் முடித்து மனைவி பிள்ளைகளுடன் அமைதியாக வாழ்கின்றான்.
சயந்தனின் ஆதிரை நாவலை படித்துக்கொண்டிருக்கும்பொழுது, குடும்பத்திற்காக வவுனியாவுக்கு இடம்பெயர்ந்து சென்ற அந்த மலையக உறவினரான சாரதியும், படிப்பை குழப்பிக்கொண்டு ஒரு இயக்கத்தை நம்பிச்சென்ற அந்த இளைஞனும் நினைவில் வந்தார்கள்.
அந்தச்சாரதியின் நான்கு பெண்பிள்ளைகளும் சிரமங்கள் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் படித்து, பட்டம் பெற்று அதிபராயும் ஆசிரியைகளாகவும் அதே வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் இன்று பணியாற்றுகிறார்கள்.
படிப்பை பாதியில் குழப்பிக்கொண்டு இயக்கத்தில் இணைந்த இளைஞன், தனது தலைமையின் மறைவையடுத்து தனது எதிர்காலத்தைத் தேடி புலம்பெயர்ந்து சென்றான். அன்று ஆயுதம் ஏந்தியவன் இன்று அய்ரோப்பாவில் தனது பிள்ளைகளின் கல்விக்காகவும் அவர்களின் எதிர்காலத்திற்காகவும் ஓடி ஓடி உழைக்கின்றான்.
இடம்பெயர்ந்தவர்கள், புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வை நீடித்த கொடிய போர் எவ்வாறு புரட்டிப்போட்டது என்பதற்காக இந்தத்தகவலை ஆதிரையின் வாசிப்பு அனுபவத்தின் ஊடாகவே இங்கு பதிவுசெய்கின்றேன்.
————-
சயந்தனின் ஆதிரை நாவல் 1991 இல் தொடங்கி, 2013 இல் முடிகிறது. முடிகிறது என்றும் சொல்ல முடியாது. எமது கதை முடிவுறாதது. சயந்தன் எமது கதையைத்தான் சொல்கிறார். எமது தமிழினத்தின் கதையை மட்டுமல்ல மானுடத்தின் கதையையும் சொல்கிறார்.
ஆதிரையில் தொடக்கத்தில் வரும் சிங்கமலை லெட்சுமணன் மலையகத்தில் தெனியாயவில் பிறந்து, எழுபத்தியேழு கலவரத்தில் தந்தையின் தோளிலே அமர்ந்து முல்லைத்தீவுக்காட்டுக்கிராமத்திற்கு வந்த நாடற்றவன். அவனில் தொடங்கும் கதை ஆதிரையில் முடிகிறது.
———–
” இங்க புலி அல்லது புலிக்குச் சப்போட் பண்ணுறவுங்க யாராவது இருந்தா மரியாதையா சரண்டர் ஆகுங்க. இல்ல – சுடுபட்டுச்சாவீங்க” கொச்சையான மொழியில் ஒருவன் மிரட்டியபோது, மயில்குஞ்சன் தன்னுடைய சாவை உறுதிப்படுத்திக்கொண்டான். சாவைக் குறித்துப் பதற்றமான எண்ணங்கள் தனக்குள் உருவாகாமல் இருப்பதை முதற்தடவையாக அவன் ஆச்சரியத்தோடு அவதானித்தான். உலகத்தின் பற்றுகளிலிருந்து தன்னைத்துண்டித்துக்கொண்டு வாழ்வதனால் அது சாத்தியமாயிருக்கலாம் என்றும் மரணத்தின் அச்சமென்பது அனுபவித்தவற்றை இழக்கப்போவதினாலும், அன்பிற்குரியவர்களை மறுபடியும் சந்திக்க முடியாமற் போவதாலுமே ஏற்படுகிறது என்றும் நினைத்தான்.
இது மயில்குஞ்சன் என்ற பாத்திரத்தின் வாயிலாக சயந்தன் சுட்டும் மரணத்தின் அச்சம்.
மரணபயம்தான் எம்மவர்களை ஊர் விட்டு ஊருக்கு இடம்பெயறச்செய்தது. தேசம் விட்டுத் தேசம் புலம்பெயரவைத்தது. ஆதிரையை எழுதிய சயந்தனும், ஆதிரை பற்றிய வாசிப்பு அனுபவத்தை தற்பொழுது எழுதும் நானும் அந்த மரணபயத்திலிருந்து வந்தவர்களே. ஏன், நாவலின் இறுதியில் தோன்றும் ஆதிரையும் அந்த மரணபயத்தை எதிரியிடமிருந்து சந்திக்கத்திராணியற்று தனது மார்பின் குருதிச்சேற்றுக்குள் புதைந்திருந்த நஞ்சுக்குப்பியை வெகு சிரமத்தோடு இழுக்கிறாள். 664 பக்கங்களில் நீண்ட இந்நாவல் அத்துடன் முடியாமல் முடிகிறது.
ஒரு இலக்கியப்படைப்பு அதனை எழுதுபவரின் இயல்புகளையும் வெளிப்படுத்திவிடும். அதேவேளையில் அந்தப்படைப்பில் வரும் பாத்திரங்களின் இயல்புகளையும் அதன்போக்கிலேயே சித்திரித்தும்விடுவார். சயந்தன், ஆதிரை ஊடாக எமக்கு அறிமுகப்படுத்தும் பாத்திரங்கள் அதனதன் இயல்புகளிலிருந்து இறுதிவரையில் மாறாதிருப்பதும் இந்நாவலின் தனிச்சிறப்பு.
அம்மக்கள் வாழும் வன்னிக்காடும், நீர்நிலைகளும், விலங்குகளும் பறவையினங்களும் பயிர்களும், குடிசைக்குடியிருப்புகளும் ஆதிரையை படித்து முடித்த பின்னரும் நினைவில் தங்கிவிடுகின்றன. அத்தகைய யதார்த்தச்சித்திரிப்பிலும் இந்த நாவல் வெற்றியடைந்துள்ளது.
இந்நாவலில், நினைவில் தங்கிவிடும் பல பாத்திரங்கள் வருகின்றன. சயந்தன், கருணாகரனுக்கு வழங்கிய நேர்காணலில் ” தனக்கு ஆதிரையில் வரும் நாமகள்தான் பிடித்தமான பாத்திரம்” எனச்சொல்கிறார். இவ்வாறு ஒரு நாவலாசிரியர் சொல்வது அபூர்வம்.
தாம் படித்த படைப்புகளில் வரும் ஒரு பாத்திரம் பிடித்துக்கொண்டால், அந்தப் பெயரை தமக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு சூட்டுவதையும் நான் பலரிடத்தில் பார்த்துள்ளேன்.
எனக்கு இந்த நாவலில் வரும் சந்திரா மிகவும் பிடித்தமான பாத்திரம் என்பேன். அதற்கு அவளுக்கிருந்த சமூகப்பார்வையும், துணிச்சலும், கருத்தியலும்தான் காரணம். சந்திராவின் துணிச்சல்:- தனது உயர்சாதிக்குடும்பத்தையும் எதிர்த்துக்கொண்டு ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியான அத்தாரை மணம்முடிப்பதிலிருந்து தொடங்குகிறது. இயக்கத்திற்கும் இராணுவத்திற்கும் இடையில் நடக்கும் மோதலில் சிக்கி கொல்லப்படும் அப்பாவிகளையும் , அச்சத்தினால் ஓடி ஓடி அள்ளல்படும் குடும்பங்களையும் பற்றிச்சிந்திக்கிறாள்.
ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்திலிருந்து முற்போக்குவாதம் பேசிய கணவன் அத்தாருடனும் மற்றவர்களுடனும் வாதிடுகிறாள்.
” சனங்கள் கஸ்ரப்பட்டு விடுதலை வாங்கிறது வேறை. சனங்களைக் கஸ்ரப்படுத்தி விடுதலையை வாங்கித்தாறமெண்டுறது வேறை.”
” எண்ணுக்கணக்கிலயா இப்ப தமிழற்றை பிரச்சினையை அளக்கினம்”
” ஆரப்பா இங்கை பாதிக்கப்பட்டவை ? நிலமெல்லாம் பறிபோகுது எண்ட கோஷத்துக்குப் பின்னால சொந்தமா நிலமேயில்லாமல் சனங்கள் இருக்கிறதைப்பற்றியும், கொழும்பில அடி விழுகுது என்ற ஓலத்துக்கு பின்னாலை கொழும்பையே தெரியாமல் ஒரு கூட்டமிருக்கென்றதையும் நான் சொல்லித்தான் நீங்கள் தெரியவேண்டுமெண்டில்லை.”
இவ்வாறெல்லாம் அவள் தனது தரப்பு வாதங்களை முன்வைக்கிறாள்.
” முதலடியை எடுத்து வைக்கிற துணிச்சலில்லாதவங்கள் எப்பவும் மற்றவங்களைக் குறை சொல்லிக்கொண்டேயிருப்பாங்கள்” என்று எதிர்த்து வாதிடும் கணவன் அத்தார், ” பாதிக்கப்பட்டவன் நேரடியாப் போராடத் தொடங்கேக்க பள்ளிக்கூடத்தில உள்ள மாதிரி பாடத்திட்டத்தோட தொடங்கமாட்டான். அனுபவத்தின்ர போக்கிலே சரியான வழியை அவன் எடுத்துக்கொள்ளுவான் ” என்றும் மேலும் சொல்கிறான்.
சந்திராவுக்கும் அத்தாருக்குமிடையிலான இந்த வாதப்பிரதிவாதம் 1986 காலப்பகுதியில் நடக்கிறது. டெலோ இயக்கத்தை புலிகள் அழித்த காலம் இதுவென அந்த அத்தியாயத்தில் பதிவாகிறது.
ஆதிரையில் வருபவர்கள் முழுமையான பாத்திரச்சித்திரிப்புடன் உயிர்ப்படைகிறார்கள். பாத்திரங்களை அவர்களின் இயல்புகளுடனும் ஆசிரியர் கூற்றாகவும் சித்திரிப்பது முக்கியமானது. சயந்தன் பாத்திரங்களை மிக நுணுக்கமாக செதுக்கியிருக்கிறார்.
ஆதிரை நாவல் வன்னிபெருநிலப்பரப்பின் மையப் புள்ளியிலிருந்து அதன் ஆத்மாவையும் பதிவுசெய்தவாறு, இலங்கையின் இதர பிரதேசங்களையும் சர்வதேசத்தின் சதுரங்காட்டத்தையும் நோக்கி விரிகிறது.
பாம்பு கடித்த வள்ளியம்மா கிழவியை காப்பாற்ற அந்த நடுச்சாமவேளையிலும் முதலுதவி செய்து, தன்னந்தனியாக வன்னிக்காட்டை ஊடறுத்துக்கொண்டு நெடுங்கேணி ஆஸ்பத்திரிக்கு சைக்கிளில் சுமந்து செல்கிறாள் மலர். அவளுடைய புத்திசாலித்தனம் துணிச்சல் யாவும் வன்னிக்காட்டின் இயற்கையுடன் இணைந்துவருகிறது. 212 – 234 பக்கங்களில் வாசகர்களை அந்த சைக்கிள் பயணத்துடன் அழைத்துவரும் சயந்தன், பதிவுசெய்யும் இந்தப்பகுதி இந்தியப்படை அங்கு நிலைகொண்டகாலம்.
அதிகாலை 3.10 இற்கு மலரின் குடிசையை முற்றுகையிடுகிறது இந்திய இராணுவம். கடுகுநெய்யின் வீச்சம் மலருக்கு குப்பென்றது. அவளை மட்டுமல்ல முதியவளான அவள் தாயையும் விட்டுவைக்காமல் சூறையாடுகிறது அந்த அமைதிகாக்கவந்த படை.
” இந்தியன் ஆமி வருகுது எண்ட உடன சனங்கள் பட்ட சந்தோசம் இந்தக்கால் அளவுதான் அத்தார். அவங்கள் திரும்பிப்போறாங்கள் எண்ட உடனை சனங்கள் பட்ட சந்தோசமிருக்கே அது இந்தக்காடளவு” என்று சொல்லும் மயில்குஞ்சன் கைகளை விரித்துக் குலுங்கிக் குலுங்கிச்சிரித்தான்.
ஈழத்தமிழ் மக்கள் இவ்வாறு ஏமாந்து ஏமாந்து காலத்தைக் கடத்தியவர்கள் என்பதையும் இந்நாவல் சொல்லத்தவறவில்லை. எமது தமிழ் மக்கள் நம்பி நம்பி மோசம் போனவர்கள். தமிழ்த்தலைவர்களை, விடுதலை இயக்கத்தலைவர்களை, சந்திரிக்கா உட்பட பல சிங்களத்தலைவர்களை, இந்தியாவை, தமிழ்நாட்டை, புலம்பெயர்ந்தவர்களை, வல்லரசுகளையெல்லாம் நம்பி நம்பி ஏமாந்தவர்கள்தான். இறுதியில் இன்று ஐ.நா. சபையை நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
இம்மக்கள் இவ்வாறு வைத்த நம்பிக்கை அவர்கள் வணங்கும் கடவுள்களிலும் நீடித்தது.
யாழ்ப்பாணத்திலிருந்து பாரிய இடப்பெயர்வுக்குள்ளாகும் மக்கள் முதலில் தென்மராட்சிக்கு வந்து, அங்கிருந்து வன்னிக்காட்டில் எட்டேக்கர் பகுதியில் குடியேறி வீடு கட்டுகிறார்கள். அவ்வாறு வரும்பொழுது யாழ்ப்பாணத்து வீட்டில் தினமும் வணங்கிய சாமிப்படங்களை எடுத்துவரவில்லை. காரணம்: ” வீட்டில இருந்து சாமியைக்கிளப்பக்கூடாது. அது நல்லதில்லைத்தானே ”
சாமிகளை எங்கும் எந்தக் காட்டிலும் உருவாக்கமுடியும் என்ற நம்பிக்கைதான். ஆனால், அந்தச்சாமிகள் நடக்கும் அநியாயங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கின்றன சர்வதேச சமூகம்போன்று.
சாமிபடங்களை விட்டு வரும் மக்கள் சாதியை அகத்திலும் ரோச் லைற்பற்றறிகளை தமது உள் ஆடைகளுக்குள்ளும் மறைத்து எடுத்துவருகிறார்கள். அவ்வாறு கொண்டுவரும்போது இரண்டுதரப்பின் கண்களிலும் தூசு இருக்கவேண்டும். ஒரு புறம் இராணுவம். மறுபுறம் புலிகள். இராணுவத்தின் கண்களில் சிக்காமல் கொண்டுவந்து, புலிகளிடம் பிடிபட்டால், ” இவ்வளவு தொகையாக கொண்டு வந்ததை இயக்கம் கண்டுதெண்டால் எப்படிக்கொண்டந்தனியள் ? ஆமியோடை என்ன தொடர்பு ? ” எண்டெல்லாம் விசாரிப்பாங்கள். இல்லாட்டி அரைவாசியைத்தாங்கோ எண்டு வாங்கிப்போடுவாங்கள்”
உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு இடம்பெயரும் மக்கள் மத்தியில் தோன்றும் சமூகத்தலைவர்களின் போலித்தனங்களையும் ஆதிரை அம்பலப்படுத்துகிறது.
” பள்ளிக்கூடச் சங்கத்தலைவராயிருக்கிறமாதிரி கோவில் தர்மகர்த்தா சபையில தலைவராயிருக்கிறமாதிரி, இந்தச்சமூகத்தில தனக்கொரு அந்தஸ்தும் பிரபலமும் கிடைக்குமெண்டால் வெள்ளாளன், தான் ஆரை அடக்கி ஒடுக்கினானோ, அந்தச்சனங்களுக்காகப் போராடுறமாதரி காட்டவும் தயங்கமாட்டான்.”
” ஏன் இப்ப கத்துறியள்- சாதி குறைஞ்ச சனங்களுக்காக வெள்ளாளன் போராடக்கூடாதோ? ”
” உலகத்தில எங்கையாவது கூலிக்காரனுக்காக முதலாளி போராடினதா சரித்திரம் இருக்கோ- ” ( பக்கம் – 296)
ஆதிரை இவ்வாறு எமது தமிழ்ச் சமூகத்தலைவர்களை மட்டுமல்ல போருக்குப்பின்னர் வெளிநாடுகளிலிருந்து வரும் தொண்டுநிறுவனங்களையும் காணமல் போனவர்கள் பற்றிய செய்திகளை பதிவுசெய்யவரும் தொலைகாட்சி ஊடகங்களையும் கேள்விக்குட்படுத்துகிறது.
” அம்மா நாங்க இந்தியால ஒரு டீவில இருந்து வர்றோம். காணாமல் போனவங்க பத்தி ஒரு செய்தித்தொகுப்பு பண்றோம். இது உங்க மகளாம்மா?” படத்தைக்காட்டிக்கேட்கிறார்கள்.
” எத்தனை வயசம்மா? ”
” அம்மா – உங்கபொண்ணு தானா எல்.டி.டி. இல விரும்பிச்சேர்ந்தாங்களா- அல்லது கட்டாயப்படுத்திப் பிடிச்சுக்கொண்டு போனாங்களா?”
” இங்க – இங்க காமெராவைப் பார்த்துச்சொல்லுங்க”
அந்தத்தாய் – வல்லியாள் அவர்களின் முன்னே மகளின் படத்தை வைத்துக்கொண்டு, ” எம் புள்ளைய மீட்டுக்கொடுக்கணும் ” என்று தொடர்ந்தும் கதறிக்கதறி அரற்றிக்கொண்டிருந்தாள். கண்ணீர் வற்றிப்போய்விட்டது.
அவர்கள் வேறு கண்ணீரைத் தேடிப்போனார்கள். (பக்கம் – 637)
போர் முடிவுற்றபின்னர் அங்கு சென்று விடுப்புப்பார்க்கும் புலம்பெயர்ந்தவர்களையும் இந்த நாவல் விட்டுவைக்கவில்லை.
“சந்திர ரீச்சரிட்டைப் படிச்சதெண்டு சுவிசிலிருந்து சயந்தன் எண்டு ஒருத்தன் வந்தவன். கதை எழுதுறவனாம். ரீச்சர் எப்படிச்செத்தவ- நீங்கள் எந்தப்பாதையால மாத்தளனுக்குப்பேனீங்கள்- இயக்கப்பெடியங்களைப்பற்றி என்ன நினைக்கிறியள்- அவங்களில இப்பவும் கோவம் இருக்கோ எண்டெல்லாம் கேட்டு தன்ரை ரெலிபோனில ரெக்கோட் செய்தவன்”
” ஏனாம் ? ”
” தெரியேல்லை – சனம் உத்தரிச்சு அலைஞ்ச நேரம் கள்ளத்தோணியில வெளிநாட்டுக்குப்போனவங்கள் இப்ப வந்து விடுப்பு கேக்கிறாங்கள்” ( பக்கம் – 624)
———–
வன்னியில் மாவீரர் படிப்பகத்தில், புலிகளின் தலைவரின் படம் சட்டமிடப்பட்டு மாட்டப்பட்டிருந்தது. அதில் ” இயற்கை எனது நண்பன். வாழ்க்கை எனது தத்துவாசிரியன். வரலாறு எனது வழிகாட்டி” என்ற ஒரு வாசகம். சுவர்களில் கிட்டு, திலீபன் முதலானோரின் படங்களுமிருந்தன. ( பக்கம் – 430)
அவர்கள் இன்றில்லை. வன்னியின் இயற்கை அழிக்கப்பட்டு நஞ்சுண்ட காடாக மாறியது. வாழ்க்கை தந்த தத்துவபோதனை என்னானது ? எஞ்சியிருக்கும் வரலாறாவது எம்மவருக்கு வழிகாட்டியாக இருக்கட்டும்.
———–
சமூகத்திற்காக பேசுவதும் சமூகத்தை பேசவைப்பதுமே ஒரு நல்ல படைப்பாளியின் பணி. அதனை சயந்தன் – ஆதிரை நாவலின் ஊடாக சிறப்பாக உயிரோடும் உணர்வோடும் அறிவார்ந்தும் படைத்துள்ளார்.
இந்த நாவலின் ஒவ்வொரு பக்கத்தையும் படித்து முடிக்கும் பொழுது ஒரு பெருமூச்சு பிறந்தது. நாவலைப்படித்து முடிக்கையில் எழுந்த பெருமூச்சு அடங்குவதற்கு சில கணங்கள் தேவைப்பட்டது. உறக்கத்திலும் இயற்கை வளம் மிக்க வன்னிக்காடும் அம்மக்களும் வந்துசென்றார்கள்.
ஆதிரை பாதிக்கப்பட்ட மக்களின் கதை. அவர்களின் நம்பிக்கைகளை கனவுகளை ஏக்கங்களை ஏமாற்றங்களை நிராசைகளை பதிவுசெய்த கற்பனையற்ற கதை.
தமிழ் ஈழத்தேசிய கீதம் எழுதித்தருவேன், ஈழகாவியம் படைப்பேன் என்றெல்லாம் சொல்லும் அண்டை நாட்டு வைரவரிக்காரரும் ஈழத்தில் வேறு எவரும் கிடைக்காமல் அவரை அழைத்து தமிழ்ப்பொங்கல் புசிக்கும் தமிழ்த் தேசியத்தலைவர்களும் அவசியம் ஆதிரையை படிக்கவேண்டும்.
664 பக்கங்கள் கொண்ட இந்த நாவலை படிப்பதற்கு அவர்களுக்கு நேரமும் பொறுமையும் இருக்குமா ? என்பதுதான் தெரியவில்லை.
இறுதியாக— இந்நாவல் தரும் பேராச்சரியம்:
சுவிசில் வதியும் சயந்தன், வன்னியை எப்படி இவ்வாறு அதன் ஆத்மா குலையாமல் சித்திரித்தார் என்பதுதான்.
கலைத்துறைகளான நடனம், இசை, நாடகம், திரைப்படம், குறும்படம், ஆவணப்படம் ஆகியனவற்றுக்கெல்லாம் பயிற்சி நெறிகள், பயிலரங்குகள் இருக்கின்றன. ஆனால், சிறுகதை, நாவல் முதலானவற்றுக்கு அவ்வாறு இல்லை.
இந்த இலக்கியத்துறைக்கும் பயிற்சி நெறி உருவானால் சமகாலத்தில் தமிழில் நாவல் எழுதும் உத்திமுறைக்கு – புதிய – பழைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு ஆதிரையை சிபாரிசுசெய்யலாம்.
ஆறாவடுவும் ஆதிரையும் தந்த படைப்பாளி சயந்தனை இதுவரையில் நான் நேரிலும் பார்த்ததில்லை. பேசியதுமில்லை. அவருடைய ஆறாவடு முன்னர் படித்தேன். தற்பொழுது ஆதிரை படிக்கக்கிடைத்தது. ஆதிரையை படித்துப்பார்க்கத் தந்த இலக்கிய நண்பர் தெய்வீகனுக்கும் சயந்தனுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
letchumananm@gmail.com

Series Navigationகுடையானைகளும் கோவில்களும் ஆன்மீகப் பாரம்பரியமும் – 5
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *