கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி என்றால் சும்மாவா? நம் தனிச்சிறப்புகள் ஒன்றா இரண்டா…பழைய சிறப்புகள் உண்மையிலேயே ஏராளமாக இருக்கிறது. இருக்கட்டும்..நாம் பார்க்கப் போவது புதிய சிறப்பு. அதாவது “சீசனுக்கேற்ற சீற்றம்” கொள்ளும் புதுத் தமிழனின் சிறப்பு. நமக்கு சும்மா எல்லாம் அறச்சீற்றம் வராது. அது அதற்கென்று ஒரு சீசன் உண்டு. ஆண்டு துவங்கியதும் (ஆங்கில ஆண்டே தான்!) இந்த பட்டியலில் சில வருடங்களுக்கு முன்னால் சேர்க்கப்பட்ட ஜல்லிக்கட்டு சீற்றத்துடன் சீசன்கள் ஆரம்பமாகும். அது முடிந்த பின், மார்ச் ஏப்ரலில் துவங்கி ஜூன் வரை “கல்விக் கட்டணக் கொள்ளை” எதிர்ப்பு சீசன். ஜூலை முதல் செப்டம்பர் வரை “காவிரித் தாய்க்காக கண்ணீர்” விடும் சீசன்.அக்டோபர் நவம்பரில் எப்படியும் சிவகாசியில் சில பட்டாசு ஆலைகள் விபத்து நடக்கும். உடனே “தொழிற்சாலை பாதுகாப்பு” கேட்கும் சீசன். தமிழனுக்கு டிசம்பரில் தான் “நெக்ஸ்ட் கொஞ்சம் ரெஸ்ட்” எடுக்க வாய்ப்பு. இது போதாதென்று மதுவிலக்கு போராட்டம் போன்றவை திடீர் திடீரென்று நம்மை சீற்றம் கொள்ள வைக்கும். தமிழ்நாட்டில் அனைத்து சிக்கல்களையும் தீர்த்து வைத்தாற்போல், இங்கு பாலாறும் தேனாறும் ஓடுவதாய் நமக்கு அவ்வப்போது தோன்றும் போது இலங்கை தமிழர்களுக்காக சீற்றம் கொள்வோம். பக்கத்தில் படுபாதகம் நடந்தாலே பாராமுகம் காட்டியோ முடிந்தால் மொபைலில் படம் பிடித்தோ பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளும் இனமான நமக்கு ஆண்டு முழுவதும் சீற்றம் கொள்ளத்தான் எத்தனை எத்தனை சீசன்கள்!
நிற்க. அத்தனை சீற்றங்களையும், நம் அருமை பெருமைகளையும் ஒரே கட்டுரையும் அடக்க முடியுமா என்ன? இக்கட்டுரை தற்போதைய காவிரி சீசன் பற்றியது மட்டுமே! “கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை” என்று பழம்பெருமை பேசியே காலத்தை ஓட்டி விடலாம் என்று நினைத்தோம். நம் போல் காவிரியை சினிமா பாடல்களில் மட்டுமே பாராட்டி சீராட்டி யதார்த்தத்தில் கழிவறையாய் பயன்படுத்தும் முட்டாள்தனத்தை கர்நாடகமும் செய்யும் என்று எதிர்பார்க்கலாமோ நாம்? ஆண்டுக்கணக்கில் யோசித்து, அழகாய் ஆங்காங்கே அணைகளும் தடுப்பணைகளும் கட்டி காவிரி வழியே நீர்மேலாண்மையை லாவகமாய் கையாள்கிறது கர்நாடகம். நமக்கோ ஆண்டுக்கொரு முறை தூக்கத்தில் யாரோ முகத்தில் தண்ணீர் ஊற்றியது போல், காவிரி பற்றிய ஞாபகமே திடுக்கென்று வருகிறது. உடனே போடுவோம் ஒரு பந்த். பந்த் நடத்தி ஆகப்போவது என்ன என்று யாருக்குமே தெரியாது. அதனாலென்ன…சீற்றம் சார் சீற்றம் அதையும் ஜனநாயக முறையில் காட்டும் முதிர்ச்சியின் வடிவமல்லவா பந்த்? அப்புறம் பஸ் மறிப்பு, ரயில் மறிப்பு என்று விவசாயிகள் துயரம் குறித்து அனைத்து கட்சிகளுக்கும் திடீர் அக்கறை தோன்றி விடும் பொழுது சீசன் களை கட்டி உச்சக்கட்டத்தை எட்டும். சாமானிய மக்களாகிய நாமும் வீட்டுச் சோபாவில் காபி குடித்தபடி “இந்த வருடமும் காவிரி சிக்கலா” என்று சிம்பிளாக கவலைப்பட்டு குடிமகனுக்கான சமூக கடமை ஆற்றுவோம்…உலகம் கிறுகிறுவென்று நாளும் பொழுதும் முன்னேறியபடி இருக்க, நம் மாநிலத்தில் ஐம்பது ஆண்டுகளாக ஒரு அணை கூட கட்டப்படவில்லை என்னும் கன்றாவியை கண்டும் எனக்கென்ன இதனால் என்று தான் உண்டு தன் வேலை உண்டென்று இருக்கும் தன்மானத் தமிழன் அல்லவா நாம்? “தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு” என்பதை காவிரி சீசனை ஒட்டி பொருள் கொள்ள ஆராய்ந்தால் என்ன அர்த்தம் கிடைக்கும்? நம் வீட்டுக்கு தண்ணீர் வரும் வரை நமக்கு எதைப் பற்றியும் கவலையில்லை. அப்படியென்றால் நம் வீட்டுக்கு தண்ணீர் வரவில்லையென்றால் பொங்கியெழுந்து விடுவோமே என்று நினைத்து விடாதீர்கள். பொறுங்கள் பொறுங்கள்…நம் வீட்டில் தண்ணீர் நின்றால் பக்கத்து வீட்டுக்குச் சென்று அங்கு தண்ணீர் வருகிறதா என்று பார்ப்போம். அங்கும் வரவில்லை என்றால் தீர்ந்தது சிக்கல். நமக்கு நிம்மதி. இதுவே நம் தனிக் குணம்! இக்குணத்தை விசாலப்படுத்தி நாட்டுக்கும் நம் பங்கு ஆற்றுகிறோம்…! அதனால் தான், எதை பற்றியும் அக்கறை இன்றி, மூன்று மாமாங்கமாய் மாற்றி மாற்றி ஓட்டுப் போட்டு நமக்கு நாமே வேட்டு வைத்துக் கொண்டு நாட்டையும் அழித்து வைத்திருக்கிறோம். காமராஜர் என்றொருவர் இருந்திரா விட்டால் பல வருடம் முன்னரே நம் கதை கந்தலாயிருக்கும். “என்றொருவர்” என்று எழுதவும் காரணம் உண்டு. இப்போதே பாதி பதின்வயதினருக்கு அவரை அடையாளம் காண இயலாது. அடுத்த தலைமுறை அவர் யார் என்று கேட்டாலும் அதிர்ச்சியடைய வேண்டிய அவசியம் இருக்காது. எனவே “என்றொருவர்” என்று எழுதுவது பொருத்தம் தானே? காமராஜருக்குப் பின் நீர் மேலாண்மை பற்றிய நினைப்பேனும் உள்ள ஒருவரும் நம் பொது வாழ்வில் இல்லை. அரசர் எவ்வழி, மக்கள் அவ்வழி. தன்மானத் தமிழன், இனமானத் தமிழன் என்று பகுமானமாக பேசித் திரிவதைத் தவிர்த்து வேறொன்றும் யாமறியோம் பராபரமே…! காவிரியாவது கொள்ளிடமாவது…அதெல்லாம் விவசாயிகள் சம்பந்தப்பட்ட சிக்கல் இல்லையா? நமக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? இப்படித்தானே இருக்கிறது நம் சிந்தனை?
மேட்டூர், பெரியார் என்ற இரண்டு பெரிய திட்டங்கள் தவிர, தமிழ்நாட்டின் அனைத்து பெரிய நீர் மேலாண்மை திட்டங்களும் காமராஜர் கொண்டு வந்தவையே…நம் வாய்வழி இறங்கும் ஒவ்வொரு நீர்த்துளியிலும் காமராஜர் ஒளிந்திருக்கிறார் என்பதை நாம் மறக்காமல் இருப்பது உத்தமம். மணிமுத்தாறு, சாத்தனூர், அமராவதி, கிருஷ்ணகிரி, வீடூர், வைகை, நெய்யாறு, பரம்பிக்குளம், புள்ளம்பாடி, பவானி என்று அடுக்கிக் கொண்டே போகலாம்…அதிலும் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் கட்டப்பட்ட மலைக்குடைவுகளின் வழி நீர்செல்லும் அமைப்பைப் பார்த்தால் காமராஜரை கட்டிப்பிடித்துக் கொள்ளத் தோன்றும். காவிரி டெல்டாவில் கொண்டு வரப்பட்ட பல்வேறு பாசணத் திட்டங்களும் அவர் கைவண்ணமே…ஆனால் நாம் செய்தது என்ன? அவரை அண்டங்காக்கை என்று சொன்னவர்களை ஆட்சியில் அமர்த்தியும் அவரது காலத்தில் பொதுப்பணித்துறை மற்றும் விவசாயத்துறை அமைச்சராக இருந்த கக்கனை கவர்மெண்ட் ஆஸ்பத்திரி கட்டாந்தரையில் படுக்க வைத்தும் நன்றி காட்டிய பெருமைமிகு இனம் இல்லையா நாம்?
புதிய அணைகளை விடுங்கள்…புதிய தடுப்பணைகள்? சரி புதிய தடுப்பணைகளை விடுங்கள்…புதிய பாசணத் திட்டங்கள்…சரி சரி புதுசே வேண்டாம்…இருப்பதையாவது பராமரிக்கும் திட்டங்கள்? சரி அதையும் விடுங்கள் இருப்பதை கெடுக்காமல் சும்மாவாவது விட்டு வைப்பது? எதுவும் கிடையாது…ஆனால் அரசியல்வாதிகளை பாராட்ட வேண்டும் சார். ஒரு புயல் மழைக்கே இவர்கள் கட்டும் சாலைகளும் பாலங்களும் அரித்துப் போகிறபோது அணை கட்டினால் என்னவாகும்? எத்தனை காலம் தான் சாலையில் கொஞ்சம் கொஞ்சமாய் “அடிப்பது”? ஒரு அணை கட்டினால் போதும்…எக்கச்சக்கமாய் “அடிக்கலாம்” என்று இதுவரைக்கும் யோசனை தோன்றாமல் சும்மா இருக்கிறார்களே…நல்லது.
என்ன சார் இப்படிச் சொல்லி விட்டீர்கள்? காவிரிக்காக நாம் எதையுமே சாதிக்கவில்லையா என்று கேட்கிறீர்கள்தானே? எனக்கும் அந்த ஆதங்கம் உண்டு. ஒவ்வொரு வருடமும் காவிரி சீசனும் அத்துடன் வரும் சீற்றமும் பார்க்கும் பொழுது எனக்கும் ஆதங்கம் வரும். அப்போதெல்லாம், காவிரியில் நாம் சாதித்த கீழ்கண்ட பட்டியலில் உள்ளவற்றை “கேட்டு” ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டியது தான். நீங்களும் அவ்வாறே செய்யுங்கள்.
1. 1970கள்: “தபால்காரன் தங்கை” :கரிகாலன் கட்டிவைத்தான் கல்லணை நான் கண்களுக்குள் கட்டி வைத்தேன் கண்ணனை… இதில் கண்ணதாசனின் ஒரு வரி விளக்கம் பாருங்கள் காவிரி கொள்ளும் இடம் கொள்ளிடம்!
2. 1980கள்: “சலங்கை ஒலி”: காவிரி மங்கை வந்தாள் அம்மா என்னுடன் கைவீசி…இப்பாடல் கேட்டபின் காவிரி எங்கிருக்கிறது என்று தேடி ஓடி அதில் ஒரு குதியாட்டம் போடத் தோன்றும்…
3.1990கள்: “மகாநதி”: ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம்…காவிரியில் குளித்தெழுந்த சிலிரிப்பும் அகச்சுத்தமும் தரும்…
சினிமா பாடல்கள் தாண்டி நீங்கள் வாசிக்கும் பழக்கம் கொண்டவர் என்றால், அதிலும் சற்று “தீவிரமானவர்” என்றால், புறநானூறு வரைக்கும் போகலாம்…இப்பாடல் வரியை பாருங்கள்…நம் முன்னோர் காவிரியை எங்கு உயர்த்தி போற்றினர் என்பதும் இழிவடைந்த நம் தற்கால நிலை குறித்த ஆதங்கமும் பன்மடங்கு கூடும்…
“…புனிறு தீர் குழவிக்கு இலிந்து முலை போலச்
சுரந்த காவிரி மரம் கொல் மலி நீர்…”
அதாவது, குடித்து குடித்து வளர்ந்த மழலைக்கு கொடுத்து கொடுத்தும் வற்றாமல் சுரக்கும் பெருங்கருணையே முலையாய் கொண்டவள் காவிரி!
காவிரியின் ஸ்தனங்களில் ஓடும் ரத்த நாளங்களையெல்லாம் நஞ்சாக்கி விட்டு
காவிரியாம்…பந்தாம்..போராட்
காவிரி பற்றி பேசும் தகுதியேனும் நமக்கு உள்ளதா?
வெட்கமாய் இல்லை நமக்கு?
- ஐரோப்பிய விண்ணுளவி ரோஸெட்டா உறங்கும் வால்மீன் விழித்தெழும் ஒளிக்கிளர்ச்சியைப் பதிவு செய்தது.
- ஆஷா
- யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 8
- திரும்பிப்பார்க்கின்றேன் பவளவிழா நாயகன் பத்மநாப ஐயரும் கலை – இலக்கிய பதிப்புலகமும்
- கவிஞர் அம்பித்தாத்தா
- பழக்கம்
- தொடுவானம் 134. கண்ணியல்
- சூழல் மாசு குறித்த கவிதைகள் சில
- ‘ இளைய ராணியின் நகைப் பெட்டி’ 4
- ‘ இளைய ராணியின் நகைப் பெட்டி’ – 3
- ‘ இளைய ராணியின் நகைப் பெட்டி’ – 2
- குறுநாவல் இளைய ராணியின் நகைப் பெட்டி – 1
- காப்பியக் காட்சிகள் 18. சிந்தாமணியில் சகுனம் சோதிடம் மந்திரம் குறித்த நம்பிக்கைகள்
- பகீர் பகிர்வு
- சிறந்த சிறுகதை எழுத்தாளர்கள் – சிறு குறிப்புகள் -1
- வேழப் பத்து—11
- விழியாக வருவாயா….?
- சபாஷ் தமிழா…! – காவிரி பற்றி பேசும் தகுதி நமக்கு உள்ளதா?
- தள்ளுபடியில் தள்ளாடும் குடும்பத்தலைவர்
- மிக அருகில் கடல் – இந்திரன்