சைக்கிள் அங்கிள்

author
9
0 minutes, 0 seconds Read
This entry is part 7 of 12 in the series 11 செப்டம்பர் 2016

சோம.அழகு

cycle-uncle நம் அன்றாட வாழ்வில் பார்க்கும் அத்தனை மனிதர்களையும் கவனிக்கும் சாத்தியக்கூறு இல்லை. இருப்பினும் சிலர் நம்மிடம் தங்கள் இருப்பைப் பதிவு செய்வதுண்டு. சில சமயங்களில் அறிவுக்கு அப்பாற்பட்டு உணர்வு மட்டுமே இதற்குக் காரணியாக அமையலாம். அவ்வாறே குழந்தைப் பருவத்தில் என்னுள் பதிவேறிய, சமூகத்தின் பார்வையில் பெரும்பாலும் தப்பிச் செல்கிற ‘சைக்கிள் அங்கிள்’ஐ வாசகர் முன் நிறுத்த முனைந்தேன்.
என்னுடைய ஏழு வயதில் எனக்கு ஒரு சைக்கிள் வாங்கித்தரப்பட்டது. அன்று முதல் சைக்கிள் அங்கிள் எனக்கு அறிமுகம். சைக்கிளுக்குக் காற்றடைப்பது, பஞ்சர் ஒட்டுவது, ஹேண்டில் சரி செய்வது, சைக்கிளின் உயரம் ஏற்றி இறக்குவது, சைக்கிளுக்கு பெண்டு எடுப்பது என அனைத்திலும் பின்னி ‘பெடல்’ எடுப்பார் என்பதால் எங்கள் பகுதி நண்டு சிண்டுகள் அனைவரும் எல்லவற்றிற்கும் அவரிடம்தான் செல்வோம். கரிய மெலிந்த தேகம், எண்ணெய் இல்லாத தலை, ஓர் அரைக்கை தொள தொள சட்டை (பெரும்பாலும் சாயம் போன சந்தன நிறம்தான்), மடித்துக் கட்டிய சாரம் – இதுதான் சைக்கிள் அங்கிள்.
தினமும் மாலையில் அவரைச் சுற்றி ஒரு சிறுவர் குழாமே கூடி நிற்கும். யாரும் வரிசையில் நின்று காற்றடைத்துக் கொள்ள மாட்டோம். அவரைச் சுற்றி அங்கும் இங்குமாக நிற்பதே வாடிக்கை. அவர் சைக்கிளுக்குப் பஞ்சர் கண்டுபிடித்து ஒட்டும் ‘தொழில்நுட்பத்தை’ ஏதோ சந்திராயனையே சரி செய்வது போல வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்த ஞாபகம். சைக்கிள் பழுது சம்பந்தப்பட்ட வேலைகளுக்குப் பட்டப்படிப்பு ஒன்று உண்டு என்று நான் உறுதியாக நம்பியிருந்த காலம் அது. அதுவும் அவர் சைக்கிள் பழுது பார்ப்பது பற்றி பெரியவர்களிடம் பேசும்போது பயன்படுத்தும் சில ஆங்கில தொழில்நுட்ப வார்த்தைகளைக் கேட்டு, “இவரு கண்டிப்பா பெரிய படிப்பு படிச்சிருப்பாரு” என நினைத்தேன். இப்போது இரண்டு உண்மைகள் விளங்குகின்றன. ஒன்று, அவர் பெரிய படிப்பு படிக்கவில்லை என்பது. மற்றொன்று, பெரியவர்கள் அனைவரும் சைக்கிள் பற்றிய எல்லா நுணுக்கங்களும் தெரிந்தது போலவும், சைக்கிள் அங்கிளுக்குத் தெரிகிறதா எனப் பரிசோதிப்பது போலவும் காட்டிய தொனி, முகபாவம் அத்தனையும் பொய் என்பது. என்னப்பா இப்பிடி பண்ணியிருக்கீங்களேப்பா? “அத்தனையும் நடிப்பா?” ( இதை மட்டும் ‘புதிய பறவை’ சிவாஜி போல வாசிக்கவும் )
காலை 7 மணிக்குக் கடைக்கு (ஓலைக்கொட்டகை) வருவார். ஒவ்வொரு நாளும் எப்படியும் மூன்று அல்லது நான்கு சைக்கிள்களாவது பழுது பார்க்கவும் பஞ்சர் ஒட்டவும் நிற்கும். அந்த வேலையைப் பார்த்துக் கொண்டே நடுநடுவே வருபவர்களுக்குக் காற்றடைத்துத் தருவார். அவ்வப்போது ஆட்கள் கடையில் இல்லாத நேரம், சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து, அவரது குச்சிக் கால்களை ஒன்றன் மேல் ஒன்றாகப் போட்டு, இரண்டு கைகளையும் மடக்கித் தலையின் பின் வைத்துப் படு ஸ்டைலாக பீடி குடிப்பார். மதியம் ஒரு குட்டித் தூக்கம். மாலை சிறுவர் சிறுமியருடன் பொழுது போய்விடும். சிறுவர்கள் முன் கண்டிப்பாகப் புகைக்க மாட்டார். இப்படியே ஒவ்வொரு நாளும் கழியும் என நினைக்கிறேன். வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு நேரங்களில் நான் கண்ட காட்சிகளைக் கொண்டு அவரது கால அட்டவணையை இவ்வாறு ஊகிக்கிறேன். அப்போதெல்லாம் பெரும்பாலும் சைக்கிள்தான் என்பதால் சைக்கிள்கள் பஞ்சராகிக் கொண்டே இருக்கும்; காற்று இறங்கிக் கொண்டே இருக்கும்; அவருக்கும் வேலை இருந்து கொண்டே இருக்கும்.
சில சிறுவர்கள் தங்களுக்கு ட்யூசனுக்கு நேரமாகிவிட்டதால் தங்கள் சைக்கிளுக்கு முதலில் காற்றடைத்துத் தரும்படி நச்சரித்துக் கொண்டிருப்பார்கள். “இந்தா வந்துட்டேன் தம்பீ” என வேக வேகமாக அவர்களைக் கவனிப்பார். அவர் கோபப்பட்டு ஒரு முறை மட்டுமே பார்த்திருக்கிறேன். சிறுவர்கள் நாங்கள் அவருடைய கனிவான வாடிக்கையாளர் சேவைக்காகக் காத்துக் கொண்டிருக்கும் போது இடையில் ஒரு நடுத்தர வயது மனிதர் வந்து சைக்கிள் அங்கிளை கால் மணி நேரமாக நச்சரித்து விட்டு பின் திட்ட ஆரம்பித்தார் – “என்னய்யா……எவ்வளவு நேரம் நிக்கிறது? காத்து அடைக்கிறியா? இல்லையா?”. சைக்கிள் அங்கிள் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து பின்னர், “ஆளு வளந்த அளவு அறிவு வளரலயே? சின்னப் புள்ளேங்க எவ்வளவு நேரம் நிக்கிதுங்க……..இருட்டப் போவுது. எப்படி இருட்டுக்குள்ள வீட்டுக்குப் போகும்? கொஞ்ச நேரம் நிக்கிறதுனா நில்லும். இல்லேனா போ….” என்றார். அவர் அதற்கு முன்னும் பின்னும் யாரையும் கடிந்து பேசி நான் கண்டதேயில்லை.
நான் என் தாத்தவுடன் தான் எங்கும் செல்வேன். ஒரு நாள் நீண்ட நேரக் காத்திருப்புக்குப் பிறகு தாத்தா, “இந்த சைக்கிளையும் கொஞ்சம் பாருப்பா” என்று சொல்ல நானோ, “சும்மா இருங்க தாத்தா…..மெதுவாவே போலாம்” என்று கூறியதன் பின்னணி அந்தக் கற்றடைக்கும் ‘விஞ்ஞானத்தை’ உற்று நோக்கும் ஆவல்தான் என்று நிச்சயமாகத் தாத்தாவிற்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்போது இதை வாசிக்கும்போது தாத்தா பொக்கை வாயோடு (பல் செட் வைத்தால் வலிக்கிறதாம்!) சிரித்துக் கொண்டிருப்பார்கள்.
இன்னொரு நாள் காற்றடைக்கும் போது அவரது கைகளைக் கவனித்தேன். கை முழுக்கக் கரி……. ‘உள்ளங்கை நிறமே இவருக்குக் கருப்புதானோ?’ என எண்ணும் வகையில் இருந்தது. வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருக்கையில் தாத்தாவிடம், “தாத்தா! அந்த அங்கிள் கை முழுக்கக் கரியா இருக்கு. எப்படி அவ்வளவு அழுக்கோட சாப்பிடுவார்? கை கழுவ சோப்பு வச்சிருப்பாருல்ல?” எனக் கேட்டவுடன், எங்கே ‘இல்லை’, ‘தெரியாது’ என்று பதில் சொன்னால் வாங்கிக் கொடுக்கச் சொல்லிவிடுவேனோ என்று பயந்து, “ஹூம்….பாத்தியா….அவர் கையில மட்டும் இல்ல…..ஒங்கையிலயும் கண்ணுக்குத் தெரியாத கிருமி நெறைய இருக்கும். அதான் கைய நல்லா சோப்பு போட்டு கழுவணும்ங்கிறது” என்று எக்குத்தப்பாக பொதுவாக ஒரு பதிலைச் சொல்லி சமாளித்து வைத்தார்கள் தாத்தா. மீண்டும் கேள்வி கேட்கும் ஆர்வம் போய் நான் அப்படியே விட்டிருக்கக்கூடும்.
பதினெட்டு வருடங்கள் கழித்து அவரைப் பார்க்கிறேன். முன் அவர் கடை இருந்த இடத்தின் எதிரில் இப்போது அதே சைக்கிள் கடையை போட்டிருக்கிறார். கடை…..முன்பு ஓலைக்கொட்டகை, இப்போது மரத்தடி. அவருக்கு முடி மட்டும் கொஞ்சம் நரைத்திருக்கிறது. மற்றபடி அப்படியே இருக்கிறார். இப்போது மற்ற இரு சக்கர வாகனங்கள் பெருகி விட்டதால் அவரது கடையில் பழுது பார்க்க ஒரு சைக்கிள் நின்றாலே பெரிய விஷயம். வீட்டு வேலை பார்க்கும் பெண்களும் மிகச் சில ஆண்களுமே இப்போது அவரது வயிறு காயாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என நினைக்கிறேன். உலகமயமாக்கலுக்கு பொருளாதார ரீதியில் பலியானவர்களில் இவரும் ஒருவர் போலும். இன்று, எங்கு எதற்காக ஓடுகிறோம் என்றே தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் நிறைந்த இந்த உலகின் முட்டாள்தனமான தேவையில்லாத வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறும் ஒரு பாவப்பட்ட ஜீவன்.
இப்போதெல்லாம் அவரைப் பார்க்கும்போது மனதினுள் ஒரு மெல்லிய சோகம் இழையோடுகிறது. பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் சுறுசுறுப்புடனும் நம்பிக்கையுடனும் காணப்பட்ட அந்த முகம் காணாமல் போயிற்று. அல்லது எனக்கு அப்படித் தோன்றுகிறது. அவர் இந்தத் தொழிலை ஆரம்பிக்கும் போது, “இப்படிக் கொஞ்ச நாள் சைக்கிள் பழுது பார்த்து, காசு சேர்த்து ஒரு சின்ன பெட்டிக் கடையாவது வைக்கணும். அப்புறம் அப்படியே முன்னேறணும்” என்று அந்த வயதிற்கே உரிய துடிப்புடனும் நியாயமான பல வண்ணக் கனவுகளுடனும் இருந்திருப்பார் தானே? இப்படிக் கடைசி வரை சைக்கிள் பழுது பார்த்து ரப்பர் டயர்களுடனும் செயின்களுடனுமே வாழ்வு நடக்கும் என்று கற்பனை கூட செய்திருக்க மாட்டார் தானே?
இதுதான் நிதர்சனமா? வாழ்க்கை என்பது இதுதானா? எனப் பல கேள்விகளையும் ஒருவித ஏமாற்றம் கலந்த பயத்தையும் தருகிறார் அந்த சைக்கிள் அங்கிள். ஒருவேளை, அவரும் அவரது மனைவியும் குழந்தைகளும் இந்த வாழ்க்கைத் தரத்திலேயே மகிழ்ச்சியாகத்தான் இருப்பார்களாக இருக்கும். அவர் எப்போதும் போல் அவருண்டு அவர் வேலையுண்டு என்று அவ்வப்போது பீடி குடித்துக் கொண்டு ‘நிறைவான வாழ்க்கை இதுவே’ என்று கவலையில்லாமல் நிம்மதியாக இருக்கக்கூடும். அவரது கனவுகள் எனது கற்பனையாக மட்டுமே இருக்கலாம்.
அந்த அங்கிள், இந்த உலகுக்கு……இல்லை ! இல்லை !….எனக்கு ஏதோ சொல்ல வருகிறார் என்றே தோன்றுகிறது. நான் தத்துவார்த்த ரீதியாக ஏதோ சொல்ல முற்பட்டுப் பிதற்றுகிறேன் என்று தோன்றுகிறதா? ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. ஏதோ தோன்றியது…..கிறுக்கித் தள்ளிவிட்டேன். அம்புட்டுதேன். என்னை முதன்முதலில் தமிழில் கிறுக்கத் தூண்டிய, தைரியம் தந்த, என்னைப் பெரும்பாலும் மறந்திருக்கும் சைக்கிள் அங்கிளுக்கு நன்றி !

– சோம.அழகு

Series Navigationபரலோக பரோட்டா ! காப்பியக் காட்சிகள் ​19. சிந்தாமணியில் ஆண்கள், பெண்கள் குறித்த நம்பிக்கைகள்
author

Similar Posts

9 Comments

  1. Avatar
    arun says:

    It is indeed a moving article. How real life situation can be turned into a beautiful story, yours is an example. It brings into focus our own cycle-repairer- everyone of ours wherever we are. You can please write about various persons we meet in our everyday life, particularly on those we pay very little attention. You can really do it as you know the art of narrating with ease and telling impact.

  2. Avatar
    meenal devaraajan says:

    இப்படி உலகில் எதெதனையா பெயர் இருக்கிறோம். எடுத்துக்காட்டாக நவீன உலகில் வருங்காலத்தில் கணினிப் பயன்பாடு தெரிந்திருந்தால்தான் ஆசிரியராக இருக்க முடியும் என்ற சூழல் உ ருவாகிக் கொண்டிருக்கிறது என்றால் நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் காலத்திற்கேற்ப புதியனவற்றைக் கற்றுக்கொள்ளல் நன்று. மாற்றம் ஒன்றே மாறாதது. வயதாகி விட்டது என்று எல்லாம் சொல்லக்கூடாது. புதிவற்றைக் கற்கவேண்டும். அல்லது புதிய தொழில் செய்யக்கற்றுக்கொள்ளல் வேண்டும். அத்தொழிலாளியும் மோட்டர் சைக்கிள் ரிப்பேர் கடை வைத்திருப்பார் என்று நான் நம்புகிறேன்.

    1. Avatar
      Alagu says:

      நான் அழகியலாகப் பதிவு செய்தமைக்குத் தங்களுடைய நடைமுறை சார்ந்த கருத்துரைக்கு நன்றி.

  3. Avatar
    Dr.G.Johnson says:

    A beautiful narration with immense observation on an insignificant cycle uncle. It is a narration on a person known to the writer for a very long time. It is not only a narration but also carries with it a social message of of compassion for fellow human beings, which is gradually fading today in this fast moving society. The writer Soma.Azhagu is commended for this beautiful master- piece. Congratulations….With Regards… Dr.G.Johnson.

  4. Avatar
    தாரா says:

    பதிவு செய்யும் மனிதர்கள் நம் வாழ்வில். ….ஒவ்வொருவருக்கும் இந்த எண்ணிக்கை வேறுபடும். எந்த அளவில் அவர்களது தாக்கம் நம் மனதில் உள்ளதோ., அத்தனை மனிதர்கள் பாட்டி,அண்ணன், மாமா போன்ற உருவ சாயல்களில்.அவர்கள் பஞ்சு மிட்டாய் மாமாவாகவோ, எலந்தப்பழ பாட்டியாகவோ அல்லது பால்ஐஸ் அண்ணாவாகவோ இருந்திருக்கலாம்.அவர்களது ஏதோ ஒரு நடவடிக்கை அல்லது செய்கை நம்மை அவர்கள் பால் ஈர்த்து இருக்கலாம். அந்த நபர்களை நினைவு கூர்ந்து பார்க்கும் போது இன்றைக்கு அவர்களிடத்தில் கழிவிரக்கம் வந்ததென்றால் அந்த குறிப்பிட்ட தொழில் நலிவடைந்ததாயிருக்கும்.
    எனக்கு தெரிந்த சைக்கிள் கடை அண்ணன் இன்றும் ஜே ஜே என தொழில் நடத்துகிறார். புகை கக்கும் மோட்டார் சைக்கிள்கள் ஏராளமாய் இருந்த போதும் அவரது கடையில் குறைந்தது ஒரு 50 மிதிவண்டிகள் நிற்க காண்கிறேன்.கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத எங்கள் ஊரில் இன்றைக்கும் மிட்டாய்காரர்,சைக்கிள்காரர்,வளையல்காரர் மற்றும் முறுக்குப்பாட்டிகள் வியாபாரம் செய்து பிழைத்து வரத்தான் செய்கிறார்கள். சிறு குறு வியாபாரங்கள் மற்றும் தொழில்கள் இந்தியாவில் கட்டாயம் தேவையானவைதான்.அந்த தொழிலில் அவர்கள் ஆத்ம திருப்தி அடைவது உண்மை. புதிய முறை வர்த்தகம் பரவுகின்ற போதும் பழைய நுணுக்கங்களை புகுத்தி வெற்றி பெற அண்ணன்களும் பாட்டிகளும் அவர்களது சந்ததியினருக்கு வழிகாட்டியாக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. மகிழ்ச்சியாக தொடரட்டும் உங்கள் பணி சோம. அழகு!!

  5. Avatar
    Prakash Devaraju says:

    சைக்கிளின் சக்கரம் மட்டுமே சுற்றியதால்
    சைக்கிள் காரரின் சக்கரம் சுற்றவில்லை
    சக்கரமாய் சுற்றாததால்,
    தலை சுற்றாமல்
    எக்காளமாய் பீடி குடிக்கின்றார்
    எதற்காக இப்படி எல்லோரும் சுற்றுகின்றார்?

  6. Avatar
    பிரபாகரன் says:

    நான் இரண்டு வருடமாக சைக்கிள் பயணம் தான் செய்கிறேன்.70கிமீ/நாள் சாதாரணமாக சைக்கிள் பயணம் முடியும்.இனி என் வாழ்நாளில்
    1.பெட்ரோல் பம்பு செல்வதில்லை
    2.Use only hand pump not petrol pump
    3.புதிதாக ஒரு இடத்திற்கு சொல்லும்போது அந்த இடத்தில் சைக்கிள் பயணம் செய்ய வேண்டும்(உதாரணம்:நான் காரைக்குடி,ஈரோடு,பன்ருட்டி சென்றதில்லை)
    4.சைக்கிள் மாத இதழ் வெளியிட வேண்டும்.
    5.மிதிவண்டி அமைச்சகம்(like Railways,shipping,Surface transport)ஏற்படுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *