கிரிக்கெட் போட்டியின் தேதியைக் குறித்து வைத்துக் கொண்டு ஒரு வாரம் முன்பிருந்தே திட்டமிட்டு, கொறிக்க, குடிக்க என வாங்கி குளிர்சாதனப் பெட்டியில் அடைத்து, அந்நன்னாளில் நண்பர்கள் அனைவரும் கூடி ‘தேசபக்தியோடு’ குரவையிடும் அந்த உயர்ந்த பண்பாட்டையெல்லாம் ஒலிம்பிக்கிற்கு எதிர்பார்க்கக்கூடாது. உங்களுக்கு நிரம்பத்தான் பேராசை ! “தேசபக்தியா…? ஓ….அடுத்த projectஆ…..? என்ன target ? இத appraisalல சேர்ப்பீங்கதானே ?” என கணிணியை விட்டுத் திரும்பாமல் எந்திரத்தனமாக கேட்பவர்களை, கிரிக்கெட் அவ்வப்போது உசுப்பிவிட்டு ஒன்று சேர்க்கும்.
ஒலிம்பிக்கைப் பொறுத்தமட்டில், “நம் நாட்டுக்காக எந்தெந்த விளையாட்டுகளில் எந்தெந்த வீரர்கள் ஒலிம்பிக்கிற்காகத் தேர்வு செய்யப்பட்டனர் ? எத்தனை திறமைசாலிகள் அருவருப்பான அரசியலால் தேர்வு செய்யப்படாமல் பின்னுக்குத் தள்ளப்பட்டு மனக்கலக்கத்தோடு இருக்கின்றனர் ? நம் நாட்டுக் கொடியை யார் பிடித்துச் செல்கிறார் ? எந்தெந்த தேதிகளில் நம் வீரர்கள் விளையாடுகிறார்கள் ?” என இவை எதுவுமே நமக்கு முக்கியமில்லை. ஒலிம்பிக் முடியப்போகும் நேரத்தில்……கடைசி மூன்று நாள்களுக்கு முன் செய்தித்தாள்களைப் புரட்டிப் போட்டு பதக்கப் பட்டியல் பார்த்து…..இந்தியா கடைசிக்கு முந்தைய இடத்தில் இருப்பது கண்டு லேசாக ‘உச்’ கொட்டிவிட்டு, நான்காம் நாள் நடக்கவிருக்கும் கிரிக்கெட் போட்டியைக் காண்பதற்கான ‘திட்டமிடல்’ தொடங்கும். பெரிய ‘உச்’ கொட்ட வேண்டுமாயின் இருக்கவே இருக்கிறது சமூக வலைத்தளங்கள். முகநூல், சுட்டுரை என எல்லாவற்றிலும் நமது இயலாமையைக் கடுமையாக விமர்சித்து வக்கணையாகப் பதிவிடுவோம். அவ்வளவுதான். இப்படியாக ஜனநாயகக் கடமையை ஆற்றி விட்டபடியால், பதிவிட்ட அன்று எவ்வித மன உளைச்சலுமின்றி உறக்கம் வரும்.
இந்த ஒலிம்பிக்கில் ஏதாவது புதிய சாதனைகள் நடைபெறலாம். மைக்கேல் ஃபெல்ப்ஸ் ஒரே ஒலிம்பிக்கில் 8 தங்கம் வென்றது, உசேன் போல்ட் தன் சாதனையைத் தானே முறியடித்தது போன்ற உருப்படியான சாதனைகள் பல நிகழலாம். கிரிக்கெட் உலகில் சொல்லப்படும்………
“ வெளிநாட்டில் விளையாடியதில், போட்டி தொடங்கி 9 நிமிடம் 25 நொடிகளுக்குள் ஃபோர் அடித்த முதல் இந்திய வீரர் ___________ .இதற்கு முன் பங்களாதேஷைச் சார்ந்த_________ என்பவர் 9 நிமிடம் 26 நொடிகளில் அடித்த ஃபோர்தான் உலக சாதனையாக இருந்தது. நமது இந்திய வீரர் அதை முறியடித்துள்ளார்.”
“ உலக கிரிக்கெட் வரலாற்றில், இடப்புறமாகத் திரும்பி நின்று ஹெல்மெட்டை மூன்று முறை கழட்டி தும்மல் போட்டு பின் சிக்ஸர் அடித்த முதல் வீரராகிய…….”
போன்ற அற்புதமான(!) புல்லரிக்க வைக்கும் மேதகு சாதனைகள் ‘கிரிக்கெட்டில் மட்டுமா உண்டு ? கின்னஸ் புத்தகத்திலும் உண்டே’ என்மனார் கிரிக்கெட் சான்றோர் ! (நம்புங்கள்! வஞ்சப்புகழ்ச்சி இல்லை). “அதிக தூரம் எச்சில் துப்பியவர்” , “தாடியில் 968 தேனீக்கள் வளர்த்த சாதனையை முறியடித்து 969 ஆக்கியவர்” போன்ற கின்னஸ் சாதனைகள் ஈண்டு ஒப்பிட்டு நோக்கற்பாலது(!?!?).
ஒருவேளை…….செய்தி இல்லை என்பதற்காக (அய்யய்யோ!!! ஒலிம்பிக்ஸ்ல வேற, நிறைய விளையாட்டுகள் உண்டே!),
“ஜிம்னாஸ்டிக்கில் பிங்க் டிரஸ் அணிந்து ஆடி வென்ற முதல் வீராங்கனை…..”
“டேபிள் டென்னிஸில் தலையைச் சொறிந்து கொண்டே பாயிண்ட் எடுத்த முதல் வீரர்” என்றெல்லாம்…….சே!சே! உங்கள் நல்ல மனசுக்கு அப்படியெல்லாம் செய்தி போட மாட்டார்கள் (என்று நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை !?)
செய்தி சேனல்களுக்கும், ஒலிம்பிக் போட்டிகள் சிறந்த ‘செய்தி நிரப்பி’களாக மட்டுமே உதவும். ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் காலத்தில் ஒரு குறிப்பிட்ட தினத்தன்று எந்தவொரு அரசியல் தலைவரும் எக்குத்தப்பாக உளறிக்கொட்டி மாட்டவில்லை என்றாலோ, 4 தலைகளுடன் ஒட்டகச்சிவிங்கி ஏதும் பிறக்கவில்லை என்றாலோ, இருக்கவே இருக்கிறது ஒலிம்பிக் செய்திகள். இரவு நடக்கும் (வெறித்தனமான) கலந்துரையாடலுக்கு, அதே 7 கட்டம் கட்டி விளையாட்டுத் துறையைச் சார்ந்த 7 பேரைக் குலுக்கல் முறையில் தேர்வு செய்து, மேசையில் தீயைப் பற்ற வைத்து அனல் பறக்க விவாதிக்க விடலாம். என்னே ஒலிம்பிக்கின் மேன்மை! “ஒலிம்பிக்கில் திணறும் இந்தியா” – இந்தத் தலைப்பில் மானே, தேனே, பொன்மானே சேர்த்து சிறு சிறு மாற்றங்களுடன், அனைத்து சேனல்களும் ஒரே நேரத்தில் விவாதிக்கும். “மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் சீனா தரவரிசைப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் வரும்போது நம்மால் ஏன் முடியாது? நமது நாட்டின் திறமைசாலிகள் வெளியுலகுக்குத் தெரியாமல் போவது யார் குற்றம்? பெற்றோர் குற்றமா? இல்லை ஊக்கமருந்து பயன்படுத்தியதாக அபாண்டமாகப் பழி போடும் விளையாட்டுத் துறையின் குற்றமா?” (இதை மட்டும் ‘பராசக்தி’ வசனத்தைப் போல் வாசிக்கவும்) என ஒருவர் அலறுவதைக் கேட்கலாம். யாரது? செய்தி சேனல்களுக்கு சமூகப் பொறுப்புணர்வு குறைந்து வருகிறது என்று கூறுவது? சரி, அதை விடுங்கள். நம் கதைக்கு வருவோம்.
ஒரு நாள் உணவகத்தில், அடுத்த மேசையில் அமர்ந்திருந்தவர் தனது மகனைப் பற்றிப் பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தார் (சத்தியமாக நான் ஒட்டுக்கேட்கவில்லை….அவர்தான் உரக்கப் பேசினார்).
“ஆமா சார்…..14 வயசுதான் ஆகுது. அதுக்குள்ள district level, state level champion. அடுத்த மாசம் டில்லி போறான்…..Nationalsக்கு…..இனிமேல் எங்க சார்? அடுத்த வருஷம் பத்தாங்கிளாஸ்…..கூடவே ஐ.ஐ.டி, மெடிக்கல் கோச்சிங், டியூசன்…..பிசியாயிடுவான்…..பேட்மிண்டன்லாம் அப்புறம் பாத்துக்கலாம்னு சொல்லிட்டேன் சார்…”
தான் இனி 40 வயதுக்கு மேல் தொப்பையைக் குறைக்க மட்டுமே பேட்மிண்டன் ராக்கட்டைத் தொடப்போகிறோம் என்ற உண்மையை அறியாமல், காற்றோடு காற்றாக நூடுல்ஸையும் உள்ளிழுத்துக் கொண்டிருந்தான் அந்த குட்டி பிரகாஷ் படுகோன்.
விளையாட்டு = விளை + ஆட்டு. விளை – விருப்பம். விருப்பத்தோடு ஆடும் ஆட்டம்…..என்று தேவநேயப் பாவாணரின் சொல் ஆராய்ச்சியை எல்லாம் கூறி, “பிள்ளைகளின் வாழ்க்கை அவர்களின் விருப்பம் போல் அமையட்டுமே. அவர்களின் விருப்ப ஆட்டத்தில் நிச்சயம் ஜெயிப்பார்கள்” என்றெல்லாம் அறுத்துத் தள்ள எனக்கு விருப்பம் இல்லை.
இந்தியர்களாகிய நம்மைக் குறை கூறுவதில் அர்த்தமேயில்லை. நமது தகுதிக்குரிய விளையாட்டுகள் ஒலிம்பிக்கில் இல்லாததே, நாம் வெல்ல முடியாமல் போவதற்கான காரணம். எங்கே….. “கட் ஆஃபைத் துரத்திப் பிடிப்பது” , “அதிக எண்ணிக்கையில் டியூசன் மற்றும் கோச்சிங் வகுப்புகளுக்குச் செல்வது” போன்ற விளையாட்டுக்களை ஒலிம்பிக்கில் சேர்க்கச் சொல்லுங்கள். தங்கம், வெள்ளி, வெண்கலம்னு எல்லாத்தையும் அள்ளிருவோம்ல….எப்பூடீ?
எனவே…..கனம் கோர்ட்டார் அவர்களே….! ஒரே வகையான படிப்பை நோக்கிய படையெடுப்பும் ஒரே விளையாட்டின் மீதுள்ள மோகமும் குறைந்து, பல துறைகளிலும் சிறந்து விளங்குவதே ஒரு நாட்டின் சான்றாண்மையை உயர்த்தும் என நல்லதொரு தீர்ப்பை வழங்கி, செம்மறி ஆட்டுச்சமூகம், அரசியல் என அத்தனை தடைகளையும் மீறி ரியோவிற்குச் சென்றிருக்கும் நம் விளையாட்டு வீரர்களை, வெற்றியோ தோல்வியோ…..அவர்களை மனதார வாழ்த்தும்படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்…யுவர் ஹானர்!!!!!!
- சோம.அழகு
- தொடுவானம் 131. அறுவை மருத்துவம்
- பேனா முனையில் இந்திய ஒலிம்பிக்
- மதம்
- தோரணங்கள் ஆடுகின்றன!
- கவி நுகர் பொழுது-7 (வத்திராயிருப்பு தெ.சு.கவுதமனின் ,’மெல்லின தேசம்’, கவிதை நூலினை முன் வைத்து)
- தாரிணி பதிப்பக அதிபர் திரு. வையவன் எனது மொழிபெயர்ப்பு நாடக நூல் ‘நரபலி நர்த்தகி ஸாலமியை’ வெளியிட்டுள்ளார்
- ‘காடு’ இதழ் நடத்தும் ‘இயற்கை மற்றும் காட்டுயிர் ஒளிப்படப்போட்டி’
- பூகோளச் சூடேற்றும் தீவிர வாயு கார்பன் டையாக்சைடு மாற்றப்படும் இயக்கத்தில் மின்சக்தியும் உற்பத்தி
- ஜோக்கர்
- கற்பனையும் விளையாட்டும் – செந்தில் பாலாவின் ‘இங்கா’-
- கவி நுகர் பொழுது- அன்பாதவன்
- திரும்பிப்பார்க்கின்றேன் ஆளுமைகளின் உள்ளத்துணர்வுகளை பதிவுசெய்த கடித இலக்கியம்
- காப்பியக் காட்சிகள் 15.சிந்தாமணியில் நாடகம், சிற்பம், ஒப்பனைக் கலைகள்
- யானைகளும் கோவில்களும் ஆன்மீகப் பாரம்பரியமும் – 6