கதை சொல்லி (சென்ற வாரத் தொடர்ச்சி) -2

This entry is part 28 of 29 in the series 9 அக்டோபர் 2016

 

பியெர் ரொபெர் லெக்ளெர்க்

பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா

 

நூரம்பரக் – இலண்டன் பயணத்தின்போது செகோனுக்கும் மொரான்ழ்க்குமிடையில் பிறந்த நட்பு நெருக்கடியன நேரத்திலும், சந்தோஷமான தருணங்களிலும்  உருவாகி  நீடிக்கக்கூடிய நட்பு வகையைச் சேர்ந்தது.  அவர்கள் பிரிவுக்குப் பின்னர் முடிவு என்ன ஆயிற்றென்று ஒருவருக்கும் தெரியாது. அவற்றின் மறுபிறப்பு வாழ்க்கையின் எதிர்பாராத நிகழ்ழ்வுகளின் கைவசம் உள்ளது. அவர்களுக்கு அந்த வாய்ப்பு அமையவில்லை.

 

மொரான்ழ் நினைவில் மூழ்கி, அடிக்கடி ஸ்லாபூகூம்  கனவில் ஆழ்ந்துவிடுவதையும், கண்கள் அடிவானத்தில் குத்திட்டு நிற்பதையும் பலரும் அறிவார்கள். என்ன ஆனாய் லூசியன் ? உயிருடன் இருக்கிறாயா ? எங்கே நீ இறந்தாய் ? சாலைகள் நகருக்குத் திரும்பப் போனாயா ? என்றெல்லாம் முனுமுனுப்பதும் காதில் விழும். அல்லாவிடம் அவரது அடிமையானத் தன்னை அந்த  நகரைத் திரும்பக் காண க் கருணைபுரியவேண்டும் என க் கேட்பார். ஆனால் அதில் எந்தப் பயனுமில்லை. கடவுள்களிடம் எல்லாவற்றையும் கேட்டுப்பெற முடியாது. அவர்களை என்ன பெயரிட்டு அழைத்தாலும் என்ன நிறமென்றாலும் சரி,  இயலாததை அவர்கள் நிறைவேற்ற மாட்டார்களென்பது  வயதினால் பெற்ற ஞானம் தெரிவிக்கும் உண்மை.   இருந்தாலும், கடவுளிடம் இறைஞ்சுவது, குறைந்தப்பட்சம் அந்த ஊர்மீதான நம்பிக்கையைக் குலைக்காமல்  வைத்திருக்க உதவலாம். அல்லாவாக இருந்தாலும் அவரால் முடிந்தது, எண்பபது வயது முதியவருக்கு  அந்த ஊரைப்பற்றிய அறிவைத் தருவது, அதற்கு மேல் முதிவருக்கும் கடவுளிடம்  எதிர்பார்ப்புகளில்லை.

 

முதிய தம்பதிகளின் பரணில், இரவுவேளைகளில் காடுகளில் தங்க நேரிட்ட இடங்களில், கலேயிலிருந்து ஃபோக்டோனுக்குப் சிறிய படகொன்றில் பயணித்தவேளையில், தேம்ஸ் நதிக்கரையில் என எல்லா இடங்களிலும் தான் காதலில்  வீழ்ந்த அந்த ஊரைப்பற்றி மொரான்ழ் பேசாத நேரமில்லை.

 

 • அது என்னுடையது, புரியுதா, என்னிடமிருந்து அவர்கள் பறித்துக்கொண்டார்கள்.

 

 • தைரியமாக இரு, திரும்ப அதைக் காணும் நாள் வரும்.

 

 • அதற்காகத்தான் நான் இன்னமும் உயிர் வாழ்கிறேன், உன்னையும் ஒரு நாள் அங்கு அழைத்துப்போவேன், கண்டிப்பாக நடக்கும், இது சத்தியம்.

 

சத்தியம்  நமக்குக் கட்டுப்பட்டதா என்ன. வழ்க்கை விருப்பங்களைக் காட்டிலும் பலம் வாய்ந்தது. புகழ்பெற்ற எண்ணிக்கையற்ற நகரங்களைக் காண்பதற்கு யுத்தம் ராணுவவீரர் சொகோனுக்கு சந்தர்ப்பத்தை அளித்தது, அதுபோலவே பெயர்களையும் எண்ணிக்கையையும் ஞாபகப்படுத்த முடியாத அளவிற்கு கிராமங்களையும் அதே யுத்தம் காண வகை செய்தது.  அவரை, மொரான்ழ் ஊர் வழியாகவும் அவருடனோ அல்லது அவரின்றியோ அழைத்துச் செல்ல நேரிட்டிருக்கலாம். ஆனால் ராணுவத் தலைமை வேறு வகையாக முடிவெடுத்தது. கதைசொல்லியின் வாழ்க்கையில் அதிசயம்போல அது நிகழ்ந்தது. அவருக்கு அது  கடவுளின் சமிக்கை.

 

அந்த அதிசயம், எதிர்பாராத அவருடைய தம்பியின் வருகையால் ஏற்பட்டது. அவருடைய கால் கள் ஒத்துழைக்க  மறுத்த நாளிலிருந்து இளைய சகோதரரை அவர் பார்த்ததில்லை. நஃபிஸாட்டு, போஸ் என்ற இடத்தில் வசிக்கிறார். டக்கார் நகருக்கு போவதற்கு முன்பாக இடையில் டியூர்பெல் வரை அவர் செல்லவேண்டியிருந்தது, வழியில்  துபாம்பூல், எனவே சேடாரை பார்த்து இரண்டொரு வார்த்தைப் பேசிவிட்டுப்போகலாமென வந்திருக்கிறார்.

 

 • இப்போதெல்லாம் நீ ‘தம்காரிட்’ டிற்கு வருவதில்லையென குடும்பத்தில் அனைவருக்கும் வருத்தம்.

 

 • பிரச்சினை, எனது கால்கள்.

 

 • கால்கள் பிரச்சினையெனில், பேருந்து பிடித்து வரலாமே!

 

 • எனக்கு நடந்து பழகிவிட்டது, என்றைக்கு கால்கள் வலுவிழந்துவிட்டன எனத் தெரிந்ததோ அன்றைக்கே இருக்கின்ற இடத்தைவிட்டு எங்கும் நான் நகரக்கூடாதென்பதற்கான அறிகுறி.

 

 • நீயும் உனது அறிகுறியும்!

 

 • அல்லாவின் கட்டளை!

 

 • இருக்கலாம். ஆனால் அவர் சொல்ல மறந்தாலும், நீயாக ஏதாவது கற்பனை செய்துகொள்வது வழக்கம்தானே, உனக்கு அதுதானே தொழில்.

 

 • எங்கே இந்தப்பக்கம்?

 

 • ‘Dak’art 2000 ல் கலந்துகொள்ள வந்தேன், கண்ணாடி ஒவியர்கள் பலர் கூடுகிறார்கள்.

 

 • Dak’art 2000?

 

 • கண்காட்சி. இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை ஆப்ரிக்கக் கண்டத்தில் நடக்கும் முக்கியமான ஓவியக் கண்காட்சி. த்யூர்பெல்லில் என்னுடைய மாணவன் ஒருவனை அழைத்துச்செல்ல வந்தேன், வழியில் உன்னைப் பார்க்கலாமென்று தோன்றியது.

 

 • நல்ல காரியம் செய்தாய். எனக்கும் வயதாகிறது நஃபிஸாட்டு.

 

 • அப்படிசொல்ல இன்னும் காலம் இருக்கிறது.

 

 • இல்லை அநேகமாக இதுதான் கடைசியாக இருக்கும். வேண்டாம், பதிலெதுவும் சொல்லவேண்டாம். இங்கே வர நினைத்து வந்தது, மிகவும் நல்ல விஷயம். நானும் உன்னைப்போல ஒருவன் வருகைக்காகத்தான் காத்திருந்தேன். என்னிடமொரு ரகசியம் இருக்கிறது. என்னுடைய மரணத்தோடு அந்த ரசியத்தையும் கொண்டுபோகக்கூடாதில்லையா ? தோட்டத்திற்கு ரகசியங்களோடு வருகிறவர்கள் பூக்களற்ற பாலையில் அவற்றை வைக்கிறார்கள்.

 

 • உனது ரகசியம் தீயசக்தியான பாம்புகள் என்பது உறுதி. உனது வழக்கமானக் கட்டுக்கதைகளில் ஒன்றா.

 

 • கிண்டல் வேண்டாம்! என்னிடத்தில் ஒரு ரகசியம் இருக்கிறது. ‘சாலைகள் நகரம் ‘ பற்றியது அந்த ரகசியம்.

 

 • நீ சொல்வதெதுவும் எனக்குப் புரியவைல்லை.

 

 • நாள் ஆக ஆக , மறதியும் அதிகரித்துவருகிறது. துண்டு துண்டாக ஊரின் மொத்தக் காட்சிகளும் ஒன்றன்பின்னொன்றாகஅதன் நிறத்தை இழந்துவருகின்றன. ஒரு நாள் அந்த ஊரையே இழக்க நேரலாம். என்னிடத்தில் எஞ்சியுள்ளவற்றில் கொஞ்சமேனும் உனது நினைவில் பதிவாக வேண்டியவை. பத்திரமாக நீ கட்டிக்காக்கவேண்டுமென்பது எனது ஆசை. அதைத் தொலைக்க எனக்கு விருப்பமில்லை. உனது தலையில் இருக்கின்ற அந்த மிச்சத்தை, அவ்வப்போது நீ எவரிடமாவது தெரிவிக்கவேண்டும்.

 

 • உன்னைபோல நானொரு கதைசொல்லி இல்லை. அந்த நகரம் உனக்குத்தான் சொந்தம். உன்னுடைய கற்பனைதானே?

 

 • இல்லை, கற்பனையில்லை. ஆமாம்! அப்படியும் சொல்லலாம். ஆனால்  அது நிறமிழந்துவருகிறது., இரப்பரால் கலைபட்ட படத்தைப்போல. எனக்கு மறதி அதிகம். நிறைய விஷயங்களை மறந்துவருகிறேன். சாலைகள் நகரம் எப்படி இருக்குமென்பது சுத்தமாக எனக்கு மறந்துவிட்டது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. எவரிடமிருந்தேனும் எனக்குத் தெரியவந்ததா? இல்லை நானாக இட்டுக்கட்டியதா? கதைசொல்லியின் வாழ்க்கையைக்காட்டிலும் , இந்தவாழ்க்கை விநோதமானது. உதாரணத்திற்கு எப்படிசொல்வது, ஒரு வீட்டை எடுத்துக்கொள்வோம். மிகவும் எளிமையான வீடு, , ஒரு நாள் அதைப்பற்றி விவரிக்கிறோம். மறுநாள் அது அரண்மணையாக மாறிவிடுகிறது.  காலங்கள் கடக்கின்றன, ஆரம்பத்தில் அது வீடாகத்தான் இருந்ததா என்ற கேள்வி எழுகிறது. இதுதான் லூசியான் நகரத்தின் விஷயத்தில் நடந்தது.

 

 • லூசியான்?

 

 • லூசியான் மொரான்ழ. அவன் என்னுடைய கைகளில் இறக்கவில்லை. என்ன செய்ய சொல்ற ?  சினேகிதன் ஒருவன் நமது கைகளில் மடிவது அத்தனைச் சந்தோஷம் அளிக்கக் கூடியதா ? இக்கட்டத்தில் கேட்பவர்கள் உருகிப்போய்விடுவார்கள். அவனுக்கு எந்நேரமும் தனது ஊரப்பற்றிய பேச்சுதான். யுத்தம் தொடங்கியதும் அதைப்பற்றி எழுதவேண்டுமென நினைத்தான். அந்த நூலுக்குத் பெயர்கூட வைத்து எனக்குச் சொல்லவும் செய்தான். எல்லாவற்றையும் போலவே அதுவும் எனக்கு மறந்து விட்டது. தற்போது அவைகளெல்லாம் ஒன்றோடொன்று  கலந்துள்ளன. முன்புபோல லூசியனுடைய ஊரைப்பற்றி எதையும் கூற முடிவதில்லை .

 

 • இதில் கவனத்தில் கொள்ளவேண்டியது, முடிந்தமட்டும், அதைச்சொல்வது.

 

 • நினைவிலிருந்து கூற முடிகிற சிற்சிலவார்த்தைகளுக்கு உண்டான பொருள்  ஞாபகத்திலில்லை. அச்சொற்கள்   தரையில் கொட்டிய கற்களைப்போல  கிடக்கின்றன, அவை வீடுகட்ட ஒருபோதும் உதவப்போவதில்லை….ஹூல்ட்ஸ்(Hultz)! என்ன அர்த்தம்? ஹூல்ட்ஸும் அம்பும்  என்றால் என்ன?  அது பற்றி தெரிந்துவைத்திருக்கிறேன் . எனக்கு அதுபற்றி முன்பே தெரியுமென்பது,  உறுதி.  ஹூல்ட்ஸ், நான் இட்டுக்கட்டிக் கூறியதல்ல., எனக்கு ஏற்கனவே தெரிந்துள்ளது, ஆனால் தற்போது அதுபற்றிய காரணம்  வயதினால் மறந்துபோய்விட்டது.

 

 • ஒருவேளை வில் வீரனாக இருக்குமோ?

 

 • இருக்கலாம். புகழ்பெற்ற வில்வீரனாக இருந்து, அவனைப்பற்றி மொரான்ழ் என்னிடம் கூறியிருக்கலாம்.. ஆனால் ‘அம்பு’ என்ற வார்த்தை என்னைக் குழப்புகிறது. அதைத்தான் தேடுகிறேன். என்னுடைய கதையுடன் இணைத்து பொருத்தமாக கூறும் முயற்சியில் தற்போது தோல்வி. லூசியன் கூறிய வார்த்தைகளை ஞாபகப்படுத்த முடிகிறது. அவற்றினால் பயனேதுமில்லை என்கிறபோதும்  தெரிவிக்கிறேன்.  எவ்வித பிரயத்தனமுமின்றி  வெகு எளிதாக அவற்றை  நினைவுபடுத்தமுடிகிறது. எப்படியென்று கூறத் தெரியவில்லை. அதாவது  என்ன மொழியென்று தெரியாமல், ஒரு மொழியில் உரையாடுவதைப்போன்ற உணர்வு.

 

 • கேட்பவர்கள் மகிழ்கிறார்கள் இல்லையா.

 

 • ‘ஸெல்’  என்றொரு  தாயைப் பற்றி அடிக்கடிக் குறிப்பிடுவான். உதராணத்திற்கு இதையே கூட எடுத்துக்கொள்ளலாம் . இதற்கு என்ன பொருள்?  இது போலவே  அவன்: « ஆறொன்றிர்க்கு  தீவு என்று பெயர் ”  எனக்கூறிக்கொண்டிருப்பான்.  அதற்கு என்ன அர்த்தம்?  ஆறு ஒரு தீவாக இருக்க முடியாது. எதற்காக சிரிக்கிறாய்? நான் இட்டுக்கட்டியதில்லை.. அவந்தான் தீவு என்று குறிப்பிட்டான். என்னால் உறுதியாகக் கூறமுடியும்.  அதை நான் மறக்கவில்லை. ஆனால் ஆறொன்றை நதியென்று  எப்படிச் சொல்வார்கள் . ஏன் சிரிக்கிறாய்?  அடுத்துதாக: «’  பெத்தீத் பிரான்சு’ பக்கம் நடத்துவிட்டு வரலாமா? » என்று கேட்பான். ‘பெத்தீத் பிரான்சு’  என்பதென்ன? ஏன் சிரிக்கிறாய்? அவன் : « அது என்னுடைய ரூழே  தெ லீல் (Rouget de Lisle) நகரத்தில் இருக்கிறது » என்பான்.

 

 • ‘லா மர்செய்யேஸ்’ (La Marseillaise)பாடுவானா.

 

 • ஆமாம்! உனக்கு எப்படித் தெரியும்?

 

 • அதுதானே உன்னுடைய ரகசியம்? உன்னுடைய மர்மமான நகரம் அதுதான் இல்லையா ?  உண்மையில் இந்த உலகை  ஏமாற்ற முடியுமென்று நினைக்கிறாயா ? இந்த மர்மத்தைக் கட்டிக் காக்க நீ ஆயிரம் தந்திரங்கள் கண்டுபிடிக்கலாம், தவிர அதில் நியாயமும் இருக்கிறது . மர்மத்தைக் கையாளத் தெரியாத கதைசொல்லி வந்த வேகத்தில் காணாமற் போய்விடுவார். ஆனால் உன்னுடைய கதை தெளிவாக இருக்கிறதே ! கேட்பவர்கள் இதையெல்லாம் ஊகிக்க மாட்டார்களென்றா நினைக்கிறாய் ? சரிதான் ! அனைவருமே ஊகிக்க மாட்டார்கள் என்பதை நம்ப நான் தயாரில்லை, வேண்டுமானால் பெரும்பாலோர் என்று வைத்துக்கொள்ளலாம்.. நீ தெரிவிக்கிற ‘ஸெல்’ என்கிற இந்தத்  தாய் யார், பிறகு ‘ஹூல்ட்ஸ் மற்றும் அவருடைய அம்பு’  என்றால் என்ன என்பது போன்றவற்றைத் தெரிந்தவர் ஒருவர் கூட இல்லை என்று வேண்டுமானால் உறுதியாகக் கூறலாம்., எனக்குக்கூட அவைகுறித்து எதுவும் தெரியாதென்பதும்  உண்மை. ஆனால்  நீ குறிப்பிடும் நகரம் கேட்பவர் அனைவருக்கும் புதிரானது அல்லது மர்மமானதென்றல்  யார் நம்புவது. உன் முதுகின் பின்னால், “மர்ம நகரத்தின் விஷயத்தில், நம்மை முட்டாளாகிவிட்டதாக நினைக்கிறான் மனுஷன் » என நாகரீகமாக கூறி நகைப்பார்கள் என்பது நிச்சயம்.

 

 • அப்படி யாரும் இதுவரைச் சொன்னதாகத் தெரியவில்லை.

 

 • நம்புகிறேன்! காரணம் உன்னை வருத்தப்பட வைக்கக்கூடாது என்பதற்காக.  தவிர அப்படி க்கூறி அவர்களுக்குக் கிடைக்கும் சந்தோஷத்தைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது எனவும் நினைக்கிறார்கள். கதை சொல்லிகள், எழுதுகிறவர்களும்  ஒன்று என்பது உனக்குத் தெரியுமா ? கேட்பதும் வாசிப்பதும் ஏதோ முதன் முதலாக நடப்பதுபோன்ற உணர்வுடன் நிகழ்கிறது. ஒரு நூலில் தவறாமல்  அன்பு, மரணம், பொறாமை, நல்லவை, கெட்டவை …..நகரம் என அனைத்தையும் சந்திக்கிறோம். கதைசொல்லலிலும் தீயவற்றைக் களைய தேவதைகள் வருவார்கள், நல்ல பூதங்கள் மேகத்தின் மீது நடக்கலாம்., மலைகளை இடம்பெயர்த்துவைக்கலாம்., கெடுமதிகொண்ட ராஜாக்களை,  அழகான இளம் வீரன் சண்டையிட்டுக்கொன்று , அவர்களுடைய அழகான இளவரசியை மணக்கலாம்.. மர்மமான நகரம் வேறேன்ன !

 

 • ஆக என்னால் எந்தப்பயனுமில்லை.

 

 • இல்லை என்று சொல்ல முடியுமா?  கதை கேட்கிறவர்களுக்கு  நீ சந்தோஷத்தை தருகிறாயே. அவர்கள் உன்னை நம்புவதில்லை , ஆனால் எப்படிச் சொல்லவேண்டுமோ அப்படிச் சொல்கிறாய், அவர்களை சிரிக்கவும் அழவும் உன்னால் செய்யமுடியும் என்றால், வீட்டை அரண்மணை ஆக்க முடியுமெனில் , பருத்திப் பறிக்கும் பெண்ணைத் தேவதை ஆக்க இயலுமென்றால், அவர்களுக்கு மகிழ்ச்சிதானே. எனவே திரும்ப உன்னிடம் கதைகேட்க வருகிறார்கள்.உன்னுடைய ரகசியமென்பது உனது சினேகிதனின் ஊரல்ல, உன்னுடையது.  அதை நீ ஒருவரிடமும் தாரைவார்க்க முடியாது. ஆனால் உன்னால் கொடுக்கக் கூடியதென்று ஒன்றுண்டு, அது வேறொரு ரகசியம்.

 

 • அப்படியொரு வேறொரு ரகசியம் எதுவும் என்னிடத்திலில்லை.

 

 • நீ என்னிடம் அதுபற்றி பேசியதுண்டு என்று கூறினால்? அதாவது உன்னுடைய் பொய்யான பெயர் பற்றியது அது.

 

 • ஐம்பது ஆண்டுகளின் முடிவில் அதற்கு உண்மையிலேயே உரிமையுடையவனாக மாறியுள்ளேன்.

 

 • ஸ்லாபூகூம் தானே! நமது குடும்பத்தில் அது குறித்து பேசியதுண்டு. இப்படி சொல்கிறேனே வருத்தப்படவேண்டாம். எங்களுக்கெல்லாம், உண்மையில் இதெல்லாம் முட்டாளதனமாகப் பட்டது. நகைப்பிற்குரிய இப்ப்டியொரு பெயரை அப்படி எங்குதான் கண்டுபிடித்தாய்?

 

 • முதியவர் சிரித்தார். கெட்டிக்கார கதைசொல்லி, கேட்பவரின் ஆர்வத்தை மேலும் கூட்டுவ்தற்கு விரும்பினார். பிறரைக் காதுகொடுத்து கேட்கச்செய்யும் காரியம் அத்துணை எளிமையானதல்ல என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அவருடைய கலையின் வெற்றிக்கான காரணமும் அதுதான். பெரும்பாலானவற்றை  மறந்திருந்த போதிலும் ஸ்லாபூகூம் பெயரின் நதிமூலத்தை மறந்தவரில்லை. அதனைத் உறுதிபடுத்திக்கொள்ள , அழகானக் காட்சி சித்திரங்கள், கவனத்தை தக்கவைத்துக்கொள்ள உதவிய  சூத்திரங்கள் என்று தேடுகிறார். தம்முடைய சகோதரனின் கேள்வியினால் முடிவுறாத  கதையொன்றிர்க்காக பயணிப்பதைபோல உணர்கிறார். ஆனால் அதைத் தொடரவிருப்பமில்லை. அந்த ஞானஸ்நானத்திற்கு மொரான்ழிடம் பெரிதும் கடன்பட்டுள்ளார். அதிகம் மிகைப்படுத்தாமல் சொல்லத் தொடங்குகிறார்.

 

ஸ்லாபூகூம் !  முதியவரின் அல்ஸாஸ்  சினேகிதன்  தன்னுடைய நகரம் குறித்து அனைத்தையும் பிறர் தெரிந்துக்கொண்டிருக்கிறார்களென்றுகவலைப் பட்டுக்கொண்டிருந்த நிலையில் ஒரு நாள் : «  ஹூனர்(Huns) களின் படையெடுப்பிறகு அவர்கள்  வேளியேறிய பின்னர் அந்த ஊரை ‘ஸ்ட்ராட்பூர்கம்’ (Strateburgum) என்று அழைக்கத் தொடங்கினார்கள். » எனக்கூறினான். அன்றிலிருந்தே எங்கள் இருவரிடை ‘ஸ்லாபூகூம்’ வேடிக்கைச் சொல்லாக உருமாறியது. சேடார் ‘ஸ்ட்ராட்பூர்கம்’ ஊரின் பெயரை  உச்சரிக்க முயன்றார். பிரெஞ்சு மொழியில் ஊரின் பெயரிலுள்ள ‘r’ என்ற எழுத்தில் தடுமாறினார். எழுத்தைக் கூட்டிச் சரியாக உச்சரிக்க முயன்றபோது திக்கினார். சினேகிதனின் காதில் ‘ஸ்லாபூகூம்’  என்று விழுந்திருக்கிறது. அவன் வாய்விட்டுச் சிரித்தான். முடிவில் “சரியான மரமண்டை ஸ்லாபூகூம்”  என்று கூற இருவரும் சேர்ந்து சிரித்தார்கள்.  இது நடந்தது அல்ஸாஸ் கிராமத்தில்  வயதானத் தம்பதியினர் இல்லப் பரணில். மொரான்ழ் ‘செகோன்’ என்று அழைக்காமல்  அன்றிலிருந்து  ‘ஸ்லாபூகூம்’ என்று கூப்பிட ஆரம்பித்தான்.

 

 • வேறு பெயரில் அவன் அழைப்பதில்லை. அவன் ஸ்லாபூகூம் என்று அழைக்கிறபோதெல்லாம்  ஒவ்வொரு முறையும் நாங்கள் சிரித்தோம். அச்சிரிப்பு நெருக்கடியான தருணங்களிலும் தொடர்ந்தது. அவ்வாறான நெருக்கடியானத் தருணங்கள் கலே நகரம் வரை ஏற்பட்டன. ஸ்லாபூகூம் என்ற பெயர் எங்கள் இருவருக்கும் ஒருவிதத் துணிச்சலைத் தந்தது. அவன் கடைசியாக அப்பெயரை எப்போது உச்சரித்தான் என நினைவுகூர முடியாதது எனக்கு வருத்தமளிக்கிறது.

 

 • ஓ… அதைப் பெரிதுபடுத்தாதே. சில விஷயங்கள் அப்படித்தான். எதற்காக என்று விளங்கிக்கொள்ளாமலேயே , முக்கியமற்றவை, முக்கியமனவையாக உருமாறுகின்றன.

 

 • உண்மைதான்! லண்டனில் நாங்கள் பிரிந்தபோது, விமானி ! ஆம் மொரான்ழிற்கு விமானியாக வரவேண்டுமென்ற  எண்ணமிருந்தது. அதுதான் காரணமாக இருக்கவேண்டும் , வேறு காரனங்களுக்கு வாய்ப்பில்லை. அவன் என்னிடம்  «ஹாய், ஸ்லாபூகூம்!» ஆமாம் அப்படி அழைத்ததாகத்தான் நினைவு. பிறகு நாங்கள் வழக்கம்போலச் சிரித்தோம். இம்முறை கடைசியாக. ஸ்லாபூகூம் !  பிரச்சினை உனக்கு வேடிக்கையாக இருக்கிறதில்லையா ?

 

 • இனி இருக்காது.

 

செகோன் கதைசொல்லியாக இருப்பதென்று  முடிவெடுத்தபோது ” ஒருவரும் கேட்டிராதப்பெயரைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் ”  என்ற எண்ணத்தில் இப்பெயரைத் தேர்வு செய்தார். அவருடைய மாமனாரும், «  நல்ல பெயர், உன் சினேகிதன் நினைவாக இப்பெயர் நல்ல யோசனை” எனக்கூற, அன்றிலிருந்து ஸ்லாபூகூம். மொரான்ழ், நினைவாக மட்டுமல்ல, இருவரும் சந்தித்த நெருக்கடிகள், பட்ட துயரங்கள், அச்சங்கள், சிரித்த சிரிப்புகள் என்று அனைத்தின் நினைவாகவும். அவரோடு ஒட்டிக்கொண்டது.

 

 • சாலைகள் நகரம் எங்கிருக்கிறதென்று தெரியும். அங்கு செல்லவேண்டுமென்று அடிக்கடி எண்ணம் வரும். அதொரு கனவு! செல்ல நேர்ந்தால், சினேகிதனிடம் பேசமுடியும், அவனும் பதில் கூறுவான். ஒருவேளை உலக முடிவில் உரையாடுவதற்கென்றே கூட எங்களிடையே விஷயங்கள் இருக்கலாம். ஆம் சாலைகள் நகரம் எங்கே இருக்கிறதென்று தெரியும். அதன் உண்மைப்பெயர் தெரியாதென்றுதான் கூறிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அது உண்மையல்ல. ஆனால் நான் கூறுவது போல அந்த ஊரில்லை. அதுவும் தவிர எனது நண்பன் என்னை எப்படி அந்த ஊரைப் பார்க்கவைத்தானோ அதுபோலவும் இல்லை. அங்கே செல்வதற்காக பிரார்த்த்னைகூட செய்தேன்.

 

 • நீ போவாய்!

 

 • முடியாதென்று எனக்குத் தெரியும். நல்ல வகை பூதங்களையெல்லாங்கூட எனது கதைகளுக்கென உருவாக்கியதுண்டு, ஆனல் இந்த்க்கிழவன் சேடாரை அங்கு அழைத்துப்போக ஒன்றை படைக்கத் தவறிவிட்டேன்.

 

 • போகத்தான் போகிறாய். ஸ்லாபூகூம்! உனக்காக அந்த ஊரில் யாரேனும் காத்திருக்கிறார்களா ?

 

அவருடைய கதைகளில் முதியவரான இக்கதைசொல்லி இதுபோன்ற பல பதில்களை, வாக்குறுதிகளை, பிரியமானவர்களிடம் உரைக்கிற “மீண்டும் சந்திப்போம்” என்பது போன்ற பிரியா விடை வார்த்தைகளை   கற்பனைசெய்து இடம்பெறச்செய்திருக்கிறார் . « நீ போவாய் ! » என நஃபீகாட்டு அளித்த ஊக்கம்,  சாகும் தறுவாயில் இருக்கிற மனிதர்களிடத்தில் அவர்களுடைய எதிர்காலத் திட்டம் குறித்துப் பேசுவதை ஒத்திருந்தது. முதியவரின் சகோதரர் பயனற்றதொரு ஆறுதலைத் தந்துவிட்டு க் கிளம்ப அவருக்கு அதை உணர்த்த முனைந்தவர்போல, அமைதியானதொரு எள்ளல் கலந்த புன்னகையை உதிர்த்தார்.

 

(தொடரும்)

 

Series Navigationதிருப்பூர் : ” களவாடப்பட்ட குழந்தைப் பருவம் “ : நூல் வெளியீடுயானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 10
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *