தொடுவானம் 140. நாடி வந்த நண்பன் .

This entry is part 8 of 21 in the series 16 அக்டோபர் 2016

மருத்துவக் கல்வியில் பொது மருத்துவமும், அறுவை மருத்துவமும் நான்காம் ஐந்தாம் இரு ஆண்டுகள் பயிலும்போது அவற்றின் கிளைப் பிரிவுகளாக வேறு சில சிறப்பு இயல் பாடங்களையும் குறுகிய காலங்களில் பயிலவேண்டும்.

பொது மருத்துவத்துடன் தொடர்புடையவை  இதயவியல் ( Cardiology ),  நரம்பியல் ( Neurology ),  சிறுநீரகவியல் ( Nephrology )  , தோலியல் ( Dermatology ) , கதிரியல் ( Radiology ) , கதிரியக்கப் பண்டுவம் ( Radio  – Therapy ) , இரைப்பை குடலியல்  ( Gastro – Enterology ) போன்றவற்றையும் குறுகிய காலத்தில் பயின்றோம். இவற்றுக்கு தனித்தனியான வகுப்புகளில் பாடங்கள் நடந்தன. இவை தொடர்புடைய வார்டுகளுக்குச் சென்று நோயாளிகளைக் காண்போம். இவற்றுடன் குழந்தை மருத்துவம் ( Paediatrics ) பாடத்தை ஒரு வருடம் பயின்றோம்.

குழந்தை மருத்துவம் வகுப்புகளை டாக்டர் மாலதி ஜாதவ் நடத்தினார். இவர் மகாராஷ்ட்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர். மராட்டியர். மிகவும் அன்பானவர். இவர் குழந்தை மருத்துவப் பிரிவு ஒன்றின் தலைமை மருத்துவர். குழந்தைகளுக்கான நோய்கள் பற்றியும் அவற்றுக்கான சிகிச்சைகள் பற்றியும் அவரிடம் கற்றுக்கொண்டோம்.அதுவும் பொது மருத்துவம் போன்று பெரிய பாடமாகும். சிரமப்பட்டுதான் பயிலவேண்டும்.

அறுவை மருத்துவத்துடன் தொடர்புடைய கிளைகள் எலும்பு நன்னியல் ( Orthopaedics ) , புற்று நோய் மருத்துவம் ( Oncology , இதய நெஞ்சு அறுவை மருத்துவம் ( Cardio  – Thoracic  Surgery ) , நரம்புசார் அறுவை மருத்துவம் ( Neurosurgery ) , ஒட்டு அறுவை மருத்துவம் ( Plastic Surgery  ) ,சீரமைப்பு அறுவை மருத்துவம் ( Reconstructive Surgery ) ஆகியவற்றையும் குறுகிய காலத்தில் பயின்றோம். இவற்றுக்கு அந்தந்த  பிரிவுக்கும் வார்டுக்கும் சென்று வந்தோம்.

நான்காம் ஐந்தாம் ஆண்டுகளில் இவ்வாறு அநேக பாடங்கள் பயிலவேண்டியிருந்ததால் விடுதியில் கிடைக்கும் ஒய்வு நேரங்களில் புத்தகமும் கையுமாக இருப்போம். பொழுதுபோக்குகளைக் குறைத்துக்கொண்டோம்.

இத்தனை பாடங்களையும் படித்து தேர்வுக்காக தயார் செய்வது கடினம்தான். ஆனால் இவை அனைத்தும் மருத்துவத்தின் இயல்புகள் என்பதால், இவற்றையெல்லாம் தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருந்ததால்,  படிப்பதும் இனிமையான அனுபவமாகவே இருந்தது.

நான்காம் ஆண்டு மருத்துவப் படிப்பின் இனிமையான பயணத்தின்போது ஒரு நாள் நான் சற்றும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்தது.
நான்காம் ஆண்டிலிருந்து நாங்கள் விடுதியின் மூன்றாம் மாடியில் தனி அறையில் தங்கினோம். தனிமையில் இருந்ததும் தனிச் சுகமே.

ஒரு நாள் என் அறை கதவு தட்டப்பட்டது. திறந்து பார்த்தேன். ஒரு கருத்த வாலிபன் நின்றான். என் வயதுடையவன். வேட்டி சட்டை அணிந்திருந்தான். நான் அவனைக் கண்டு விழித்தேன். அவன் என்னை பெயர் சொல்லி அழைத்தான். என் வியப்பு அதிகமானது. அவனை உற்று நோக்கினேன். எனக்கு பழக்கமான முகம் அது! என் தடுமாற்றத்தைக் கண்டுகொண்ட அவன், ” அருமைநாதன் ” என்றான். நான் அப்படியே அவனைக் கட்டித் தழுவிக்கொண்டேன்! என் கண்கள் கலங்கிவிட்டன!

” வாடா உள்ளே .” அவன் கையைப் பிடித்து அறைக்குள் இட்டுச் சென்றேன். உள்ளே நுழைந்த அவன் ஒருமுறை அறையை நோட்டமிட்டான்.

” எப்படி நான் இங்கு இருப்பதைக் கண்டு பிடிச்சே ? ” வியப்புடன் அவனைக் கேட்டேன்.இருவரும் படுக்கையில் அமர்ந்துகொண்டோம்.

” ஆனந்தன் கடிதம் போட்டான். உன்னை வந்து பார்க்கச் சொன்னான். அதான் வந்தேன். ” பதில் சொன்னான்.

ஆனந்தன் சிங்கப்பூரில் உள்ளான். அருமைநாதனுக்கு உறவினன்.

அருமைநாதன் என்னுடைய பால்ய நண்பன். சிங்கப்பூரில் ஹெண்டர்சன் மலையில் லதா வீட்டில் வாடகைக்கு குடியிருந்தபோது இவன் பக்கத்துக்கு வீடு.என்னுடன்தான் ஒன்றாக ஆரம்பப் பள்ளியில் சேர்ந்தான். ஆனால் ஆறாம் வகுப்புக்குமேல் இவனால் படிக்க முடியவில்லை. இவனுடைய அப்பா சாத்தையா எவ்வளவோ முயன்றும் இவன் படிப்பில் நாட்டம் செலுத்தவில்லை. படிப்பில் எனக்கு நேர்மாறாக இருந்தான். இதனால் இவனுடன் சேர்ந்து விளையாடுவதைக்கூட அப்பா தடுத்தார்.

அப்போதெல்லாம் எங்கள் பகுதி குண்டர் கும்பல்களுக்கு பெயர் போனது. 24 , 08 என்று இரண்டு பிரபலமான கோஷ்டிகள் சிங்கப்பூரில் இருந்தன.இந்த இரண்டும் எல்லா பகுதியிலும் பரவி இருந்தன. இரண்டும் பரம எதிரிகள்.. இவர்கள் இளைஞர்களைக் குறி வைத்தனர். இதில் சேர்ந்துவிட்டால் உடலில் அவர்களின் சின்னத்தை பச்சை குத்திக்கொள்ளவேண்டும். அதன்பின்பு அதிலிருந்து வெளியேற முடியாது. அப்படி வெளியேற முயன்றால் உயிருக்கு ஆபத்து.

பள்ளியை விட்டு நின்றதும் அருமைநாதன் 24 குண்டர் கும்பலில் சேர்ந்துவிட்டான். அதன்பின்பு இவனுடைய நடவடிக்கைகள் மாறலாயின. முன்பே முரடனான இவன் இப்போது வீட்டில் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டான். சாத்தையா அவனை அடித்தால் எதிர்க்கத் துணிந்தான். இவனுடைய முரட்டுத்தனத்தைக் கண்டு பெற்றோர் பயப்படும் நிலைக்குள்ளாயினர்.அப்படியிருந்தும் என்னிடம் அன்பாகவே இருப்பான்.ஆனால் அப்பாவுக்கு இவனை அறவே பிடிக்காது. காலப்போக்கிலே இவனுடைய அப்பாவுக்கும் இவனைப் பிடிக்கவில்லை. இவனின் முரட்டுக் குணமும் தகாத நடவடிக்கைகளும் அப்படி.

ஒரு நாள் அப்பாவுக்கும் மகனுக்கும் வாக்குவாதம் முற்றியபோது அருமைநாதன் வீட்டை விட்டு ஓடிவிட்டான். அவனைத் தேடியும் பயன் இல்லை. காவல் நிலையத்தில் புகார் செய்ய முடியாத நிலை. இவன் குண்டர் கும்பலில் இருப்பது தெரிந்துவிடும். நீண்ட சிறைவாசம் கிடைக்கும். செய்வதறியாது திகைத்தனர் பெற்றோர். மாதங்கள் பல ஆயின.

ஒரு நாள் என்னை பள்ளியில் வந்து சந்தித்தான். அவன் வேலை செய்வதாகக் கூறினான். பெற்றோர் பற்றி விசாரித்தான். இனி வீடு வரப்போவதில்லை என்றான். தன்னுடைய முகவரியையும் வேலை செய்யும் இடத்தையும் தெரிவித்தான். குண்டர் கும்பலிலிருந்து விலகி விட்டதாகவும் கூறினான். அவர்களால் இனி ஆபத்து இல்லை என்றான்.எனக்கு அது ஆறுதலாக இருந்தது. தன்னைப்பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று சத்தியம் வாங்கிக்கொண்டான்.

அதன் பின்பு பல மாதங்கள் இவனை நான் பார்க்கவில்லை. இவன் நிரந்தரமாகக் காணாமல் போய்விட்டான் என்று நம்பிய பெற்றோர் இயல்பு நிலைக்கு வந்தனர். நானும் அங்கிருந்து வேறு பகுதிக்கு வீடு மாறி சென்றுவிட்டேன்.

அப்பாவின் கொடுமையை என்னால் தாங்கமுடியவில்லை. அதறகுக் காரணம் லதா. நாங்கள் சந்திக்கவில்லையென்றாலும் சந்தித்தகாகக் கூறி அடிக்க வருவார். அவராலேயே என்னுடைய படிப்பு கெட்டது. அவருடைய நச்சரிப்பு உச்ச நிலையை அடைந்தபோது ஒரு நாள் நானும் வீட்டைவிட்டு ஓடினேன். அப்போது நேராக அருமைநாதனிடம்தான் சென்றேன்.  இவனுக்கு தனியாக இருக்கும் அனுபவம் இருப்பதால் இவனுடன் இருப்பது பாதுகாப்பானது என்று அப்போது கருதினேன்.

பாவம் இவன். தினக் கூலியாக சம்பாதித்த சொற்ப பணத்தில் எனக்கும் செலவழித்தான். கட்டிடம் கட்டும் கட்டுமான வேலையில் அஸ்திவாரம் இடும் வேலை. மிகவும் கடினமானது. ஆபத்தானது. எந்த நேரத்திலும் விபத்து நேரலாம்.இவனோடு சேர்ந்து சுமார் இருபது இளைஞர்கள் வேலை செய்தனர். அனைவருமே முரடர்களாகவே தோற்றமளித்தனர். ஒரு நீண்ட தகரக் கூடாரத்தில் வரிசையாக கட்டில்கள் போடப்பட்டிருந்தன. தனி அறைகள் கிடையாது. கட்டில் அருகே கட்டப்பட்டிருந்த நீண்ட கம்பியில் இவர்களின் துணிகள் தொங்கின. பொதுவான சமையல்கூடமும் கழிப்பிடமும் குளியல் அறைகளும் இருந்தன. அனைத்துமே பலகைகளாலும் தகரத்தாலும் அந்த கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது.

இவன் வாங்கிய சம்பளத்தில் எங்கள் இருவரின் சாப்பாட்டுக்குப் போக மீதம் கொஞ்சமே மிஞ்சியது. அதையும் அவன் சிகரெட்டுக்கு செலவழிப்பான். இப்படி எனக்காக தன்னுடைய உழைப்பையும் ஊதியத்தையும் செலவிட்டான். ( அங்கு நடந்தவை பற்றி முன்பே விரிவாக எழுதிவிட்டேன் )

அங்கு தங்கியிருந்த சில நாட்களில் அப்பா இரகசிய காவலர்களுடன் ஒரு இரவில் வந்துவிட்டார். காவலர்கள் என்னைக் கைது செய்தபோது இவன் இருட்டில் கம்பி வேலியைத் தாண்டி காட்டுக்குள் ஓடிவிட்டான்!

நான் வீடு திரும்பியபின்பு, அப்பா இவனுடைய தந்தையிடம் இருப்பிடத்தைக் கூறிவிட்டார். அவர் உடன் காவல் நிலையத்தை நாடினார்.  அவர்கள் இவனை வேலை இடத்திலேயே பிடித்துவிட்டனர். இவனை இனியும் சிங்கப்பூரில் வைத்திருப்பது நல்லதல்ல என்று முடிவு செய்த சாத்தையா காவலரின் உதவியுடன் இவனை தமிழ் நாட்டுக்கு அனுப்பிவிட்டார். அதன் பிறகு தொடர்பு இல்லாமல் போனது.

இப்போது சுமார் ஐந்து வருடங்கள் கழித்து என்னைத் தேடிக்கொண்டு விடுதிக்கு வந்துள்ளான் என் நண்பன் அருமைநாதன் !

( தொடுவானம் தொடரும் )

Series Navigationஎளிய மனிதர்களின் தன் முனைப்புபசி
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *