ஸிந்துஜா
“அழுவாச்சி வருதுங் சாமி ” சிறுகதைத் தொகுப்பு வா. மு. கோமுவின் ஆரம்ப காலக் கதைகளை உள்ளடக்கியிருக்கிறது. முதல் பதிப்பு ஜனவரி 2007ல் வந்தது. இப்போது மணல்வீடு இரண்டாம் பதிப்பாக ஜூலை 2016ல் கொண்டு வந்திருக்கிறார்கள் . இக் கதைகளில் வளைய வரும் மனிதர்கள் சாதாரண வாழ்க்கையில் நாம் தினமும் காணும் பூச்சிகள் , பொட்டுகள்தான். அவர்கள் லட்சிய தாகம் எடுத்து அலைகிறவர்களாகவோ தங்கள் தலைக்குப் பின் சுழலும் ஒளிவட்டங்களை அணிந்தவர்களாகவோ நடமாடவில்லை . சங்கடப்படாமல் இருக்கக் கற்றுக் கொள்வது எப்படி என்று ஒரு கதையில் வரும் கதை சொல்லிக்குப் புரிபடமாட்டேன் என்கிறது . சங்கடம் படாமல் இருப்பது எப்படி என்று யாரேனும் புத்தகம் வெளியிட்டு இருக்கிறார்களா என்று புத்தகக் கடைகளில் கேட்பதற்கும் அவனுக்கு சங்கடமாக இருக்கிறது ! இதே மாதிரி ” அப்பொருள் மெய்ப்பொருள் ” கதையில் வரும் பழனிச்சாமிக்கு ‘ நல்ல பையன் , நல்ல குணம் இப்படிப் பெயரை எடுப்பது எப்படி’ என்று தெரியவில்லை . அவன் எதைச் செய்தாலும் குற்றமாக முடிந்து அப்பாவிடம் அடி வாங்க வேண்டியிருக்கிறது . இன்னொரு கதையில் வீட்டுக்குத் தெரியாமல் ஓடிப் போய்க் கல்யாணம் செய்யக் கோவிலுக்குப் போகும் வாலிபன் குடித்திருக்கிறான் வழியில் காதலியை முத்தமிட்டு விடுகிறான். அவள் உவ்வே என்று காறித் துப்புகிறாள். என் முத்தம் பிடிக்கலையாடி ? என்று அவன் கோபப்பட அவள் சீ வாயெல்லாம் நாத்தம் என்கிறாள்.அவன் நீ சொல்றதிலும் நியாயம் இருக்கு என்று சமாதானம் அடைந்து விடுகிறான் ! இத்தகைய சாதாரணர்களை சாதாரணர்களாக எழுத்தில் காண ஆச்சரியமாக இருக்கிறது. ஆம் , இயற்கையாக இருப்பதைக் காண்பதே ஆச்சரியமாகிவிட்ட காலத்தில் இருக்கிறோம் !
கோமுவின் கதைகளில் உருவ அமைதி நன்றாகப்
பொருந்தியிருக்கிறது . சிறுகதை என்று இப்போது நெடுங்கதை எழுதி நிறுத்துபவர்களைப் பார்க்கும் போது இந்த நேர்த்தி இன்னும் உசத்தியாகப் படுகிறது . முடிந்தவரை கதை , எடுத்துக் கொண்ட கருப் பொருளை நோக்கி நிதானமாகவும் ஆழமாகவும் செல்கிறது . இப்போதெல்லாம் சொற்செட்டு என்பது கெட்டவார்த்தையாக ஆகி விட்டது. “கெட்ட விஷயங்களை ” எழுதும் கோமுவிற்கு இந்தக் கெட்டவார்த்தையும் பிடித்துப் போயிருக்கிறதை அவரது சிறுகதைகளில் காணும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது .
உதட்டில் புன்னகையை வரவழைக்கும் பல இடங்களை இப் புத்தகத்தில் காணலாம்.
” சுகன் 200 விழாவிற்குச் சென்றோம். அந்த விழாவில் நான் மைக் வளையும் வரை பேசுவேன் என்று நினைத்திருந்தார் போல .நான்கைந்து வார்த்தைகளுடன் இறங்கி விட்டேன் ” ( முன்னுரை )
” சாந்திக்கு என் முகத்தில் திருநீறு இடும் இடத்தில் இளிச்சவாயன் என்றொரு ஸ்டிக்கர் ஒட்டியிருப்பது மாதிரி தெரிந்திருக்கலாம். ”
( நீ சொல்றதுலையும் நாயம் இருக்கு )
” மனைவி அவளுக்குத் தேவையான கோலப் புத்தகம் , சமையல் குறிப்பு, மனையடி சாத்திரம் என வாங்கிக் கொண்டாள் . ஜெகதீஸ்வரி என தன் பெயரையே கோணல் மாணலாக எழுதும் இவள் கோலப் புத்தகம் வாங்கினால் மட்டுமே நியாயமிருப்பதாக எண்ணினேன் .மனையடி சாஸ்திரம் இவளுக்கு எதுக்கு ? ஊட்டை இடிச்சு கட்டப் போறாளா ? உப்புமா என்றால் உப்பைக் கொட்டி விட்டாயே என்றால் அடுத்த முறை உப்பே இல்லாமல் உப்புமா செய்பவள் என்ன அர்த்தத்தில் சமையல் குறிப்பு வாங்குகிறாள் ? ”
(சேகுவேரா வந்திருந்தார் )
“நண்பர் ஈங்கூர் ரகு நேர்பேச்சில் என்னிடம் கேட்டார் எஸ். ராமகிருஷ்ணன் கோணங்கி , எழுத்துகள்படித்தும் புரியவில்லையே என்று உங்களுக்கு புரியாது என்றேன். ஏன் புரியாது ? என்றார்.. ஏன்னா அதெல்லாம் ஹிந்தில எழுதியிருக்கு என்றேன். அவரே மீண்டும் ரமேஷ் பிரேம் கட்டுரைகள் புரிய மாட்டேங்குது . அவைகளும் ஹிந்திதானா ? என்றார் .இல்லை என்று மறுத்தேன். அவைகள் உருதுவில் எழுதப் பட்டிருக்கின்றன என்றதும் புரிந்த மாதிரி தலையை ஆட்டிக் கொண்டே கடைசியாக ஒரே ஒரு கேள்வி என்றார் .கேளுங்க ரகு என்றேன். பின் நவீனத்துவம்னா என்ன ? என்றார் . இதே கேள்வியைத்தான் இப்ப பூராம் கேட்டுனே இருக்காங்க …பின் நவீனத்துவம்னா பின்னால செய்யுறது என்றேன்.இப்படி ஒரு விளக்கம் எளிமையா மண்டைல ஏறுற மாதிரி நீங்கதான் தோழர் சொல்லியிருக்கீங்க என்றார் . ” ( தோழர் பெரியசுவாமி : சில டைரிக் குறிப்புகள் )
தலித் பற்றிய சிறுகதைகளை வா. மு .கோமு எழுதியிருக்கிறார். இவைகளில் பிரசார நெடி அடிக்கக் காணோம் .பொங்கியெழும்
தலித் அரசியல் இல்லை. ஆனால் தலித்துகளின் உணர்வுகளை பற்றிய கூரான பார்வை கத்தி போல் மின்னுகிறது . “ஆங் , மொதல்ல சரக்கு ஒரு வா ஊத்திக்கிட்டு பேசலாமுங்க . டீக்கடையின்னா எனக்கு தனி கெலாசு வெச்சிருப்பாங்க . இங்க அதெல்லாம் கெடையாதுங்க .யாரு வேணா வாய ஒட்டி ஒட்டி குடிச்சிக்கலாங்க ” ( அழுவாச்சி வருதுங்
சாமி )
இந்தப் பார்வையே இன்னும் சற்று விரிவாகி இன்னொரு சிறுகதையின் கருப் பொருளில் வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது .
” நீங்க பண்றது அட்டூழியமுங்க சாமி ..” கதையில் கீழ் சாதியைச் சேர்ந்த நஞ்சனின் மகன் ரமேஷ் மேல்சாதியைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து அவளுடன் ஊரை விட்டே ஓடி விடுகிறான் . மேல்சாதிக் காரர்கள் கம்பும், கத்தியுமாய் நஞ்சன் வீட்டுக்கு வந்து அடித்து மிரட்டும் போதுதான் நஞ்சனுக்கே தனது மகனின் செயல் தெரிய வருகிறது.
கணவனும் மனைவியும் பெற்ற பிள்ளைக்கு ஏதாவது ஆகி விடுமோ என்றும் கெட்ட செய்தி வரக் கூடாது என்றும் அஞ்சி வாழ்கிறார்கள். ஏழாம் நாள் இரவில் அவர்களைத் தேடித் தனியே வரும் ரமேஷிடம் அவனது அம்மா அழுதவாறு கேட்கிறாள் ” என்னடா ஆச்சு , அந்தப் புள்ளே எங்கே ? ” என்று .” அது ஆவாது யம்மோவ் . அவளுக்கு சோறாக்கத் தெரியில . ஒரு மண்ணும் தெரியல ஆட்டுக் கறி , கோழிக் கறி , மாட்டுக் கறி ஒரு கறியும் திங்க மாட்டாளாம் . நானும் திங்கப்படாதாம் .அவ சொல்றப்பத்தான் தொடோனுமாம் . ஆவுறதில்லேன்னு போட்டு வந்துட்டேன் ” என்கிறான் ரமேஷ் . இதுவரை நாம் பார்த்திராத ஒரு புதிய கோணத்தைக் காண்பிக்கிறார் கதாசிரியர் .
” துரதிர்ஷ்டக்காரன் ” கதையின் முடிவு அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக எழுதப் பட்டிருப்பது போலத் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.
இது தொகுதியில் காணப் படும் ” அன்பிற்கினியவள் ” கதை பல ஊகங்களை நமக்குள் எழுப்புகிறது. தலைப்பும் நடையும்
ஒரு பிரபலமான சத்தமற்றவரின் ஜாடையைக் காண்பிப்பதாக எனக்குத் தோன்றுகிறது. இதை உணர்ந்து கோமு எழுதியிருப்பாராகில், அவரது அமைதியையும் , நாசூக்கையும் நான் மனமாரப் பாராட்டுகிறேன். அப்படி இல்லை என்றாலும் குந்தகம் ஒன்றும் இல்லை. கதை சிறப்பாக எழுதப்பட்டுள்ள தன்மைக்கே அவருக்கு வாழ்த்துக்கள் உண்டு.
” சேகுவாரா வந்திருந்தார் ” கதையில் பல எழுத்தாளத் தலைகள் உருளுகின்றன. “குண்டு குண்டான புத்தகங்கள் எல்லாம் ஜெயராமன் எழுதியது “. கதை சொல்லி ஜெயராமனைத் ” தலைவர் ” என்கிறார் ! கடைக்காரன் கேட்கிறான் “கேரளா பக்கமிருந்து சுட்டுச் சுட்டு எழுதுற அந்தாளு உனக்கு தலைவனா ? நல்ல வேளை . கேரளா எழுத்தாளனுவ தப்பிச்சானுவ…இனி தமிழ்நாட்டுல இருந்த யாரும் கேரளாவுல சுட மாட்டாங்க…” இதைக் கேட்டதும் கதை சொல்லி கொதிக்கிறான் ” என் தலைவனை ஆங்கிலத்திலிருந்து திருடுபவனாய் சொல்லியிருந்தால் கூட பெருமையாக இருந்திருக்கும் ! என் தலைவனின் எழுத்தின் ரகசியம் புரியாதவனடா நீ…உனுக்கு ஹெமிங்வே தெரியுமா ? காளைச் சண்டை தெரியுமா ? அலன் போ தெரியுமா ? தலித்தியம்
தெரியுமா ? பெண்ணியம் தெரியுமா ? ” … மற்றொரு இடத்தில் கதைசொல்லியின் தந்தை பிள்ளையைத் திட்டுகிறார் : நீ என்ன எழுதிட்டு இருக்க?அடுத்தவ கூட போற கதே .எவ்ளோ எவங்கூடவோ ஓடன கதே…இதுகள எழுதிட்டு புரட்சி பண்ணப்
பாக்கியா ? நீ எழுதற எல்லாம் ஜி. நாகராஜன் அன்னிக்கே எழுதிட்டு போயிட்டான்டா ..”
இது சிறிய சிறுகதைத் தொகுதி என்றாலும், வா.மு . கோமுவின் ஆரம்ப கால எழுத்துக்களில் காணப் பட்டிருக்கும் உருவ அமைதி, நவீன நடை, இறுக்கமான உள்ளடக்கம் ஆகியவற்றை நமக்கு அறிமுகப் படுத்துகிறது என்ற அளவில் முக்கியத்துவம் பெறுகிறது.
குழு அரசியல், தலைவர் முகம் பார்த்து சீடப் பிள்ளைகள் எழுப்பும் கூக்குரல்கள் , நட்புப் பரிவாரங்களின் அசங்கியமான
தூக்கிப் பிடித்தல்கள் ஆகிய எதுவுமற்று தனது சொந்தக் கால்களிலேயே நிற்கின்றன வா. மு. கோமுவின் எழுத்துக்கள் .
—————————————————————————————- .
“அழுவாச்சி வருதுங் சாமி ”
ஆசிரியர் ” : வா. மு. கோமு
வெளியீடு : மணல் வீடு
ஏர்வாடி , குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்
சேலம் மாவட்டம் – 636453
விலை : ரூ . 110/-
- தேடல்
- தொடுவானம் 133. படப்பிடிப்பில் பரவசம்
- பி.கே என்கிற பேச்சுக்காரன் – தொ.மு.சி. ரகுநாதன்- மறுவாசிப்பு – பாரதிகிருஷ்ணகுமார் ஆற்றிய உரை
- ஹாங்காங் தமிழ் மலர்
- நீங்கள் கொல்லையிலே போக.
- ஏறி இறங்கிய காலம்
- 15ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு வருகின்ற செப்டம்பா் 9, 10, 11 ஆகிய தேதிகளில்
- திருப்பூரைப் பற்றி இயக்குனர் ஆர் பி அமுதன் எடுத்துள்ள “ டாலர் சிட்டி “ ஆவணப் படம், சுப்ரபாரதிமணீயனின் புதிய நாவல் ” நைரா “ வெளியீட்டு விழா
- ரௌத்திரம் பழகுவேன்…..
- இத்தாலியில் திடீரென நேர்ந்த பெரிய பூகம்பம்
- கவிநுகர் பொழுது-8 செந்தில் பாலா
- புத்தகங்கள் புத்தகங்கள் !! ( 5 ) வா. மு . கோமுவின் ” அழுவாச்சி வருதுங் சாமி “
- கம்பன் திருவிழா செப்டம்பர் 3 ஆம் தேதி
- காப்பியக் காட்சிகள் 17. சிந்தாமணியில் செல்வம் தீவினை குறித்த நம்பிக்கைகள்
- களந்தை பீர்முகம்மதுவின் சிறுகதை ‘நற்றாள்’
- அறிவோம் ஐங்குறு நூறு