சத்யஜித்ரேயின் சிறுகதைகள்

This entry is part 3 of 21 in the series 16 அக்டோபர் 2016

 satyajit-ray

சத்யஜித்ரேயின் தாத்தா உபேந்திர கிஷோர் ரே என்பவர் 1913 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்காக வங்கமொழியில் சந்தேஷ் என்னும் பெயரில் ஓர் இதழைத் தொடங்கி நடத்தினார். அவரைத் தொடர்ந்து சத்யஜித் ரேயின் தந்தையான சுகுமார் ரே அந்த இதழுக்குப் பொறுப்பாசிரியராக இருந்தார். அவருடைய காலத்துக்குப் பிறகு சந்தேஷ் நின்றுவிட்டது. சாந்தி நிகேதனில் படித்துமுடித்த பிறகு நாற்பதுகளில் ஒரு விளம்பர நிறுவனத்தில் ஓவியராக வேலைக்குச் சேர்ந்த சத்யஜித் ரே அதைத் தொடர்ந்து திரைத்துறையில் ஈடுபாடு கொண்டவராக மாறினார். 1961ஆம் ஆண்டில் ஏதோ ஓர் ஆர்வம் உந்த தன் நாற்பதாவது வயதில் சத்யஜித்ரே தன் நண்பரொருவருடன் சேர்ந்து நின்றுபோயிருந்த சந்தேஷ் இதழுக்குப் புத்துயிரூட்டத் தொடங்கினார். இதழில் தன் பங்களிப்பாக சில படைப்புகள் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் சிறுவர்களுக்காக ஏராளமான சிறுகதைகளை தொடர்ந்து எழுதினார். சிறுவர்களுக்கானவை என்பதால், சுவாரசியத்தை முக்கிய நோக்கமாகக் கொண்டு புதிய புதிய பின்னணியில் கற்பனை வளத்தோடு எழுதினார் ரே. தன்  திரைப்படங்களின் வழியாக அவர் ஒரு தவிர்க்கப்பட முடியாத இந்திய ஆளுமையாக வளர்ந்த பிறகு எழுபதுகளிலும் எண்பதுகளிலும் அவருடைய சந்தேஷ் சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இதழ்களில் வெளிவரத்தொடங்கின. பிறகு புத்தகமாகவும் தொகுக்கப்பட்டு வெளிவந்தது.

arputharaj

சத்யஜித் ரே எழுதிய சிறுகதைகள் என்னும் காரணத்தைவிட, இவற்றை மொழிபெயர்த்ததன் பின்னணியை மொழிபெயர்ப்பாளர் அற்புதராஜ் எழுதியிருக்கும் காரணமே என்னை இப்புத்தகத்தை உடனே படிக்கத் தூண்டியது. ஆங்கில இதழ்களில் இக்கதைகள் வெளிவந்த எண்பதுகளில் அற்புதராஜ் ஓர் ஆசிரியராக பணியாற்றியவர். அக்கதைகளை ஆங்கிலத்தில் படித்ததுமே, அவற்றின் புதுமை காரணமாக தொடர்ச்சியாக விரும்பிப் படித்துவந்தார். தம் மாணவர்களுக்கும் தம் பிள்ளைகளுக்கும் சொல்லும் பொருட்டு அக்கதைகளை தமிழில் மொழிபெயர்த்து வைத்துக்கொண்டார். ஓய்வு நேரங்களில் அவர்களுக்குப் படித்துக் காட்டி உற்சாகமூட்டும் வேலையையும் செய்தார். குழந்தைகளுடன் புதுமையைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என அவருக்குத் தோன்றிய அந்த எண்ணம் எனக்கு மிகவும் முக்கியமாகத் தோன்றியது. ஓர் ஆதர்ச ஆசிரியருக்கு அல்லது ஆதர்ச அப்பாவுக்கு மட்டுமே இருக்கக்கூடிய குணங்கள் அவை. இளம்பருவத்தில் அவர் மொழிபெயர்த்த சிறுகதைகள் பணியிலிருந்து ஓய்வுபெற்றிருக்கும் இப்போதுதான் நூல்வடிவம் பெற்றிருக்கின்றன.

குழந்தைகளுக்கான சிறுகதைகள் என இன்று தமிழில் எழுதப்படும் எந்தக் கதையையும் இக்கதைகளுடன் ஒப்பிடவே முடியாது. தமிழில் குழந்தைகளுக்கான கதைகள் எவ்வளவு பின்தங்கியிருக்கின்றன என்பதை  ஒரே வாசிப்பில் நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது. இத்தொகுப்பின் பதினோரு கதைகள் உள்ளன. படோல் பாபு ஒரு சினிமா நட்சத்திரம் என்னும் சிறுகதையை மட்டும் இலக்கியவகையிலான சிறுகதை என வரையறுக்கலாம். மற்ற பத்து சிறுகதைகளும் சிறுவர்களின் வாசிப்புகுரியவை. புதுப்புதுக் களங்களுடன் உள்ள அக்கதைகள் அடுத்து என்ன, அடுத்து என்ன என ஆவலைத் தூண்டும் விதமாக எழுதப்பட்டுள்ளன. கதை எழுதும் கலையின் பல சாத்தியப்பாடுகளை ரே முயற்சி செய்து பார்க்கிறார் என்பது முக்கியமானதொரு அம்சம்.

கதைகளைக் கட்டமைக்க ரே மேற்கொள்ளும் தொழில்நுட்பம் மிகமுக்கியமானது. அவர் கையாளும் உத்திகளை உத்தேசமாக இப்படி வரையறுத்துக்கொள்ளலாம்.

  1. ஒரு கதையைப்போல இன்னொரு கதையை வடிவமைப்பதில்லை. ஒவ்வொரு கதைக்கும் ஒரு புதிய வடிவத்தைக் கற்பனையால் அடைதல்.
  2. புதிய புதிய களங்களை மிகவும் நம்பகத்தன்மையோடு அறிமுகப்படுத்துதல்.
  3. அபூர்வமானதொரு வரலாற்றுத் தகவல், விசித்திரமானதொரு அறிவியல் உண்மை, புராண நம்பிக்கை என ஏதேனும் ஒரு சின்ன அம்சத்தை கதையின் மையமாக தேர்ந்தெடுத்தல்.
  4. கட்டற்ற கற்பனையாற்றலோடு கதைநிகழ்ச்சிகளை இணைத்துக்கொண்டே போதல்

’அண்டல்காலோர்னிஸ் என்பது மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பறவை. அது மனிதனைப்போலவே உயரமானது’ என்பது ஒரு சின்ன தகவல். இதை மையமாகக் கொண்டு ரே எழுதியிருக்கும் ‘பெரும்பறவை’ என்னும் சிறுகதை ரேயின் கற்பனையாற்றலுக்கு மிகச்சிறந்ததொரு எடுத்துக்காட்டு. அடுத்தடுத்து அவர் காட்சிகளை நகர்த்திக்கொண்டு செல்லும் விதம் பாராட்டும் விதத்தில் உள்ளது.

துளசிபாபுவும் ஜகன்மாய் தத்தும் நெருங்கிய நண்பர்கள். அவ்விருவருக்கிடையே நிகழும் உரையாடலோடு கதையைத் தொடங்குகிறார் ரே. ஜகன்மாய் தத் தன்னைச்சுற்றி நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கிப்போகும் குணமுள்ளவர். துளசிபாபு இந்த உலகில் எதுவுமே ஆச்சரியமானதல்ல என்பதுபோல நடந்துகொள்பவர். அவருக்கு ஆச்சரியம் அளிக்கும் ஒரே அம்சம் ஒரு குறிப்பிட்ட உணவு விடுதியில்  கிடைக்கும் மட்டன் கபாப். துளசிபாபுவுக்கு மூலிகை மருத்துவத்தில் ஈடுபாடு உண்டு. ஒருவகையில் பரம்பரை மருத்துவர். உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலுள்ள சக்ராபரணி என்னும் பெயருடைய முக்கியமான மூலிகை பக்கத்தில் மலைக்குகையில் இருப்பதாகவும் அந்த மூலிகை பற்றி அங்கு வாழும் ஒரு முனிவருக்குமட்டுமே தெரியும் என்பதாகவும் ஒரு தகவல் அவருக்குக் கிடைக்கிறது. உடனே தன் நண்பரை அழைத்துக்கொண்டு அக்குகைக்குச் செல்கிறார். முனிவரைச் சந்தித்து, மூலிகையின் இருப்பிடத்தைப்பற்றியும் பயன்பாடு பற்றியும் தெரிந்துகொள்கிறார். அவர் குறிப்பிட்டுச் சொன்ன இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து அந்த மூலிகைகளைப் பறித்துச் சேகரித்துக்கொள்கிறார். திரும்பும் சமயத்தில் ஒரு செடியின் வேரடியில் கிடந்த முட்டையொன்று உடைந்து ஒரு குஞ்சு வெளிவருகிறது. கோழிக்குஞ்சு போல காணப்படும் அக்குஞ்சு அவர்களைத் தொடர்ந்து நடந்துவருகிறது. மூலிகைப்பையில் அந்தக் குஞ்சையும் எடுத்துப் போட்டுக்கொள்கிறார் துளசி பாபு. தன் வீட்டில் வைத்து வளர்க்கிறார்.  அதற்கு பில் என்று பெயரிட்டு செல்லமாக அழைத்துக் கொஞ்சுகிறார். அதற்காகவே ஒரு கூண்டு செய்யப்படுகிறது. அதன் வளர்ச்சி வேகம் ஆச்சரியமளிக்கிறது. இரு வாரங்களுக்கு ஒருமுறை கூண்டின் அளவைப் பெரிதாக மாற்றவேண்டியிருக்கிறது. மெல்ல மெல்ல அது தாவர பட்சினி அல்ல, மாமிச பட்சினி என்னும் உண்மையும் புரிகிறது. அப்பறவைக்காகவே தனிபட்ட விதத்தில் மாமிசம் வரவழைக்கப்பட்டு அதற்கு அளிக்கப்படுகிறது.  கிட்டத்தட்ட ஒரு மனிதனுடைய உயரத்துக்கு அது வளர்ந்து நிற்கிறது. அலகுகள் அச்சமூட்டும் வகையில் கூர்மையாகவும் பருத்தும் உள்ளன. ஒருநாள் இரவில் பறவை கூண்டுக் கம்பியை வளைத்து தப்பித்துவந்து எதிர்வீட்டுப் பூனையைக் கொன்று சாப்பிட்டுவிடுகிறது. அது ஓர் ஆபத்தான பறவை என்பதை முதன்முதலாக உணர்கிறார்.

அடுத்த நாளே வாடகைக்கு ஒரு வண்டியை அமர்த்திக்கொண்டு கூண்டோடு அந்தப் பறவையை அதில் ஏற்றுக்கொண்டு, முட்டையாக அதைக் கண்டெடுத்த இடத்துக்கே செல்கிறார். அங்கே அதை இறக்கிவிட்ட பிறகு திரும்பிவிடுகிறார். பறவையைப்பற்றி விசாரிக்கும் ஜகன்மாய் தத்திடம் பறவை தப்பியோடிவிட்டது என்று சொல்கிறார். கபாப் கடைக்கு போவதை நிறுத்திவிடுகிறார்.

சில வாரங்களுக்குப் பிறகு, காட்டுக்குள் உலவும் அதிசய விலங்கு என்னும் தலைப்பில் செய்தித்தாளில் பரபரப்பான ஒரு செய்தி வெளியாகிறது.  காட்டுப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்குள் யாருமற்ற தருணங்களில் நுழையும் விலங்கு கோழிகளையும் ஆடுகளையும் தூக்கிச் சென்று உண்டு வீசிவிடுகின என்னும் செய்தி எல்லா இடங்களிலும் பரபரப்பாக வாசிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து சில நாட்களிலேயே அந்த விலங்கைப் பிடிக்கச் சென்ற வனத்துறை ஊழியர்களில் ஒருவர் அந்த விலங்கின் தாக்குதலால் மரணமடைந்துவிட்டதாகச் செய்தி வருகிறது.

செய்திகளைத் தொடர்ந்து படித்துவரும் துளசிபாபு மீண்டும் காட்டுக்குள் செல்கிறார். இம்முறை ஜகன்மாய் தத்தையும் அழைத்துச் செல்கிறார். ஒரு முட்டையாக அந்த விலங்கு கண்டெடுக்கப்பட்ட மூலிகைச்செடிப் புதருக்கு அருகில் நின்று பில் என்று பெயர்சொல்லி அழைக்கிறார். அவர் குரல் காடேங்கும் பட்டு எதிரொலிக்கிறது. சில நிமிடங்களுக்குப் பிறகு, மனித உயரத்துக்கு வளர்ந்து நிற்கும் பெரும்பறவை வந்து நிற்கிறது. ’நான்  வெட்கப்படுவதற்கு நீ காரணமாக இருந்துவிட்டாய். இனிமேலாவது ஒழுங்காக இரு’ என்றபடி தன்னோடு வாளியில் கொண்டு வந்திருந்த இறைச்சித்துண்டுகளை பறவையின் முன்னால் வைக்கிறார். ஆவலுடன் அப்பெரும்பறவை அந்த இறைச்சித்துண்டுகளை எடுத்துச் சாப்பிடுகிறது. இரு நண்பர்களும் நகரத்துக்குத் திரும்பிவிடுகிறார்கள்.

அதற்குப் பிறகு பறவையைப்பற்றி எவ்விதமான பரபரப்பான செய்தியும் இல்லை. ஜகன்மாய் தத்தின் மனத்தில் ஒரு சந்தேகம் தோன்றுகிறது. துளசிபாபு வைத்த உணவில் நஞ்சு கலந்திருக்குமோ என்று அவர் நினைக்கிறார். ஆனால் நேருக்கு நேர் கேட்க தயக்கம் கொள்கிறார். அவர்களுடைய அடுத்து சந்திப்பில் அந்தப் பறவையைப்பற்றிய பேச்சு தானாகவே வந்துவிடுகிறது. பறவைக்குக் கொடுத்த உணவில் சக்ராபரணி மூலிகைச் சாற்றை கலந்து கொடுத்ததாகச் சொல்கிறார் துளசிபாபு. புரியாமல் குழம்பி நிற்கும் ஜகன்மாய் தத்துக்குப் புரியும் வகையில் ‘மாமிசம் உண்ணும் நாட்டத்தை விலக்கி தாவரவகை உணவுகள்மீது நாட்டத்தைத் திருப்பிவிடும் ஆற்றல் சக்தி சக்ராபரணி மூலிகையில் இருக்கிறது. அதை அனுபவத்தின் அடிப்படையிலேயே உணர்ந்துகொண்டேன். அதனால் அச்சாற்றையே பில்லுக்கும் கொடுத்தேன்’ என்று சொல்கிறார் துளசிபாபு.

ஒரு சின்ன தகவலை மையப்பொருளாக்கி, சுவாரசியம் குன்றாத வகையில் கதையைப் பின்னும் கலைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு. பத்து கதைகளிலும் இப்படி புதுமை நிறைந்த தகவல்களே கருவாக உள்ளன. அவற்றைக் கதைகளாக நிகழ்த்துவதற்கு ஏற்ற களங்களை மாறிமாறி உருவாக்குகிறார் ரே.

ஒரு நாய் சிரிக்கிறது என்பதுதான் அசமஞ்ச பாபுவின் நாய் என்னும் கதையில் பயன்படுத்தப்படும் மையத்தகவல். தனக்கே உரிய கற்பனையாற்றலுடன் அதைக் கதையாக மாற்றுகிறார் ரே.  நாய் வளர்க்கும் பல குடும்பங்களைப் பார்த்து அசமஞ்ச பாபுவுக்கும் நாய் வளர்க்கும் ஆசை உருவாகிறது. ஆனால் அதற்காக கொடுக்கவேண்டிய விலையை நினைத்து அந்த ஆசையை ஒத்திப் போடுகிறார். ஒருநாள் கடைத்தெருவிலிருந்து திரும்பி வரும் வழியில் ஒரு சிறுவன் ஓர் அட்டைப்பெட்டிக்குள் வைத்து ஒரு நாய்க்குட்டியை வைத்து விற்பதைப் பார்க்கிறார். ஏழரை ரூபாய்க்குப் பேரம் பேசி அந்த நாயை வாங்கிக்கொள்கிறார் அவர். அது பழுப்பு நிறத்தில் இருந்ததால் அதற்கு பிரெளனி என்று பெயர் வைக்கிறார். சின்னச்சின்ன கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும் விதத்தில் அதற்குப் பயிற்சியளிக்கிறார்.

இப்படியே நாட்கள் கழிகின்றன. ஒரு நாள் அவர் கால் முரிந்த நாற்காலியிலிருந்து வேகமாக எழுந்திருக்கும் தருணத்தில் கீழே விழுந்து காயமடைந்துவிடுகிறார்.  அதைப் பார்த்து நாய் சிரிக்கிறது. அவர் ஆச்சரியத்தில் உறைந்துபோகிறார். ஆனாலும் அது நாயின் சிரிப்புத்தானா என்று சின்னதொரு சந்தேகம் எழுகிறது. அடுத்த முறை விழும்போது நாய் சிரிப்பதை நேருக்கு நேராகவே பார்த்துவிடுகிறார். நாய்க்கு இப்படி ஒரு குணம் இருப்பது பற்றி மேலதிகமான உண்மைகளைத் தெரிந்துகொள்வதற்காக பல புத்தகங்களைத் தேடிப் படிக்கிறார். பல மருத்துவர்களிடம் கலந்தாலோசிக்கிறார். யாருக்குமே அக்குணத்தைப்பற்றி உறுதியாகச் சொல்லத் தெரியவில்லை.

ஒருநாள் மாலைநடைக்கு பாபு தன்னுடன் நாயை அழைத்துச் செல்கிறார். திடுமென வழியில் மழை பிடித்துக்கொள்கிறது. இருவரும் ஒதுங்கி நிற்கிறார்கள். அப்போது சாலையில் நடந்துகொண்டிருந்த ஒருவர் தன்னிடமிருந்த குடையைப் பிரிக்கிறார். காற்றின் வேகத்தில் அக்குடையின் மேல்விரிப்பு மேற்புறமாக விரிந்து மடிகிறது. அதைப் பார்த்ததும் நாய் சிரிக்கிறது. எல்லோரும் பார்க்கும் விதத்தில் இருக்கிறது அச்சிரிப்பு. குடையைப் பிடித்துக்கொண்டிருப்பவரும் நாயின் சிரிப்பைப் பார்த்துவிடுகிறார். அதை நம்பமுடியாமல் பாபுவை நெருங்கி வந்து விசாரித்துத் தெரிந்துகொள்கிறார். அவர் ஒரு பத்திரிகையாளர். ஒருநாள் பத்திரிகையாளர் கிளபில் நடைபெற்ற கூட்டத்தில் அந்த அனுபவத்தைச் சொல்லிப் பகிரிந்துகொள்கிறார். அதைக் கேட்ட ஆங்கிலப்பத்திரிகையின் ஆசிரியர் அதை ஒரு பெரிய செய்தியாக வெளியிடுவதற்காக, தன் நிரூபரை பாபுவின் முகவரிக்கு அனுப்பிவைக்கிறது. அவர் பாபுவிடம் நீண்டதொரு நேர்காணல் எடுக்கிறார். பாபுவையும் நாயையும் பல கோணங்களில் படமெடுக்கிறார். சில நாட்கள் கழித்து அச்செய்தி பத்திரிகையில் வெளிவந்து அவரைப் பார்ப்பவர்கள் எல்லோரும் விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். எல்லோரும் வீட்டுக்கு வந்து நாயின் சிரிப்பைப் பார்க்க ஆசைப்படுவதாகச் சொல்கிறார்கள். கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக பாபு நாயை அழைத்துக்கொண்டு ஏதோ ஒரு வெளியூருக்குப் பிரயாணம் புறப்படுகிறார். எங்கெங்கோ அலைந்துவிட்டு இரவு நேரத்தில் வீடு திரும்புகிறார். ஆனால் அந்த நேரத்திலும் அவரைச் சந்திக்க விரும்பிய வெளிநாட்டுக்காரர் ஒருவருடன் ஒரு வங்காளி இளைஞன் வந்து நிற்கிறான். தவிர்க்கவியலாமல் அவர்களை உள்ளே அழைத்துப் பேசுகிறார் பாபு. அந்த வெளிநாட்டுக்காரர் அந்த நாயை விலைக்குக் கேட்கிறார். இருபதாயிரம் டாலர் கொடுக்கத் தயாராக இருப்பதாக காசோலைப்புத்தகத்தை பையிலிருந்து வெளியே எடுக்கிறார். அப்போது நாய் சிரிப்பதை எல்லோரும் பார்க்கிறார். எல்லாவற்றையும் பணத்தால் வாங்கிவிட முடியும் என எண்ணும் அவருடைய பேதைமையைப் பார்த்துத்தான் தன் நாய் சிரித்ததாகச் சொல்கிறார் பாபு. நாயை விற்க தனக்கு விருப்பமில்லை என்று அவர்களைத் திருப்பி அனுப்பிவிடுகிறார். ’பைத்தியக்காரன்’ என்று மனசுக்குள் திட்டியபடி அவர்கள் வெளியே சென்றுவிடுகிறார்கள். ‘உன்னைப்பற்றி நான் சொன்னது சரிதானே?’ என்று நாயிடம் கேட்கிறார் பாபு. சரியென்று சொல்வதுபோல நாய் மீண்டும் பாபுவைப் பார்த்துச் சிரிக்கிறது.

கருத்து வேற்றுமையை சண்டையிட்டுத் தீர்த்துக்கொள்ள விரும்பும் இருவர் ஒருவரையொருவர் குறிபார்த்துச் சுட்டு தாக்கிக்கொள்ளும் சண்டைமுறையைப்பற்றிய தகவலை முன்வைத்து அவர் வளர்த்தெடுக்கும் கதை கிட்டத்தட்ட ஒரு துப்பறியும் கதையைப்போல உள்ளது. இண்டிகோ செடித் தோட்டங்களை உருவாக்கிய ஆங்கிலேயர்களைப்பற்றிய தகவல், எண்களையும் எழுத்துகளையும் எழுதிக் காட்டும் அதிசய காகம்,  தொழில்நுட்பத்தின் துணையோடு ஆயிரக்கணக்கானோரின் மூளைத்திறன்களுக்கு இணையான திறமையை உடைய ஒரு கோளத்தை உருவாக்கி நிர்வகிக்கும் தகவல், நாடோடிக்கிழவி ஒருத்தி சொல்லிவிட்டுச் செல்கிற விசித்திரமான தகவல் என விதம்விதமான தகவல்களை  மையப்படுத்தும் ரே தன் திறமையால் சுவாரசியமான கதைகளாக மாற்றிவிடுகிறார்.

படோல் பாபு ஒரு சினிமா நட்சத்திரம் என்னும் சிறுகதை மட்டுமே இலக்கியப்பரப்பில் முன்வைத்துப் பேசத்தக்க கதை. நடிப்பில் ஆழ்ந்த ஆர்வமுள்ளவர் பாபு. வாய்ப்புக்காக அலைந்து பல ஆண்டு கால வாழ்க்கையைத் தொலைத்தவர் அவர். பிறகு அதிலிருந்து விலகி வாழ்க்கையை நடத்துவதற்காக கடை நடத்திப் பார்க்கிறார். பிறகு ஒரு நிறுவனத்தில்  பணிபுரிகிறார். அதைத் தொடர்ந்து இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் முகவராக வேலை செய்கிறார். எப்படியோ காலம் நகர்ந்து முதுமை வந்து சேர்ந்துவிடுகிறது. அத்தருணத்தில் ஒரு நண்பரின் மகன் வழியாக திரைப்படத்தில் தலைகாட்டும் ஒரு சிறிய வாய்ப்பு அவருக்குக் கிடைக்கிறது. அதில் நடிப்பதற்காக அதிகாலையிலேயே எழுந்து அவர்கள் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று காத்திருக்கிறார். இயக்குநர் அவருக்குரிய காட்சியை விவரிக்கிறார். ஒரே ஒரு நொடிக்காட்சி அது. ஒரு வங்கிக்குச் செல்கிற நாயகன் ஏதோ யோசனையில் மூழ்கியிருந்த வேகத்தில் எதிரில் வந்த கிழவரின் மீது எதிர்பாராமல் மோதிவிடுகிறார். அதிர்ச்சியடைந்த கிழவர் ஆ என்றபடி கீழே விழுந்துவிடுகிறார். அவர் பேச வேண்டிய ஒரே ஒரு சொல் ஆ மட்டுமே. முதலில் அதை அவமானமாக உணர்கிறார். பிறகு அந்த ஒரு சொல் வழியாகவே தன் திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்னும் வேகத்தில் அச்சொல்லைச் சொன்னபடி எப்படியெல்லாம் விழலாம் என்று பலவிதமான கற்பனைக்காட்சிகளை தனக்குள் நிகழ்த்திப் பார்த்துக்கொள்கிறார். நடிகர் வருகிறார். காட்சி படமாகிறது. உடனே அடுத்த காட்சிக்கு எல்லோரும் தயாராகிறார்கள். தன்னுடைய வேலையை நன்றாகச் செய்த திருப்தியை மனத்தளவில் உணர்கிறார் அவர். இத்தனை ஆண்டு காலப் போராட்டம் தன் உணர்வுகளை மழுங்கடித்துவிடவில்லை என்பதில் அவருக்கு மனநிறைவாக இருக்கிறது. ஆனால் இந்த உழைப்பையும் கற்பனையையும் மக்கள் புரிந்து ரசித்து பாராட்டக்கூடியவர்கள் அரிதினும் அரிது என்று அவருக்குத் தோன்றுகிறது. மெல்ல எழுந்து அந்தக் கூட்டத்தைவிட்டு வெளியேறிவிடுகிறார். அவருக்கு ஊதியம் வழங்க பணத்தோடு வருபவர் அவரைக் காணாமல் ஆச்சரியத்தோடு சலித்துக்கொள்கிறார்.

ஒரு நடிகனாக ஒருவர் எதிர்பார்ப்பது தன் உழைப்புக்கான பாராட்டையும் அங்கீகாரத்தையும் மட்டுமே. காலம் முழுதும் அவர் காத்திருப்பது அவற்றுக்காகவே. ஆனால் பணம் மட்டுமே கிட்டும், அவர் விரும்பியவை கிட்டாது எனத் தோன்றும் கணத்தில் கைவிட்ட இந்த உலகத்தின் முன் மனம்குன்றி நிற்கிறான் ஒரு மானிடன். அத்தகு கையறு நிலை கணத்தையே ரே இக்கதையில் சித்தரித்துக் காட்டியிருக்கிறார்.

அற்புதராஜின் மொழிபெயர்ப்புக்கதைகள் காலந்தாழ்ந்து நூலாக்கம் பெற்றிருந்தாலும், இப்போதாவது வந்தனவே என ஆறுதலாக இருக்கிறது. சத்யஜித்ரேயின் கதைகளைப்போல தன் பிள்ளைகளிடமும் மாணவர்களிடமும் நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ள மேலும் சில படைப்புகளை அற்புதராஜ் மொழிபெயர்த்து வைத்திருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.. அவற்றை வெளியிட இதுவே நல்ல தருணம்.

 

(சத்யஜித்ரே கதைகள். மொழிபெயர்ப்பு. எஸ்.அற்புதராஜ், மலைகள் பதிப்பகம், 119, முதல் மாடி, கடலூர் மெயின் ரோடு, கடலூர் மெயின் ரோடு, அம்மாபேட்டை, சேலம்-3. விலை.ரூ.300)

Series Navigationஈர்மிப் பெருந்திணைஅமெரிக்க நகரங்களை ஆண்டுதோறும் நரகம் ஆக்கும் அசுர வல்லமைப் பேய்மழைச் சூறாவளிகள்
author

பாவண்ணன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *