விழிப்பு - கவிதை
நம்மை சுற்றிலும்
வசந்தங்கள் தாம்...
ஆயினும்,
நமது தடித்த தோல்கள்தாம்
நம்மை சலனப்படுத்த
வசந்தங்களை அனுமதிப்பதில்லை...
- ஸ்ரீராம்
**************************************
கறை - கவிதை
நெருப்பு...
மரக்கட்டையை எரித்த கதையை
சுவற்றின் மீதே
எழுதிச்செல்கிறது...
- ஸ்ரீராம்
**************************************
தன்னியல்பு - கவிதை
நான்
நேராக வந்த பாதையை
யாரோ குனிந்தபடியே கடந்திருக்கிறார்கள்..
யாரோ ஓடி கடந்த பாதையை
நான் தவழ்ந்து கடந்திருக்கிறேன்...
அந்த யாரோவுக்கு என்னையும்
என்னை அந்த யாரோவுக்கும்
தெரியாத வரையில்
எல்லாமும்
தன்னியல்பில்...
- ஸ்ரீராம்
****************************
வழி - கவிதை
எதுவோ ஒன்று
தடுக்கும் வரை
எல்லாமே வழிதான்
பார்வையற்றவனுக்கு...
- ஸ்ரீராம்
********************************************
அடையாளம் - கவிதை
ஒவ்வொருமுறையும்
என்னை நான்
கண்டடையும்போதும்
இந்த உலகம்
'அது நீ இல்லை' என்கிறது...
- ஸ்ரீராம்