கவிநுகர் பொழுது தொடரின் எட்டாவது கட்டுரையாக ,செந்தில் பாலாவின்,’மனிதர்களைக் கற்றுக்கொண்டு போகிறவன்’,கவிதை நூல் குறித்து எழுதுவது மகிழ்ச்சி.ஏற்கனவே இந்நூல் குறித்து நிகழ்வொன்றில் பேசியதன் கட்டுரை வடிவம் என்று கூடச் சொல்லலாம்.
நூலின் பின் அட்டையில்,’இருட்டும் வெளிச்சமுமாய் பிரவாகிப்பவை அவரது கவிதைகள்.வாழ்வெதிர்வுகளில் உதித்த கவிதைகளும், ஓய்வுகளில் விழித்த ஓவியங்களும் அவருக்கு மட்டுமன்றி எல்லோருக்குமாய் பல்வேறு அனுபவங்களைச் சுமந்து நிற்கின்றன’ , என்னும் குறிப்பு இருக்கிறது.
கவிதைகளை வாசிக்கும்போது, தொடக்கத்தில் சிறு சிரமம் இருந்தது.மொழியில் சற்று சிடுக்குகள் இருப்பது மட்டும் காரணமன்று.அவ்வாறு இருப்பினும் தொடர்ந்து நவீன கவிதைகளை வாசிப்பதும் உள்புகுந்து கவனிப்பதுமான செயல்பாட்டில் அதைக் கடந்து சென்று கிரகிப்பது கஷ்டமில்லைதான். ஆனால், பின்னட்டையில் குறிப்பிட்டிருப்பதைப் போன்று வாழ்வெதிர்வுகளில் உதித்த கவிதைகளின் உணர்வு வெளியை நுட்பமாய்ச் சந்திக்கிற போது எழுகிற சிரமமது.
கவிதைகள் உலவும் வெளி முழுவதும் கனத்துக் கிடக்கிறது. கனத்துக்கிடக்கும் வழியில் அழுத்தம் மிக்க மனத்தின் சுவாசத்தில் சொற்களாய் மூச்சுத் திணறுகின்றன.சற்று நேரம் மூடிவைத்துவிட்டு சுவாசத்தை இலகுவாக்கிக் கொண்டு மீண்டும் வாசித்தேன்.
அப்படியான பாடு பொருள்கள்.கவிதை உருவாக்கத்தின் செய் நேர்த்தியென்பது உடனடி சிலாகிப்புக்கு ,வாசகனின் நுகர்வு தளத்திற்கான நிறைவைத் தரும்.ஆனால், பாடுபொருளின் தன்மையும் உணர்வும் தொனியும் தொகுப்பின் பல கவிதைகளில் அடுத்தடுத்து வாசிக்கும் போது தொல்லை தரும்.
முதல் கவிதையிலிருந்து கடைசிக் கவிதை வரை தொகுப்பில் உள்ள கவிதைகளைக் கோர்க்கிற மைய இழையை புரிந்துகொள்ள முடிகிற தருணம் சங்கடப்படுத்துகின்றன.
தனக்கான உள்மனச்சிக்கலை நெருடலை பிரச்சனைகளை வெளிப்படுத்துவதற்கும் வெளிப்படுத்த முடியாமைக்குமான இடைவெளியில் சிக்கித்தவிக்கும் கவிமனத்தினூடாக பயணிக்கத் தொடங்குகிறேன்.
இவ்வுலகில் கற்றுக் கொள்வதற்கு ஏராளம் இருக்கிறது. எப்போதும் கற்றது கைமண்ணளவுதானே.சகமனிதனிடம் கற்றுக்கொள்ள பல விஷயங்களோடு இருக்கிறான். ஆமாம். இங்கே கற்றுத்தருவதற்கு ஏராளமானோர் இருக்கிறார்கள்.கற்றுக் கொள்ளத்தான் யாரும் தயாராயில்லை.
பார்க்கப் போகும் எத்தனையோ
மனிதர்களில்
இந்த இடத்தில்
இன்று
இவர்
நான்
மனிதர்களைக் கற்றுக் கொண்டு போகிறவன்
இன்று-நான் – இவர், என்னும் தலைப்பிட்ட கவிதை. இவர்.மனிதர்களைக் கற்றுக் கொண்டு போகிறவனாய் இருக்கிறார்.இந்த இடத்தில், இன்று என்னும் வார்த்தைகள் கவனிக்கத்தக்கவை.இந்த இடத்தில் என்கிற போது இன்னொரு இடம் இருப்பது புலப்படுகிறது.இன்னும் ஒரு இடமா பல இடமா தெரியாது.கற்றுக்கொள்ளப் போகிற வெளி ,இந்த இடத்தில் என்னும் சொல்லின் வாயிலாக மேலும் பல எண்ணற்ற வெளிகளை நமக்கு உணர்த்துகின்றன.அடுத்து, இன்று என்னும் சொல். இன்று என்னும் சொல் காலத்தின் கணக்கில்லா தருணங்களை உருவாக்குகின்றன.ஒற்றையாக சொல்லப்பட்டாலும் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மனிதர்களை, வாய்ப்புகளைக் கண்முன் விரிப்பதை அறிய முடியும்.
உன்னிலிருந்து நான் நிறைய கற்றுக்
கொண்டிருக்கிறேன்
என்று வெளிப்படையாக அறிவிப்பு செய்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும் தானே.ஒரு வேளை அவ்விதம் கற்றுக் கொள்ளாமல் இருந்திருந்தால் என்ன நேரக்கூடும் என்பதையும் எழுதுகிறார்.
ஒரு வேளை நீ
இல்லாமல் போயிருந்தால்
நான் நிறைய இழந்திருப்பேன்
இழப்பைத் தவிர்க்க, இழப்பு ஏற்படாமல் இருப்பதற்கான பலவற்றைக் கற்றுக்கொள்கிறார்.சரி. கற்றுக் கொள்வதென்ன, கற்றுக்கொடுத்ததால் கற்றுக் கொண்டதாவெனில்,இல்லை. பிறகெப்படி?
உனக்கு ஈடுகொடுக்க எடுக்கும்
பிரயத்தனங்களே
கற்றுக் கொடுக்கின்றன ஏராளம்
ஈடு கொடுப்பதற்காக எடுக்கின்ற பிரயத்தனங்கள் கற்றுக் கொடுக்கின்றனவாம்.பிரயத்தனங்கள் என்பவை தன்னின் சுய பரிசோதனையாகக் கூட இருக்கக்கூடும்.சுய பரிசோதனை என்னும் போதில் தனக்கும் உடனிருக்கும் சூழலுக்குமான உறவுகுறித்த நெருக்கம் அல்லது இடைவெளி நோக்கத்தக்கதாகிறது.
எனைக்குறித்து எந்தக் கவலையுமற்று
வந்து கொண்டிருக்கின்றன நெருக்கடிகள்
எத்தனை பெரிய சிக்கல்.அதுமட்டுமன்று.வருகிற நெருக்கடிகள் மட்டுமல்ல.
சுற்றியிருப்பவைகள் கூட
எனைக்குறித்துக் கவலைபடுவதேயில்லை
என்னும் வரிகள் வாசிக்கிற போது மிகுந்த வலியை ஏற்படுத்தக் கூடியவாய் இருக்கின்றன.
இந்தவரிகளில் உள்ள உணர்வின் ஆழத்தை சொற்களின் வாயிலாகப் புரிந்து கொள்வது சிரமம் தானாயினும் அவ்வுணர்வின் கூர்மழுங்காது வாசகனிடம் கடத்தும் கச்சிதமான சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறார்,
செந்தில்பாலா.
நுட்பமாக அவதானிப்போம்.
‘சுற்றியிருப்பவை’, என்பது யாது? யாது என்பது மட்டுமா யார் என்பதும் உண்டா? யார் என்பதன் கோபம் தான் அஃறிணையாக அடையாளம் கொள்கிறதா? ’கூட’, என்னும் என்னும் சொல் சுட்டுவது என்ன? சுற்றியிருப்பவை மீது கொண்டிருந்த நம்பிக்கைக் குலைவுதானே.’படுவதே’,என்னும் சொல் தரும் அழுத்தம் தீர்மானமான எதிர்மறைகுறியீடாக மாறிவிடுகிறது எனலாம்.
எந்த மரத்தினடியில்
இளைப்பாறினேனோ
அந்த மரம்தான்
என்மேல் சரிந்து
என்னும்போது உடனிருப்பவை மீதான நம்பிக்கைத் தகர்வை புரிந்துகொள்ள முடியும். அதேசமயம்,கடைசியில்
சரிந்து,
தன் மரணத்தை அறைந்தது
என்பதில் இருக்கும் சிறிய ஆசுவாசம் கவனிக்கத்தக்கது.இடருக்கும் இடரால் ஏற்படும் இழப்புக்கும் இடையில் உள்ள தப்பித்தல் உணர்வு அது. அது தான் உண்மையிலேயே அச்சமூட்டக்கூடியதாய் இருக்கிறது என்பேன். ஏனெனில், காரியங்களின் தன்மைகளை விளக்கிவிட்டு சட்டென முடிவைத் தப்பித்தலின் பொருட்டு அமைத்துக்கொள்வது ,இடரை எதிர் கொள்வதில் இருக்கும் சிக்கல் தானே தவிர இடரற்ற நிலையை உருவாக்க வல்லது அல்ல என்பதை உணர்ந்துகொள்ள முடியும். இதுவே எதார்த்தம். மாய சொல்வலையால், தப்பிப்பதைவிட சிக்கிக்கொள்ளும் சாத்தியமே அதிகம் அல்லவா?
சரி. இவர் அப்படி என்ன கற்றுக் கொள்கிறார்?
காலிப் பாத்திரத்திலிருந்து வயிறு நிரப்பவும்
வெறும் குடத்திலிருந்து மொண்டு நீர்குடிக்கவும் கூட
கற்றிருக்கிறேன்
எல்லா விதமான எதிர்மறைகளையும் கற்றிருக்கிறார்.’ கூட’,என்பது மேலும் பலவற்றைக் கற்றிருக்கிறார் என்பதை உணர்த்திச் செல்கிறது.
மாற்றத்தைச் சந்திக்கிற முதல் தருணம் மகத்தானது. ஆனால், பெரும்பாலும் வலி மிகுந்தது. யாரேனும் ஒருவர் கல்லிலும் முள்ளிலும் கால் வைத்து நடந்தால் தான் ஒற்றையடிப் பாதையேனும் உலகுக்கு மிஞ்சும்.
எல்லா மாற்றங்களும்
தொடக்கத்தில் வலியைத்தான்
கொடுக்கின்றன
தொடக்கத்தில் வலியைக் கொடுக்கும் மாற்றங்கள் தான் பின்னர் வசதியான வாழ்வைக் கொடுக்கின்றன. ஆனால், மாற்றத்தின் முதல் கணம் வலிமிக்கது.எனினும், மாற்றம் ஒன்று தானே உலகில் மாறாத ஒன்றென்னும் சிறப்புடைத்தாகிறது. மிகச்சாதாரணமாக இன்று கருதப்படும் பல விஷயங்கள் ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பைச் சந்தித்தவை தானே.
ஆனால், அம்மாற்றத்தை அல்லது மாற்றத்துக்கு காரணமானவர்கள் குறித்த புரிதல் எப்போதும் காலதாமதமாகவே நிகழ்கிறது.
புரிபடும் தருணங்கள் வருமுன்பு
மாண்டுபோகவும் கூடும்
என்கிறார்.அப்படி மாண்டுபோனதற்குப் பின்னும் தருணங்கள் வருமெனில், அத்தருணம் மாண்டவர்க்கா அல்லது மற்றவர்க்கா என்பது நம் முன் நிற்கும் கேள்வியாகிறது.
எந்த ஒரு மரணத்தின் துக்கமும் அம்மரணம் ஏற்படுத்தும் இழப்பின் மூலமாகவே தீர்மானிக்கப் படுகின்றன.மரணமடைந்த பிறகும் வாய்க்கும் தருணங்கள் என்றால் மரணத்திற்குப் பின்னான உலகத்தோடுள்ள தொடர்பு என்ன?
இறந்தவர்களை அத்தனை எளிதாய் நினைவுகளிலிருந்து விடுவித்துவிட முடிவதில்லை. அவர்களின் தொலைபேசி எண்களை சட்டென அழித்துவிட முடிவதில்லை, ஒருபோதும் அவர்கள் நம்மையோ அல்லது நாம் அவர்களையோ அழைத்துப் பேச முடியாதெனத் தெரிந்தபோதிலும். அது உண்மையறிந்தாலும் அதைக் கடந்து இயங்கும் மனநிலை.
மரணம் எப்போதுமே துக்கத்தையே தருகிறது.
மரணச்செய்தியை விடவும்
மகிழ்ச்சியான செய்தி
வேறென்ன இருக்க முடியும்
என்பதும் ,அத்தோடு நில்லாமல்
மரணங்கள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை
என்பது வருத்தம் தான்
என்கிற வரிகளுமெழுதப்படுவதற்கான கவிமனத்தின் வெறுமையும் எதிர்மனோபாவமும் அதிர்ச்சியளிக்கின்றன.
அப்படி அதிர்ச்சியடையும் வாசகனுக்குச் சொல்கிற காரணம் என்ன தெரியுமா?
எல்லா இழப்புகளும் ஏதோ ஒன்றை
கொண்டுவந்து சேர்க்கின்றன
இழப்பு எதனைச் சேர்க்கும்? துக்கத்தைச் சேர்க்கும். வெறுமையைச் சேர்க்கும்.அப்படி ஏதேனும் சேர்த்தாலும், கண்னை விற்றுச் சித்திரம் வாங்குவதால் என்ன லாபம் கிடைக்கப்போகிறது.
கதவு என்பது திறப்புக்கும் அடைப்புக்குமான இரட்டைக்குறியீடு.
கதவு வழியாக வெளியேறுவதும்
கதவிற்குள் அடைவதுமாக
கதவு தரும் நம்பிக்கையில் பயணங்கள்
என்கிறார்.
இன்றைய எனக்கான பகல் நேரம்
ஜன்னலில் எதிர்பார்த்தபடி காத்திருப்பது கண்டு
தாழ்ப்பாலுக்கு ஓய்வளித்து கதவுதிறக்க
வெப்பத்தின் வலி பொறுக்காது
என்னும் வரிகள் எதன் பொருட்டாக எழுதப்படும் சாத்தியத்தைப் பெற்றிருக்கின்றனவெனில், இவரின் பிறிதொரு கவிதை பதிலாகிறது.
ஜன்னல் பக்கம் திரும்பும்போதெல்லாம்
தலையாட்டிக் குதூகலித்துக் கொண்டிருக்கின்றன
மரங்கள்
அடுத்தவர்கள் பேசுவதை கேட்பது அநாகரிகமென
மூடிவிட்டேன்
நான் பேசுவதையும் கேட்ககூடும்
ஜன்னலைத்திறப்பதும், தலையாட்டும் மரங்களை ரசிப்பதும் தலையாட்டும் மரங்கள் வீசும் காற்றைச் சுவாசிப்பதும் தானே இயல்பாக இருக்க முடியும்.இவருக்கு மட்டும் அதற்கு மாறாக மூடத்தோன்றுவதன் காரணம் புலப்படுகிறதல்லவா?
இத்தனை எதிர்மறைகளுக்கும் மத்தியில்
ஒரு விதையைச் செடியாக்கிப் பார்க்கிற நேர்மறை உணர்வினை ஒரு இடத்தில் தரிசிக்க முடிகிறது.
தொகுப்பில் நல்ல உவமைகள் சில காணக்கிடைக்கின்றன.
குயவனின் கைவிரல்களின் நுட்ப நெளிவுகளை
கூர்ந்து நோக்கல் போல
கற்கிறேன் சாவு வீடுகளின் சடங்குகளை
அற்புதமான இவ்வுவமை கூட சாவு வீட்டின் சடங்கினைக் கற்கத்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
வீடு குறித்துப் பல கவிதைகள் உள்ளன. நல்ல கவிதைகள்;ஆனால் அவை காட்டும் வீடுகள் அச்சம் ஊட்டக்குடியவை. பாம்புகள் உலவுவவை.வீடுகள் குறித்த இவரின் சித்திரம் நெருக்கடிகள் நிறைந்தவை.
ஒட்டுமொத்தக் கவிதைகளை வாசிக்கிற போது பாடுபொருள், சித்திரங்கள், உணர்வு நிலை யாவும் ஒரு வித அழுத்தத்தை வாசகனுக்கு உருவாக்ககூடியவை.
ஒரு கவிதையைக் குறிப்பிட்டாக வேண்டும்.
பென்சிலின் கருமை முழுவதுமே
எழுதப்படுவதற்காகத்தான்
அடுத்தடுத்த முறைகளிலும்
மையத்தைக் கூர் தீட்ட
சீவித்தள்ளப் பட்டுக்கொண்டே இருக்கின்றன
விளிம்புகள்
மையத்தை மட்டுமே கணக்கில் கொள்ளும் சமூகத்தில், உலகத்தில் அதன் பொருட்டு விளிம்புகள் அழிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன என்பதை இத்தனை அழகான காட்சிப்படிமமாகக் காட்டும் செந்தில் பாலா அழுத்தமிக்க மன நிலையிலிருந்து வெளிப்பட்டு இதுபோன்ற சமூக வெளியில் பயணிக்கிற கவிதைகளை வழங்கத் தொடங்க வேண்டும். கவிதைக்கு மட்டுமன்றி அவருக்கும் அது நல்லது. நிச்சயம் செய்ய வேண்டும்;செய்வார்;வாழ்த்துகள்.
———————————
- தேடல்
- தொடுவானம் 133. படப்பிடிப்பில் பரவசம்
- பி.கே என்கிற பேச்சுக்காரன் – தொ.மு.சி. ரகுநாதன்- மறுவாசிப்பு – பாரதிகிருஷ்ணகுமார் ஆற்றிய உரை
- ஹாங்காங் தமிழ் மலர்
- நீங்கள் கொல்லையிலே போக.
- ஏறி இறங்கிய காலம்
- 15ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு வருகின்ற செப்டம்பா் 9, 10, 11 ஆகிய தேதிகளில்
- திருப்பூரைப் பற்றி இயக்குனர் ஆர் பி அமுதன் எடுத்துள்ள “ டாலர் சிட்டி “ ஆவணப் படம், சுப்ரபாரதிமணீயனின் புதிய நாவல் ” நைரா “ வெளியீட்டு விழா
- ரௌத்திரம் பழகுவேன்…..
- இத்தாலியில் திடீரென நேர்ந்த பெரிய பூகம்பம்
- கவிநுகர் பொழுது-8 செந்தில் பாலா
- புத்தகங்கள் புத்தகங்கள் !! ( 5 ) வா. மு . கோமுவின் ” அழுவாச்சி வருதுங் சாமி “
- கம்பன் திருவிழா செப்டம்பர் 3 ஆம் தேதி
- காப்பியக் காட்சிகள் 17. சிந்தாமணியில் செல்வம் தீவினை குறித்த நம்பிக்கைகள்
- களந்தை பீர்முகம்மதுவின் சிறுகதை ‘நற்றாள்’
- அறிவோம் ஐங்குறு நூறு