அறிவோம் ஐங்குறு நூறு

This entry is part 16 of 16 in the series 28 ஆகஸ்ட் 2016

1.

அந்தக்  காலத்துல ஆம்பளைங்களுக்கு ஒரு வழக்கம் உண்டுல்ல; அதுபோல அவன் பரத்தை ஊட்டுக்குப் போயிட்டு வந்தான்; வந்தவன் சும்மா இருக்கலாம அவ தோழிக்கிட்ட போயி “நான் அங்க இருந்தப்போ நீங்க என்னா நெனச்சிக்கிட்டிருந்தீங்க?”ன்னு கேக்கறான். அந்தத் தோழி பதில் சொல்றா;

”நாட்டை ஆளற ராஜா நல்லா இருக்கணும்; நெல்லு நல்லா வெளயணும்; பொன்னு நெறய கெடைக்கணும்; காஞ்சிப்பூவும், செனையாயிருக்கற சின்ன மீனும் இருக்கற ஊர்க்காரனான நீ நல்லா இருக்கணும்; அத்தோட ஒன் தோழனும் நல்லா இருக்கணும்” னுதான் நாங்க நெனச்சிக்கிட்டிருந்தோம்.

இதுலேந்து என்னா தெரியுது? வந்தவன தோழி நல்லா குத்திக் காட்டறா; ஒனக்கு வாசனையான காஞ்சிப் பூவும் ஒண்ணுதான்; சென மீனும் ஒண்ணுதான்; அதாவது பொண்டாட்டியும் ஒண்ணுதான்; பரத்தையும் ஒண்ணுதான்னு அரசல் புரசலா சொல்லிக் காட்டறா

இதோ ஓரம்போகியாரின் பாடல்; இது நூலின் முதல் பாடல்.

”வாழி ஆதன் வாழி அவினி

நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க

எனவேட் டோளே யாயே யாமே

நனைய காஞ்சிச் சினைய சிறுமீன்

யாணர் ஊரன் வாழ்க

பாணனும் வாழ்க என வேட்டோமே”

 

அறிவோம் ஐங்குறுநூறு—2

ரெண்டாவது பாட்டும் அதேபோலதாங்க; மொதல்ல ராஜாநல்லா இருக்கணும்னு சொல்றாங்க; இதுவும் தோழி பேசறாப்லதான்; அங்க போய்ட்டு வந்தவன்கிட்ட அவ சொல்றா, “நீ அங்க இருந்தப்போ வீட்டுக்குப் பணம் வரணும்ல; அதுக்காக வயல் நல்லா வெளயணும்; வந்த பொருளை வாங்கிட்டுப் போகறதுக்குப் பிச்சை கேக்கறவங்க வரணும்; இதையேதான் அவ நெனச்சிக்கிட்டிருந்தா”

ரெண்டுபேரும் சேர்ந்து என்னா நெனச்சோம் தெரியுமா? ’நீலநிறமான கருங்குவளையோடு நெய்தலும் இருக்கற குளம் உள்ள ஊரை உடைய நீ எல்லாப் பொறப்புலயும் சேர்ந்திருக்கணும்னு நெனச்சோம்”

இதுலயும் சிறப்பான கருங்குவளை குலப்பொண்ணையும், நெய்தல் பரத்தையையும் காட்டுதுங்க; அதோட நீ அங்க போறதால ஒன் அன்பு இவகிட்ட சுருங்குது; அது கூடாதுன்னு சொல்றாப்பலதான் எல்லாப் பொறப்புலயும் நீ இருக்கணும்னு நெனச்சோம்னும் சொல்றா.

ஓரம்போகியாரின் இரண்டாம் பாடல் இதோ:

”வாழி ஆதன் வாழி அவினி

விளைக வயலே வருக இரவலர்

எனவேட் டோளே யாயே யாமே

பல்லிதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்குத்

தண்டுறை ஊரன் கேண்மை

வழிவழிச் சிறக்க எனவேட் டோமே”

அறிவோம் ஐங்குறு நூறு—3

 

”வாழி ஆதன் வாழி அவினி

பால்பல ஊறுக பகடுபல சிறக்க

எனவேட் டோளே யாயே யாமே

வித்திய உழவர்  நெல்லொடு பெயரும்

பூக்கஞ லூரன் தன்மனை

வாழ்க்கை பொலிக எனவேட் டேமே”

 

இது மூணாவது பாட்டுங்க; மொத அடியில ஆதன்னு சொல்றது சேர மன்னனோட குடிப்பெயருங்க; அவினின்னு சொல்றது சேர மன்னனாம். இது எல்லாப்பாட்டுலயும் இருக்கும்; இதுல மொத மூணுஅடியெல்லாம் தலைவி நெனச்சுது. ஆனா சொல்றதெல்லாம் தோழிதான்; யாய்னா தலைவிங்க; “நீ அங்க போயி இருந்தபோது அவ ராஜாவெல்லாம் நல்லா இருக்கணும்; பசுவெல்லாம் நெறய பால் கறக்கணும்; எருமைமாடு எல்லாம் நெறய இருக்கணும்”னு நெனச்சா.

அடுத்த மூணுஅடி ரெண்டு பேரும் சேந்து நெனச்சத சொல்றா; அதாவது, “ஒன் ஊர்ல ஒழவங்க நெலத்துக்கு வெதைவெதக்கப் போவாங்க; அப்படிப் போறவங்க அங்க முன்னமே வெளஞ்சிருக்கற நெல்லை எடுத்துக்கிட்டு வருவாங்கன்னு நெனச்சிக்கிட்டு இருந்தோம்”

வீட்டுக்கு வர்றவங்களுக்குத் தர்றதுக்குப் பால் நெறய வேணும்; செல்வம் பெருக எருமை நெறய வேணும்; பகடுன்னா எருமன்னு கூட வச்சுக்கலாம்; வெதைக்கபோனவங்க வெளஞ்சத எடுத்துக்கிட்டு வருவாங்கன்னு சொல்றதுல என்னா மறஞ்சிருக்கு தெரியுமா? ”நீ வரப்போற பரத்தைக்கு வருவாயும் தேடற; இப்ப இருக்கறவளோட இன்பமாயும் இருக்கற” இதுதான் அவ நெனக்கறது.

அவன் செய்யறது குத்தந்தாம்; ஆனா இவ ஒழுக்கமா இருக்கல்ல; அதால குடும்பம் நல்லா இருக்கும்னு சொல்ற பாட்டு இது.

=====================================================================================

 

அறிவோம் ஐங்குறுநூறு—4

 

நாலாவது பாட்டுலயும் மொதல்ல “வாழி ஆதன் வாழி அவினிதான்”; நாடு நல்லா  இருக்கணும்னா ஆளறவங்க நல்லா இருக்கணும்ங்க; அதனாலதான் “எங்க தலைவி, “ எப்பவும் ஆதனும் அவினியும் நல்லா இருக்கணும்; அவங்களோட எதிரிங்க சாப்பாட்டுக்கே வழி இல்லாம புல்லத் தின்னணும்; மழை பொழியணும்; அதுக்காக பார்ப்பார் வேதம் ஓதணும்”னு நெனச்சிருந்தாங்க;

நீ அங்க இருக்கேன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும்; அப்ப நாங்க என்னா நெனச்சிருந்தோம் தெரியுமா? ஒன்னைப் பத்திப், ”பூத்துப் பயன்படாத கரும்பையும், காய்த்துப் பயன்படும் நெல்லையும் உடைய ஊரைச் சேர்ந்தவன் நீன்னு நெனச்சிருந்தோம்;” இப்படி சொல்றது வழியா அந்தத் தோழி பயன்படாத பூத்த கரும்பு போலப் பரத்தையர்னும், பயன்படும் நெல்லுபோல குலமகளிர்னும் குறிப்பா சொல்லிக் கட்டறா; மேலும் சொல்றா,” சில ஊர்ல எல்லாருக்கும் பொதுவான பொறம்போக்கு நெலம் இருக்கும்ல; அதுபோல ஒன் மார்பு எல்லா மகளிர்க்கும் பொதுவா இருக்கக் கூடாது”

”வாழி ஆதன் வாழி அவினி

பகைவர் புல்லார்க பார்ப்பார் ஓதுக

எனவேட் டோளே யாயே யாமே

பூத்த கரும்பிற் காய்த்த நெல்லிற்

கழனி ஊரன் மார்பு

பழன மாகற்க எனவேட் டேமே”

=====================================================================================

அறிவோம் ஐங்குறுநூறு—-5

 

அஞ்சாவது பாட்டுலயும் தோழி சொல்றா, ”நீ அங்க அவங்க வீட்ல இருக்கச்சே என்தலைவி குடும்பம் நல்லா இருக்கணும்னு நெனச்சா; அதுக்காக பசி இல்லாம இருக்கணும்; நோய் இல்லாம இருக்கணும்னு நெனச்சா; பசியும், நோயும் இல்லாம இருந்தாத்தானே குடும்பம் நல்லா இருக்கும்”

நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து, ”ஒன் ஊரைத்தான் நெனச்சோம்; ஒன் ஊர்ல தண்ணீயில இருக்கற நல்ல முதிர்ந்த மீனையெல்லாம் அங்க இருக்கற முதலை தின்னுடும்; அப்படிப்பட்ட ஊரைச் சேர்ந்த ஒன்னோட தேர் எங்க ஊட்டு முன்னாலதான் நிக்கணும்; வேற பொம்பளங்க ஊட்ட்டு முன்னால நிக்கக் கூடாதுன்னு நெனச்சோம்”

முதிர்ந்த மீனத் தின்ற முதலன்னு தோழி சொல்றது அவனைத்தான். இவளப் பாக்காம அங்க போறயேன்னு மறைச்சு சொல்றா.

”வாழி ஆதன் வாழி அவினி

பசியில் லாகுக பிணிசேண் நீங்குக

எனவேட் டோளே யாயே யாமே

முதலைப் போத்து முழுமீன் ஆரும்

தண்டுறை ஊரன் தேரெம்

முன்கடை நிற்க எனவேட் டேமே”

=====================================================================================

அறிவோம் ஐங்குறு நூறு—6

 

ஆறாவது பாட்லயும் தோழி பேசறா, “ நீ அங்க அவ ஊட்ல இருக்கச்ச என் தலைவி என்ன நெனச்சா தெரியுமா? நாட்டை ஆளறவங்க நல்லா இருக்கணும்; அவங்களோட பகைவரெல்லாம் அழியணும்னு நெனச்சா; ஏன்தெரியுமா?

பகைவருங்க இருந்து போர் வந்தா நீ சண்டைக்குப் போய்விடுவேல்ல; அதாலதான் பகை ஒழியணும்னு நெனச்சா; சரி, போனாலும் நீ திரும்பி வந்து பல்லாண்டு வாழணும்னு நெனச்சா;

நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து என்னா நெனச்சோம் தெரியுமா? ஊர்ல எல்லாருக்கும் பழக்கம் தெரிஞ்சு போச்சு; அதால தாமரைப் பூ இருக்கற குளங்கள் உள்ள ஊர்க்காரனான நீ சீக்கிரம் வந்து இவள பொண்ணு கேக்கணும்; இவங்க ரெண்டு பேரும் மொதல்லயே ஒருத்தரை ஒருத்தரு நெனச்சு நல்லா பழகிட்டாங்க; அதால இவங்க அப்பா தவறாம இவள அவனுக்கே கொடுக்கணும்”னு நெனச்சோம்”. இப்ப பாட்டைப் பாப்போம்.

”வாழி ஆதன் வாழி அவினி

வேந்துபகை தணிக ஆண்டுபல நந்துக

எனவேட் டோளே யாயே யாமே

மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத்

தண்டுரை ஊரன் வரைக

எந்தையும் கொடுக்க எனவேட் டேமே”

===========================================================================

 

அறிவோம் ஐங்குறுநூறு—7

 

”வாழி ஆதன் வாழி அவினி

அறநனி சிறக்க அல்லது கெடுக

எனவேட் டோளெ யாயே யாமே

உளைப்பூ மருதத் துக்கிளை குருகிருக்கும்

தண்டுறை ஊரன் தன்னூர்க்

கொண்டனன் செல்க எனவேட் டேமே”

இது ஏழாவது பாட்டுங்க; தலைவன் அவ ஊட்ல போயிருக்கச்ச நீங்க எல்லாரும் என்ன நெனச்சீங்கன்னு கேக்கறதுக்குப் பதில்தான் இதுவும்; தோழி சொல்றா, “ஒன்னை மொதமொத பாத்தபோதே என் தலைவி ஒன்ன மணந்துவிட்டதாய் நெனச்சா; ஊட்ல அறம் நல்லா நடக்கணும். அதால பாவம் கெடணும்” னுநெனச்சா. ஏன்னா அவ இல்லறமே பெரிசுன்னு நெனக்கறவ;.

நாங்க எல்லாரும் என்ன நெனச்சோம் தெரியுமா? உளைப்பூக்களெல்லாம் இருக்கற மருதமரத்துல குருகு வந்து சொந்தங்களோட தங்கியிருக்குமாம். அப்படிப்பட்ட தண்ணித்துறை இருக்கற ஊர்க்காரனான நீ சீக்கிரம் இவளைக் கொண்டு போவணும்னு நெனச்சோம்”

இந்தப்பாட்டுல வர்ற உளைப்பூன்றதுக்கு உரை எழுதறங்க “மேலே துய்யினிடைய பூ”ன்னுன் எழுதிட்டுப் போயிட்டாங்க; துய்னா என்னான்னு அகராதியில பாத்தேங்க. அதாவது ’நூற்கும் பஞ்சின் தொடர் நுனி’ ன்னு போட்டிருக்குதுங்க. ஒண்ணும் இல்லீங்க; ரொம்ப மெலீசா இருக்கற மகரந்தத்தாளுதாங்க அது. மருதமரம் குருகு தங்கறதுக்கு ஆதாரம். அதேபோல இவள் உயிர் வாழறதுக்கு நீதான் ஆதாரம்னு மறைவா தோழி சொல்றா.

 

அறிவோம் ஐங்குறு நூறு—8

 

இந்தப்பாட்டும் தலைவன்கிட்ட தோழி சொல்றதுதான். ”நான் அங்க போயிருந்தபோது நீங்க என்ன நெனச்சீங்க” ன்னு அவன் கேட்டதுக்கு பதிலா தோழி பேசறா; “என் தலைவி வீட்டோட ஒழுக்கமா இருக்கறவ; குடும்பம் நல்லா நடக்கணும்; அதுக்கு நாட்டை ஆளறவங்க நல்லா இருக்கணும்; நாட்ல களவு போன்ர குற்றங்கள் இல்லாம இருக்கணும்”னுதான் அவ எப்பவும் நெனச்சா”

நாங்க என்ன நெனச்சோம் தெரியுமா? ”ஒன் ஊர்ல சோலையில இளந்தளிரெல்லாம் இருக்கற மாமரத்துல மயில் வந்து இருக்கும்; அப்படிப்பட்ட ஊரைச் சேர்ந்த நீ இவள அன்னிக்கு வந்து சந்திச்சபோது சொன்னியே அந்த உறுதி வார்த்தைய மறந்து பொகாம இருக்கணும்”

ஏன் அப்படி சொல்றா? அவளுக்குச் சந்தேகம் இத்தினி நாளா காணலியே மறந்துட்டானான்னு .

”வாழி ஆதன் வாழி அவினி

அரசுமுறை செய்க களவில் லாகுக

எனவேட் டோளே யாயே யாமே

அலங்குசினை மாஅத் தணிமயி லிருக்கும்

பூக்கஞ லூரன் சூளிவண்

வாய்ப்ப தாக எனவேட் டேமே”

 

ஐங்குறு நூறு—9

 

”வாழி ஆதன் வாழி அவினி

நன்று பெரிது சிறக்க தீதில் லாகுக

எனவேட் டோளே யாயெ யாமெ

கயலார் நாரை போர்விற் சேக்கும்

தண்டுறை ஊரன் கேண்மை

அம்பலா கற்க எனவேட் டோமே”

இந்த 9-ஆம் பாட்டு அருமையான பாட்டுங்க;

தோழி சொல்றா, “நாரை ஒண்ணு நல்லா மீனையெல்லாம் தின்னுது; அப்புறம் போயி வைக்கப்போருல தங்குது. அப்படிப்பட்ட ஊரைச் சேர்ந்தவன்தான நீ; உன்னோட கொண்ட தொடர்பு நீ இன்னும் வராம இருந்தா கொஞ்சம் கொஞ்சமா வெளியில வந்துடும். எனவே நீ அப்படியெல்லாம் செய்யக்கூடாது”ன்னு நாங்க ரெண்டு பேரும் நெனச்சோம்.

ஆனா இவ என்னா நெனச்சா தெரியுமா? உன்னைப் பாத்தபோதே ஒன்னோட கல்யாணம் ஆனதுன்னு நெனச்சா; அதாலே குடும்பத்துல நல்லது நடக்கட்டும்; கெடுதல் வராம இருக்கட்டும்னு நெனச்சா”

ஒங்க ஊர் நாரையைப்போல தங்கிடாதேன்றது மறைபொருளாம்; இந்த நாரை வைக்கபோர்ல தங்குறது, “கயலார் நாரை போர்விற் சேர்க்கும்”னு புறநானூறுலயும் [24] வருதுங்க; அதே மாதிரி புறநானூறுல ‘பொய்கை நாரை போர்விற் சேர்க்கும் நெய்தலங் கழனி”ன்னு இன்னொரு பாட்டுலயும் [209] வருதுங்க.

 

 

 

ஐங்குறு நூறு—10

 

இதுவும் தோழி சொல்றதுதான். போனபாட்டுல சொன்னதுதான்; “இவ ஒன்னைப்பாத்த அன்னிக்கே கல்யாணம் நடந்துட்டுதுன்னு நெனச்சுட்டா; குடும்பம் நல்லா நடக்க நாட்டை ஆளற ஆதனும் அவினியும் நல்லா இருக்கணும்; மழை நல்லா தப்பாம பெஞ்சாத்தான எல்லா வளமும் கிடைக்கும்; அதால மழை பெய்யணும்; செல்வம் சேரணும்னு நெனச்சா;

ரெண்டு பேரும் என்னா நெனச்சோம் திரியுமா? ஒன் ஊர்ல குளிர்ச்சியான சோலை உண்டு; அங்க கொளம் உண்டு; அதுல நாத்தம் கொடுக்கற மீனுங்க நெறய இருக்கும்; அந்த சோலையில வாசனை கொடுக்கற பூ பூக்கற மாமரங்கள் நெறய இருக்கு: அதேபோல ஒங்கிட்ட ரெண்டு கொணமும் இருக்கு; இவ ஒன்னையே நெனச்சிட்டிருக்கா; எல்லாருக்கும் தெரிஞ்சிடும்; அதால நீ இவள கட்டிக்கறதா இருந்தா கட்டிக்க; இல்ல இப்படியே இருந்துடலாம்னு நெனச்சா வந்து ஒன்னோட கூட்டிக்கிட்டுபோயிடு”

”வாழி ஆதன் வாழி அவினி

மாரி வாய்க்க வளநனி சிறக்க

எனவேட் டோளே யாயே யாமே

பூத்த மாஅத்துப் புலாலஞ் சிறுமீன்

தண்டுறை ஊரன் தன்னொடு

கொண்டனன் செல்கஎன வேட்டேமே’

===================================================================================

ஐங்குறு நூறு—ஒரு விளக்கம் : முதல் பத்துப் பாடல்களுக்கான தெளிவுரைகளை ஒரு நாட்டுப்புற நடையில் எழுதியதற்கு வரவேற்பளித்தோர்க்கு நன்றிகள். இன்னூல் சங்க இலக்கிய வகையில் எட்டுத்தொகையைச் சார்ந்தது. குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல், பாலை என்னும் ஐந்து திணைகள் ஒவ்வொன்றுக்கும் நூறு பாடல்கள் கொண்டது. ஒவ்வொரு திணைக்குரிய நூறு பாடல்களும் பத்துப் பத்தாகப் பிரிக்கப்பட்டுப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளன.

நாம் முதலில் பார்த்த பத்துப் பாக்களும் “வேட்கைப்பத்து” எனும் தலைப்பில் அடங்குவனவாகும். வேட்கை என்பது விருப்பத்தைக் குறிக்கும். எதன்மேல் விருப்பமெனில் பொருள் செல்வத்தின் மீதுதான். தலைவனுன் தலைவியும் சந்தித்தாயிற்று. இனி குடும்பம் நடத்தப் பொருள் வேண்டும் அல்லவா? எனவே அதன் மேல் பற்று வைக்கிறார்கள். மருதத்திணைப் பாடல்களை எழுதியவர் ஓரம்போகியார் என்பவராவார். இவர் பாடிய பாடல்கள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய நூல்களிலும் உள்ளன. இவர் ஆதன் அவினி என்னும் சேர மன்னனின் ஆதரவு பெற்றவர். வட கொங்கு நாட்டில் காணப்படும் அவினியாறு இவனால் வெட்டப்பட்டது. அடுத்து வரும் பத்துப் பாடல்களுக்குத் தலைப்பு “வேழப்பத்து என்பதாகும். தொடர்ந்து படிப்போம்.

=====================================================================================

 

Series Navigationகளந்தை பீர்முகம்மதுவின் சிறுகதை ‘நற்றாள்’
author

வளவ.துரையன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    ஸிந்துஜா says:

    வள வள வென்று இல்லாமல் சிறப்பாக சுருக்கமாக
    எழுதப்பட்ட கட்டுரை. தொடருங்கள் வளவ . துரையன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *