‘ இளைய ராணியின் நகைப் பெட்டி’ – 2

This entry is part 11 of 20 in the series 4 செப்டம்பர் 2016

2

 

ரூபவதியை கல்யாணம் செய்து கொண்டு நரசிம்ம ராஜா காகிநாடாவில் இருந்து கூட்டி வந்த போது, ராஜாவின் முதல் இரண்டு மனைவிகளும், அவரின் மகன்களும் அவள் மீது  கொண்ட துவேஷத்திற்கு அளவே இல்லை. அந்த ராஜாவைத் தவிர மற்ற ராணிகளோ, ராஜாவின் மற்ற மகன்களோ  அவளிடம் பேசுவதும் இல்லை. கிழட்டு ராஜாவின் ஆசை மனைவி என்று வேலைக்காரர்களுக்கும் இளக்காரம்.

 

இந்த உதாசீனத்தையும், தனிமையையும் போக்க, அவள் வெற்றிலை போடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டாள். இதைப் பார்த்த அந்த ராஜா மரத்திலான வேலைப் பாடு அமைந்த ஒரு வெற்றிலைப் பெட்டியை ரூபவதிக்கு பரிசளித்து இருந்தார்.

 

அந்த வெற்றிலைப் பெட்டியின் உள்ளே அடிப்பாகத்தில் தன் கணவன் சொன்னபடி அந்த வரை படத்தை மடித்து வைத்து கொண்டாள் அவள். மரத்தின் நிறத்துக்கு பொருந்துவது போல ஒரு துணியை மடித்து அதன் மீது ஒட்டினாள். அதற்கு மேல் வெற்றிலை, சீவல், சுண்ணாம்பு பரப்பி விட்டாள். யாராவது அந்த வெற்றிலைப் பெட்டியை வாங்கிப் பார்த்தால், உள்ளே மறைத்து வைக்கப் பட்டுள்ள வரைபடம்  தெரியாதபடி பார்த்துக் கொண்டாள்.

 

ஆனால், அவளுடைய துரதிஷ்டம். விஷயம் தெரிந்து விட்டது. இறப்பதற்கு முன் ஒரு நகைப் பெட்டியை  ரூபவதிக்கு, ராஜா கொடுத்ததாக யாரோ சொல்லிவிட்டார்கள். வந்தது ஆபத்து ரூபவதிக்கு. அந்த நகைப் பெட்டியைக்   கேட்டு அவளை அடித்து துன்புறுத்த ஆரம்பித்து விட்டார்கள். அடி வாங்கிக் கொண்டிருந்த ரூபவதி ஒரு விஷயத்தைக் கவனித்தாள். நகைப் பெட்டி எங்கே என்று தான் கேட்டார்களோ ஒழிய, யாரும் வரைபடத்தைப் பற்றியோ, வெற்றிலைப் பெட்டியைப் பற்றியோ பேச வில்லை. வரைபடம் பற்றி யாருக்கும் தெரிந்திருக்க வில்லை போலிருக்கிறது. இதனால் வரைபடத்தை மட்டும் எடுத்துக் கொண்டு இப்போதைக்கு அரண்மனையை விட்டு வெளியே போய் விடலாம் என்று ரூபவதிக்கு தோன்றியது.

 

உடனே அவள் “ வெளியில நின்னுகிட்டு இருக்கிற என் அண்ணனோடு என்னை போக விடுங்க.. நாங்க போகும் போது எங்க ரண்டு பேரு  பைகளையும் முழுசா சோதிச்சு பாத்துகோங்க.. இந்த சொத்தோ நகையோ வேண்டாம்.. எங்கள விட்டா போதும்..” என்றாள்.

 

யோசித்து பார்த்த பிரேம் குமார் இதற்கு ஒப்புக் கொண்டான். ஏனென்றால், அவள் போகும் போது, நகைகளை அவள் எடுத்துப் போகிறாளா என்று சுலபமாய் சோதித்து பார்த்துக் கொள்ளலாம் என்பது தான்.

 

தன் அம்மாவோடும், சித்தியோடும் கலந்து ஆலோசித்தான்.

 

அவர்களும் “ அந்த சிறுக்கியை அடிச்சி துரத்துடா..” என்றார்கள்

 

“ சரி போ..” என்று ரூபவதியிடம் வந்து சொன்னான் பிரேம்குமார்.

 

தாங்க முடியாத சந்தோசத்துடன் அவள் தன் துணிகளை எடுத்தாள். அவள் என்ன என்ன பொருட்களை எடுத்து வைக்கிறாள், அதில் நகைகள் இருக்கிறதா  என்பதை எல்லோரும் கவனித்துக் கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் தன்னை கவனிக்கிறார்கள் என்பதை அவளும் கவனித்தாள்.

 

வெற்றிலைப் பெட்டியை  கவிழ்த்து காண்பித்து, பின் அதில் வெற்றிலை, சீவல், சுண்ணாம்பை எடுத்து வைத்தாள். வெற்றிலைப் பெட்டியின் அடியில் நன்றாக ஒட்டப் பட்டிருந்த துணிக்கு கீழ் இருந்த அந்த வரைபடம் அவர்கள் கண்களில் இருந்து தப்பித்தது.

 

அரண்மனை வாசலில் அவள் கிளம்பும் போது அவளுடைய துணிகளை சோதித்து பார்த்தான் பிரேம்குமார். வெற்றிலை, சீவலை தள்ளி வெற்றிலைப் பெட்டியையும் சோதித்து பார்த்தான்.

 

அரண்மனைக்குள்ளே வராமல், வெளியே நாட்கணக்கில் இருந்த ராமண்ணாவையும்,  சோதித்து பார்த்தான். அவனிடம் ரூபவதி நகைகளை கொடுத்து வைத்து இருப்பாளோ என்று.

 

ஒரு கையில் குழந்தையும் ஒரு கையில் அந்த வெற்றிலைப் பெட்டியும் வைத்துக் கொண்டு அரண்மனையை விட்டு அவள் கிளம்பி ராமண்ணாவுடன் நடக்கும் போது,

 

“ அந்த வெத்தலைப் பொட்டியை தூக்கி எறிஞ்சிட்டு வா..” என்றான் ராமண்ணா கோபமாய்.

 

“ இல்லைண்ணா.. ராஜா எனக்கு ஆசையா வாங்கி கொடுத்தது..” என்றாள் அவள்.

 

தன் அண்ணனிடம் அந்த நகைப் பெட்டியைப் பற்றியோ, அந்த வரை படத்தைப் பற்றியோ அவள் உடனே எதுவும் சொல்ல வில்லை. காகிநாடா போய் சேர்ந்த பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.

 

ஆனால் அது நடக்கவே இல்லை.

 

ரயில் காகிநாடாவை அடைந்த போது, குழுந்தை அழுது கொண்டு இருந்தது. ரூபவதி அதைக் கவனிக்காமல் வெற்றிலைப் பெட்டியை அணைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டு இருப்பதைப் பார்த்த ராமண்ணா தன் தங்கையை உலுக்கி எழுப்பினான்.

 

ரூபவதி எழவில்லை.

 

குழந்தை மட்டும் பசியால் சத்தமாய் அழ ஆரம்பித்தது.

 

*                             *                          *

து புதிதாய் ஆரம்பித்து, கொஞ்சம் பிரபலமாகிக் கொண்டு வரும் ஒரு டிவி சேனலின் ஸ்டுடியோ. குருஜி என்றும் பரிகார பரந்தாமன் என்றும் தன்னை சொல்லிக் கொள்ளும் பரந்தாமன் ரிசப்ஷனில் காத்திருந்தான். எலக்ரீஷியனாக அந்த ஸ்டுடியோவில் வேலை பார்க்கும்  ராமு, அவனுக்கு பழக்கம். அவன் மூலமாக இந்த ஸ்டியோவுக்குள் நுழைந்து இருக்கிறான், பணம் கொடுத்துதான். விளம்பர நிகழ்ச்சியாக போடலாம், மூன்று நிமிடம் தருகிறோம், கொடுக்க வேண்டிய பணம் நாற்பது ஆயிரம் என்றார்கள். ராமுவிடமும் மெஸ் ஓனர் சிவாவிடமும் கடன் வாங்கிக் கொடுத்திருக்கிறான்.

 

ஒரு கம்யூட்டரை வாங்கி, ஒரு ரூம் பிடித்து, பரிகார பரந்தாமன்.காம் என்று ஒரு வெப் சைட் திறந்து இரண்டு வருடம் ஓடி விட்டது. கிடைக்கும் வருமானத்தில்  அம்மாவுக்கு பணம் அனுப்பி, ரூம் வாடகை, கொடுத்து மீதம் கிடைப்பது வயிற்றுக்கே போதவில்லை.   வயது முப்பத்தைந்து ஆகி விட்டது. கல்யாணம் ஆகவில்லை. எல்லோரும் ஏன் கல்யாணம் ஆக வில்லை என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள். இப்போதைய அவனுடைய ஒரே கவலை அது தான்.

 

பரந்தாமனின் அப்பா சின்ன வயதிலே இறந்து விட, அவனுடைய அம்மா தான்,  கூலி வேலைக்கு போய் அவனை பிளஸ் டூ வரைக்கும் படிக்க வைத்தாள்.

 

பரந்தாமன் படிப்பிலே கெட்டிக்காரன். பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதல் மாணவனாக நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றான். அவனுடைய கனவு வக்கீலுக்கு படிக்க வேண்டும் என்பது. ஆனால் அது அம்மாவின் கூலி வேலை வருமானத்தில் முடியாது என்பதை புரிந்து கொண்டான்.

 

வேலைக்கு போய் சம்பாதித்து ஆக வேண்டும் என்றவுடன், என்ன வேலை செய்வது என்று அவன் யோசிக்கும் போது, படிப்பிலும், பேச்சிலும் கெட்டிக்காரன் என்று பெயர் எடுத்திருப்பதால், அதை உபயோகித்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான். தோஷ நிவர்த்தி, பரிகார பூஜை என்று சொல்லி சம்பாதிக்கலாம் என்று திட்டமிட்டு, பித்ரு தோஷ நிவர்த்திக்காக தன்னுடைய இடத்தில் இருந்து கொண்டே, கேட்பவர்களுக்கு பரிகாரம் செய்து கொடுப்பேன் என்று தன்னுடைய வெப் சைட்டில் விளம்பரப் படுத்தினான்.

 

கொஞ்சம் ஏமாற்ற வேண்டி வந்தது. என்ன செய்வது. வயிற்றுப் பிழைப்புக்கு ஏதாவது செய்து தானே ஆக வேண்டும் என்று தன்னை சமாதானப் படுத்திக் கொண்டான். காணிக்கை அனுப்பினாலும் இல்லாவிட்டாலும், பிரசாதம் அனுப்பி வைக்கப் படும் என்று சொல்லுவானோ தவிர காணிக்கை இல்லாமல் யாருக்கும் பிரசாதம் அனுப்பியதில்லை. காணிக்கை அனுப்பியவர்களுக்கும் பிரசாதம் சரியாக அனுப்புவதில்லை என்பது வேறு விஷயம். தன்னுடைய ரூமில் பரிகார பூஜையோ, யாகமோ நடத்தியதும் இல்லை. பிரசாதம் என்று எதையாவது தயாரித்து அனுப்புவான்.

 

இருந்தும் வருமானம் போதவில்லை.  அம்மா கல்யாணம் என்று நச்சரிக்கிறாள். வருமானத்தை பெருக்கி ஆக வேண்டும். அதற்கு டிவியில் விளம்பரம் கொடுக்கலாம் என்று மனதில் பட, கடன் வாங்கி பணம் கொடுத்து இந்த ஸ்டியோவுக்குள் நுழைந்து இருக்கிறான்.

 

ரிகார்டிங் ரூமுக்குள் கூப்பிட்டு மேக்கப் டச் அப் நடத்தி உட்கார வைத்தார்கள்.

 

காமிரா ஓட ஆரம்பித்தது. பரந்தாமன் பேச ஆரம்பித்தான்.

 

வரப் போகும் தை அமாவாசை சகல பாவத்தையும் நீக்கும் அமாவாசை. உங்களின் முன்னோர்களை  நீங்கள் சரியான வகையில் நடத்தவில்லையோ என்று வருத்தப் படலாம். அவர்களுக்கு பாவங்கள் ஏதாவது நீங்கள் செய்திருக்கலாம். அந்த பாவங்களின் சுமைகளை இறக்கி வைக்க நாங்கள் உதவுவோம். முன்னோர்களுக்கு சாந்தி செய்ய நினைக்கும் நீங்கள்,  அதை எப்படி நடத்துவது, அதற்கான வழி முறைகள் தெரியவில்லையே என்று வருத்தப் படலாம். கவலைப் படாதீர்கள்.

 

உங்களின் பித்ரு தோஷம் நீங்க, உங்களின் சார்பாக நானே ஒரு மகாயாகம் ஒவ்வொரு அமாவாசை அன்றும் நடத்துகிறேன்.

 

யாருடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டுமோ, அவரது பெயர், பிறந்த தேதி, இறந்த தேதி, அவருக்கும் உங்களுக்கும் உள்ள உறவு எழுதினால் போதும். அவரது புகைப் படம் இருந்தால் மிகவும் நல்லது. மகா யாக பிரசாதம் அனுப்பி வைக்கப் படும்.

 

உங்களின் சார்பாக நடத்தப் படும் மகா யாகத்திற்கு, நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. காணிக்கையை, நீங்கள் விரும்பியதை, உங்களால் முடிந்ததை அனுப்பி வையுங்கள்.

 

காணிக்கையை எப்படி அனுப்புவது என்று சொல்ல ஆரம்பித்து,  வங்கி கணக்கு எண், ஐஎப்சி கோட் வரைக்கும் சொல்லி விட்டு எழுந்தான்.

 

ரந்தாமனின் அந்த ஒரு நாள் டிவி நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு, யாராவது அவனுக்கு கடிதம் அல்லது போன் செய்வார்கள் எதிர்பார்த்தது ஒரு மாதத்தில் பலித்தது.

 

அவன் ரூம் விலாசத்திற்கு ஒரு கடிதம் வந்தது.

 

அந்த கடிதத்தில் இப்படி எழுதி இருந்தது.

 

அன்புள்ள பரிகார பரந்தாமன் அவர்களுக்கு,

 

உங்கள் டிவி நிகழ்ச்சியை நான் பார்த்தேன். அன்றே உங்களுடைய விலாசத்தை குறித்து வைத்துக் கொண்டேன்.  அன்றைய உங்களுடைய பேச்சு எனக்கு பிடித்து இருந்தது. நீங்கள் சொன்ன விபரங்கள் நன்றாக இருந்தது. அதனால் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

 

எங்கள் குடும்பம் ஒரு பழைய ராஜ வம்சத்தைச் சார்ந்தது.   நகைப் பெட்டி ஒன்று எங்கள் அரண்மனையில் எங்கோ ஒளித்து வைக்கப் பட்டு இருக்கிறது. எங்களால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்கு காரணம் பித்ரு தோஷம் தான். என்னுடைய சின்ன பாட்டிக்கு என் அப்பா செய்த கொடுமைதான் காரணம். நீங்கள் எங்கள் அரண்மனைக்கு வந்து,  சரியான பரிகார யாகம் நடத்தி, தோஷங்களை நீக்கி, அந்த நகைப் பெட்டியைக்கண்டு பிடித்து கொடுங்கள். அப்படி அந்த நகைப் பெட்டியைக் கண்டு பிடித்துக் கொடுத்தால்,  உங்களுக்கு தக்க சன்மானம் கொடுக்கப் படும்.

 

இப்படிக்கு சுதாகர் ராஜா.

 

 

 

-தொடரும்

 

Series Navigation‘ இளைய ராணியின் நகைப் பெட்டி’ – 3குறுநாவல் இளைய ராணியின் நகைப் பெட்டி – 1
author

தாரமங்கலம் வளவன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *